ஏழாவது களமான துலாவில் அமர்ந்திருந்த சமன் என்னும் சூதர் தன் முறை வந்ததை உணர்ந்து நீள்குழலை எடுத்து வாயில் பொருத்தி அதன் பன்னிரு துளைகளில் விரலோட்டி சுழன்று சுழன்றெழும் கூரிய ஓசையை எழுப்பி நிறுத்தி தன் மெல்லிய குரலை அதன் மீட்டலென தொடரச்செய்து சொல்லாக்கி, மொழியென விரித்து கதை சொல்லத் தொடங்கினார் “தோழரே கேளுங்கள், இது பதினேழாவது நாள் போரின் கதை.”
முந்தைய நாள் இரவு முழுக்க ஓங்காது ஒழியாது குருக்ஷேத்ரத்தின் படைவிரிவின்மீது மென்மழை நின்றிருந்தது. அனைத்து கூரைப்பரப்புகளும் விளிம்புகள் உருகிச்சொட்டுவதுபோல் துளியுதிர்த்துக் கொண்டிருந்தன. பல்லாயிரக்கணக்கான பறவைகள் அலகால் நிலத்தைக் கொத்துவதுபோல் துளிவிழும் ஓசை எழுந்து கொண்டிருந்தது. யானைகள் அக்குளிரை விரும்பி உடலசைத்து, செவி வீசி, துதிக்கை சுழற்றி, இருளுக்குள் ததும்பிக்கொண்டிருந்தன. புரவிகள் தசை விதிர்த்து கால் மாற்றி துயின்றன.
கமுகுப்பாளைகளாலும், ஈச்சஓலைமுடைந்து உருவாக்கப்பட்ட பாய்களாலும், தோலாலும் செய்யப்பட்ட மூடுகைகளை தலைமேல் கவிழ்த்துக்கொண்டு, தோல்போர்வைகளையும் மரவுரிப்போர்வைகளையும் போர்த்தியபடி குந்தி அமர்ந்தும், சாய்ந்து கால்நீட்டியும் படைவீரர்கள் துயின்றனர். தரையிலிருந்து ஈரம் எழுந்து வந்தமையால் தரைப்பலகைகள் அமையாத எவரும் படுத்துத் துயில இயலவில்லை. அவர்கள் தொலைவிலிருந்து பாதையெனப் போடப்பட்ட பலகைகளை பெயர்த்துக்கொண்டு வந்தனர். உடைந்த தேர்களையும் தண்டுகளையும் சேர்த்து தீமூட்டி அதன்மேல் பலகை அமைத்து நனையாமல் காத்து எரிகாய்ந்தனர். படைகள் மிகமிகக் குறைந்துவிட்டிருந்தமையால் படைவீரர்களில் ஏராளமானவர்களுக்கு கூடாரங்கள் அமைந்தன.
அடுமனையாளர்கள் பின்னிரவிலேயே விழித்துக்கொண்டார்கள். அவர்களில் ஒருவர் வானை நோக்கி “இன்று பகல் கதிர்வன் எழுமென்று தோன்றவில்லை” என்றார். பிறிதொருவர் “அவ்வாறே நேற்றும் தோன்றியது. நேற்று பின்னுச்சிப் பொழுதில் கண்கூச ஒளி எழுந்தது கண்டோம்” என்றார். அடுமனைக்கலங்கள் மரங்களில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. அவையனைத்திலும் மழைநீர் கீழ்வளைவு விளிம்பில் தேங்கியிருந்தது. அவற்றைச் சுழற்றி கலங்களை கவிழ்த்துவிட்டு காதுகளில் வடம் புகுத்தி மூங்கிலுள் நுழைத்து இருவரும் நால்வரும் என அவற்றை தூக்கிக்கொண்டு சென்று அடுப்புகளின்மேல் வைத்தனர்.
அடுகலமே கூரையென்றாக, அடுப்புகளுக்குள் விறகை அடுக்கி அரக்கும் தேன்மெழுகும் இட்டு எரிமூட்டினர். மென்மழைக்குக்கீழே நெருப்பெழுந்தபோது சூழ்ந்திருந்த நீர்ச்சரடுகள் அனைத்தும் தழலால் ஆனவைபோல் தோன்றின. “மழையை கொதிக்க வைத்துவிடலாம் போலிருக்கிறது” என்று ஒருவர் சொன்னார். பிறிதொருவர் “இசைச்சூதர் ஏன் அடுதொழிலுக்கு வருகிறீர்? யாழ் நரம்பு அறுந்துவிட்டதோ?” என்று அவரை நோக்கி ஏளனம் செய்தார். “அவர் அன்னை விறலி”என்றார் இன்னொருவர்.
சூதர்கள் ஒவ்வொருவராக எழுந்து வந்தனர். முகம் கழுவி கைகால் தூய்மை செய்து கிழக்கு நோக்கி வணங்கிவிட்டு தங்கள் பணிகளை தொடர்ந்தனர். களஞ்சிய அறைக்குச் சென்ற சூதர்கள் அங்கிருந்த முது சூதரிடம் “இன்று ஐந்திலொரு அக்ஷௌகிணி வீரர்கள் இருப்பார்கள் என்று தோன்றுகிறது” என்றனர். முதுசூதர் வாயிலிருந்த வெற்றிலைச் சாறை எட்டி அப்பால் உமிழ்ந்து மரவுரி ஒன்றால் சுருங்கிய உதடுகளை துடைத்தபின் “அது இங்கிருந்து நோக்கும்போது தெரிகிறது. புலரிக்கொம்பு ஒலிக்கும்போது இவர்களில் எத்தனை பேர் எழுவார்கள் என்று எண்ணுகிறீர்? எண்ணிக்கொள்க, பாதி கூட இருக்காது! இந்த மழையில் நனைந்து உயிர் விடும் நல்லூழ் அமைந்தவர்கள் பலர் இருப்பார்கள்” என்றார்.
“அதை நாம் அறிய வேண்டியதில்லை. போருக்குச் செல்பவர்களுக்கு உணவு போதாமலாகக்கூடாது. எஞ்சியதை மாலையில் அளிப்போம்” என்றார் ஒருவர். “நான் அளிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. சொல்லிப்பார்த்தேன்” என்றபின் தன் மரப்பட்டை ஏட்டில் மைதொட்டு கூலக்கணக்குகளை எழுதி அதை பிறிதொரு ஓலையில் பார்த்து எழுதி அதை சூதர்களிடம் அளித்தார். சூதர்கள் அவற்றை தங்களுக்குள் பிரித்துக்கொண்டனர். ஒவ்வொருவரும் தங்களைத் தொடர்ந்து வந்து நின்றிருந்த கூலவண்டிகளை நோக்கி கையசைத்தனர். அவற்றை ஓட்டிவந்த ஏவலர்கள் அச்சூதர்களின் கையசைவுக்கு ஏற்ப பிரிந்து களஞ்சியவாயில்களை நோக்கி சென்றனர்.
தாழ்வான சுவர்களின்மேல் பனையோலைக் கூரையிட்டு அமைக்கப்பட்டிருந்த களஞ்சிய நிரைகள் தோளோடு தோள்தொட்டு இரு புறமும் நிரைவகுத்தன. அவற்றின் நடுவே செல்வதற்கும் வருவதற்குமான மரப்பட்டை சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. எண்ணைப்பந்தங்களின் சுடர்நிரைகள் பெருநகர்த்தெரு என எண்ணச்செய்தன. அனைத்து களஞ்சியங்களுக்கு முன்னும் சிறிய கமுகுப்பாளைக் கூரையிட்ட காவல்மாடத்தில் நெய்விளக்கு எரிந்துகொண்டிருந்தது. இரு காவலர்கள் அரைத்துயிலில் வேலுடன் அமர்ந்திருந்தனர். அவர்கள் தோல்தைத்து உருவாக்கபப்ட்ட மழை மூடிகளை தலையிலணிந்திருந்தனர். அழுத்திய துயிலில் அவர்கள் குனிந்திருந்தமையால் ஈரத்தோல்பரப்பில் கருமை மின்ன ஆமைகள்போல் தோன்றினர்.
ஓலைகளின்படி ஒவ்வொரு சூதரும் களஞ்சியங்களின் முன் சென்று நின்று அவர்களைக் கூவி எழுப்பினர். துயில் கலைந்து எழுந்த வீரர்கள் “என்ன… என்ன நிகழ்ந்தது?” என்றனர். சூதர்கள் “பொழுது விடியப்போகிறது. பிறிதொரு நாள் போர், வேறென்ன?” என்றனர். வாயைத் துடைத்தபடி “சற்று முன்னர்தானே இருட்டியது” என்று ஒரு காவலர் சொன்னார். “நற்துயில்! இப்படி போர்க்களத்தில் துயில்வதற்கும் ஒரு தனிப்பயிற்சி இருக்கவேண்டும்” என்றார் ஒரு சூதர். “வந்து அமர்ந்து பாரும், தெரியும்… நான் படுத்துத் துயின்று பன்னிருநாட்கள் ஆகின்றன” என்றார் காவலர்.
பெருமூச்சுடன் வேலை எடுத்துக்கொண்டு சென்று களஞ்சியத்தின் தாழைத் திறந்து கதவை விலக்கினார் காவலர். சூதர்கள் ஆணையிட ஏவலர் உள்ளே சென்று பனைநாரும் ஓலையும்கொண்டு முடைந்து உருவாக்கிய கூலமூட்டைகளை தூக்கிக்கொண்டு வந்து வண்டிகளில் ஏற்றினர். முதிய காவலர் ஒருவர் “இன்னும் எத்தனை நாளுக்கு இக்கூலம் நிற்கும், சூதரே?” என்றார். “எண்ணி எண்ணி சமைத்தால் இன்றும் நாளையும். நாளை மறுநாள் இவ்வண்ணமே போர் நிகழுமெனில் வெறும் வயிற்றுடன்தான் போருக்கெழ வேண்டியிருக்கும்” என்றார் ஒரு சூதர்.
அப்பால் நின்ற முதிய சூதர் “இன்று ஒருநாள் அனைவரும் நிறைவுற்று உண்ணவே அன்னம் இருக்குமென்று தோன்றவில்லை. அன்னத்தை குறைத்து ஊனைக்கூட்டும்படி தலைமை அடுமனையாளரின் ஆணை” என்றார். அப்பால் வண்டிகளில் கூலங்களை ஏற்றிக்கொண்டிருந்த இன்னொரு சூதர் ஏதோ சொல்ல பிறிதொரு சூதன் உரக்க நகைத்தான். “என்ன?” என்று முதிய சூதர் அவனிடம் கேட்டார். “ஒன்றுமில்லை” என்றான் அவன். “சொல்” என்று அவர் உரக்கக் கூற “ஒன்றுமில்லை” என்று அவன் பின்னடைந்தான்.
“சொல், அறிவிலி! இப்போதே சொல்!” என்று முதுசூதர் ஆணையிட “இந்த அன்னமும் ஊனும் அனைத்தும் கழிவாக இங்கேயே மண்ணுக்குள் இறங்கியிருக்கிறது, என்றேன்” என்று அவன் சொன்னான். “களஞ்சியத்திலிருந்து மண்ணுக்கு அவற்றைச் செலுத்தும் வழிகள்தான் இவ்வீரர்கள் என்று இவர் சொன்னார்” என்றார் இன்னொரு சூதர். முதியசூதர் அதிலிருந்த பகடியை புரிந்துகொள்ளாமல் சிறுகண்களால் உற்று நோக்கியபின் “வேலை நடக்கட்டும்” என்றார்.
தன் பகடி புரிந்துகொள்ளப்படாததால் ஏமாற்றம் அடைந்த இளம் சூதன் “இங்கே மானுடரையும் அவ்வாறே தெற்குக்காட்டுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறோம்” என்றான். “நாம் பேசுவதற்காக இங்கு வரவில்லை. இந்த மழையில் தழல் நின்று நெடுநேரம் எரிந்தாலும் கலத்தில் வெப்பம் ஏறாது. இருநாழிகைப்பொழுதுக்குள் உணவு ஒருங்கியிருக்க வேண்டும்” என்றார் முதுசூதர். ”நாம் பிந்துவதை வீரர்கள் விழைவார்கள். அவர்கள் துயிலத்தொடங்கி இருநாழிகைப்பொழுதுகூட ஆகவில்லை” என்றான் ஒரு சூதன்.
கூலமூட்டைகளை ஏற்றி அவற்றின்மேல் தேன்மெழுகு பூசப்பட்ட பாய்களால் கூரையிட்டுக் கட்டி அத்திரிகளையும் மாடுகளையும் பூட்டி இழுத்தபடி மரப்பட்டைப் பாதைகளினூடாக அவர்கள் அடுமனை நோக்கி சென்றனர். அடுமனைகளும் கருவூலங்களும் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு தீ பரவாத அளவுக்கு படைப்பெருக்கின் இரு எல்லைகளிலாக அமைக்கப்பட்டிருந்தன. நடுவே தீயைக்கடத்தும் கூரைகளோ காவலரண்களோ எதுவும் இருக்கவில்லை. மழையில் உடல் குவித்து குனிந்து வண்டிகளைத் தொடர்ந்து சூதர்கள் சென்றனர்.
அடுகலங்கள் அனைத்திலும் நீர் கொதிக்கத் தொடங்கியிருந்தது. கூலங்களை மரக்காலால் அள்ளி நீரிலிட்டனர். “ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து பத்திற்கொன்று பத்திற்கொன்று… ஒன்று இரண்டு மூன்று” என்று கூலம் அள்ளியிடும் சூதர்கள் கூவும் ஒலிகள் எழுந்தன. கொதித்து ஓசையிட்டுக்கொண்டிருர்த நீர் கூலம் விழுந்ததும் அமைதியடைந்தது. மழையின் ஓசைக்குள் அனலின் ஓசை எழுந்தது.
விறகென குவிக்கப்பட்டிருந்தது முழுக்க உடைந்த தேர்களின் மரப்பகுதிகள். அவற்றிலிருந்த ஆணிகள் நெருப்பில் சிவந்து குருதித் துண்டுகள்போல் மாறி நீட்டி நின்றன. ஊன் கொள்ளப்போன வண்டிகள் ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தன. முதுசூதர் ஒருவர் ஊன் துண்டுகளைப்பார்த்து “புரவிகளா?” என்றார். “ஆம் வேறு ஊன் இல்லை” என்று சூதர் ஒருவர் சொன்னார். ”நேற்றே தெற்கு அடுமனைகளில் புரவியைத்தான் சமைத்திருக்கிறார்கள். நேற்று முதல்நாளே கௌரவ அணியில் உணவென புரவியூன்தான் அளிக்கப்பட்டது.”
முதுசூதர் “இன்னும் இவ்வாறு போர் நீளுமென்றால் இறந்த வீரர்களை நாம் உண்ணவேண்டியிருக்கும்” என்றார். “புரவியை உண்ணும் பழக்கம் முன்பே உண்டு. சற்று கடினமான ஊன் என்பதற்கப்பால் அதற்கென்ன குறை? ஊனுண்ணி விலங்குகளை உண்பதுதான் விலக்கப்பட்டுள்ளது. ஊனுண்ணிகள் என்பதனால் பறவைகளையும் விலக்குவதுண்டு. ஆனால் மலை வேடர்கள் மட்டுமன்றி மலைப்பயணம் செய்யும் ஷத்ரியர்களும்கூட பறவை ஊனைத்தான் உண்கிறார்கள்” என்றார் ஒரு சூதர். “புரவி நம்முடன் தோள்நின்று பொருதியது” என்றான் ஓர் இளம்சூதன். எவரும் மறுமொழி சொல்லவில்லை.
புரவிகளின் தொடைகள் தோலுரிக்கப்பட்டு பெரிய வெண்ணிற மரக்கட்டைகள்போல் தோன்றின. அவற்றைத் தூக்கி அடிக்கட்டை மேல் வைத்து ஊன் வெட்டும் கோடரியால் வெட்டி துண்டுகளாக்கி விரிக்கப்பட்ட பாய்மேல் குவித்தனர். செம்மண்பாறைத்துண்டுகள்போல அவை பளபளத்தன. மழை விழுந்து கழுவியபோது அவற்றிலிருந்து குருதி வழிந்தோடியது. “இறந்த புரவிகளா, அன்றி புண்பட்டவையா?” என்றார் ஒருவர். “நேற்று புண்பட்டு மீண்ட புரவிகள் மட்டுமே உண்ணப்பட்டன. இன்று போர்முகப்பிலிருந்து வெட்டுண்ட புரவிகளின் உடல்களையும் எடுத்து வந்திருக்கிறார்கள்” என்றார் ஒரு சூதர்.
“இத்தனை பேருக்கும் ஊன்உணவு வேண்டும். இன்று அன்னத்தில் மூன்றில் ஒருபங்கு ஊன்” என்று ஊன்வெட்டிய சூதர் சொன்னார். “எடுத்து வரும்போது நன்கு பார்த்தீர்களா? புரவித்தொடைக்கு நிகராக மானுடத்தொடைகளும் அங்கு கிடந்தன” என்றார் இருளில் ஒருவர். “இப்பேச்சை நாம் ஏன் பேசுகிறோம்? எங்கோ நம்முள் மானுட ஊன் உண்ணவேண்டும் என்று விழைவிருக்கிறதா என்ன?” என ஒரு குரல் எழுந்தது. “மானுடஊன் உண்டு அமலையாடிய காற்றின்மைந்தனின் படையினர் நாம்” என இன்னொரு குரல் சொல்ல அனைவரும் அமைதியடைந்தனர்.
சற்றுபொழுது கடந்து “மானுடரில் அமர்ந்து ஊனுண்ண விரும்புபவை தெய்வங்கள். தெய்வங்களுக்குரிய பலிகளில் முதன்மையானது மானுடக் குருதி. அதை மறக்க வேண்டியதில்லை” என்றார் இருளுக்குள் ஊன்களை துண்டுபடுத்திக்கொண்டிருந்த ஒரு பேருடல்கொண்ட சூதர். “நான் துர்க்கையன்னைக்கு மானுடனை பலிகொடுத்திருக்கிறேன். எட்டு முறை… ஒவ்வொரு நாள் கனவிலும் அன்னை எழுந்து வந்து என்னை வாழ்த்தியிருக்கிறாள்.” தொலைவில் ஒரு முதிய சூதர் “மண்ணை பொறையன்னை என்பதுண்டு. அவளும்கூட குருதிவிழைபவளே” என்றார்.
“என்ன ஐயம், புவிமகளுக்கு மானுடக்குருதி இன்றி பொழுதமையாது. துர்க்கை கொண்டதைவிட நூறு மடங்கு குருதியை அவள் கொண்டிருப்பாள்” என்றார் ஒருவர். “புவித்திரு என சீதையை சொல்வதுண்டு. இலங்கையை உண்டு அவள் பசியாறினாள். ராவண மகாபிரபுவின் நெஞ்சக்குருதியில் ஆடினாள்” என்றார் ஒருவர். நெடுநேரம் கழித்து “நிலமங்கையும் அனல்மங்கையும்” என்றார் ஒருவர். அவ்வெண்ணம் அவர்கள் அனைவரிலும் ஏற்கனவே இருந்ததுபோல் எவரும் ஒன்றும் சொல்லவில்லை.
ஊன் துண்டுகள் இடையளவு குவியலென்றாக அவற்றின்மேல் பெய்த மழையிலிருந்து ஊறிய நிணமும் குருதியும் ஓடை என ஒழுகின. “இன்னும் குருதியூறுகின்றன” என்றார் ஒருவர். “வேட்டை விலங்குகள் அருகிவிட்டனவா இக்காட்டில்?” என்று ஒருவர் கேட்டார். “கொண்டு வந்த உலர்ஊனும் உப்பிட்டஊனும் முதல் இரு நாட்களிலேயே முடிந்துவிட்டன. நாற்புறமிருந்தும் நிஷாதரும் கிராதரும் கொண்டுவந்த ஊனும் படைப்பிரிவின் வில்லவர்கள் சென்று வேட்டையாடி வந்த ஊனும் அதை ஈடு கட்டின. இப்போது வில்லவர் மாய அடுமனையாளரும் போருக்கெழுந்துவிட்டார்கள். இரவில் வேட்டையாடச்செல்ல எவருமில்லை. நிஷாதர்கள் இங்கு நிகழ்ந்த போரைக் கண்டு அஞ்சி விலகி நெடுந்தூரம் சென்றுவிட்டனர். ஊன் மணம் பெற்று ஓநாய்களும் நரிகளும் கழுதைப்புலிகளும் வந்து சூழவே காட்டின் விலங்குகளும் அகன்று சென்றுவிட்டன” என்றார் முதியசூதர்.
இருளுக்குள்ளிருந்து ஒரு சூதர் “மண்ணுக்குள் உள்ளது இன்னும் நூறாண்டுகாலம் உண்ணத்தொலையாத ஊன். பல்லாயிரம் நாகங்கள் அங்கே செறிந்துள்ளன” என்றார். பலர் அவரை நோக்க எவரும் ஒன்றும் சொல்லவில்லை. அவரே “நாகங்கள் நாகங்களை உண்ணும்” என்றார். “நாமும் உண்ணத்தொடங்கினால் இன்னும் எட்டு தலைமுறைக்காலம் இங்கு இவ்வாறு உணவு உண்டு போரிடலாம்” என்றார். அவர் சொல்வதன் பொருளென்ன என்றறியாமல் பலர் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்தனர். அடுப்பிலிருந்து எழுந்த செந்நிறத் தழலில் அவர் முகம் மட்டும் எரியும் கனலென இருளுக்குள் நின்றிருந்தது. விண்ணிலிருந்து அறியாத தெய்வம் ஒன்று இறங்கிவந்து அதை சொல்வதுபோல் தோன்றியது.
“பேச்சு போதும். அடுமனைகள் விரைவு கொள்ளட்டும்” என்று மிக அப்பால் நின்ற தலைமைச் சூதர் உரக்க குரல் கொடுத்தார். தொலைஎல்லை வரை நூற்றுக்கணக்கான அடுப்புகள் இருபுறமும் அனல் கொள்ள வானை நோக்கி எரியாலான இணைக்கோட்டு பாதைபோலத் தோன்றியது அடுமனைக்கூடம். இளம்சூதன் ஒருவன் “எரிநூல் ஏணி” என்றான். பின்னர் “ஏறி இருண்ட விண்ணுக்குச் சென்று மறைந்துவிடலாம்” என்றான்.
குதிரைப்பந்தியில் பாண்டவப்படையின் தலைமைப் புரவிச்சூதரான சுதீபர் மழையில் நனைந்து உடல்சிலிர்த்துக்கொண்டிருந்த குதிரைகளை நோக்கியபடி மெல்ல நடந்தார். அவற்றின் முதுகின்மேல் தேன்மெழுகு பூசப்பட்ட பாய்களாலான மழைமூடிகள் அணிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் பிடரியிலும் கழுத்திலும் நீர் வழிந்தது. குளிருக்கு அவை மெய்ப்பு கொண்டபடி தசை விதிர்த்தபடி கால்மாற்றி நீள்மூச்செறிந்தபடி நின்றன. அவர் ஒவ்வொரு புரவியையாக நோக்கால் தொட்டார். சிலவற்றை மட்டும் கைகளால் தொட்டு நோக்கினார். அவருடைய நோக்கை புரவிகள் உணர்ந்திருந்தன. அவர் பார்வை தொட்ட இடத்தில் அவை உடல்சிலிர்த்தன.
இளம்சூதனும் அவருடைய மாணவனுமான காமிகன் “புரவிகள் நூற்றுக்கு ஒன்றே எஞ்சியிருக்கின்றன” என்றான். “ஆம், அவையும் நோயுற்றவை, புண்பட்டவை” என்று சுதீபர் சொன்னார். “இப்போது புரவிகளின் சாவு விழுக்காடு மிகவும் பெருகிவிட்டது” என்றான் காமிகன். “ஆம், ஏனென்றால் பெரும்பாலான புரவிகள் புண்பட்டவை. புண்பட்ட புரவி தன் உடலீின் நிகர்நிலையை இழக்கிறது. உடல்மீதான கட்டுப்பாட்டை கைவிடுகிறது. அம்புகளுக்கும் வேல்களுக்கும் எளிதில் இலக்காகிறது” என்றார் சுதீபர். “அத்துடன் இந்தப்புரவிகள் பெரும்பாலும் படைப்பயிற்சி கொண்டவை அல்ல. வெறும் வண்டிக்குதிரைகள் பல. இவை போரில் எ்ளிய தசைக்கேடயங்களாகவே நின்றிருக்கும்.”
காமிகன் சொல்லத் தயங்கினான். ஆனால் முட்டிவந்த சொல்லால் திணறினான். பின்னர் “அவர்கள் புரவியை உண்கிறார்கள்” என்றான். “எல்லா போர்களிலும் இறுதியில் புரவிகள் உண்ணப்படும்” என்றார் சுதீபர். “ஆனால்…” என தயங்கிய காமிகன் “ஆனால் புரவியை உண்பதில் மிகமிக அறப்பிழையாக ஏதோ ஒன்று உள்ளது. ஏன் உண்ணலாகாது என கேட்டால் எனக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை. பசுவைக்கூட உண்ணலாம், புரவியை உண்ணலாகாது. புரவி இப்பேரரசுகளை உருவாக்கியது. அறம்வளரவும் மெய்ஞானம் விளையவும் தன்னை வேலியாக்கிக்கொண்டது. தேவர்கோன் இந்திரன் புரவிவடிவில் மண்ணில் வந்தான் என்கின்றன கதைகள்” என்றான்.
சுதீபர் புன்னகைத்து “நீ கண்டிருப்பாய், இவர்கள் போரை எப்படி தொடங்கினர் என. தங்கள் மைந்தர்களை களப்பலி கொடுத்து போர் குறித்தவர்கள். புரவிகளை எப்படி கருதுவார்கள்?” என்றார். “இருந்தாலும்…” என்று காமிகன் சொன்னான். “என்ன நிகழும் என்கிறாய்?” என்றார் சுதீபர். “இப்போருக்குப்பின் புரவிகளை இவர்கள் எப்படி அணுகுவார்கள்? போரில் புரவிகளை வெட்டிக்குவிப்பது இயல்பானதே. ஏனென்றால் புரவிகள் ஷத்ரியர்கள். போருக்கெனப் பிறந்தவர்கள். ஆனால் புரவியை உண்டபின் எப்படி அவர்கள் ஒரு புரவியின் தோளை தழுவமுடியும்? அதன்மேல் ஏறி அமர்ந்து ஊர்ந்து செல்லமுடியும்? ஆசிரியரே, புரவி தன்னை ஊர்பவனின் உள்ளமென ஆவது. அவன் உண்பது எதை?’
காமிகன் சொல்கொண்டான். “எண்ண எண்ண என் துயில் அழிகிறது. புரவிகள் இப்போரில் எப்படி நின்று பொருதுகின்றன என நாம் அறிவோம். நீரின்றி புரவி நிலைகொள்ளாது. முதற்சில நாட்களுக்குப்பின் அனைத்துப்புரவிகளும் களத்தில் ஒழுகும் குருதியையே உறிஞ்சிக் குடிக்கின்றன. அவற்றின் சாணத்தில் கரிய குழம்பு என குருதிச்சேறு இருக்கிறது.” அவன் மூச்சிளைத்தான். “மூன்றாம் நாள்தான் நான் அதை கண்டடைந்தேன். புரவிகளின் சாணத்தின் நாற்றம் மாறிவிட்டிருந்தது. அழுகிய ஊன் எனத் தோன்றின அவை. நான் உசாவியபோது முதுசூதரான கர்மர் சொன்னார் அப்புரவி குருதியை உண்டுவிட்டிருக்கிறது என்று.”
“ஆம், பெருவிடாய் கொண்டு களம்நிற்கும் புரவி தன் வாயருகே ஒழுகிவரும் குருதியை நாநீட்டி குடிக்கத்தொடங்குகிறது. பின்னர் அதில் சுவை காண்கிறது. விழுந்தவர்களின் பச்சை ஊனைக் கவ்வி உண்டு விடாயும் பசியும் தீர்க்கும் புரவிகளை கண்டிருக்கிறேன்” என்றார் சுதீபர். “ஆனால் ஒன்றுண்டு. அத்தனை புரவிகளும் முதலில் குடிப்பது தங்கள் உடலில் இருந்து ஒழுகும் குருதியைத்தான். பின்னர் அவை குடிப்பன எல்லாம் தங்கள் குருதியே என அவை எண்ணிக்கொள்கின்றன.”
“இவர்கள் உண்பது எதை? தன்குருதி உண்ட புரவிகளின் ஊனை என்றால் அது தன்னையே அல்லவா?” என்றான் காமிகன். சுதீபர் திரும்பி அவனை நோக்கி சிலகணங்கள் விழியிமைக்காமல் நின்றபின் “மெய், இங்கே களத்தில் இளையபாண்டவன் உண்டது தன் குருதியைத்தான்” என்றார். மீண்டும் எண்ணம்சூழ்ந்து பெருமூச்சுவிட்டு “ஆனால் இங்கே நிகழும் இப்போரே தன்குருதி உண்ணல்தானே?” என்றார். மேலும் எண்ணத்திலாழ்ந்து “எல்லா போர்களும் இவ்வண்ணம் நிகழ்வதே. இங்குள்ள ஷத்ரியர்கள் அனைவருமே உடன்குருதியினர் என்பார்கள். இவர்கள் கொன்றுகுவிக்காமலிருந்த நாளே இருந்ததில்லை.”
அவர்கள் நின்று நெடுந்தொலைவுவரை விழியோட்டி நோக்கினர். அடுமனை எரிநிரை தெரிந்தது. “புரவிச்சிதை” என்றான் காமிகன். சுதீபர் மறுபக்கத்தை சுட்டிக்காட்டி அங்கிருந்த படைகளைக் காட்டி “அவர்களும்தான்” என்றார். சுதீபர் ஒரு பெரும்புரவியை அணுகி அதன் முதுகை மெல்ல தட்டினார். அது எண்ணியிராமல் சீறியபடி திரும்பி அவரை கடிக்க வந்தது. அவர் திகைத்து பின்னடைந்தார். காமிகன் “பெரும்பாலான புரவிகள் இப்படி கடிக்க வருகின்றன” என்றான். “நேற்று மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் புரவிகளால் கடிக்கப்பட்டார்கள். அணுகாமல் உணவளிக்கும்படி ஆணை.”
“ஊன்சுவை கண்ட புரவிகள் இவ்வண்ணம் ஆகின்றன” என்றார் சுதீபர். இரு ஏவலர் கூடைகளில் உணவுடன் புரவிகள் நடுவே சென்றார்கள். சுதீபர் விழிசுருக்கி நோக்கியபின் ஒருவனை கைசுட்டி அருகே அழைத்து “என்ன உணவு?” என்றார். அவன் தயங்கி இன்னொருவனை நோக்க அவன் “ஊன்” என்றான். “ஊனா?” என்றான் காமிகன். “ஆம், ஆணையாளரே. பச்சை ஊனை மட்டுமே இவை உண்கின்றன. அவற்றையே இரண்டு நாட்களாக அளித்து வருகிறோம்” என்றான் சூதன். “முதலில் புல்லும் வைக்கோலும் அளிக்கப்பட்டபோது சற்று பச்சை ஊனும் சேர்க்கப்பட்டது. பச்சை ஊன் என்றால் புல்லும் வைக்கோலும் குறைவாகவே போதும். இப்போது நிஷாதர்கள் வருவதில்லை. ஆகவே இந்தப்படைகளில் புல்லோ வைக்கோலோ இல்லை.”
“யானைகள்? அவை எதை உண்கின்றன?” என்றார் சுதீபர். “அவை தழைகளையே உண்கின்றன. சற்று குருதிபட்டிருந்தால்கூட கையால் தொடுவதில்லை” என்றான் சூதன். சுதீபர் “நல்லூழ்தான். அந்த அளவுக்கேனும் தெய்வங்கள் மானுடன்மேல் கனிவுடன் உள்ளன” என்றார். பின்னர் கைகூப்பி “இந்திரனின் இரு ஊர்திகள். அவன் தாமரைக்கையனாக எழுகையில் யானை. மின்படைகொண்டு எழுகையில் புரவி. யானை நீர். புரவி அனல்” என்றார். “அனல் தன் எல்லையை கடந்துவிட்டது. நீர் வேலிமீறவில்லை.”
“நாமநீர் வேலி என்கின்றன நூல்கள். தெய்வங்களின் சொல் நீரின் வேலி” என்றான் காமிகன். சுதீபர் அவர்களிடம் செல்லும்படி கைகாட்டினார். அவர்கள் அடுத்த புரவிநிரை நோக்கி கூடையுடன் செல்ல காமிகன் “இங்கே இத்தனை ஊன் எங்கிருந்து?” என்றான். சுதீபர் மெல்ல நடுங்கினார். காமிகன் “அது என்ன ஊன்?” என்றான். “முதலில் களம்பட்ட எருதுகளை அளித்தோம். பின்னர் அத்திரிகள், யானைகள்”. காமிகன் “புரவிகள்?” என்று மூச்சுக்குரலில் கேட்டான். “ஆம், ஆணையாளரே. இப்போது பெரும்பகுதி புரவியூன்தான்” என்றான் சூதன்.