வாழ்க்கை எனும் அமுதத்துளி
அன்புக்குரிய ஜெ அவர்களே,
வழக்கம்போல காலையில் அலுவலகத்தில் நுழைந்து கணினியை தூக்கத்திலிருந்து தட்டிஎழுப்புவதற்க்கு முன்னால் உங்களது வலை தளத்தை திறந்து வாசித்து செல்வது வழக்கம்.இன்றும் காலை அதை தொடர்ந்தேன் ஆனால் சில நொடிகளிலே நான் கண்ணீர் மல்க அழுதுவிட்டேன்,காரணம் லோகிதாதாஸ் என்ற மிகசிறந்த படைப்பாளியின் செங்கோல் என்ற படத்தில் வரும் “மதுரம் ஜீவாம்ருத பிந்து” பாடல் காட்சியில் அதன் முக்கிய கதாபாத்திரமான சேதுமாதவனின் வாழ்வில் ஏற்படும் வேதனையான சந்தர்பங்களில் மோகன்லால் அவர்களும் பிற நடிகர்களும் கதாபாத்திரமாக வாழ்கிறார்கள் அதனால் இந்த பாடல் காட்சி மீண்டும் காண நேரும் போது எனக்கு இப்போதும் கண்கலங்கிவிடும்.
நாம் எல்லோரும் நம் வாழ்க்கையை எப்போதும் ஒரு கண்ணாடிபோல அழகாக பராமரித்து அதில் ஒரு தூசி விழுந்தால் கூட துடைத்து அதில் நம்முகத்தை அழகுபார்ப்போம்,எனவே தான் நம்வீட்டில் அது சுத்தமாக இருக்கும்,ஆனால் அதை போல இருக்க நினைக்கும் நம் வாழ்வு ஒரு தருணத்தில் கீழே வீழ்ந்து நொறுங்கிவிட்டால்….அப்படி தன் கனவுகளும் கூட்டுகுடும்ப சந்தோஷங்களும் நொறுங்கிய சேதுமாதவனின் வாழ்க்கையை லோகி அவர்களை தவிர்த்து இன்னொருவரால் அதை கண்ணாடி பிம்பம் போல் திரைக்கதை எழுதுவது சுலபமல்ல.
லோகி அவர்கள் உருவாக்கிய சிறந்த படங்கள் என்று சொல்வதை விட அது சமூகத்தில் பல மனிதர்களின் வழ்க்கை பிரதிபிம்பம்,நாம் இறைவன் கொடுத்த இந்த வாழ்வை திருப்திபட சந்தோஷத்துடன் பல கனவுகளுடன் வாழும்போது எத்தனையோ குடும்பங்களில் நல்ல மனிதர்கள் சூழ்நிலை காரணமாக வாழ்க்கையில் எவ்வளவோ போராடினாலும் கடைசியில் தோல்வியை மட்டும் மீண்டும் மீண்டும் சந்தித்து அதை மற்றவர்களோடு காட்டிகொள்ளாமல் தனிமரமாய் வேதனைபடும் மனிதர்களை சினிமா என்ற ஊடகம் மூலம் நமக்கு முன்னால் காட்சியாக உருவாக்கியவர், நான் லோகி அவரின் படம் பார்க்கும்போதெல்லாம் அவரையும் அவர் குடும்பத்தையும் நினைவுகூர்வேன்.அவரது நினைவுகள் அவர் உருவாக்கிய கதாபாத்திரத்தை பார்க்கும் போது நம்மில் அவர் வந்து போகிறார்.
அவர் எழுதிய கதையான மம்மூட்டி நடித்து தனியாவர்த்தனம் படத்தில் வரும் கதாபாத்திரம் பாலகோபாலன் என்ற ஆசிரியரின் வாழ்க்கையை எழுதி முடித்த பிறகு பல நாட்கள் அவர் தூக்கமின்றி அந்த கதாபாத்திரத்தின் வாழ்க்கை வேதனை நினைத்து கண்கலங்கினார் என்று அவரின் துணைவியார். சிந்து அவர்கள் ஒரு தொலைகாட்சியின் நேர்காணலில் கூறியது என்னை நெகிழவைத்தது.
அதை போல அவர் எழுதிய கதாபாத்திரங்கள் யாவும் இன்றும் நம் சமூகத்தில் வாழும் மனிதர்களின் கண்ணாடி பிம்பங்கள் தான் என்பதில் மாற்றுகருத்தில்லை எனக்கு. அவரிடம் சேர்ந்து பணியாற்றிய தாங்கள் மீண்டும் அவர் நினைவுகளை மேலும் பகிரவும்.
அன்புடன்,
அனுஷாத்
***
அன்புள்ள அனுஷாத்
நான் ஏற்கனவே விரிவாக லோகி பற்றி எழுதியிருக்கிறேன். லோகி என்ற பேரில் அக்கட்டுரைகள் நூல்வடிவாகவும் வந்துள்ளன.
ஜெ