விலங்கின் மறுநுனி

தக்கலையில் ராஜன் மெஸ்ஸில் நான் அடிக்கடி மதியம் சாப்பிடுவேன். பெரியதொரு ஓலைக்கொட்டகை மட்டும்தான் மெஸ். ராஜன் பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அவரும் மனைவியும் அம்மாவும் சேர்ந்து சமைப்பதை அவர் ஆட்டோவில் கொண்டுவந்து வைத்து விற்பார். அவரே பரிமாறுபவர். அவரே துடைப்பாளர். அவரே காசாளர்.

சரியான நாயர் சாப்பாடு. வறுத்த மீன், தேங்காய் அரைத்துச்செய்த மீன்குழம்பு, பெரிய சிவப்பு அரிசிச்சோறு, அவியல், துவரன், நெல்லிக்காய் அல்லது மாங்காய் ஊறுகாய். சுவையான சாப்பாடு. டப்பாவில் கொண்டுவரும் ஆறிப்போன சாப்பாட்டுக்கு அது அமுதம் மாதிரி. ஆனால் அருண்மொழி அடிக்கடி அங்கே சாப்பிட பணம் தருவதில்லை. வலுவான காரணம் வேண்டும். ராஜன் சுறுசுறுப்பான இளைஞர், சினிமா நடிகர்போல இருப்பார். நான் பன்னிரண்டரைமணிக்கே சாப்பிடச்சென்று விடுவதால் அனேகமாக கூட்டம் இல்லாமல் நிதானமாக சாப்பிட்டுவருவேன்.

நேற்று மெஸ்ஸுக்குள் நுழைந்தபோது ஒரு விசித்திரக் காட்சியைக் கண்டு ஒரு கணம் அயர்ந்துவிட்டேன். உள்ளே பெஞ்சில் அமர்ந்து ஒரு ஆணும் பெண்ணும் ஒரே இலையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். கேனத்தனமாக இருந்தது. அந்தப்பெண் இளைஞனுக்கு சோற்றை அள்ளி அள்ளி ஊட்டிக்கொண்டிருந்தாள். கணநேரக் காட்சிக்குப்பின் அப்பக்கமாக தலையைத் திருப்பாமல் சென்று அமர்ந்துகொண்டேன். ராஜன் இலையை விரித்து தண்ணீரை வைத்தார். நான் இலையைத் துடைத்தேன். விசித்திரமான கிசுகிசுப்பொலிகள் கேட்டன. பெருமூச்சுகள், மெல்லிய விம்மல்கள்.

ஏதாவது காதல் ஜோடியா? அவர்களைப் பார்க்காமலேயே ஊகிக்க முனைந்தேன். ஒருசில சொற்களில் அவர்கள் மலையாளிகள் என்று அறிந்துகொண்டேன். என்ன அபத்தம் இது, அவர்களை நான் ஏன் கவனிக்க வேண்டும்?  ஆனால் மூளையின் எல்லா நரம்புகளும் அவர்களை நோக்கியே மையம் கொண்டிருந்தன. தக்கலை சின்னஞ்சிறு ஊர். கணவனும் மனைவியும் அருகருகே பேசிக்கொண்டு நடந்தால்கூட வேடிக்கை பார்ப்பார்கள். காதலர்கள் இருவரும் அதிகபட்சம் கண்களால் பார்த்துக்கொள்ளலாம். அதற்கே சுற்றுப்புறம் குளிர்ந்து விரைப்படையும்.

அபூர்வமாக கேரளத்துக்காதலர்கள் சுற்றுலாப்பயணிகளாக வருவார்கள். கன்யாகுமரிக்குப் போய்விட்டு பத்மநாபபுரம் வரும் வழி. பேருந்தில் ஒருவரை ஒருவர் அணைப்பதுபோல நெருங்கி அமர்ந்து கிசுகிசுவெனப் பேசிக்கொண்டிருப்பார்கள். கைகளைப் பற்றிக்கொள்வார்கள். சிலசமயம் ஒருவரை ஒருவர் கிள்ளுவதும் அடிப்பதும் வெட்கிச்சிரிப்பதும் உண்டு. வீட்டுக்குத்தெரியாமல் வந்த கிராமத்துப்பெண்கள் தலையைக்குனிந்துகொண்டே இருப்பார்கள். மொத்தப்பேருந்தே அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்க அவர்கள் யாரையும் பார்க்காததுபோல பாவனைசெய்வார்கள். அபூர்வமாக ஓட்டலில் இறங்கி அமர்ந்து கிசுகிசுத்தும் கிளுகிளுத்தும் சாப்பிடுவதும் உண்டு. ஆனால் இது மிக அதிகப்படியாகத்தெரிந்தது.

சட்டென்று உரக்க ஒரு சீறல். சிரிப்பு பீரிடுகிறதுபோல. மேலும் ஒரு விசித்திர ஒலி. நான் ஏறிட்டுப்பார்த்தேன். அந்தப்பெண் வாயில் சோற்றுடன் விக்கி அழுது திணறிக்கொண்டிருந்தாள். அவன் தண்ணீரை எடுத்து அவளுக்கு ஊட்டினான். அவள் திணறி கனைத்து மெல்ல தண்ணீரைக்குடித்துக்கொண்டு நெஞ்சைப்பற்றியபடி மேலும் விக்கி அழுதாள். அவன் அவள் கண்ணீரைத்துடைக்க அவள் அப்படியே அவன் தோளில் விழுந்துவிட்டாள். அவனும் கண்ணீர்விட்டு அழுதுகொண்டிருந்தான்.

அவன் கையில் பளபளக்கும் விலங்கைப்பார்த்தேன். அப்படியா என்று எண்ணிய கணமே ஒன்றை கவனித்தேன், விலங்கின் மறுமுனை அவள் கையில் மாட்டப்பட்டிருந்தது. அவள் ஊனமுற்றபெண். பெஞ்சு அருகே ஒரு அலுமினிய ஊன்றி சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. அவளது ஒருகால் போலியோ வந்தது. அந்தக்கோணல் உடலெங்கும் தெரிந்தது. மாநிறமான நீள்வடிவ முகம் கொண்ட பெண். சுருட்டையான தலைமுடி. பார்க்க லட்சணமான முகம். நீலச்சுடிதார் போட்டிருந்தாள். கைகளில் பிளாஸ்டிக் வளையல்கள். ஸ்டிக்கர் பொட்டு. பாசிமணி மாலை. பிளாஸ்டிக் தொங்கட்டான்கள். அவன் குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடியும் ஒருவாரத்தாடியும் கொண்ட ஒல்லியான இளைஞன். நரம்புகள் புடைத்த கைகள்.

அவளுடைய அழுகையை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. நான் சமீபத்தில் அப்படி ஓர் அழுகையைப் பார்த்தது இல்லை. அதிவேகத்தில் நீர் செல்லும் குழாய் நெளிவதுபோல அவள் வழியாக பொங்கி ஓடிய அழுகையில் உடலே நெளிந்து துடித்தது. அவன் அவளை சமாதானப்படுத்த முயல்பவன்போல அவள் கைகளைப்பிடித்தான். தலையைத் திருப்ப முயன்றான். அவள் அழுகையைத்தவிர வேறெதையும் விரும்பாதவள்போல, சமாதானமானால் உயிரே போய்விடுமென எண்ணியவள் போல குலுங்கி அதிர்ந்து அழுதாள். அவன் முரட்டுத்தனமாக அவள் கைகளைப்பிடித்து அவளைச் சுவரோடு சேர்த்து அழுத்தி ”நளினி…இவிடே நோக்கு..எடி..” என்று ஏதோ சொல்ல முயன்றான். அவன் சொற்களையும் சேர்த்து அவள் அழுகை அடித்துக்கொண்டு சென்றது.

பின்னர் அவன் செய்ய ஒன்றுமில்லாதவனாக பெருமூச்சுடன் பின்னால் சாய்ந்து அமர்ந்தான். அவன் கண்ணீர் மட்டும் தாடிமுட்கள் வழியாக வழிந்துகொண்டிருந்தது. அவள் அழுது அழுது மெல்ல விசும்பி ஓய்ந்தாள். என்னால் சாப்பிட முடியவில்லை. என் தொண்டை கரகரத்தது. என் முகத்தைப்பார்த்தால் நான் அழுதுகொண்டிருப்பது போல இருந்திருக்கும். அவள் துப்பட்டாவால் கண்ணீரைத் துடைத்தபின் மீண்டும் ஒருபிடிச் சோற்றை அள்ளினாள். ஆனால் சோற்றைப்பார்த்ததுமே மீண்டும் அழுகை முகத்தைப் பிய்த்துக்கொண்டு வெளியே வந்தது.

அவன் சட்டென்று அவளை இழுத்து அணைத்து அவள் முகத்திலும் உதடுகளிலும் முத்தமிட்டான். ஒரு கணம் அதைப்பார்த்த நான் தலைகுனிந்து மீன்வறுத்ததை மெல்ல பிய்த்தேன். கைகள் நடுங்கின. எழுந்து போய்விட்டால் என்ன? ஆனால் நான் கோபமாக எழுந்துபோவதாக ராஜன் நினைக்கக் கூடும். என்னால் அங்கிருந்து எழவும் முடியவில்லை. இருவரும் அழுது விம்மியபடி ஆரத்தழுவி முத்தமிட்டார்கள். பின்பு பாம்பு போல சீறியபடி பிரிந்து ஒருவரை ஒருவர் அணைத்தபடி அமர்ந்திருந்தார்கள்.

ராஜன் ”மதி மதி… இனி இவ்விதம் போயால் சங்கதி கெர்ப்பமாக்கும்…’ ‘என்றார். அவர்கள் அவர் குரலைக் கேட்கவேயில்லை. ராஜன் என்னிடம் ”சாருக்கு என்ன சாம்பாரா?” என்றார். நான் ”ம்ம்” என்றேன். சாம்பார் விடும்போது ராஜன் ”கொலைக்கேஸு சார்… இவன் மூணு வருஷமா உள்ள இருக்கான். கேஸு இன்னும் முடியல்லை. இங்க முன்சீப் கோர்ட்டுலே கேஸு நடந்திட்டிருக்கு… அதுக்காக கேரளத்திலே இருந்து கொண்டுவறாங்க” என்றார். நான் அந்தப்பெண்ணைப்பார்த்தேன். ”அவனுக்க கெட்டினவளாக்கும்… கெட்டி நாலுமாசமாகல்ல அதுக்குள்ள இவன் கொலைக்கேஸிலே மாட்டிப்போட்டான்…”

அவர்களைப்பார்த்தேன். இருவரும் உருகி ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ள விரும்புகிறவர்கள் போல. மனித உடலில் இத்தனை கண்ணீர் இருக்கிறதா என்ன? உடல் ரத்தமெல்லாம் கண்ணீராக வந்துவிடும்போல் இருக்கிறதே. ”குட்டி எம்ஸியே படிச்சவளாக்கும். லவ் மேரேஜு. அவளுக்கு இப்பம் ஆருமில்லை. ஒரு ஹாஸ்டலிலே இருக்கா. ரெண்டுமாசத்துக்கு ஒருக்க இவனை கேஸுக்குக் கொண்டுவரும்போ வந்து பாத்திட்டுப்போவா… நம்ம ஓட்டலாக்கும் ஸ்தலம்… நல்ல குட்டி. இப்பம் பாறசாலையிலே  ஒரு கடையிலே வேலைபாக்குறாளாம்…”

வெளியே இருந்து இரு கேரளப்போலீஸ் கான்ஸ்டபிள்கள் வந்தார்கள். ”எந்தெடே தீர்ந்நில்லே?” என்றார் ஒருவர். அவன் புன்னகை செய்தான். அவளிடம் ”எந்தெடீ… ஹனிமூன் மதியாயில்லே?” என்றார் கான்ஸ்டபிள். அவள் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். ”வேகம் திந்நோளூ… நேரமாயி கேட்டா?” அவன் சோற்றை அள்ளி அவளுக்கு ஊட்டப்போக அவள் வெட்கிச் சிரித்து கான்ஸ்டபிள்களைப் பார்த்துவிட்டு வேண்டாம் என்றாள். ”தின்னெடீ…ஞங்ஙள் நோக்குந்நில்ல” என்றபடி கான்ஸ்டபிள்கள் வெளியே சென்று நின்றார்கள்.

அவள்  சோற்றை உருட்டி அவனுக்கு ஊட்டினாள். அவன் ஏதோ சொல்ல வெட்கிச் சிரித்தாள். இருவரும் கொஞ்சம் சாப்பிட்டதும் அவன் போதும் என்றான். அவள் குழந்தைக்கு ஊட்டுவதுபோல கண்டிப்பாக ஏதோ சொல்லி மேலும் சில உருளைகளை ஊட்டினாள். இருவரும் அர்த்தமில்லாமல் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அவனும் அவளும் எழுந்து சென்று கைகழுவினார்கள். அவன் கொஞ்சம் நீரை அவள் மேல் விசிற அவள் கண்ணாடி உடைவதுபோலச் சிரித்தாள். இருவரும் அடக்கமுடியாமல் சிரித்துக்கொண்டே வந்து பணம் கொடுக்கும் இடத்தில் நின்றார்கள்.

போலீஸ்காரர்களின் சாப்பாட்டுக்கும் சேர்த்து அவள் பணம் கொடுத்தாள். வெளியே பீடிபிடித்து நின்ற கான்ஸ்டபிள் ”ஆஹா.. மொகம் தெளிஞ்ஞல்லோ” என்றான். அவள் மெல்ல ஏதோ சொல்லிவிட்டு முகம்பொத்திச் சிரித்தாள். அவளை பக்கவாட்டில் பார்க்க எனக்கு உடல் சிலிர்த்தது. தாளமுடியாத ஆனந்தத்தில் சிவந்து கன்றிப்போன முகம், கழுத்து, ஏன் கைகள் கூட. ஊன்றியை இறுகப்பிடித்த கை நடுங்கிக்கொண்டிருந்தது. எத்தனை சந்தோஷம்… இனி ஏதும் மிச்சமில்லை என்பதுபோன்ற சந்தோஷம். கண்களின் இமைமயிர்களில் ஈரம் பளபளத்தது.

கான்ஸ்டபிள் சாவியால் அவள் கையில் பூட்டப்பட்டிருந்த விலங்கின் மறுமுனையைத் திறந்து தன்கையில் மாட்டிக்கொண்டான். அப்போது அவள் முகத்தின் சிரிப்பு மெல்ல அணைந்தது. அவள் அவனையே கூர்ந்து நோக்கியபடி ஊன்றி மீது சாய்ந்து நின்றாள். காதோரம் குறுமயிர்கள் காற்றில் ஆடிப்பறந்தன. அவர்கள் மெல்ல பேசியபடி நடக்க அவள் ஒன்றும் பேசாமல், பக்கவாட்டில் விழப்போவதுபோல ஆடி ஆடி சென்றாள். போகும் வழியெல்லாம் அவனையே நோக்கியபடி சென்றுகொண்டிருந்தாள்.

நான் எழுந்து கை கழுவிவிட்டு ராஜன் நாயரிடம் ”எந்தாயி?” என்றேன். அவர் கணக்குபோட ஆரம்பித்தார்.

முந்தைய கட்டுரைமாமிச உணவு – ஒரு கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 92