யானை – கடிதங்கள்

இலஞ்சி ஆலய யானை இறப்பு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நெல்லையப்பர் கோயிலுக்கு சில நாள்களுக்கு முன் சென்றிருந்தபொழுது அங்குள்ள யானை காந்திமதி சூழல் வெப்பத்தால் மிகவும் வேதனைப்பட்டுக்கொண்டிருந்தது. அதன் தும்பிக்கையால் உடலில் ஊதிக்கொணுடிருந்தது. கண்ணில் ஒளியே இல்லை. வாலைக்கூடத் தூணில் கட்டி, வெளிப்பிரகாரத்தில் அதன் கொட்டிலின் அருகில் நின்றுகொண்டிருந்தது. அருகில் ஒன்றிரண்டு மரங்கள் மட்டுமே இருந்தன. தென்னையும் ஏதோ இரண்டு சிறிய மரங்களும்தான் இருந்தன. வந்தவர்கள் காசுகொடுத்து ஆசிர்வாதம் வாங்கி சென்றுகொண்டிருந்தார்கள்.

நான் வீட்டிற்கு வந்து மாவட்ட ஆட்சியர் திருமதி. ஷில்பா பிரபாகர் சதீஷ்க்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினேன். அதே கடிதமாதிரியை எனக்குத் தெரிந்தவர்கள்மூலமும் அனுப்பித்தேன். கீழுள்ள செய்தி இன்று கண்ணில்பட்டதும் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. சங்கரன்கோவில் கோமதி யானையைப்போல இதுவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்று சொல்லும் என்று நினைத்துக்கொண்டேன். சங்கரன்கோவில் கோமதி யானை பாகனிடம் பேசுவாள். பாகன் கேட்டால் சந்தோஷமாக இருக்கிறேன் என்று மண்டையை ஆட்டி எல்லோருக்கும் தெரிவிப்பாள்.

(இன்னும் இந்த செய்தியில் மரம் வைப்பதைப்பற்றி சொல்லவில்லை. நிறைய Fan வைத்திருக்கிறார்களாம். நேரில் செல்ல வேண்டும்.)

https://m.dinakaran.com/article/News_Detail/495212/amp

லக்ஷ்மி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களுடைய இலஞ்சி யானை இறப்பு குறித்த பதிவினை படித்தேன்,

கோவில்களில் யானைகளை நாம் கையாளும் விதம் மிகுந்த வேதனைக்குரியது. மனிதர்களின் சுயசிந்தனையற்ற செயல்களினால் விலங்குகள் அனுபவிக்கும் கொடுமைகள் சொல்லிலடங்காததுதான். கோவில்களில் மட்டுமல்லாமல் விலங்கியல் பூங்காக்கள் என்ற பெயரிலும் இதே வகையில் வாயற்ற ஜீவன்கள் படும் பாட்டினை என்னுடைய மகள் தன் வலை பதிவில்  சிறிது நாட்கள் முன் பதிவேற்றியிருந்தார். உங்கள் பார்வைக்காக இங்கே,

https://varshinivoice.blogspot.com/2019/03/why-do-we-need-zoos-it-was-random.html

இந்துமதி

முந்தைய கட்டுரைமலைக்காட்டுப் பிச்சாண்டி
அடுத்த கட்டுரைமலேசியாவிலிருந்து ஊட்டி முகாமுக்கு… – பவித்தாரா