சுனில் கிருஷ்ணன் சிங்கை, மலேசியா வருகை -சரவணன் விவேகானந்தன்

அன்புள்ள ஜெமோ,

சிங்கப்பூரின் வளரும் இலக்கிய தலைமுறையினருக்கு கூடுதலான இலக்கிய அறிமுகத்தை வழங்கும் நோக்கத்தில் சிங்கப்பூர் தமிழ்முரசு நாளிதழ் தேசிய கலைகள் மன்றத்துடன் (National Arts Council)  இணைந்து படைப்பிலக்கிய திட்டம் ஒன்றைத்  தொடங்கியுள்ளது. அதன் ஒரு நிகழ்வுக்கு நம் நண்பர் சுனில் கிருஷ்ணன்  வந்திருந்தார். இத்திட்டம் புதிய மற்றும் வளரும் எழுத்தாளர்களின் படைப் பாற்றலை வளர்க்க உதவும் நோக்கத்தில் முன்னெடுக்கப்பட்ட்து என்பதால் இளையர்களால் தம்மை நெருக்கமாக பொருத்திக் கொள்ள இயலும்  இளம் தமிழ் படைப்பாளிகள் இத்திட்டத்திற்கு  பொருத்தமானவர்களாக இருப்பார்கள்  என்று கருதுகிறார்கள் என்று நினைக்கிறேன். மேலும்  இளம் படைப்பாளிகளால் இவ்விளையர்களின் தளத்தில் இருந்து இதை விரிவாக எடுத்துரைக்க இயலும் என்பது இத்திட்டத்தின் நோக்கத்தை எளிமையாக்குகிறது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக முதல் பயிலரங்கு இந்த மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றது. எழுத்தாளர்.  சு.வேணுகோபால் வழிநடத்தினார். ஒரு சிறு விபத்தினால் கை  எலும்பு முறிவு ஏற்பட்டு, என்னால் சு.வே  நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியவில்லை. இரண்டாம் பயிலரங்குதான் போன வாரம் சுனிலால் அறிவியல் புனைக்  கதைகள் மற்றும்  வரலாற்றுக் புனைக்கதைகள் எழுதுவது சார்ந்து வழிநடத்தப்பட்டது.  கையொடிந்து மெடிக்கல் லீவில் இருந்ததால் (:-) ) ஏர்போர்ட்டில் சுனிலை ரிஸீவ் பண்ணியதில் இருந்து  சிங்கப்பூர் மலேசிய பயணம் முடிந்து கடைசிநாள் வழி அனுப்பியது வரை கூடவே இருக்க முடிந்தது. நிறைய சுற்றினோம்.

சென்ற வெள்ளிக்கிழமை மாலை முதல் நிகழ்வாக சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்துடன் இணைந்த பொது நிகழ்ச்சியாக “கதைவழிப் பயணம்” ல் பொதுவாக கதைகள் வழி நாம் என்ன உணர்ந்து கொள்கிறோம், கதைகள் நம்மை என்ன செய்கிறது, அப்படி எதோ ஒன்றை செய்வதற்கு அந்த கதைக்கு என்ன தேவையாக இருக்கிறது என்று கதைகளை எடுத்துகாட்டுகளாக கொண்டு ஒருமணிநேரம் உரையாற்றினார். அது ஒரு பொது நிகழ்வு என்பதால் பல்வேறு தரப்பில் இருந்து வந்திருந்தார்கள்.

சனிக்கிழமை பயிலரங்கிற்கு சுமார் 28 பேர் வந்திருந்தார்கள். எழுத்தாளர்கள், மாணவர்கள் என்று பலதரப்பட்ட பேர் பங்கு கொண்டார்கள். சிறுகதை  என்றால் என்ன என்பதில் ஆரம்பித்து ஏன் அறிவியல் சிறுகதை என்ற வகைமை தேவையாகிறது, அதன் நோக்கம், அதில் பயன்படும் யுக்திகள், எது ஒன்றை அறிவியல் சிறுகதையாக்குகிறது, அறிவியல் ஹைப்போதீசிஸ் எப்படி ஒரு சிறுகதைக்குள் இயங்குகிறது, எது அனுமதிக்கப்பட்ட்து, எதை செய்யக் கூடாது, Science, Pseudoscience and Anti-science வித்தியாசம், அதன் வரம்புகள், பயிற்சி கேள்விகள் கேட்டு அதற்கான பதில்கள் கொண்டு அவர்கள் புரிதலை அளவிடல், பின் அதிலிருந்து அவர்களை மேலே கொண்டு செல்லல், பயிலரங்கில் பங்கேற்றவர்கள் அனுப்பிய கதைகளை விமர்சித்தல், அதை முன்வைத்து அவர்களுடன் விவாதித்தல் என்று விரிவாக போனது. அதன் பின் வரலாற்று புனைவு சார்ந்த அறிமுகம், எடுத்துக்காட்டுகள் மூலம் விவாதம், பயிற்சி  என அந்த ஒரு நாள் முழுவதும் வகுப்பு நீண்டது.

உண்மையில் சுனிலின் இந்த சிங்கப்பூர் மலேசிய நிகழ்வுகள் மிக சிறப்பாக அமைந்தது. சிஙகப்பூர் நிகழ்வு ஒரு முழு நாள் நிகழ்வு… முழு நாளும் தனியாக ஒரு நிகழ்வை சுவாரஸ்யம் குறையாமல் நடத்திசெல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் சிறப்பாக எல்லோரையும் கையாண்டார். அறிவியல் புனைக்கதைகள் மட்டும் ஒரு நாள் நிகழ்வில் கொண்டு செல்ல முடியாது என்றுதான் வரலாற்று புனைக்கதைளையும் சேர்த்திருந்தார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அது தேவையேயில்லாமல் அறிவியல் புனைகதைகள் மட்டுமே ஒருநாளை கிட்டதட்ட எடுத்து ஒரு முழுமையான நிகழ்வாக அமைந்தது. நமது அரூ அறிவியல் சிறுகதைகள் போட்டியில் வென்ற மற்றும் பங்கு பெற்ற சிறுகதைகளும் விவாதத்திற்கான எடுத்துக்காட்டுகளாக அமைந்தன, பிறமொழி அறிவியல் சிறுகதைகளும்.  மாணவர்களுக்கு பயனுள்ள நிகழ்வு, இதிலிருந்து அவர்கள் தம்மை மேலெடுத்து செல்ல நிறைய சாத்தியங்களை உள்ளடக்கிய நிகழ்வு.

பின் மலேசியாவுக்கு பேருந்தில் சென்றோம். நவீன் கோலாலம்பூருக்கு  வந்து அழைத்து சென்றார். சீ. முத்துசாமி இதற்காகவே அவரது ஊரில் இருந்து கொலாலம்பூர் வந்திருந்தார், மிகுந்த உற்சாகமாக பேசினார். டாக்டர். சண்முகசிவா வையும் சந்தித்தோம். ஸ்ரீதர் ரங்கராஜ் மற்றும் மஹாத்மன் போன்றவர்களும் வந்திருந்தார்கள்   அங்கு சுனிலின் நிகழ்ச்சி இரு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பகுதி “சமகால சிறுகதைகளின்  செல்நெறிகள்” என்ற தலைப்பில் உத்தேசமாக  2010 ல் இருந்து இப்போது வரை எழுதப்படட சிறுகதைகள் மற்றும் படைப்பாளிகளை முன்வைத்தான உரை. இந்த காலகட்டங்களில் எழுதப்படட சிறுகதைகளின் பல்வேறு  வடிவங்கள், வேறு வேறான கதைக் களங்கள், பேசாப் பொருட்களை பேசுதல், அதன் உத்திகள் என்று சமகால படைப்பாளர்கள் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு…..  மிகுந்த உழைப்பை கோரக்கூடிய செறிவான உரை அது.

ஏறத்தாழ 20 க்கும் மேற்படட தொகுப்புக்களை வாசித்து பேசுவதற்கான களத்தை உருவாக்கி கொண்டதாக சொன்னார். இன்றைய சமகால சிறுகதைகளின் போக்கு சார்ந்த  ஒரு ஒட்டுமொத்த சித்திரத்தை கொடுத்தார்.  பெரும்பாலும் இளம் படைப்பாளிகளை இந்த உரைக்கு எடுத்துக் கொண்டது வாசகர்களுக்கு அவர்கள் சார்ந்த நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. முத்த எழுத்தாளர்களை அறிமுகப்படுத்த தேவையில்லை, ஆனால் இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவது மிக முக்கியமானது. ஒவ்வொரு படைப்பாளர்களையும் குறிப்பிட்டு அவர்கள் முக்கியத்துவத்தையும் அவர்கள் மேலான தனது நம்பிக்கையையும் சொன்னார். உரைக்கு பின்னரான ஒரு மணி நேரம்  சமகால சிறுகதைகள் குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கான பதில்களாக அமைந்தது.

நிகழ்வின் இரண்டாம் பகுதி சுனிலின் படைப்புகள் சார்ந்து வாசகர்களின் சந்தேகங்கள், கேள்வி-பதில்களாக அமைந்தது. கிடடதடட எல்லோரும் சுனிலின் ஒவ்வொரு சிறுகதைகளையும் குறிப்பிட்டு கேள்வி கேடடார்கள். நவீன் இந்த நிகழ்வுக்கு முன்பே அவர்களுக்கு சிறுகதைகளை அனுப்பி படித்து வர ஏற்பாடு செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன். ஏனெனில் எல்லா கேள்விகளும் செறிவான கேள்விகளாக இருந்தன. நவீனின் இலக்கிய முன்னெடுப்பு, அதன் தீவிரம் சார்ந்து நான் சொல்லி நீங்கள் தெரியவேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

உண்மையில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா நிகழ்ச்சிகள் சார்ந்து சுனில் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தினார். ஒரு நீண்ட நிகழ்ச்சியை ஒருவராக தொய்வில்லாமல் நடத்தி செல்வது,  இதற்கான உழைப்பு, சக படைப்பாளர்களை, அவர்களின் முக்கியத்துவத்தை வாசகர்களுக்கு எடுத்துரைத்தது மற்றும் பங்கேற்பாளர்களை கையாண்டவிதம் என்று பிரமிப்பாகத்தான் இருந்தது. இந்த சுனிலை இப்படி பார்ப்பது இதுதான் முதல்முறை. மலேசிய நிகழ்ச்சியில் ஒரு படைப்பாளியாக தன மேலான/ தன் படைப்புகள் மேலான விமர்சனங்களுக்கு எந்த பாசாங்கும் இல்லாமல் அதை புத்திசாலித்தனமாகவோ, மழுப்பலாகவோ எதிர்கொண்டு மறுக்காமல், அவர்கள் விமர்சனங்களை உண்மை என்று கொண்டு, பின் அதற்கான பதிலை சொன்னது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது.

ஒரு எழுத்தாளனாக அரசியல் சரிநிலையை பேணக்கூடாது அப்படி அதைக் “கறாராக” பேணுபவர்கள் சார்ந்து தமக்கு பெரிய மரியாதை ஒன்றும் இல்லை என்பதையும் தெளிவாக எடுத்து சொன்னார்.  நவீன் இதுவரை மலேசியாவுக்கு அழைத்து நிகழ்வு நடத்தியது எல்லாம் மூத்த படைப்பாளர்கள் மட்டும்தான் என்று நினைக்கிறேன். சுனில்தான் முதல் இளைய படைப்பாளி. ஆனால் இந்த நிகழ்வு இவ்வளவு சிறப்பாக இளையர்களால் உள்வாங்கபட்டது சார்ந்து நவீனுக்கு மிகுந்த மகிழ்சி ஏற்பட்டிருக்கும் என்றே நினைக்கிறேன்.

பின் அடுத்தநாள் முழுவதும்  நவீனுடன் மலேசியாவின் பல்வேறு பகுதிகளை சுற்றினோம்….சுற்றுலாவுக்குரிய பகுதிகள் என்று இல்லாமல், புக்கிட் பித்தாங் எனும் உணவு சாலை , திருநங்கையர்கள் வாழும் பிரத்யோக பகுதி, பழங்குடியினர் வாழும் பகுதி, செம்பனைத்  தோட்டம், தமிழர்களின் ஆதி கோயில்கள் என்று. பின்பு  குவாலா செலாங்கூரில் உள்ள புகிட் மெலவாடி சென்று Silvered leaf monkeys எனும் நம் முன்னோர்களுக்கு கீரை மற்றும் காரட்களை நாங்கள் அளிக்க அதை  ஏற்று எங்கள் தோளில் அமர்ந்து தமது பஞ்சு போன்ற கைகளால் எங்களுக்கு பித்ருக்களின் ஆசியை வழங்கினார்கள். இன்னும் அவர்களின் தொடுகையின் மென்மை மனதிற்குள் இருக்கிறது. பின் அடுத்தநாள் பஸ்சில் மீண்டும்  சிங்கப்பூர் வந்து அன்றிரவு சுனில் ஊர் திரும்பினார்.

சுனில் ஏற்கிறாரோ இல்லையோ இளம் படைப்பாளிகளுக்குள் அவர் ஒரு காந்தியவாதி அல்லது காந்தியத்தை தொடர்ந்து முன்னிறுத்துபவர். அப்படிதான் அவரை நாங்கள் பார்க்கிறோம்.  எனவே காந்தியத்திற்கு, ஜனநாயகத்திற்கு எதிரான சமூகத்தவறுகளுக்கு எதிரான அவர் குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்ற இயல்பான எதிர்பார்ப்பு எங்களுக்கு இருக்கிறது. 2011 வாக்கில் “வைரலான” காந்தி பற்றிய அவதூறுகளுக்கு நான் எழுதிய பதிலை பார்த்துவிட்டு நீங்கள் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்ததீர்கள். அதில் இருந்த சிலவரிகள் இப்படி இருந்தது “/நாம் நம்முடைய கடமை என எல்லா இடத்திலும் இப்படியான  திட்டவட்டமான பதில்களைச் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும், சரண். நாம் பாறையுடன் பேசுகிறோம் என்ற உணர்வுடன், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், முடிந்த இடங்களில் எல்லாம் சொல்லியாக வேண்டும். அந்தகுரல் எழுவது நின்றுவிடக்கூடாது. அதில் சலிப்பும் வரக்கூடாது”

ஒர் எழுத்தாளனாக எல்லா சமூக பிரச்சனையிலும் தம் கருத்தை சுனில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு இலக்கியவாதி அப்படி எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லிக் கொண்டிருக்க முடியாது, கூடாது என்றும் சொல்லலாம். ஆனால் காந்தியத்திற்கு எதிரான, தாம் தவறு என்று உணரும் ஒவ்வொரு  சமூக தவறுகளுக்கும், அந்த போக்குக்கும் எதிரான தமது கருத்துக்களை அவர் “தொடர்ந்து” மீண்டும் மீண்டும்  சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.ஒரு கருத்துருவாக்கச் செயல்பாடாக.

முக்கியமாக பண்பாட்டு அடையாளங்களை உணர்ச்சிபூர்வமான குறியீடுகளாக ஆக்கி, அண்பாட்டுக் கருத்துக்களை ஒற்றைப்படையாக்கி,  அவற்றின் கீழே மக்களைத் தொகுத்து, அவற்றை எதிர்ப்பவர்களை இந்திய பண்பாட்டை எதிர்பவர்களாக முத்திரை குத்தி, கருத்துக்களின் சுதந்திரமான வளர்ச்சியையும் மோதலையும் தடுக்கும் ஒரு காலகட்டத்தில், ஜனநாயகத்துக்கான குரலாக காந்தியத்தின் குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

அன்புடன்

சரவணன் விவேகானந்தன் 

***

சிங்கப்பூர் – மலேசியா பயணம்- 1சுனில் கிருஷ்ணன்
சிங்கப்பூர் -மலேசிய பயணம் – 2சுனில் கிருஷ்ணன்
முந்தைய கட்டுரைமாணவர்கள் நடுவே ராஜா
அடுத்த கட்டுரைமுழுக் கோடையும் ஒரே நாளில்-ரே பிராட்பரி – டி.ஏ.பாரி