சோற்றுக் கணக்கு ,ஒரு கடிதம்

ஜெ,

சோற்றுக்கணக்கு பற்றி. எப்படிச் சொல்வது ? சிறு துளி அனுபவமும் இல்லாவிடில் இந்த கதை உள்ளிறங்காது. அது பசியின் அனுபவமாக இருப்பினும், பசித்த வயிற்றுக்கு உணவு அவமதிக்கப்பட்ட அனுபவமாக இருப்பினும், பசிக்கு உணவிட்ட அனுபவமாக இருப்பினும், .. எந்த அனுபவமாக இருப்பினும் சரி.

ஒரு மிக சாதாரண வருவாய் உள்ள குடும்பமாக எங்கள் குடும்பம் இருந்த போது எனது குழந்தைப் பருவம் நடந்தது. இன்று நினைத்துப் பார்த்தால் வலிக்கும் வியப்பு… வெறும் 400 மில்லி பாலில் ஆறு பேருக்கு காலை மாலை காபி மற்றும் மோர் … நல்ல ஆடை என்பதே கொஞ்சம் (அதாவது 2 செட்) போக 2 செட். அதில் “யுனிபார்ம்” அடக்கம். எங்கள் சொந்தத்தில் அனைவருமே எங்களை விட வசதி கூடுதல். அப்படி ஒரு சொந்தத்திற்கு நடந்த கல்யாணத்தில் சாப்பாட்டுப் பந்தியில் அமர்ந்திருந்தேன். அதுவரை எனது வயதுக்குட்பட்ட வேலைகளை ஓடி, ஓடிச் செய்தேன். ( எனக்கு வயது 8 இருக்கும்). எல்லாம் பரிமாறி பருப்பில் நெய் விடும் வரை இலையில் கை வைக்கக் கூடாது எனும் சம்பிரதாயம் வேறு.

சாப்பிட காத்திருந்த என்னை ஒருவர் ( அவரும் சொந்தம்தான்) வேகமாக வந்து “டேய் ! உன்ன உன் அம்மா கூப்பிட்டா” என்றார். ஓடிச் சென்று பார்த்தால் எனது அம்மா என்னை கூப்பிடவேயில்லை. திரும்பி பந்திக்கு ஓடி வந்தேன். எனது இலையில் நல்ல ஆடைகள் உடுத்திய, வெகு வசதியான இன்னொரு பெண் குழந்தை சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அந்த நபர் பக்கத்திலேயே இருந்து கவனிப்பு வேறு. ஏமாற்றப்பட்ட உணர்வும், பசியும், தன் இடம் பறி போன உணர்வுமாய் அவ்வயதிற்கேயுரிய அழுகை முட்டும் கூச்சலுடன் “அது என் இடம்” என்று கத்தினேன். அந்த நபர் வேகமாய் நெருங்கி உருட்டிய கண்களும், நெறித்த புருவமுமாய் “அதுக்கென்ன இப்ப? ஏன் தொரை அடுத்த பந்தியில சாப்பிடமாட்டியோ ? போடா. வந்துட்டான் பெருசா.சட்டையும், டவுசரையும் பாரு” என்று கையை ஓங்கினார்.

ஆறு வயதுக்கு மேல் என்னை என் அம்மா அடித்ததேயில்லை . அனைவரின் முன்னும் கை ஓங்கப்பட்டதை என்னால் தாள முடியவில்லை. கண்ணீர் வந்துவிட்டது. பந்தியில் அனைவரும் கவனிப்பதை பார்த்த அவர் சட்டென மாறினார். “சும்மா மெரட்டினா அழுகறத பாரு… பொண்டுகசெட்டி மாதிரி ” என்று சிரித்தார். அவர் மட்டுமில்லை என் வயதிலுள்ள அனைத்து “பசங்களும்” ஓவெனச் சிரித்தார்கள். அனைவரின் பார்வையும் என் மேலிருக்க பந்தியை நான் நடந்து கடந்த தூரம்தான் வாழ்க்கையிலேயே நான் கடந்த தூரங்களில் கடினமானது.

அப்பெண் குழந்தையின் அப்பாவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டி “அவர்” செய்தது அது எனபது பின்னர் புரிந்தது. ஆனால் அந்த அவமதிப்பின் வலி என்னை வெகு காலம் தொடர்ந்திருந்தது. எனது குடும்பத்தார் யாரேனும் ஒருவர் கூட இல்லாமல் நான் எந்த பந்தியிலும் உட்கார்ந்ததில்லை . உணவு வாய்க்குப் போகும் வரை ஒருவர் வந்து எழுப்பி விடுவாரோ என்ற பயம் போகவில்லை.. அதனாலேயே பரிமாறுபவர் முகத்தையோ, எதிரிலிருப்பவர் முகத்தையோ பார்க்காது முதல் கவளம் உணவு உள்ளே போகும் வரை தலை குனிந்து இலையை மட்டுமே பார்த்திருப்பேன். இன்றும் எனது அலுவலகத்தில் ஒருவரையும் நான் பாதி உணவில் எழுப்பியதில்லை. நான் சம்பாதிக்க ஆரம்பித்ததும் வெறி கொண்டவனாய் நல்ல ரகமான ஆடைகளை வாங்கிக் குவித்தேன். இரண்டு வருடங்கள் . இன்றும் என்னிடம் இருக்கும் ஆடைகள் பலவும் நான் அப்போது வாங்கியவையே. எங்காவது, எவராவது என்னைச் சட்டென எழுப்பி விடலாகாது என்பதற்காகவே எனது தோற்றத்தில் அதிக அக்கறை கொண்டு என்னை உருவாக்கிக்கொண்டேன். இன்று அவமதிப்பின் வீம்பு வடிந்து வெறும் தழும்பு மட்டும். ஆனாலும் தழும்பு இருக்குமிடம் சிறு பள்ளம்தானே !

அப்போதிலிருந்து (அழுதா பொண்டுகசெட்டி) அழுவது என்பது அழுத்தமாக மாறிவிட்டது. கண்களில் நீர் கட்டினாலும் எவர் முன்னும் இமை மீற விட்டதில்லை. வெகு கனமான மௌனம் மட்டுமே.

அழுவதே இல்லை என்ற தீர்மானம் கோதாவரியில் உடைந்தது. மேல் தளத்தில் ஜெமோ நாஞ்சில் அவர்களின் சிறு வயதில் பந்தியிலிருந்து எழுப்பப்பட்ட நிகழ்வை சொல்லி ” நான் கட்டையில வேகற வரையில இந்த நெனப்பு போகாது ஜெயமோகன் ன்னு சொல்லுவார் ” என்று முடிக்கும் போது நான் இமை மீறி விடுவேன் எனத் தோன்றியது. சட்டென எழுந்து கழிப்பறை செல்வதாய் காட்டி கீழிறங்கி வந்து அழுதேன். வெறுமே விலகி செல்லும் நீரின் அகலத்தை பார்த்தவாறே இருக்கிறேன். கண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கிறது. “இடலாக்குடி ராசா” படித்தபோதும் இப்படி உணர்வு.. ஆனால் இமை மீறவில்லை. நாஞ்சில் “பிரியத்துக்குரிய எழுத்தாளர்” என்பதிலிருந்து “பிரியத்துக்குரியவர்” ஆகிப் போனார்.

பின்னர் வாழ்வில் எவ்வளவோ பார்த்தாகிவிட்டது. நல்ல உள்ளங்கள். கெட்டில் சாயபு போலவே வாசுதேவநல்லூரில் மெஸ் நடத்தி வயிறார அனைவருக்கும் சாப்பாடு போட்ட “கோதை ஆச்சி” , மதுரை காளவாசலில் கடை நடத்தி இப்போது காணாமல் போய் விட்ட சுரேசு, பசிக்கு உணவிட்ட அன்னையர்கள்.. ஆனாலும் மறக்க முடியவில்லை.

இந்தச் சம்பவத்தை ஒரு முறை ஜெமோ நேர் பேச்சில் சொல்லி கேட்கும்போதே உள்ளே உதறியது. படித்ததும் பல்லைக் கடித்து பொறுத்தேன். “பாழாய் போன” ஷர்மா .. அந்த கடிதத்தை எழுதாவிட்டால் தான் என்ன ? எனக்கும் அன்று இரண்டாம் பந்தியில் உட்கார்ந்து சோற்றை வாய்க்கு கொண்டு போகும்போதுதான் அழுகை பீறிட்டது. ஷர்மாவும் கண்ணகி சிலை கீழே அழுதேன் என்று சொன்ன நொடி இமை மீறிப் போனது.
என்ன சொல்ல? பகுப்பாய்வு, பருப்பு கடைவு எல்லாம் பண்ணிக் கொள்ளுங்கள் அய்யா! கைச் சோறு பிடுங்கப்பட்டதன் வலி சோற்றை பிசைந்தவனுக்குத்தான் தெரியும்.

ராஜகோபாலன்.ஜா, சென்னை

முந்தைய கட்டுரைவேளாண்மை ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைமத்துறுதயிர்-கடிதங்கள்