அறம், சோற்றுக்கணக்கு -கடிதங்கள்

அன்புள்ள மோகன்,

அறம், சோற்றுக்கணக்கு இரு கதைகளையும் வாசித்து மனம் நெகிழ்ந்தேன். எனக்கு எப்போதுமே செண்டிமென்ட் மேல் அதிருப்தி உண்டு. உங்களுக்கு தெரியும். நான் பெரிதாக எல்லாம் உறவுகளைப்பற்றி அலட்டிக்கொள்பவன் கிடையாது. நான் கல்யாணம்கூட பண்ணிக்காதது அதுக்குத்தான் என்று நினைக்கிறேன். மிகையாக மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. உங்களுடைய நல்ல கதைகளில் எல்லா உணர்ச்சிகளும் கம்மியாகவே இருக்கும் என்பதனால்தான் நிறைய கதைகளை விரும்பியிருக்கிறேன். ஆனால் இந்தக்கதைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கிறதோ என்று தோன்றினாலும்கூட என் மனசு நெகிழ்ந்துவிட்டது.

எதனால் என்று யோசித்தேன். சென்டிமென்டுகள் ஏன் சலிப்பை அளிக்கின்றன என்றால் அவை ரொம்ப லௌகீகமாக இருக்கிறதனால்தான். லௌகீகமான எந்த விசயத்தையும் ரொம்ப சிறப்பித்துச் சொன்னால் அதுக்கு பெரிய அழுத்தம் கிடைக்காது. அம்மாவுக்கும் குழந்தைகளுக்கும் உள்ள தாய்ப்பாசம்கூட ரொம்ப மிகையாக காட்டினால் இத்து போகக்கூடிய theme தான். லௌகீகமான எந்த விசயத்திற்கும் பெரிய அர்த்தம் கிடையாது. அதையெல்லாம் பெரிதாக எழுதினால் அதுதான் மெலோ டிராமா. அதைத்தான் நாம் தினமும் டிவியிலும் சினிமாவிலும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

லௌகீகத்தை மிஞ்சிய சில விஷயங்கள் உண்டு. அவற்றை நம்பித்தான் மனுஷ வாழ்க்கையே ஓடிக்கொண்டிருக்கிறது. நீங்களும் நானும் வாழ்கிறோம். அந்த விஷயங்களை நாம் அன்றாடம் வாழ்க்கையிலே காண்பது கிடையாது. ஆகவே அதெல்லாம் கிடையாது என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். அப்படி பேசவும் செய்கிறோம். நானும்கூடத்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இருக்கிறது. அதை ஆன்மீகமானது என்று நீங்கள் சொல்லுவீர்கள். நாம் பேசியிருக்கிறோம். நான் அதை holistic என்றுதான் சொல்லுவேன். கரையான், எறும்பு, பூச்சி, புழுக்கள் எல்லாத்துக்கும் ஒரு hiolistic truth உண்டு. அந்த பூச்சிகளுக்கு அதெல்லாம் சாதாரணமாக தெரியாது. அதிலே ஒன்றுக்கு அது தெரிந்தது என்றால் அந்த பூச்சியின் மனநிலை என்ன? அந்த நிலைதான் இந்தமாதிரியான விஷயங்களை அறியும்போது நமக்கு ஏற்படுகிறது. இது சென்டிமென்ட் கிடையாது. செண்டிமெண்ட் என்பது negative emotion. இதெல்லாம் positive emotion. இல்லையா? பெரிய விஷயங்களை பார்க்கும்போது வரக்கூடிய evocation.

அது எப்போதும் இருந்துகொண்டுதானே இருக்கிறது. காந்தி பற்றி பேசும்போது எப்படி அவரை கோடிக்கணக்கான சாதாரண விவசாயிகள் புரிந்துகொண்டார்கள் என்று மேலைநாட்டினர் ஆச்சரியம் கொள்வார்கள். சாதாரண விவசாயிகள் அவரை கண்டதுமே கண்ணீர் விட்டு அழுதார்கள். greatness evokes great feelings. ஏனென்றால் அதெல்லாம் எல்லாருக்கும் மனசிலே உள்ள விஷயங்கள்தான். அதை நேருக்குநேராக சந்திக்கும்போது மனசு நெகிழ்ந்து கண்ணீர் வருகிறது. மனிதன் என்று நாம் சொந்தமாக வைத்திருக்கும் டெஃபனிஷன் எல்லாம் நேர் எதிராக மாறுகிறது. இந்த positive zenith தான் நல்ல இலக்கியத்தில் வருகிறது. டஸ்டயேவ்ஸ்கி உங்களைப்போல எனக்கும் பிடித்தமானவர். அவரது நாவல்களை வாசித்து நான் அழுதிருக்கிறேன். பரபாஸ் வாசித்து அழுதிருக்கிறேன். லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆப் கிறைஸ்ட் வாசித்து அழுதிருக்கிறேன். சோஃபீஸ் சாய்ஸ் வாசித்து அழுதிருக்கிறேன். அதெல்லாம் கதையிலே ஒரு மரணமோ இல்லாவிட்டால் பிரிவோ அதே போல வேறு துக்கங்களோ வரும்போது உருவாகும் அழுகை அல்ல. அது மனசு விரியும்போது உள்ள அழுகை. அது அழுகை இல்லை. அது கண்ணீர் மட்டும்தான். மனசிலே துக்கம் இருப்பதில்லை. நிறைவுதான் இருக்கிறது. ஆமாம் நானும் மனுஷன்தான் என்று உணரக்கூடிய நிறைவு அது இல்லையா?

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் இந்தமாதிரி கதைகளை வாசிப்பதற்கு ஒரு innocence ம் தேவைப்படுகிறது. கதைக்கு முன்னால் அதை முன்னாடியே நம்பிக்கொண்டு சின்னக்குழந்தைகள் உட்கார்ந்திருக்குமே அதைப்போல உட்கார வேண்டியிருக்கிறது. கதையை வைத்துக்கொண்டு சர்ச்சை செய்தால் கதை கையைவிட்டு போய்விடுகிறது. அரவிந்தர் அதை சொல்லியிருக்கிறார். அவரே கதைகளை நிறைய பேசியவர்தான். ஆனால் கடைசியில் பேசினால் கதை கைநழுவிப்போகும் என்று அறிந்துகொண்டார். நான் இப்போதெல்லாம் theory படிப்பதை விட்டுவிட்டேன். நாற்பத்தைந்து வயசுக்குமேல் ஒருவன் theory வாசித்தால் அது அவனுக்கு பிழைப்பாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வீண். அதனால் இன்னும் எளிமையாக நல்ல கதைகளுக்கு முன்னால் உட்கார முடிகிறது.

சாரி மோகன், என்னால் நிறைவாக எழுத முடியவில்லை. நான் எழுத முயற்சி செய்வதே கிடையாது. ஏதோ உதிரியாக தோன்றியதை சொன்னேன். நிறைவாக இருக்கிறது. இந்தக்கதைகளின் எளிமையான அமைப்பும் தீவிரமும் அற்புதமான கலை அனுபவம். வாழ்த்துக்கள்

சம்பந்தன்

==============

திரு ஜெமோ,

கடந்த முன்று வருடங்களாக தொடர்ந்து உங்களின் எழுத்துக்களை வாசித்து வருகிறேன் என்பதையே பெருமையாக கருதுகிறேன்.

திரைப்படங்களில் உங்களது பணி தொடரட்டும்.

உங்களின் படைப்புக்களைப் பற்றிய கருத்துக்களை பகிர “மையம்” இணையத்தில் ஒரு தனி இழை இருக்கிறது.

http://www.mayyam.com/talk/showthread.php?8628-Jeyamohan

நேரமிருந்தால் பக்கங்களை மேயவும்.

“அறம்” உணர்வுப் பூர்வமா இருக்கு . மனதைத் தொட்டது. பெரியவர் “தாயளி” என்ற சொல்லை ஓரிரு இடங்களில் பேசுகிறார். காவிரிப் படுகையில் அது புழக்கத்தில் இருப்பதாகத் தெரியவில்லையே! கொங்கு மண்டலம் மற்றும் தென் தமிழக பகுதிகளில் மட்டுமே இந்த சொல் புழங்கி வருவதாக தெரிகிறது. ஐயம் விளக்கவும்.

நன்றி.

வெங்கிராம்

(New Jersey துக்காராம் இல்லத்தில் சந்தித்த பொழுது இன்னும் மனதில் பசுமையா இருக்கு.)

அன்புள்ள வெங்கிராம்,

நன்றி.

அந்தச்சொல் கீழத்தஞ்சையில் சாதாரணமாக புழக்கத்தில் உள்ளதுதான். நான் தஞ்சையின் மருமகன். தஞ்சை பற்றிமிக நன்றாகவே தெரியும். பிராமணர்கள் தாயோழி என்பது போல சொல்வார்கள். பொதுவாக ஒன்றை கவனித்திருக்கிறேன். பிற ஊர்களை விட நெல்லையிலும் தஞ்சையிலும் கெட்டவார்த்தைகளை அதிகமாகச் சொல்கிறார்கள். கெட்டவார்த்தைகளை சாதாரணமாகச் சொல்பவர்கள் பெரும்பாலும் நிலக்கிழார் பாரம்பரியம் உடையவர்கள்.

நான் விவாதக்குழுக்களை வாசிப்பதில்லை. புத்தகங்களைப்பற்றி பேசும் ஒருசில குறிப்பிட இணையதளங்களைத் தவிர பிற தமிழ் இணையதளங்களியும் வாசிப்பதில்லை இதை நாலைந்து வருடங்களாகவே பேணி வருகிறேன். நேரமில்லை

நன்றி

ஜெ

=====

அன்புள்ள ஜெயமோகன் சார்,
அறம் சிறுகதை –
என்னால் அது சிறுகதை என்று
மறுநாள் உங்கள்ளுக்கு வந்த கடிதங்களில்
இருந்துதான் தெரிந்துகொண்டேன்.
கதையை படித்ததும் கண்ணில் நீர் எனக்கு.
அன்று அறத்திற்கு எந்த அளவு மதிப்பு இருந்தது தற்காலத்தில் உள்ளதா? என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.

அன்புடன்
இராஜலிங்கம் ச

அன்புள்ள ராஜலிங்கம்

நன்றி

எப்போதும் அது உள்ளது. நாம் அறிந்திருக்க மாட்டோம். ஆனால் நம் வாழ்க்கை அதன்மேல்தான் ஓடிக்கொண்டிருக்கிறது

ஜெ

================
அன்பு ஜெ

நான் சோற்றுக்கணக்கு பற்றி இணைப்புக் கொடுத்த பலரில் ஒரு நண்பரின் கடிதம்

ராமானுஜம்

அன்பிற்கினிய நண்பருக்கு

நீங்கள் அனுப்பியிருந்த சோற்றுக் கணக்கு கதையைப் படித்தேன்.

ஆத்தாடி, ஆத்தாடி….அப்படி அலமந்து போய் வாசித்தேன் இக்கதையை…என்ன மாதிரியான சித்திரம் அந்தக் கைகளில் இருந்து…..

தெரிந்த முடிவை நோக்கி நடந்த அந்த கடைசி பத்தி ஓராயிரம் பக்கங்களுக்குச் சமம்.

கைம்மாறு கருதாச் செயலைச் செய்யும் அனந்த கோடி மானிடர்களின் கம்பீர உருவகமாகப் படைக்கப்பட்டிருக்கும் கெத்தேல் சாகிப்….
கதை முடிந்து அவரை மானசீகமாக வாழ்த்தலாமா என்று பார்த்தால், அவர் குனிந்த தலை நிமிராமல் எனது முன் வைக்கப்பட்டிருந்த இலையில் மாறி மாறி கோழியும் குழம்பும் மீனும் கொஞ்சுமாக பரிமாறிக்கொண்டிருந்தார். உன்னத ஆளுமை மிக்கவர்கள் நேரே தலையிடாமலேயே மந்திர ஜாலத்தால் வெற்று மனிதர்களுக்குள் நிகழ வேண்டிய இரசாயன மாற்றங்களைச் செய்ய வல்ல வித்தையைச் சொல்லும் கதைகளின் இடத்தில் அமர்ந்திருக்கிறது இந்தக் கதையும்.

ஜெயமோகனை அதிகம் வாசித்ததில்லை நான். அவரைக் குறித்துக் கேள்வியுற்ற அளவு. வருணனையின் வரம் பெற்ற தூரிகை அவரது.

நன்றி…

எஸ் வி வேணுகோபாலன்
சென்னை.

==================================

முந்தைய கட்டுரைநூறுநாற்காலிகள்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைதிராவிட வேதம்