ரப்பர் -வாசிப்பு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமா, நான் உங்களுக்கு கடிதம் எழுத தொடங்கிய நாளில் இருந்து இக்கடிதம் பெரும் இடைவெளியில் எழுதுகிறேன்(பணிச்சுமை), இதற்கிடையில் நேரில் உங்களை சிலமுறை சந்தித்தும் உள்ளேன் என்றாலும் பேச முடிந்ததில்லை, உங்களிடம் என்று இயல்பாக பேச முடியுமோ தெரியவில்லை. அது ஒரு கனவாகவே இன்னும் உள்ளது.

இன்று ரப்பர் நாவல் வாசித்தேன். நாவல் வாசிக்கும் போது parallel ஆகா ஓடிக்கொண்டிருந்த சிந்தனை இதை நீங்கள் 22 வயதில் எப்படி எழுதினீர்கள் என்றே. நான் அந்த வயதில் சிந்திக்கவே தொடங்கவில்லை என்றே இப்போது தோன்றுகிறது. 29 வயதில் 22 வயது இளைஜனின் சிந்தையை கற்பனையை கண்டடைதலை வியந்தே ரப்பர் என்னால் வாசிக்கப்பட்டது. பொதுவாக நாவல் வாசித்து சில நாட்கள் அல்லது வாரங்கள் கழித்தே வாசிப்பனுபவம் நினைவில் இருந்து திரட்டி எழுவது என் வழக்கம். இன்று போரும்  அமைதியும் கதைக்குள் நுழைவதால் உடனடியாக எழுதுகிறேன். கிட்டத்தட்ட 4 மாதங்கள் கழித்து(களைத்து) நான் வாசிக்கும் கதை ரப்பர். இடையில் கடுமையான பணி நெருக்கடி ஒரு நாள் 15 மணி நேரத்திற்கும் மேல் கணினி முன் தான், மற்ற சமயங்களிலும் சிந்தை முழுக்க ப்ரோக்ராமிங் , லாஜிக் , அல்கோரிதம், மிக குறைவாக தூக்கம். அதிலிருந்து விடுபட்டவுடன் வாசிக்கும் முதல் புதினம் ரப்பர். அதனால் கண்டிப்பாக மீள்வாசிப்பு தேவை படுவது. மட்டுமல்லாமல் நாவல் முழுக்க வரும் பல கதாபாத்திரங்கள், அனைத்தும் குரோதம் நிறைந்தவை ஒவ்வொரு கதாபாத்திரமும் நம் பல்வேறு தீய குணங்களின் அதீத எல்லைகளை காட்டுவது. அதனால் ரப்பர் கதையாக மனதில் இல்லை மாறாக கதைகளாக(கதாபாத்திரங்களாக) மனதில் நிற்கிறது.

நாவலின் மையம் பிரான்சிஸ்(பிராஞ்சி என்பதே அணுக்கமான பெயராக உள்ளது) என்று நீங்கள் முன்னுரையில் சொன்னாலும் அவனும் அதில் ஒரு கதாபாத்திரம் என்ற நிலையிலே 18 ஆம் அத்தியாயம் வரை வருகிறான் என படுகிறது(அல்லது நான் தவற விட்டிருக்கலாம்). எப்போதும் சற்று குழப்பத்துடன் இருக்கிறான் என்பதை தாண்டி அவன் கதையின் பங்கு குறைவுதான். குறிப்பாக அவன் சுகேசினியிடம் செல்லும்போது மற்றவர்களுக்கும் அவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை, ஆனால் நாவல் முழுக்க பிரஞ்சியை மனம் தேடுகிறது, காரணம் தெரியவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் பிராஞ்சி வராமல் போவது வெறுமையை உண்டாக்குகிறது. கடைசி அத்தியாயங்களில் அவனே நிறைந்திருக்கிறான் கதையிலும் மனதிலும். இங்கே தான் அவன் தேடலுடன் இருப்பது தெரிகிறது, கொஞ்சம் யோசிக்கும் போது அவன் ஆரம்பத்தில் இருந்தே ஒரு தேடல் உள்ளவனே என தெரிகிறது. “பறவைகள் விதைப்பதில்லை அறுவடை செய்வதுமில்லை” என்னும் வரிகளில் அவனுள் ஒரு கண்டடைதல் நிகழ்கிறது. அதற்குள் அவன் வாழ்க்கை கண்டு வந்த பாதையே அதற்க்கு காரணம். ஒருவகையில் அதை பெரிய பருவட்டர் சாகும் தருவாயில் அதை கண்டடைந்து இவனுள் ஒரு குழப்பத்தை விதைத்து விடுக்குறார். போகும் வழியில்(தற்கொலை மனநிலையில்) குழந்தைகளை காண்கிறான் அவர்களுடன் பேசுகிறான். பரிசுத்த ஆன்மாக்கள், துளியும் க்ரோதம் இன்றி அவன் காணும் மனித துளிகள். அங்கு அவனுக்கு ஒரு புத்துணர்வு(புதிதாக பிறந்ததாக) கிடைக்கிறது. அவன் தாத்தா அப்படி ஒரு ஆன்மாவை கொன்றவர், அதன் பாவ கணக்கு மூன்றாவது தலைமுறை வரை தொடர்கிறது. அந்த பிரமாண்டமான வீட்டில் குற்ற உணர்ச்சி அற்றவன் குஞ்சிமுத்து மட்டுமே, பிற அனைவருமே பாவத்தின் துளிகள், தொடர்ந்து அதை செய்துகொண்டிருப்பவர்கள் அதனால் உருவாகும் குற்ற உணர்ச்சியால் சிறிதேனும் அவதி படுபவர்கள். பிராஞ்சி அவர்களில் இருந்து சற்று மேம்பட்டவனாக இருக்கிறான். ஒரு வகையில் அவனே அந்த குடும்பத்தின் விடியல், தலைமுறைகளாக பின் தொடரும் சாபத்திலிருந்து மீட்க போகிறவன், அடுத்த தலைமுறைக்கு நல்ல வாழ்வு அமைய ஒரே வாய்ப்பு. அதனால் லாரன்ஸ் வழியாக(அவன் வார்த்தைகளில்) அது நிகழ்கிறது. மீட்சி என்று சொல்லும் போது அது வெறுமனே அகத்தில் மட்டும் நிகழ்கிறதில்லை புறத்திலும் அதன் தொடர்பை அழுத்தமாக நாவல் சொல்கிறது. இங்கு அந்த குடும்பத்தில் ஒருவள் மீளும் போது அவளுள் க்ரோதம் கரைகிறது, வெளியில் ரப்பர் காடு கைவிட்டு போகிறது. நாவலின் தொடக்கத்திலே ரப்பர் சருகுகள், அதன் ரத்த கறை, காயங்கள் கண்டபடியே ராம் அந்த பெரிய பங்களா உல் நுழைகிறான். அங்கிருந்து சூன்யம். இனி அங்கு மிஞ்சும் கொஞ்சம் நிலத்தில் விவசாயம்(ரப்பர் பயிரிடுவது விவசாயத்தில் சேராது) செய்ய திட்டமிடுகிறான் பிராஞ்சி(மீட்சி).

நான் பாகோடு என்னும் கிராமத்தில் பிறந்தவன், என் சிறு வயது நினைவில் ரப்பர் பெரிய சூன்யத்தை உண்டாக்கிய தருணங்கள் பல(ஏற்கனவே உங்களுக்கு எழுதியிருக்கிறேன்[டார்த்தீனியம் – பதட்டமும் விடுபடலும்]). இப்போதும் ரப்பர் காடு எனக்கு சலிப்பூட்டக்கூடியதே, உள்நுழைய விரும்ப மாட்டேன்.  இதற்கான காரணம் எனக்கு புரிந்ததில்லை. அதற்குண்டான புவியியல் காரணத்தை லாரன்ஸ் சொல்லும் காட்சி தனிப்பட்டமுறையில் எனக்கு மனதிற்கு மிகவும் அணுக்கமானது.

இன்னும் மனதில் பல எண்ணங்கள் ஓடுகிறது, சொற்கள் சிக்கவில்லை சிக்கினாலும் கோர்க்க முடியவில்லை அதனால் இத்துடன் முடித்து கொள்கிறேன்(இதை எழுதவே 1 மணி நேரத்திற்கு மேல் ஆனது).

கடைசியாக, நாவலின் மற்றுமொரு முக்கிய சிறப்பு ஒரு குடும்ப கதையினூடாக சொல்லப்பட்டுள்ள அரசியல். கேரளா அரசியல், குமரி மாவட்ட போராட்டம், கச்சிதமாக பொருந்தி வருகிறது மட்டுமல்லாமல் வெறும் செய்தி வரலாறாக அறிந்திருந்த விஷயம் அதன் பின்னணியில் உள்ள சமூக எதார்த்தத்தை கண் முன்னே நிறுத்துகிறது. ரப்பர் நாவல் அதில் சொல்லப்பட்டிருக்கும் அரசியலும் தனியாக ஒரு நாவல் அளவுக்கு விரியும் சிந்தையை தூண்டுவதாக அமைகிறது.

கடிதத்தை முடிக்காமல் விடுவதற்கு வருந்துகிறேன், முடிக்க முடியவில்லை என்பதே காரணம். மீள் வாசிப்பு முடித்து திரும்ப எழுதுவேன் உறுதியாக.

நன்றி,
அருள், கொச்சி.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-45
அடுத்த கட்டுரைஇ.பா.வின் ஔரங்கசீப்