இலக்கியத் துறையில் நான் எடுத்து வைக்கும் முதல் சில அடிகளை அழகான நினைவுகளாக பாதுகாக்கிறது, விமர்சனப் போட்டியில் வென்றதற்காக வல்லினம் திட்டமிட்டுத் தந்த ஊட்டி முகாம். விமானப் பயணம், இந்திய பூமி, இலக்கிய விவாதங்கள் இவை எல்லாமே எனக்கு இதுதான் முதல் முறை. வல்லினக் குழுவோடு இந்த முகாமிற்கு என்னையும் அனுமதித்த எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எனது நன்றிகள். பலர் இதற்கான வாய்ப்புக்கிடைக்காமல் இருப்பதையும் அறிவேன். எனவே இதன் முக்கியத்துவத்தை நான் முழுமையாகவே உணர்கிறேன்.
இலக்கியத்துக்கு நான் புதியவள். தமிழகத்தை நோக்கிய எனது இந்த முதல் பயணமே ஒரு இலக்கியத் தேடலுக்கானது என்பதை நினைக்கும்போது பெருமையாகவே உள்ளது. இப்பயணத்திற்கு நான் என்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த ஒவ்வொரு நிமிடமும் நான் இதற்குத் தகுதியானவள்தானா என என்னை நானே பல முறை கேட்டுக் கொண்டேன். எனக்குள்ளான அந்த சுய தடையை நான் கடப்பதற்குத் தங்களது ஊட்டி முகாம் வளைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட படைப்புகளின் முன் வாசிப்பு கொஞ்சம் உதவின. அவற்றை கிரகித்து உள்வாங்கிக்கொண்டது பயணத்துக்கான தன்னம்பிக்கையைக் கொடுத்தது.
கேரளத்தின் வந்திறங்கியபோது, நான் இந்திய காற்றை முதல்முறையாக சுவாசித்தேன். 8 மணி நேரப் பயணம் எப்படி போனதென்றே தெரியவில்லை. அது எனக்கு உடலளவிலும், மனதளவிலும் சோர்வைத் தராத பயணம். சூரியன் மெல்ல மலை உச்சியைப் பிடிக்கும் முன்னமே நாங்கள் ஊட்டி மலை உச்சியில் விருந்தாளிகளானோம். அங்கு நான் சந்தித்த அனைவரும் எனக்கு பரிட்சயமற்ற அந்நியமானவர்கள் என்றாலும் இலக்கியத்துக்கு மிக நெருக்கமானவர்கள் என்றெண்ணும்போது பெருமையாக இருந்தது. ஒதுக்கமாக நின்று அவர்களின் உரையாடலை உன்னிப்பாக கவனித்தேன். எல்லாம் துண்டுத்துண்டான சித்திரங்கள். பெரும்பாலும் வெடிச்சிரிப்புகள்.
காலை பசியாறலுக்குப் பின் காதுக்கு இனிமையான ஒரு பக்திப் பாடலோடு முதல் அங்கம் தொடங்கப்பட்டது. அட்டவணையில் குறிப்பிட்ட நேரத்துக்காகக் காத்திருக்கும் தருவாயில் மலேசியக் குழுவினரில் இருந்து ஒருவரை பாடப் பணிக்கவே, மலேசிய குழுவினர் மொத்தமாக என்னைக் கை காட்டிய நிமிடம் இன்னும் எனக்கு பதற்றமானது. அப்போது ஏற்பட்ட தடுமாற்றம் எனக்கு நினைவிலிருந்த எல்லா பக்தி பாடல் வரிகளையும் மறக்கச் செய்துவிட்டது. பக்தி பாடலைப் பாடிக்கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் ஒரு காதல் பாடலை பாடியது அவமானமாக இருந்தது. அதையும் நான் முழுமையாக முடிக்காமல் பதற்றம் காரணமாகப் பாதியில் முடித்து மன்னிப்புக் கேட்டது இன்னும்கூட வருத்தமாக இருக்கிறது. ஆனால், அதற்குப் பின்னர் எனக்குத் தெரிந்த எத்தனையோ பக்தி பாடல்களை மனதுக்குள் பாடி பார்த்து என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்.
முதல் அமர்வான நாவல் குறித்த விளக்கம் எனக்கு நாவல் குறித்து நல்ல அறிமுகமாக இருந்தது. நாவலின் தன்மைகள், அதன் வடிவம், நோக்கம் என விரிவான விளக்கம் பல அறியாமைகளை நீக்கியது. பாலாஜி பிரித்விராஜ் அவர்களின் இந்த உரை குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிக்கப்படவில்லை. அந்த கால நீட்டிப்பு அவசியமற்றதாகக் கருதப்பட்டாலும் அந்த அமர்வில் பகிரப்பட்ட ஒவ்வொரு தகவல்களும் எனக்கு மிக பயனாகவே இருந்தன.
தொடர்ந்து இம்முகாமில் என்னை அதிகம் பிரமிக்க வைத்தது சிறுகதை சார்ந்த விவாதங்கள்தான். இந்த முகாமிற்கான எனது ஆயத்த பணிகளில் முக்கியமாக நான் செய்திருந்தது குறிப்பிடப்பட்டிருந்த கதைகளை வாசித்ததுதான். ஆனால், அந்த வாசிப்பு விவாதத்தின்போது எனக்கு கைக்கொடுக்கவே இல்லை. பிறரது விவாதங்களையும், கருத்துகளையும், கேள்விகளையும் வாயடைத்துப் போய் பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே முடிந்தது. கதை ஒன்றுதான் என்றாலும் நான் சற்றும் சிந்தித்துக்கூட பார்க்காத பல கோணங்களில் மற்றவர்கள் அதை உள்வாங்கிப் பேசியது ஆச்சரியமாக இருந்தது. வாசிப்பில் எனது போதாமையை எனக்கு அடையாளம் காட்டியது இந்த இலக்கிய முகாம். அங்கு வந்தவர்களில் யாருமே யாருக்கும் வாசிப்பில் சலைத்தவர்கள் அல்ல என அறிந்தேன். ஒரு கதையை, ஒரு படைப்பை நுணுகி நுணுகி வாசிப்பதும் ஒரு கலைதான். அந்தக் கலை எனக்கும் கைக்கூட இந்த முகாம் ஒரு பயிற்சி தளமாக அமைந்தது. அது படைப்பை அணுகும் முறைக்கான பயிற்சிகள்.
விவாதத்தின்போது எனக்கும்கூட சில கேள்விகள் மனதில் தோன்றின. ஆனால், அதை அந்த அவையின் முன்வைக்க துணிவில்லா வாசகியாகக் கையிலிருந்து காகித்தில் பின்னர் ம.நவீன் அவர்களிடம் கேட்களாமென்று குறித்துக்கொண்டேன்.
எழுத்தாளர் ஜெயமோகன்தான் இந்த முகாமின் மையம். தன் கவனத்தை எல்லா திசைகளிலும் பரவ விட்டுள்ளார். எல்லா விவாதத்திலும் இறுதியாகப் பேசுகிறார். அது எனக்கு மிக எளிதாகப் புரிகிறது. அதுவே அந்த விவாதத்தின் முதன்மையான கருத்தாகவும் உள்ளது. திசை மாறிப்போகும் சில விவாதங்களின் கடிவாளங்களை எழுத்தாளர் ஜெயமோகன் கையிலெடுத்துக் கொண்டு அவர்களை நெறிப்படுத்தியது பலரின் குழப்பங்களைத் தெளிவுப்படுதியது. விவாதம் சரியான திசை நோக்கி செல்வதையும் அது உறுதிச் செய்தது. நான் அவர் கண்ணில் படாத ஓரமாக அமர்ந்துகொண்டேன். குறித்த காலத்தில் ஒன்றை தொடங்குவதும் முடிப்பதும் இலக்கியவாதிகளுக்கு அவசியமில்லை என்று இதற்கு முன் அலட்சியமான சில குரல்களை இலக்கியவாதிகளிடம் கேட்டதுண்டு. ஆனால் இங்கு அப்படியல்ல. நேரக்கட்டுப்பாடும் ஒழுங்குகளும் கச்சிதம். நான் மலேசியாவில் நடந்த வல்லின நிகழ்ச்சிகளில் மட்டும் இதைக் கண்டதுண்டு. இலக்கியத்தைச் சரியான இலக்கில் கொண்டு செல்ல நினைப்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் போல.
முகாமில் விவாதிக்கப்பட்ட சிறுகதைகளில் சில நவீன இலக்கியத்தின் புதிய பார்வையை உணர்த்தியது. அந்த வகையில் ஸ்வேதா அவர்கள் தெரிவு செய்த ‘ஒரு சுத்தமான நன்கு ஒலியூட்டப்பபட்ட இடம்’ என்ற ஹெமிங் வேய் அவர்களின் மொழிப்பெயர்ப்புக் கதை குறிப்பிடத்தக்கது. வாசிப்பின் போது கதையில் இடம் சார்ந்த காட்சிகளை மட்டுமே என்னால் ஆழமாக உள்வாங்க முடிந்தது. அந்தக் காட்சிகளின் ஊடுருவல் எனக்குள் அமைதியைத் தந்தது. விவாதம் அந்த புரிதலை முழுமை நிலைக்குக் கொண்டு சென்றது. மனைவியோடு வாழும் ஒரு இள வயது பணியாளனுக்கும், இரவில் நீண்ட நேரம் அந்த விடுதியில் செலவிட விரும்பும் ஒரு முதியவனுக்கு அந்த இடம் என்னவாக இருக்கிறது என்ற ஒரு சின்ன வேறுபாட்டில்தான் கதையின் இரகசியத்தை விளங்கிக்கொள்ள முடிந்தது. அதே போல ஒரு இராணுவ வீரனும் ஒரு பெண்ணும் (பாலியல் தொழிலாளி) வீதியில் நடந்து செல்லும் ஒரு காட்சி கதையில் இடையே வருகிறது. வாசிப்பின்போது நான் அதைப் பெரிதாக அர்த்தப்படுத்திக்கொள்ளவில்லை. சபையில் ம.நவீன் அதைச் சுட்டிக்காட்டியபோதுதான் கதையில் அதற்கான அவசியம் புரிந்தது. தனிமையின் கூரிய நகங்கள் இரவுகளில் மட்டும் ஏற்படுத்தும் அச்சத்தையும் ம.நவீன் அவர்கள் கூறினார். தனிமைக்கும், இரவுக்கும், நன்கு ஒலியூட்டப்பட்ட சுத்தமான அந்த இடத்துக்குமான தொடர்பை மிக நுட்பமாக உணர முடிந்தது. கதைக்குண்டான இரகசியங்களைத் திறந்துப் பார்க்கும் விதத்தைக் காட்டியது விவாதம்.
இது போலவே என்னை ஈர்த்த கதைகளில் மாரிராஜ் இந்திரன் தெரிவு செய்த ‘என்னை திருப்பி எடு’ என்ற முத்துலிங்கம் அவர்களின் கதையும் குறிப்பிடத்தக்கதுதான். வாசிப்பு அனுபவம் சுவாரசியமாகவே இருந்தாலும் அதற்குள்ளான கருவை என்னால் நெருங்கவே முடியவில்லை. மிக தெளிவான நேரடியான கதையோட்டம்தான். ஆனாலும், ஏதோ ஒன்று முகம் காட்டாமல் மறைந்திருப்பதாக உணர்ந்தேன். கதையின் இறுதியில் கதாநாயகன் ஜூரி வேலைக்குத் தெரிவு செய்யப்படுவதற்குண்டான அவசியம் அறியாத நிலையில் இந்தக் குழப்பம் ஏற்பட்டது. சுயமற்ற ஒரு சாதாரணனை அல்லது துணிவற்றவனை அவன் நிலையிலிருந்தே மிகநகைச்சுவையாகச் சொல்லிய இந்தக் கதை வேறெந்த முகத்தையும் தன்னில் மறைத்திருக்கவில்லை என்பதை விவாதம் நகச்சுவையோடே விளக்கியது. மற்றவர்களின் அதிகாரக்குரலுக்குத் தன்னை பழக்கிக் கொண்ட அவன் அதே அதிகாரத்தை தன் கையில் எடுத்துக்கொள்ள நினைக்கும் எண்ணத்தின் வெளிபாடுதான் அந்த ஜூரி வேலையும் அதைச் சார்ந்த அவன் கற்பனைகளுமென புரிந்தது.
தொடர்ந்து கோணங்கி அவர்களின் மதினிமார்கள் கதையும் எனக்கு நல்ல வாசிப்பனுபவத்தையே தந்தது. நினைவுகளை மீட்டெடுக்கம் அடிப்படையிலான கதைகள் எப்பொதுமே யாவரின் மனதுக்கு பக்கமானதுதான். அதுபோலவே எனக்கும்.. கிராம வெளிகளை அலங்கரித்துக் கொண்டிருந்த அப்போதைய உறவுகளை எதிர்ப்பார்த்து போகும் ஒருவனுக்கு அங்கே மீந்து கிடந்த வெறுமையையும் அந்நியப்பட்ட சூழலைம் ஏமாற்றத்துடன் கதை முன் வைக்கிறது.
கதைக்குள் எழுத்தாளர் உறவுகளின் பிணைப்பை மெல்ல தளர்த்திக் கொண்டு வரும் இன்றைய கிராம வெளிகளையும், சிறுவர்களின் சுதந்திர வெளிகளையும் முடக்கிக்கொண்ட பட்டாசு கம்பெனிகளையும் சாடி இருப்பதை விவாதம் உணர்த்தியது. விவாதத்தின் போது ‘ஒவ்வொரு இலக்கியவாதிகளின் படைப்புத் திறனையும் திறந்து வைக்கும் முதல் வாசல் கடந்த கால நினைவுகளாகவே அமைந்துள்ளன. எனவே, இந்தக் கதை மிக சராசரியான கதைதான்’ என சபையில் யாரோ சொன்னார். இங்கிருந்து என்னுடைய இலக்கிய ஆர்வம் தொடங்கப்பட்ட தளத்தை ஒரு முறை சரிபார்த்துக்கொண்டேன்.
தொடர்ந்து ‘சங்கேதங்களும் குறியீடுகளுமென்ற’ சிறுகதையும் எனக்கு முக்கியமானதுதான். வளைத்தளத்தில் இந்தக் கதையை வாசித்தபோது ஓரளவுக்குப் புரிந்தது. ஆனால் அந்தக் கதையை அனுகுவதற்கான சூத்திரத்தை வாசித்தபோதுதான் குழப்பம் வலுவானது. உணர்வுப்பூர்வமாக உணரக்கூடிய இலக்கியத்துக்குள் சூத்திரங்களை வைத்தது வாசிப்பனுபவத்தை கடுமையாக்கியதாக தோன்றியது. நிகிதா அவர்களின் விளக்கமும் இந்த சூத்திரத்தைச் சார்ந்தே இருந்தது.
ஏற்கனவே தற்கொலைக்கு முயற்சித்து தப்பியவன் மனநிலைக் குன்றிய தன் இளவயது மகனைப் பார்க்க மருத்துவமனைக்குச் செல்கின்றனர் வயதான தம்பதியர்கள். ஆனால் மகனைப் பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. வீடு திரும்பியவர்களுக்கு இரவில் ஒரு அழைப்பு வருகிறது. அழைப்போடு கதை முடிகிறது. அதிகபட்சமாக என்னால் அந்த அழைப்பை மருத்துவமனையிலிருந்து வரும் இறப்புச் செய்தியாக மட்டுமே அனுமானிக்க முடிந்தது. ஆனால், அந்தச் செய்திக்குப் பின்னர் மகனின் அதே நோய் அந்தத் தம்பதியர்களைத் தொடர்வதற்கான சாத்தியங்கள் இக்கதையில் உள்ளதைக் கூறினார் ஜெயமோகன் அவர்கள். அது எனக்கு புதிய பார்வையாக இருந்தது. கதையின் இறுதித் திறைகளையும் கிழித்துக் கொண்டு செல்லும் சிந்தனைச் சிறகுகளுக்கு எட்டுகின்ற புதிய பார்வை அது. இயல்பான அனுகலில் கிடைக்கின்ற இயல்பற்ற பார்வையும் கூட.
இப்படி விவாதத்தில் சில சிறுகதைகளை நான் வேறு நிலையில் உள்வங்கிக்கொள்ள முடிந்தது. என் வாசிப்பனுபத்தை விவாத அமர்வுகள் நெறிப்படுத்தியுள்ளன. அந்தப் புதிய பார்வையோடு கதையை மீண்டும் உள்ளத்துள் கடத்தியபோது போது அதன் புரிதல் ஆழமனாதாகவும் அர்த்தமானதாகவும் இருப்பதை உணர முடிந்தது.
முகாமின் இலக்கிய விவாதத்திற்கு மத்தியில் நான் என் குழுவினரோடு மேற்கொண்ட ஆட்டோ பயணமும் மறக்க முடியததுதான். ஆட்டோவில் போக ஆசைப்பட்டு ஆபத்தில் மாட்டிக் கொண்டோமோ என கதிகலங்கிய அனுபவத்தை பாதையில் இருந்த காட்டெருமை தந்தது. ம.நவீன் அதைப் பார்க்க வேண்டும் என்று ஆட்டோவை திருப்பச் சொன்னபோது எனக்கு பாதி உயிர் இல்லை. அப்போது இறுக்க மூடிய கண்களை ஆட்டோ அங்கிருந்து நகரும் வரை நான் திறக்கவே இல்லை. அந்த சில நிமிடங்களுக்குள் சொல்ல முடியாத அபாயகரமான பல கற்பனைகள் என்னைக் கலங்கடித்தன. காட்டெருமை மிக பக்கத்திலிருந்தும்கூட நான் அதை அப்போது பார்க்காமல் பின்னர் சில வீடியோக்கலில் பார்த்து அதன் உருவத்தை உள்வாங்கிக்கொண்டேன்.
மறுநாள் விமானம் என்பதால் காலையிலேயே புறப்பட்டுவிட்டோம். ஆனால் முகாமில் இருந்தவரை பெற்றுக்கொண்டவை அதிகம். இனி செல்ல வேண்டிய தூரம் அதிகமென்று தெரிகிறது. அந்தத் தூரத்தை உணர்த்தியதாலேயே எனக்கு இம்முகாம் என்றும் நினைவில் இருக்கும்.
பவித்தாரா, மலேசியா