கர்ணன் கவசங்களை அணிந்துகொண்டிருந்தபோது சற்று அப்பால் சல்யர் குளம்படிகள் விசையுடன் ஒலிக்க புரவியில் வந்து கால்சுழற்றி இறங்கினார். அவன் விழிதூக்கி நோக்க கையிலிருந்த கடிவாளத்தை ஓங்கி நிலத்தில் வீசிவிட்டு பதற்றத்தில் நிலையழிந்து அங்குமிங்கும் ஆடிய உடலுடன் முதுமையின் நடுக்கத்துடன் அவனை நோக்கி வந்தார். வரும் வழியிலேயே ஓங்கி நிலத்தில் உமிழ்ந்தார். அருகணைந்து கைநீட்டி “அறிவிலி! உன்னைப்போல் அறிவிலியை நான் இதற்குமுன் கண்டதில்லை. காமத்தாலும் விழைவாலும் அறிவிலாது ஆனவர்கள் உண்டு. ஆணவத்தால் அறிவிலி ஆனவன் நீ. அறிவிலி, அறிவிலி… உன்னை என்னவென்று எண்ணிக்கொண்டிருக்கிறாய்? அள்ளி அள்ளிக்கொடுத்து அனைத்துமின்றி அழிய நீ யார் யோகியா அன்றி விண்ணிலிருக்கும் மெய்ஞானத்தை தேடிச்செல்லும் துறவியா?” என்று கூவினார்.
எழுந்து கைகூப்பி வரவேற்றபடி “மத்ரரே, தங்கள் சினம் எனக்கு புரியவில்லை” என்று கர்ணன் சொன்னான். “புரிந்தது என்று உன் விழிகளில் காண்கிறேன். நீ சற்று முன் அளித்ததென்ன? சொல், மூடா! அளித்தது என்ன?” என்று மத்ரர் கூவினார். கர்ணன் “வேதம் ஓதி கொடை நோக்கி நின்ற இளைய அந்தணர் ஒருவருக்கு அவர் கோரியதன்பொருட்டு நான் என் கவசத்தையும் குண்டலங்களையும் அளித்தேன். அதுவே அத்தருணத்தில் இயல்வது” என்றான். சல்யர் தலை நடுநடுங்க “எவரைக்கேட்டு அதை அளித்தாய்? சொல், எதன்பொருட்டு அளித்தாய்? அதை அளிக்க உனக்கு என்ன உரிமை? உன் தந்தை எதன் பொருட்டு உனக்கு அதை அளித்தார் என்று தெரியுமா உனக்கு? அவர் ஒப்புதலின்றி நீ அதை எப்படி கொடையளிக்கலாம்?” என்றார்.
“கொடையில் மடம் ஒப்பப்பட்டுள்ளது” என்று கர்ணன் சொன்னான். ‘கொடையளிப்பதன் பொருளே அதுதான், இங்குள எதுவும் நம்முடையதல்ல, நம் முன்னோராலும் நம்மைவிடப் பெரியவர்களாலும் நமக்களிக்கப்பட்டது என்பதனாலேயே நம்மைவிட இளையோரும் நம்மைவிட அறத்தோரும் அதைப் பெறும் தகுதி கொண்டவர்களாகிறார்கள் என்னும் உணர்வு. அது உலகியலில் மடமை. வேறு ஒரு பொருளில் மெய்யறிவு.” சல்யர் அச்சொற்களை எவ்வகையிலும் உள்வாங்கவில்லை. “தத்துவம் பேசுவதற்கு நான் வரவில்லை. இப்படி சொல்மடக்கிப் பேசுமளவிற்கு நான் அறிவுள்ளவனும் அல்ல. நான் மலைமகன். ஆனால் ஒன்றுமட்டும் சொல்வேன். நீ செய்தது அறிவின்மை. ஆம் முழுமுதல் அறிவின்மை.”
மிகையுணர்ச்சியால், அதன் விளைவான மூச்சிளைப்பால் அவர் சற்று தளர்ந்தார். ‘அதைவிட இது மிகப்பெரிய கீழ்மை. உன் உயிரை எப்பொருளுமின்றி களத்தில் மாய்த்துக்கொள்ள முடிவெடுத்திருக்கிறாய். ஆம், நீ செய்ததற்கு அது ஒன்றேதான் பொருள். உனக்கு இங்கே உறவுகள் பொருட்டல்ல. கடமை பொருட்டல்ல. உன் ஆணவம் ஒன்றே பொருட்டு… ஆணவம்போல் அழுகிநாறும் சிறுமை வேறு ஏது?” என்று சொன்னபின் உளமுடைந்து சல்யர் மெல்ல குரல் தழைந்து “என்ன செய்துவிட்டாய்… நீ செய்தது என்ன என்று உணர்கிறாயா?” என்றார்.
“இதை உங்களுக்கு எவர் சொன்னார்கள்?” என்றான் கர்ணன். “நான் அறிந்தேன். உனது மைந்தர் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். அதைக்கேட்டு ஐயம்கொண்டு சுபாகு உசாவியபோது அவனிடமும் கூறினார்கள். அவன் விரைந்து என்னை நாடிவந்து என்னிடம் இதை சொன்னான்” என்றார் சல்யர். கர்ணன் சலிப்புடன் “சுபாகுவிடம் அவர்கள் ஏன் சொன்னார்கள்?” என்றான். “அவர்கள் சொல்லியாகவேண்டும். ஏனெனில் இன்று அரசரின் இடத்தில் உளம்எஞ்சியிருக்கும் கௌரவன் அவன் மட்டுமே. அவன் நீங்கள் எங்கு சென்றீர்கள், அங்கு என்ன நிகழ்ந்தது என்று கேட்டபோது மைந்தர் அனைத்தையும் சொல்லிவிட்டார்கள்” என்றார் சல்யர்.
கால் தளர அவர் அங்குமிங்கும் நோக்கி அருகிருந்த பெட்டியில் அமர்ந்தார். “துயரமும் கசப்புமாக சுபாகு என் குடிலுக்கு வந்தான். நீ உன் கவசத்தையும் குண்டலங்களையும் அளித்துவிட்டதை சொன்னபோது நான் அதை நம்பமுடியாமல் அமர்ந்திருந்தேன். எந்த மானுடனும் அதை செய்ய மாட்டான். இதுவரை நீ அளித்ததெல்லாம் உன் தந்தை அளித்த பெருங்கொடைகள் உன்னிடம் இருக்கின்றன என்ற தன் நிமிர்வால் என்று எண்ணினேன். எந்நிலையிலும் எங்கும் தோற்கமாட்டாய் என்று உணர்ந்ததனால்தான் எதுவரினும் கொடுப்பேன் என்ற நிலைகொண்டிருக்கிறாய் என்று கருதினேன். இவ்வாறு அறிவின்மையின் எல்லை வரை செல்வாய் என்று அணுவளவும் எண்ணவில்லை.”
“மத்ரரே, இது அறிவின்மையெனில் அவ்வாறே ஆகுக! என் முன் கைநீட்டி நின்றிருக்கும் அந்தணர் ஒருவருக்கு அளிக்க இயலாமல் ஒரு செல்வத்தை பேணினேன் எனில் இதுவரை நான் அளித்தவற்றுக்கெல்லாம் என்ன பொருள்? நான் அளிப்பது அவர் அங்கு ஓதிய வேதத்திற்கு நிகராக அமையவேண்டும் என்பது நெறி. அதை முடிவுசெய்யவேண்டியவர் அவர். நான் அதில் பேரம் பேசியிருக்கக்கூடுமா என்ன?” என்றான் கர்ணன். மீண்டும் உளவிசைகொண்டு பாய்ந்து எழுந்த சல்யர் “அது சூழ்ச்சி! வெறும் போர்சூழ்ச்சி. உன்னை அழிப்பதற்காக அவர்கள் வகுத்த கீழ்நெறி அது என்று அறியாதவனா நீ? அவன் உருவை உன் மைந்தர் நீரில் பார்த்தார்கள்…” என்றார்.
“ஆம், அவர் வரும்போதே நானும் நீரில் பார்த்தேன்” என்றான் கர்ணன். “பிறகென்ன? அது அந்த யாதவனால் செய்யப்பட்ட சூழ்ச்சி. அந்தணனின் உடலில் இந்திரனை அமைத்து அவன் அனுப்பியிருக்கிறான். இந்திரன் உன் தந்தை உனக்களித்த காப்புகள் அனைத்தையும் உன்னிடமிருந்து திருடியிருக்கிறான் என்றால் என்ன பொருள்? இன்றைய போரில் நீ எக்காப்புமின்றி நின்றிருக்கப்போகிறாய். உன்னை இன்றே கொன்றுவிடவேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்” என்றார் சல்யர். கர்ணன் விழிதாழ்த்தி எழாக்குரலில் “அது ஊழெனில் அவ்வாறு ஆகுக! ஒவ்வொன்றும் பிறிதொன்றுக்காகவே நிகழ்கிறது என்று அறிந்தபின் என் கையிலிருப்பது எதையும் முற்றாக வடிவமைக்க நான் முயல்வதில்லை” என்றான்.
சல்யர் அவன் கைகளை பற்றிக்கொள்ள கைநீட்டினார். “வேண்டாம், சொல்வதை கேள்” என்றபின் கைகளை பின்னிழுத்துக்கொண்டார். உடல் முழுக்க ஓடும் தவிப்பால் சற்று துடித்து, பின் இருகைகளையும் கோத்து இறுக்கி, தலைகுனிந்து நிலம் நோக்கி, உதடுகள் பலமுறை அசைந்தபின் தனித்தனியாக உதிர்ந்த சொற்களால் அவர் சொன்னார் “என்னை உன் தந்தையென்று எண்ணிக்கொள். ஒரு த்ந்தையாக நின்று இங்கு என் உளம் துடிப்பதை சற்றேனும் புரிந்துகொள்.” கர்ணன் அதே குரலில் “புரிகிறது” என்றான். அவர் தாக்குண்டவர்போல அவனை நிமிர்ந்து நோக்கினார். அவர் உதடுகள் அசைந்தன. விழிகள் நீர்மைகொண்டு பளபளத்தன. அவன் எந்த உணர்வும் இல்லாமல் அவர் விழிகளை நோக்கினான்.
விழிகளை விலக்கிக்கொண்டு “என்னை ஒரு சொல் உசாவவேண்டும் என்று எண்ணினாயா நீ?” என்று சல்யர் கேட்டார். “எப்போதும் எதையும் அவ்வாறு உசாவிச் செய்ததில்லையே” என்று கர்ணன் சொன்னான். “கொடையை நான் மறுமுறை என்னிடமேகூட உசாவுவதில்லை.” சல்யர் தளர்ந்து “ஆம், நீ அன்னையாலும் தந்தையாலும் கைவிடப்பட்டவன். உனக்குரிய தனிவழியை தேடிக்கொண்டாய்” என்றார். கைகளை விரித்து “விண்ணில் கதிரவனும் அவ்வாறே முழுத்தனிமையில் சென்றுகொண்டிருக்கிறது என்பார்கள்” என்றபின் மேலும் ஏதோ பேச விழைந்து சொல்லின்றி நீள்மூச்செறிந்தார்.
கர்ணன் “இன்றைய போரில் என் வெற்றி எவ்வண்ணம் என்பதை நானும் எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்” என்றான். மென்னகை காட்டி “ஒன்று நோக்கின் இது நன்றே. அரிய அம்புகள், மூதாதையரின் சொற்கொடைகள், தெய்வக்காப்புகள் எதுவுமின்றி என் தோள்வலிமை மட்டுமே கொண்டு களத்தில் தனித்து நிற்கப்போகிறேன். நான் களத்திற்குக் கொண்டுசெல்லவிருப்பவை அனைத்தும் நானே ஈட்டிக்கொண்டவை. ஆகவே நான் பெறும் வெற்றி முற்றிலும் என்னுடையதே” என்றான். சல்யர் மீண்டும் சினம்கொண்டு “மூடா! மூடா! மூடா!” என்று தலையில் அடித்துக்கொண்டார். “நீ போரிடப்போவது அர்ஜுனனிடம் அல்ல. அவன் தனியன் அல்ல. யானையின் கையிலிருக்கும் கதாயுதத்துடன் போரிட முடியாதென்று ஒரு சொல் உண்டு. யானையின் முழு எடையும் அக்கதையில் இருக்கிறதென்பதை நீ உணரவில்லை.”
“இது ஊழின் ஆடல்போலும்” என சல்யர் சொல்தளர்ந்தார். “அறுதியாக இப்போரில் அவனே வெல்வான் என்பதை எப்போதோ என் உளம் அறிந்திருந்தது. அதை நான் கற்ற அனைத்துச் சொற்களைக்கொண்டும் மழுப்பிக்கொண்டிருந்தேன். இன்று நீ இவ்வண்ணம் களத்திற்குச் செல்கிறாய் எனும்போது அதை முழுமையாக உணர்கிறேன். இன்றுகாலைவரை உன்னை எவரும் வெல்ல இயலாது என்று நம்பினேன். கதிர்மைந்தனை வெல்லும் மானுடர் எவரும் இங்கில்லை. இன்று ஒருவேளை போர் முடியும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். இப்படி ஒரு அறிவின்மையை ஆற்றி மீள்வாய் என்று எண்ணியிருக்கவே இல்லை.”
அவர் விசைகொண்டு தன் தலையை கைகளால் அறைந்துகொண்டார். “என் பிழை! ஆம் என் பிழை! நான் பொறுப்பேற்றுக்கொண்டிருக்க வேண்டும். நான் வந்து நின்றிருக்கவேண்டும். நான் அறிந்தது அனைத்தும் உனக்குரியவை என்று உரைத்திருக்கவேண்டும். என் பிழை! என் சிறுமை!” என்றார். அவர் மெல்லிய விம்மல்களுடன் விழிநீர் சிந்துவதை கர்ணன் வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தான். சிலகணங்களுக்குப்பின் அவர் மீண்டு மூச்சு சீறி கனைத்து குரல் திரட்டி “என் சிறுமையை எண்ணி நான் நாணாத நாளில்லை. தன்பிழையை தன்னிடமிருந்து மறைக்கவே இப்புவியில் மானுடர் சொல்பெருக்குகிறார்கள்…” என்றார்.
கர்ணன் அதை கேட்டதாகக் காட்டவில்லை. “நீ இவ்வண்ணம் களத்திற்குச் செல்வதைப்போல பிழை வேறில்லை. அவன் இந்திரனின் மைந்தன். தன் மைந்தனை வெல்லச்செய்ய தந்தையே வேதம்வழியாக மண்ணிறங்கி வந்திருக்கிறான்” என்றார். “நீ உன் தந்தையை அழை. நிகழ்ந்ததை சொல். இன்னும் பிந்தவில்லை. உடனே ஒரு வேதியரை நான் அழைத்துவருகிறேன்.” கர்ணன் “நாம் தெய்வங்களுடன் நாற்களமாடவேண்டியதில்லை, மத்ரரே” என்றான். ‘இனி எதற்கும் பொழுதில்லை. அதை நீங்களே அறிவீர்கள்.” சல்யர் “ஆம், மெய்தான். இத்தருணத்தில் எதைப்பேசுவதும் எவ்வண்ணம் சொற்கூட்டுவதும் ஒற்றைப்பொருளையே அளிக்கின்றன. இது வீண் உளமாடல்” என்றார்.
கர்ணன் திரும்பி அப்பால் விலகி நின்றிருந்த ஏவலனிடம் தனக்கு கவசங்களை அணிவிக்கும்படி கைகாட்டினான். அவன் வந்து கவசங்களை எடுத்து அணிவிக்க இயல்பாக உடலை அவனிடம் அளித்தபடி நிலம் நோக்கி அமர்ந்திருந்தான். சல்யர் தலைதாழ்த்தி சொல்லின்றி அமர்ந்திருந்தார். ஆனால் அவர் உடலில் இருந்து வெம்மைபோல் ஒன்று வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. மெல்லிய அசைவுகள் அவ்வப்போது ஏற்பட்டன. அவர் உள் எரிவதை உடல் காட்டியது. கர்ணன் கையசைவாலேயே ஏவலனுக்கு ஆணைகள் இட்டான்.
கவசங்களை அணிவித்துமுடித்த ஏவலன் சற்று விலகி தலைவணங்கி “முடிவுற்றது, அரசே” என்றான். கர்ணன் தலையசைக்க அவன் “அங்கர் போருக்கு எழுகிறார்” என்று கையசைவால் அப்பால் நின்றிருந்த காவலர்களுக்கு அறிவித்தான். காவலர்களில் ஒருவன் சங்கொலி எழுப்ப அது ஒன்றில் இருந்து ஒன்றென தொட்டுச் சென்று தொலைவெளியெங்கும் நிறைந்திருந்த அங்கநாட்டுப் படைகளை சென்றடைந்தது. அவர்கள் “அங்கர் வாழ்க! கதிர்மைந்தன் வாழ்க! வெல்க சம்பாபுரி! வெல்க கதிர்க்கொடி!” என வாழ்த்தொலி எழுப்பினார்கள். அவ்வொலி பரவ கௌரவப்படைகள் அனைத்திலிருந்தும் வாழ்த்தொலிகள் ஒன்றிலிருந்து ஒன்றென தொடுத்துக்கொண்டு பெருகி ஒலித்தன.
சல்யர் எழுந்து கர்ணனை நோக்காது “இன்று நான் உனக்கு தேர் நடத்துகிறேன்” என்றார். “தாங்கள் அதற்கு விரும்பவில்லை என்று நேற்று சொன்னார்கள்” என்றான் கர்ணன். “ஆம், நேற்று அதை ஒழிய வேண்டியிருந்தது. இன்று வேறு வழியில்லை” என்றார் சல்யர். “இன்று நானே தேர் நடத்துகிறேன். நான் தேரிலிருக்கும்வரை எவரும் உன்னை கொல்ல முடியாது” என்றார். “தாங்கள் விழையாத ஒன்றை செய்யவேண்டியதில்லை” என்று கர்ணன் சொன்னான். சினம் மேலேற “அறிவிலி!” என்று உரக்க கூவிய சல்யர் அடிக்க என எழுந்த கை காற்றில் நிற்க, எண்ணம் தயங்கி, “நான் உன்னுடன் இருப்பேன். இன்று நான் உன்னுடன் இருப்பேன்” என்றார்.
“நன்று” என்று கர்ணன் புன்னகையுடன் சொன்னான். மேலும் ஏதோ சொல்ல முயன்றபின் அதை அவ்வாறே விட்டு விட்டு சல்யர் எடைமிக்க நடையுடன் சென்று தன் புரவியை அணுகி அதன்மேல் ஏறிக்கொண்டார். ஏவலன் அளித்த கடிவாளத்தைப் பற்றி காலால் குதிமுள்ளை செலுத்தி விசை கூட்டி மரப்பலகைகளில் குளம்படிகள் துடி தாளமெழுப்ப விரைந்தகன்றார். கர்ணன் அவர் செல்வதை வெறும்விழிகளுடன் நோக்கி நின்றான். ஏவலன் அவனருகே குனிந்து குறடுகளை அணிவிக்கலானான். ஏவலன் ஏதோ சொல்ல ஒருகணம் குனிந்து அதை ஏற்றுவிட்டு மீண்டும் விழிதூக்கியபோது சல்யர் நெடுந்தொலைவு சென்றுவிட்டிருந்தார்.
கர்ணன் எழுந்து குறடுகளை அணிவித்துக்கொண்டிருந்த ஏவலனிடம் “விரைவாக” என்றான். மீண்டும் குளம்படித் தாளம் ஒலிக்க சல்யர் வளைந்து திரும்பி வந்தார். புரவியிலிருந்து வில்லில் அம்பை என தன்னை விடுவித்துக்கொண்டு அவனை நோக்கி ஓடிவந்து மூச்சிரைக்க நின்று “செல்கையில் ஓர் எண்ணம் வந்தது. அதை சொல்லிவிட்டுப் போகலாம் என்று வந்தேன். நீ உரைத்ததுபோல நீ களத்திற்கு கொண்டுசெல்லவிருப்பவை நீ ஈட்டிக்கொண்ட அனைத்தும்தான். அவற்றில் தலையாயவை கொடைப்பயன்கள். அவை உன்னை காக்கும். தேவர்கள் நிரைநிரையாக வ்ந்து உன்னைச் சூழ்ந்து நின்றாகவேண்டும். உனக்கு அழிவின்மையை அவர்கள் அளித்தாக வேண்டும்” என்றார்.
“இல்லையேல் இப்புவியில் மானுடரைக் காக்கும் அறம் என்று ஒன்றை நிறுவிய தெய்வங்கள் பொருளற்றவர்கள் ஆவார்கள். சற்று முன் நீ அளித்த கவசமும் குண்டலங்களும்கூட அதற்கு நிகரான கொடைப்பயனை உனக்கு அளித்திருக்கும். அவற்றை தக்கவைத்துக்கொள். அவை உன்னைக் காக்க்கும் கேடயங்கள் ஆகுக! உன் படைக்கலங்கள் என கூர்கொள்க! உடன் நானுமிருப்பேன். ஒருகணமும் ஓயாது நிற்பேன். எண்ணிக் கொள்க, நான் தேர் அமரத்தில் இருக்கும் வரை உன்னை எவரும் வெல்லப்போவதில்லை! தேரின் கணக்கனுக்கு புரவியின் உள்ளம் தெரியும், அதற்கப்பால் களத்தில் நிகழும் பிறிதொன்று எனக்குத் தெரியும். அது மலைமகனின் உள்ளுணர்வு, அது அவர்களுக்குத் தெரியாது. எரியும் பந்தம் ஒன்றை கையிலேந்தி இருளுக்குள் செல்வது போல நீ என்னை கூட்டிக்கொள். நான் உடன் இருப்பேன்” என்றபின் மீண்டும் உடல் தளர்ந்து “தெய்வங்களே” என்றார்.
“நன்று, தாங்கள் உடனிருப்பது என்னை நம்பிக்கை கொள்ளச்செய்கிறது. நான் வெல்வேன்” என்றான் கர்ணன். அந்த முறைமைச்சொற்கள் அவரை திடுக்கிடச்செய்தன. அவனை திகைப்பு கொண்ட விழிகளுடன் நோக்கினார். ஒரு கண் இமைதளர்ந்து சற்று கீழிறங்கியதுபோலிருந்தது. உதடுகளில் அவர் அங்கு சொன்ன சொற்களுக்கு அப்பாலிருந்த ஏதோ சொற்கள் ஒலியிலாது அசைவென நிகழ்ந்தன. போகட்டும் என்பதுபோல கைகளை வீசினார். முதுமை நிறைந்து தசைகள் நெகிழ்ந்து உடல் வளைந்தவர் போல் நடந்து தன் புரவியை நோக்கி சென்றார். கர்ணன் ஒரு சொல் பேசாமல் அவர் செல்வதையே நோக்கிக்கொண்டிருந்தான்.
படைகள் அணி நிரப்பதற்கான கொம்போசையும் முரசோசையும் எழுந்தன. மழைச்சாரல் சற்று ஓய்ந்திருக்க வானொளியை வாங்கி ஆடித்துண்டுகள் என மின்னிய நீர்ப்பரப்புகள் விழிதுலங்கும் ஒளியை எங்கும் பரப்பியிருந்தன. யானைகள் நிழலுருக்களாக அணிவகுத்துச் சென்றுகொண்டிருந்தன. புரவிகள் நீரொளிச்சிதறல்களில் தயங்கி மெய்குறுக்கி தாவிக்கடந்தன. “தங்கள் படைக்கலங்கள் ஒருங்கிவிட்டன, அரசே” என்று ஏவலன் சொன்னான். “எடுத்து தேரில் வை” என்று கர்ணன் ஆணையிட்டான். பின்னர் தன் குடில்நோக்கி நடந்து படலைத் திறந்து உள்ளே சென்றான். குடிலுக்குள் ஏதோ ஒன்று மறந்து வைக்கப்பட்டுவிட்டதுபோல் உணர்ந்தான். அதுவரை ஆழம் அதை எண்ணிக்கொண்டிருந்ததை அப்போதுதான் உணர்ந்தான்.
குடிலின் குளிருக்குள் அரையிருள் நிறைந்திருந்தது. அவன் விழி திருப்பியபோது குடில் மூலையில் அவன் எண்ணியதைக் கண்டான். ஒரு சிறு நாக நெளிவு. அவன் அசையாது நிற்க அது ஒளியுடன் ஒழுகி வந்து அவன் முன் சுழித்தது. சிறுசுனையில் முளைத்து எழுந்த கரிய செடி என அதன் சிறிய தலை படம்கொண்டது. “உன்னைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன்” என்று கர்ணன் சொன்னான். “ஆம், எனக்களிக்கப்பட்ட ஒரு சொல் எஞ்சியுள்ளது” என்றது நாகம். பின்னர் அது தட்சமைந்தனின் உருக்கொண்டு எழுந்தது. அதன் நிழல் நாகவடிவமென அரைச்சுவரில் வளைந்து நின்றது. பாதி வெந்த உடலும் தசை பிளந்து எலும்புகள் தெரியும் விலாவுமாக அம்மைந்தன் நின்றிருந்தான். அவன் இருகண்களும் இமையா மணிகளென கர்ணனை நோக்கின.
“எனக்களிக்கப்பட்ட சொல் அவ்வாறே உள்ளது, அங்கரே” என்றான். “எங்கள் குலம் அச்சொல்லை நம்பித்தான் பாரதவர்ஷமெங்கும் காத்துள்ளது.” கர்ணன் “ஆம், நான் எந்நிலையிலும் சொல்லழிபவனல்ல” என்றான். “இனி எஞ்சுவதென்ன? எங்கள் குலத்திற்கு நீங்கள் அளிக்க உங்களிடம் மிஞ்சுவதென்ன?” என்று தட்சன் கேட்டான். “சற்று முன் எந்தை இங்கு சொல்லிச் சென்றார். என்னில் இப்போதிருப்பது நான் வாழ்நாளெல்லாம் ஈட்டிய கொடைப்பயன் என்று. அது அழிவின்மையை அளிப்பது. அதற்குப்பின் தெய்வங்கள் அணிநிரக்கும். அதை அளிக்கிறேன். உனக்கும் உன் குலத்துக்கும் அதை அளிக்கிறேன். என்றும் அது உன்னுடன் இருக்கட்டும். உங்கள் குலம் அழிவின்மை கொள்ளும். எந்தபோரிலும் உங்களுக்குத் துணையாக தெய்வங்கள் இறங்கி வரும்” என்றான் கர்ணன்.
அவன் இமையாவிழிகளை நோக்கி கர்ணன் சொன்னான் “அறிக, இங்கிருக்கும் அத்தனை தெய்வங்களுடனும் நீங்களும் இருப்பீர்கள் ஆழிவண்ணன், அனல்வண்ணன். நான்முகன், யானைமுகன், ஆறுமுகன், முப்பெரும் தேவியர், இங்கு தெய்வமென எழுந்த அனைவரும் நாகமின்றி நிலைகொள்ளாமலாவார்கள். இனி இங்கு தெய்வங்களை வணங்குவோர் எவராயினும் நாகங்களையும் வணங்குவர். உஙகள் குலம் பாலில் நெய் என பாரதவர்ஷத்தின் அனைத்துக் குலங்களிலும் கலந்து உறையும்.” தட்சமைந்தனின் உடல் நடுங்கியது. தன் கையை நீட்டி “அளியுங்கள்” என்று அவன் சொன்னான்.
கர்ணன் புன்னகைத்து “எவ்வடிவு கொண்டாலும் அவ்வடிவில் இருக்கையில் அவர்களே நாம் என்பதை நீ அறிவாய்தானே?” என்றான். இளம்தட்சன் “ஆம்” என்றான். “எனில் உன் படம் தூக்கி இந்நிலம் தொட்டு மும்முறை ஆணையிடு. என்னிடம் பெற்றுக்கொண்ட இந்தக்கொடை பயனுறும் என்று. எந்நிலையிலும் இது எவராலும் நாகர்களுக்கு மறுக்கப்படாது என்று.” தட்சன் சிலகணங்கள் நிலைத்த நோக்குடன் நின்று பின் புன்னகைத்து தன் இடக்கையை தூக்க அது சிறு நாகக்குழவியின் படமென்றாயிற்று. மும்முறை அதை நிலத்தில் கொத்தி “ஆணை! ஆணை! ஆணை!” என்றான்.
கர்ணன் தன் இடையிலிருந்த குறுவாளை எடுத்து கையின் நீல நரம்பை வெட்டி அதில் பெருகிய குருதியை வலக்கை குமிழில் ஏந்தி மூன்று சொட்டுகள் விட்டு “அளித்தேன்! அளித்தேன்! அளித்தேன்!” என்றான். நாகக்குழவியின் உடல் சற்று ஒளி கொண்டது. “பெற்றுக்கொண்டேன், அங்கரே. இச்சொல்லால் நாகர்குலம் என்றும் இந்நிலத்தில் அழியாது நீடிக்கும். சொல்லில் ஒளிகுறையாது வாழும். எங்கள் நினைவுகளில் நாகபாசன் என்று நீங்களும் நின்றிருப்பீர்கள். கார்கடல் ஒளிகொண்டது போல் பாரதவர்ஷத்தில் உமது புகழ் ஒருபோதும் குன்றாது பெருகி நிறைந்திருக்கும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றபின் சுருண்டு வளைந்து தரையிலிருந்த சிறுவெடிப்புக்குள் புகுந்து மறைந்தான்.
கர்ணன் குடிலிலிருந்து வெளிவந்தபோது விருஷசேனன் அங்கே நின்றிருந்தான். “தேர் ஒருங்கிவிட்டது, தந்தையே” என்றான். கர்ணன் தன் அணிகளின் ஒளி சுடர தேர் நோக்கி சென்றான்.