காந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்- பாலா

 

வழக்கமான அரசு அல்லது தனியார் துறைகள் முன்வைக்கும் பெரும் திட்டங்கள் அனைத்தும், வளங்களையும், தொழில்நுட்பங்களையும் முன்வைத்துத் திட்டமிடப்படுபவை. அவை மக்கள் நலனுக்கென்றாலும், நிதியாதாரங்களும், தொழில்நுட்பமும் இல்லாமல், அவை துவங்கப்படுவதில்லை. அதிலும், தனியார் துறைத் திட்டங்கள், கூடுதலாக, லாபம் என்னும் குறிக்கோளை முதன்மையாக வைத்துத் துவங்கப்படுகின்றன. அவை மக்களுக்குப் பயன்படுவதாக இருந்தாலும், லாபமே முக்கியக் குறிக்கோள். மக்கள் நலன், அதற்கு அடுத்த நிலையில்தான் இருக்கும். மாறாக காந்தியத் திட்டங்கள் சாதாரண மக்களின் தேவைகளை முன்வைத்து, அதற்கேற்ப தொழில்நுட்பங்களை உருவாக்கியும், வளைத்தும், நிதியாதாரங்களைத் திரட்டியும் பயன்படுத்த முயல்பவை. இங்கே பொதுவாக லாபம் என்னும் குறிக்கோள் இருப்பதில்லை. இருந்தாலும், அது மக்கள் நலனுக்கு அடுத்ததாகத்தான் இருக்கும்.

அப்படி ஒரு மனிதரின் திட்டம்தான், அனைத்து மக்களுக்கும், கண்சிகிச்சை கிடைக்கவேண்டும் என்னும் கனவு. அதை நிறைவேற்ற அவர் முடிவெடுத்த போது (1976), அவருக்கு 58 வயதாகியிருந்தது. அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். கையில் ஓய்வூதியம் இருந்தது. ஆனால், அவரின் கனவை நிறைவேற்ற அது கொஞ்சம் கூடக் காணாது. எந்த ஒரு நிதிமேலாண் வல்லுநரும், அவர் கையில் இருந்த காசையும், அதை வைத்துக் கொண்டு அவர் நிறைவேற்ற யோசித்த திட்டத்தையும் கேட்டிருந்தால், ‘இந்த மனிதருக்கு மூளை பிசகிவிட்டது’, என நினைத்திருப்பார். அந்த மனிதர், டாக்டர் வி என அனைவராலும்  நெகிழ்வோடு நினைவு கூரப்படும், டாக்டர் வெங்கிட சாமி. அவர் உருவாக்கிய நிறுவனம் அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்.

மதுரையில், தன் வீட்டிலிருந்தே இந்த முயற்சியைத் துவங்கினார். தன்னிடம் வரும் நோயாளிகளில், பணம் உள்ளவர்களிடம் சிகிச்சைக்கான கட்டணத்தை வசூலித்து, பணம் இல்லாதவர்களுக்கு, அந்த நிதியில் இலவசமாகச் சிகிச்சை அளித்தார். ஆனால், இருவருக்கும் ஒரே தரத்திலான சிகிச்சை. அவரின் கனவின் முதல்படி நிறைவேறியது. ஆனாலும் இது பெருமளவு மக்களைச் சென்று அடையவேண்டும். சிகிச்சையின் செலவு இன்னும் குறைய வேண்டும் என யோசித்தார்.

அந்த யோசனையின் விளைவாக, புதிய வ்ழிமுறைகள் உருவாக்கப்பட்டன.

  1. அருகில் உள்ள கிராமங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு வரை படித்த பெண்கள், பணியிலமர்த்தப்பட்டார்கள். அவர்களுக்கு, கண் சிகிச்சை முறைகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதனால் இரண்டு முக்கிய நன்மைகள் விளைந்தன. உள்ளூரில் படித்து வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை கிடைத்தது. அர்விந்த் மருத்துவமனைக்கு, குறைந்த சம்பளத்தில் ஊழியர்கள் கிடைத்தனர்.
  2. அவர்கள் ஒவ்வொருவருக்கும், தனித்துவமான வேலைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களின் செயல்திறன் மேம்படுத்தப்பட்டது.
  3. கண் சிகிச்சையின் மிக முக்கியமான அங்கம் – அறுவை சிகிச்சை மருத்துவர். அவருக்கு, ஒரு அளவுக்குக் குறைவாக ஊதியம் அளிக்க முடியாது. வழக்கமாக, அறுவைச் சிகிச்சைகளில், முதலில், நோயாளி அறுவைச் சிகிச்சை மேசையில் படுக்க வைக்கப்பட்டு, அறுவைச் சிகிச்சைக்காகத் தயார் செய்யப்படுவார். பிறகு அறுவை சிகிச்சை நிபுணர் அறுவை சிகிச்சை செய்வார். அதன் பின்னர், நோயாளிக்கு, அந்த சிகிச்சையின் முடிவில் செய்யும் சில சிட்சைகளை மற்றவர்கள் செய்வார்கள். அறுவை சிகிச்சைக்கு நோயாளி தயாராகும் போதும், அறுவை சிகிச்சை முடிந்து, நோயாளி அந்த மேசையில் இருந்து அகற்றப்படும் போதும், அறுவை சிகிச்சை நிபுணர் சும்மா இருப்பார். அதாவது, அந்த நேரம் வீணடிக்கப்படும்.

 

இந்த அறுவை சிகிச்சை முறையில், ஒரு புது வழியை அர்விந்த் உருவாக்கியது. ஒரு அறுவை சிகிச்சை மேசைக்குப் பதிலாக, இரண்டு அறுவை சிகிச்சை மேசைகளை அறுவை சிகிச்சை அறையில் நிறுவியது. அறுவை சிகிச்சை செய்ய உதவும் இயந்திரம், இரண்டு மேசைகளுக்கும் இடையில் பொருத்தப்பட்டது. அவ்வாறும் பொருத்தும் போது, அந்த இயந்திரத்தை, இரண்டு மேசைகளுக்கும், அறுவை சிகிச்சைக்குத் தேவைப்படும் வகையில் நகர்த்திக் கொள்ளும் வகையில் சிறு மாற்றம் செய்து பொருத்தப்பட்டது.

 

முதலாவது மேசையில் அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் போதே, இரண்டாவது மேசையில், அடுத்த நோயாளி, அறுவை சிகிச்சைக்குத் தயாராக்கி வைக்கப்படுவார். முதலாவது மேசையில், அறுவை சிகிச்சை முடிந்த உடனேயே, மருத்துவர், அடுத்த மேசையில், அடுத்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை துவங்கிவிடுவார்.  இரண்டாவது அறுவை சிகிச்சை நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே, முதல் மேசையில் அறுவை சிகிச்சை முடிந்து, நோயாளி வெளியே கொண்டு செல்லப்பட்டு, அடுத்த நோயாளி கொண்டுவரப்பட்டு, அறுவை சிகிச்சைக்காகத் தயார் செய்யப்படுவார். இரண்டாவது அறுவை சிகிச்சை முடிந்தவுடன், மருத்துவர் தனது நேரத்தை வீணடிக்காமல், மூன்றாவது நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யத் துவங்கி விடுவார்.

 

இந்த முறையில், மருத்துவரின் செயல் திறன் 4-5 மடங்கு மேம்படுகிறது. வழக்கமான முறையில் அறுவை சிகிச்சை செய்யும் நேரத்தில், இந்தப் புது வழியில் நான்கு பேருக்கு கூடுதலாகச் செய்ய முடிகிறது இந்த முறையில். எனவே, ஒரு சிகிச்சைக்கு ஆகும் செலவு குறைகிறது.

 

ஏற்கனவே இருக்கும் அறுவை சிகிச்சை முறைகளை மாற்றுவதால், தரம் குறைகிறதோ என ஐயம் எழுவது இயற்கை. கண் அறுவை சிகிச்சைகளின், தரத்தை, அறுவை சிகிச்சைக்குப் பின் வரும் சிக்கல்களை வைத்து எடைபோடுகிறார்கள். அர்விந்த் கண் மருத்துவமனைகளின் தரம், அந்த அலகுகளில், இங்கிலாந்து நாட்டின் கண் மருத்துவமனைகளை விட மேலானது என்கின்றன புள்ளி விவரங்கள்.

சுருங்கச் சொன்னால், உலகத்தில் மிக உயர்தரமான சிகிச்சையை, மருத்துவர் 4-5 மடங்கு அதிக செயல்திறனோடு செயல்படுவதால், மிகக் குறைந்த செலவில் செய்ய முடிகிறது.

 

  1. குறைந்த ஊதியத்தில் செவிலியர், பணியாட்கள், அதிக செயல்திறன் கொண்ட அறுவை சிகிச்சை முறைகள் – இவை இருந்தாலும், போதுமான எண்ணிக்கையில், சீராக (இந்த இரண்டு அலகுகளும் மொத்த மருத்துவமனையும் அதிக செயல் திறனோடு இயங்க மிக முக்கியமான தேவைகள்) நோயாளிகள் வரவில்லையெனில், மொத்தக் கட்டமைப்பும், அதன் முழுக் கொள்திறனோடு (capacity) இயங்குவது மிகக் கடினம். எனவே மருத்துவமனைக்கு, நோயாளிகள் சீராக, போதுமான எண்ணிக்கையில் வர, ஒரு புது வழியைச் சமைத்தார்கள்.

 

அர்விந்தின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் ஏழைகள்; கல்வியறிவில்லாதவர்கள்; முதியவர்கள். மருத்துவமனையில் இருந்து, தொலைவில், கிராமங்களில், பரந்து வாழ்பவர்கள். தங்கள் கண் பார்வைக் கோளாறுக்காக, அர்விந்த் போன்ற அதி நவீன மருத்துவக் கட்டமைப்பு நகரங்களில் இருந்தாலும்,  மருத்துவமனையின் இடம் அறிந்து, வர இயலாது. ஏழைகளாக இருப்பதால், அவர்கள் குடும்பத்தினரும் பெரிதளவில் அக்கறை எடுத்துக் கொண்டு, தங்கள் தினக் கூலி வருமானத்தை விட்டு, அவர்களை அழைத்து வரமாட்டார்கள்.  கண் பார்வை குறைந்த ஏழை முதியவர்கள், தங்கள் பிள்ளைகளாலேயே பிச்சைக்காரர்கள் போல நடத்தப்படுவது சாதாரணம்.

 

எனவே, நோயாளிகள் வரும்வரை காத்திருக்காமல், அர்விந்த், நோயாளிகளை நேரில் சந்தித்து, சிகிச்சை அளிக்கும் ஒரு வழியை யோசித்தது.  உள்ளூர் லயன்ஸ் க்ளப், ரோட்டரி க்ளப் போன்ற குழுக்கள் உதவியோடு, கண் சிகிச்சை முகாம்களை நடத்த முடிவெடுத்தது.

 

கண் சிகிச்சை முகாம் முடிவில், கண் பார்வை குறைந்தவர்களுக்கு, கண்ணாடிகள் அங்கேயே வழங்கப்பட்டன. கண்ணாடிகள், வெறும் பார்வைக்குறைப்பாட்டிற்கு உதவும் உபகரணம் மட்டுமல்ல. அது ஒரு ஃபேஷனும் கூட என்பதால் – பல்வேறு வகையிலான ஃப்ரேம்கள் – நோயாளிகள் தங்கள் விருப்பத்திற்கேற்பத் தேர்ந்தெடுக்க அர்விந்த் உதவி செய்தது.

 

கண் சிகிச்சை முகாமின் இறுதியில், அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் கண்டடையப்பட்டு, பஸ்கள் மூலம் நகரில் அமைந்திருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

 

இந்தக் கண் சிகிச்சை முகாம்களை, அர்விந்த் மருத்துவமனையின் கொள்ளளவைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில்  திட்டமிட்டு நடத்துகிறார்கள். இதனால் மருத்துவமனையில் கட்டமைப்புக் கொள்ளவு மிக அதிகச் செயல்திறனோடு பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. ஒரு கட்டமைப்பின் கொள்ள்ளவு (capacity) மிக அதிகச் செயல்திறனோடு பயன்படுத்தப்படும் போது, அறுவை சிகிச்சைக்கான செலவு பெருமளவு குறைகிறது.

 

கார் தயாரிப்பில், இந்த முறையை, ஹென்றி ஃபோர்ட் முதலில் அறிமுகப்படுத்தினார். அதை அசெம்ப்ளி லைன் (உற்பத்திச் சங்கிலி எனலாம்). முறை என அழைக்கிறார்கள். துவக்கத்தில், ஒவ்வொரு காரையும் உருவாக்க, ஒரு குழு வேலை செய்யும். அவர்கள், காருக்குத் தேவையான பொருட்களை ஓரிடத்தில் கொணர்ந்து, காரை உருவாக்குவார்கள். ஒரு கார் உருவாக 10-12 மணி நேரம் பிடிக்கும். ஹென்றி ஃபோர்ட் இந்த முறையை மாற்றியமைத்தார். இந்த முறையில், காரை உருவாக்கும் மனிதர்கள், பெரும் வரிசையில் நிற்பார்கள். ஒவ்வொருவரும் ஒரு வேலையை மட்டுமே செய்வார்கள். காரை உருவாக்கும் முறைகள் வரிசைப்படுத்தப்பட்டு, ஓரிடத்தில் துவங்கி, கார் ஒரு கன்வேயரில் நகரும். முதலில் காரின் சேஸிஸ் கன்வேயரில் வைக்கப்படுகிறது என வைத்துக் கொண்டால், அடுத்த மனிதர், அதன் உள்ளே உள்ள ஒரு பாகத்தைப் பொருத்துவார். அதற்கடுத்தவர், அடுத்த பாகத்தைப் பொருத்துவார். அந்தக் கார் மெல்ல மெல்ல, ஒவ்வொரு மனிதர் வழியாகப் பயணித்து உருவாகும்.

 

இந்த உற்பத்திச் சங்கிலியில், ஒவ்வொரு உழைப்பாளரும், ஒரு வேலையில் தேர்ந்தவர்கள். (ஸ்பெஷலிஸ்ட்ஸ்). காரின் இஞ்ஜினைப் பொருத்துபவர், பல்வேறு வகையான கார்களின் இஞ்ஜினைப் பொருத்துவதில் தேர்ந்தவர். காரின் கதவைப் பொருத்துபவர், அத்திறனில் தேர்ந்தவர். இப்படி, கார் உற்பத்தியைப் பல்வேறு சிறு வேலைகளாகப் பிரித்து, அந்த வேலைகளில், உழைப்பவர்களின் செயல் திறனை, பயிற்சிகள் மூலம் மேம்படுத்தினார் ஹென்றி ஃபோர்ட்.

 

கார் உற்பத்தி, சிறு வேலைகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வேலையும் ஒரு திறன் மிகுந்த உழைப்பாளாரால் செய்யப்பட்டு, அவரது நேரம் நொடி கூட வீணடிக்கப்படாமல், அவர் இருக்கும் இடத்துக்கு வேலை வந்து செல்லும் முறையில், தொழிற்சாலையின் அனைத்து ஆதாரங்களும் மிக அதிகச் செயல் திறனோடு இயங்கி, கார் உற்பத்திச் செலவையும், நேரத்தையும் வெகுவாகக் குறைத்தது.

 

உற்பத்தித் துறையின் மிகப் பெரும் செயல்திறன் புரட்சி என இதைச் சொல்லலாம். துவக்கத்தில், ஒரு காரை உற்பத்தி செய்ய, 10-12 மணி நேரம் பிடித்தது. இன்று ஒரு கார் தயாரிக்கத் தேவைப்படும் நேரம் ஒரு மணிநேரத்துக்கும் குறைவானதே. இதனால், கார் உற்பத்தி அதிகரித்து, விலை குறைந்தது.

 

இதே தத்துவத்தைத் தான், தன் தொழிலுக்கேற்ப அர்விந்த் மருத்துவக்குழுமம் மாற்றியமைத்திருக்கிறது என்பதை மேலெ சொன்ன மூன்று புள்ளிகளைக் கவனித்தால் உணர முடியும்.

 

  1. அறுவை சிகிச்சையின் இன்னொரு பெரும் செலவு, கண்களில் பொருத்தப்படும் லென்ஸ் (செயற்கை விழித்திரை). இது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு பொருள். ஒரு ஜோடி லென்ஸ்களின் விலை கிட்டத்தட்ட, 100 டாலர். (7000 ரூபாய்). இந்தியாவிலேயே மிக அதிகம் இதை உபயோகிக்கும் அர்விந்த், லென்ஸ் தயாரிக்கும் நிறுவனங்களிடம், விலையைக் குறைக்குமாறு கேட்டுக் கொண்டது. ஆனால், அந்த நிறுவனங்கள், அதற்குத் தயாராக இருக்கவில்லை. இறக்குமதி செய்யப்படுவதால், டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறையும் போதெல்லாம், லென்ஸ்களின் விலை அதிகரித்தது.

 

அர்விந்தின் லென்ஸ் தேவை மிகச் சீராக அதிகரித்து வந்தது. எனவே, அவர்கள் தங்களுக்குத் தேவையான லென்ஸ்களை, அவர்களே தயாரிக்க முடிவெடுத்தார்கள். மேலாண் தளத்தில், இந்த முடிவு, வாங்குவதா? தயாரிப்பதா? (make? or buy?) என்றழைக்கப்படுகிறது. இந்த முறையில், முதலில் ஒரு பொருளுக்கான சந்தை உருவாக்கப்படுகிறது. நிறுவனம், அதை முதலில், இன்னொரு உற்பத்தியாளரிடம் இருந்து வாங்கி, விற்கிறது. அந்த விற்பனை ஒரு குறைந்த பட்ச அளவை எட்டும் போது, அதை அவரே தயாரிக்கும் குறைந்த பட்சக் கொள்ளவை எட்டுகிறது.

 

இந்தக் குறைந்த பட்சக் கொள்ளவை, விற்பனை தொடும் போது, விற்பவர், தயாரிப்பில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது. அதை விடுத்து, துவக்கத்திலேயே தயாரிப்பில் முதலீடு செய்து, பின்பு ஒரு சந்தையை உருவாக்கும் முறையில், முதலீடு உற்பத்திக் கட்டமைப்பில் வியாபாரம் துவங்கும் முன்பே முடங்கி விடுகிறது. ஒருவேளை, விற்பனை எதிர்பார்த்த அளவை எட்ட வில்லையெனில், முதலீடு நஷ்டத்தில் முடியும்

 

அர்விந்த் உற்பத்தியில் முதலீடு செய்ய முடிவெடுக்கையில், அதன் சொந்தத் தேவையே கட்டமைப்பின் பெரும் கொள்ளவை உபயோகித்துக் கொள்ளும் அளவை எட்டியிருந்தது. சொந்தமாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட லென்ஸ்களின் விலை 2 டாலர் (140 ரூபாய்). 7000 ரூபாயில் இறக்குமதி செய்யப்பட்ட லென்ஸ் விலை, தானே தயாரிக்கையில் 140 ரூபாயாகக் குறைந்தது.

 

இன்று, அர்விந்த் தனது லென்ஸ்களை உலகெங்கும் ஏற்றுமதியும் செய்கிறது. உலகச் சந்தையில் 7% லென்ஸ்கள் அர்விந்த் தயாரிப்பவை.

 

இதனால், அர்விந்தின் அறுவைச் சிகிச்சைக்கான செலவுகள் வெகுவாகக் குறைந்தன. முன்னேறிய நாடுகளில், ஒரு சாதாரண காடராக்ட் (கண்புரை) அறுவை சிகிச்சைக்கு கிட்டத்தட்ட 1.5 லட்சம் செலவாகிறது. இந்தியாவில், தனியார் மருத்துவமனையில் 25000 செலவாகிறது. அர்விந்த தனது கண் புரை அறுவை சிகிச்சைக்கு ரூபாய் 2000 அளவுக்கு வசூலிக்கிறது. வருடம் கிட்டத்தட்ட 3 லட்சம் அறுவை சிகிச்சைகளைச் செய்யும் அர்விந்த், அதில் 1.8 லட்சம் அறுவை சிகிச்சைகளை இலவசமாகச் செய்கிறது. மீதி 1.2 லட்சம் அறுவை சிகிச்சைகளுக்கு, ஒரு அறுவை சிகிச்சைக்கு ரூபாய் 2000 என்னும் அளவில் வசூலிக்கிறது.

 

இப்போது ஒரு கற்பனை செய்து பாருங்கள். ஒரு நிறுவனம், தனது உற்பத்தியில் 60% பொருட்களை இலவசமாக விநியோகிக்கிறது. மீதி 40% பொருட்களை, போட்டியாளர்களின் விலை மதிப்பில் 10% அளவு விலையில் விற்கிறது. அந்த நிறுவனம் லாபமாக இயங்குவது சாத்தியம்தானா?

 

லாப சதவீதத்தை, முதலீட்டாளர்கள் பலவகைகளில் அளக்கிறார்கள். அதில் EBITDA (Earnings before Interest, taxes, depreciation and amortization) சதவீதம் முக்கியமானது. அதாவது, விற்பனை வருவாயில் உற்பத்தி மற்றும் சந்தைச் செலவுகள் போக நிற்கும் முதல் நிலை லாப சதவீதம்.

 

இந்தியாவின் மிக முக்கியமான தனியார் மருத்துவக்குழுமத்தின் EBITDA, 12-14%. அர்விந்த் கண் மருத்துவக் குழுமத்தின் EBITDA 39%.

 

எவரையும் வாய்பிளக்க வைக்கும் இந்த செயல்திறன் எவ்வாறு சாத்தியமானது?  இந்தக் கட்டுரையைப் படிக்கும் எவரும், அர்விந்த், அசெம்ப்ளி லைன் தத்துவத்தை உபயோகித்தது, தனது முதலீடுகளில், செய்வதா / தயாரிப்பதா என்னும் முடிவுகளை எடுத்தது, அதனால் தான் வெற்றியடைந்தது எனத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.

 

அர்விந்த், தனது குறிக்கோள்களில் தெளிவாக இருந்தது. தேவைப்படும் மக்களுக்குக் கண் சிகிச்சைகள் கிடைக்க வேண்டும். பணம் செலுத்த முடியாதவர்களுக்கு இலவசமாகவும், கொஞ்சம் வசதியுள்ளவர்களிடம் கொஞ்சம் கட்டணம் பெற்றுக் கொண்டு எனவும் ஒரு கொள்கையை வகுத்தது.

 

அந்த நோக்கத்தை எப்படி நிறைவேற்றுவது எனச் செல்லும் வழியில், தேவையான வழிகளை உருவாக்கிக் கொண்டது. அது பெரும் தொழில் பொருளாதாரங்களில் கடைபிடிக்கப்படும் மேலாண் வழிகளோடு ஒத்துப் போகிறது. அவ்வளவுதான்

 

தனியார் மருத்துவக் குழுமம், மருத்துவமனையை உருவாக்கும் போது, நிறுவனத்துக்குத் தேவையான செவிலியர், மருத்துவர் மற்றும் ஊழியர்களை நியமிக்கின்றது. இந்த முதலீட்டுக்கான வட்டி, மாதா மாதம் இந்தக் கட்டமைப்பை நடத்தும் செலவு, இந்த முதலீட்டின் மீது அவர்கள் எதிர்பார்க்கும் லாபம் – இவை மூன்றும் சேர, அதுதான் அந்த மருத்துவமனை, மாதா மாதம் ஈட்ட வேண்டிய வருவாய்.  இந்த வருவாயை உத்தேசித்து, மருத்துவக் கட்டணங்கள், அறுவை சிகிச்சைக்கு இவ்வளவு, மருத்துவ சோதனைக்கு இவ்வளவு என உருவாக்கப்படுகின்றன. இவை, சந்தையில் இருக்கும் மருத்துவமனைகளின் தரம், போட்டி போன்றவற்றைப் பொறுத்தும் மாறுபடலாம். எடுத்துக் காட்டாக, கண் புரை சிகிச்சைக்கு, நகரின் மிக நவீனமான மருத்துவமனையின் கட்டணம் 25000 எனில், அதற்கு அடுத்த நிலை மருத்துவமனை 20000 என இருக்கும். இது ஒரு கட்டமைப்பை உருவாக்கி, அதன் மூலம் லாபம் ஈட்டும் ஒரு தொழில் மாதிரி. இன்றைய சுதந்திரச் சந்தைப் பொருளாதாரத்தில், இதுதான் மிகப் பிரபலமாக இருக்கிறது.

 

பொதுவாக, சுதந்திரச் சந்தைப் பொருளாதார ஆதரவாளர்கள், சுதந்திரச் சந்தை, போட்டியை அதிகரித்து, பொருள் மற்றும் சேவை விலைகளைக் குறைத்து, நுகர்வோரின் நலன் காக்கும் என்னும் வாதத்தை முன்வைக்கிறார்கள்.

 

மருத்துவத் துறையில், இந்தியாவில் தனியார்துறைச் செயல்பாடுகள் மிகவும் சுதந்திரமான தளத்தில் இயங்குகின்றன. எனில், ஏன் ஒரு கண்புரைச் சிகிச்சைக்கான கட்டணம் ரூபாய் 25000 ஆக உள்ளது?  அதே சிகிச்சைக்கு 60% இலவசமாகவும், 40% சிகிச்சைக்களுக்கு சந்தை விலையில் பத்தில் ஒரு பங்குக் கட்டணம் மட்டுமே வசூலித்து, உலகத் தரம் வாய்ந்த சிகிச்சையை அளிக்கும் நிறுவனத்தின் லாப சதவீதம், ஏன்  தனியார் துறையை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது? தனியார் துறையும், சுதந்திரச் சந்தையும் செயல் திறன் மிக்கவை என்னும் வாதம் எவ்வளவு உண்மை?

 

அர்விந்த், மூன்று லட்சம் அறுவை சிகிச்சைகளில், 1.2 லட்சம் சிகிச்சைகளுக்கு ரூபாய் 2000 வீதம் வசூலித்து, வருடம் 24 கோடி ரூபாய் ஈட்டுகிறது. இதைத் தனியார் மருத்துவமனைகள் செய்தால், அவை வருடம் 750 கோடி ஈட்டும்.  அர்விந்த் மருத்துவமனையினால், வருடம் 3 லட்சம் ஏழை மக்களின் பணம் 720 கோடி மிச்சமாகிறது.

 

அர்விந்த் மருத்துவமனையின் இலவசமாக சிகிச்சை பெறும் ஏழை, தன் குடும்பத்துக்கு 25000 ரூபாயை மிச்சம் செய்கிறார்.  அது அவர்களுக்கு உணவுக்கோ, உடைக்கோ அல்லது குழந்தைகளின் கல்விக்கோ பயன்படலாம். குறைந்த பட்சமாக, கண் சிகிச்சைக்கான அந்தப் பணத்தைக் கடனாக வாங்காமல், உயிர்வாழலாம் இதனால்,. அவர்கள் வாழ்க்கை மேம்படுகிறது. ஒரு ஏழைக்கு, 25000 ரூபாயின் மதிப்பு என்பது மத்தியதர வர்க்கத்தை விட அதிகமானது.

 

காண்டாக்ட் லென்ஸ்களை இந்தியாவிலேயே தயாரிப்பதன் மூலம், வருடம் 200 கோடி பணம் அந்நியச் செலாவணியாக இந்தியப் பொருளாதாரத்தில் இருந்து வெளியேறுவதை அர்விந்த் நிறுத்துகிறது. கூடுதலாக, ஏற்றுமதியின் மூலம், வருடம் பலகோடி அந்நியச் செலாவணியை, இந்தியப் பொருளாதாரத்துக்கு கொண்டு சேர்க்கிறது.

தனியார் துறை, மருத்துவ அறிவு, தொழில்நுட்பம் முதலியவற்றில் முதலீடு செய்து, அதில் லாபமீட்டுவதை முதற் குறிக்கோளாக வைக்கிறது. இதிலும் போட்டியினால், ஒரு நிறுவனம் நினைக்கும் அளவுக்கு கட்டணத்தை வைக்க முடியாமல், ஒரு நிலையை எட்டுகிறது. ஆனால், அந்தக் கட்டணம் கூட ஏழைகளுக்கும், வருமானம் குறைந்தவர்களுக்கும் கட்டுபடியாகததால், அவர்கள் தனியார் மருத்துவ மனைக்குப் பெரிதும் வருவதில்லை.

 

அர்விந்த் போன்ற காந்தியத் தொழில்நிறுவனங்கள், மக்களின் தேவையை முன்வைக்கின்றன. அதை இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ, மக்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி என யோசிக்கின்றன. புதிய வழிகளை, தொழில்நுட்பங்களை உருவாக்குகின்றன. இங்கே சேவை முதற் குறிக்கோளாக இருக்கிறது. மேலும், நோயாளிகள் தங்களிடம் வரும் வரை காத்திராமல், சேவைகளை, அவர்களுக்குக் கொண்டு சேர்க்கின்றன.

 

இதையே உலகின் மிகச் சிறந்த மேலாண் சிந்தனையாளர்களுள் ஒருவரான பீட்டர் ட்ரக்கரும் சொல்கிறார். ஒரு நிறுவனத்தின் நோக்கம், தன் நுகர்வோரின் தேவைகளை, மிகச் செயல்திறன் மிக்க (குறைந்த நேரம், செலவு போன்றவை) வழியில் நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும் என்பதே. லாபம் என்பது, அந்த நிறுவனம் சரியான வழியில் சென்று கொண்டு இருக்கிறது என்பதன் அடையாளம் மட்டுமே என்கிறார்.

 

காந்திய வழி, தனியார் வழி இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவையா எனில் இல்லை எனச் சொல்லலாம். ஒரு சமூகத்தில், மக்கள் பல்வேறு பொருளாதார நிலைகளில் வாழ்கிறார்கள். செல்வந்தர்கள், மத்திய, உயர் மத்திய வர்க்கத்தினர், தங்கள் தேவைகளை, தங்கள் வருமானத்திற்கேற்ற வகையில், சொகுசான பொருட்கள் / சேவைகள் மூலம் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். மற்றவர்கள் அரசு மற்றும் சேவை நிறுவனங்கள் மூலமாக, மிகக் குறைந்த செலவிலோ அல்லது இலவசமாகவோ நிறைவேற்றிக் கொள்ள முனைகிறார்கள். பல்வேறு குறைபாடுகள் – சரியான கட்டமைப்பு இல்லாமை, அறியாமை போன்ற காரணங்களால், பெரும்பான்மை ஏழை மக்கள் அதில் இருந்து விடுபட்டுப் போகிறார்கள்.

 

அமெரிக்கா இந்தியாவை விட மூன்று மடங்கு பரப்பளவு கொண்டது. நான்கில் ஒரு பங்குக்கும் குறைவான மக்கள் தொகை கொண்டது.  இந்தியாவின் சராசரி நிலப்பரப்பும், வளங்களும் குறைவானவை. ஒப்பீட்டில், வறுமைக் கோட்டிற்கு அருகில் வாழும் பெரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தியா. எனவே, நமக்கு, உயர், மத்தியதர மக்களுக்குச் சேவை செய்யும் தனியார் நிறுவனங்களை விட, பொருளாதார அடித்தட்டில் வாழும் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் நிறுவனங்களே மிக அதிக அளவில் தேவை.

 

காந்திஜி, ஒரு வழிகாட்டும் நெறியை நமக்கு அளித்துள்ளார். “உங்கள் சுயநலம் மிகும் போதோ / சந்தேகம் வரும் போதோ, நான் சொல்லும் ஒரு வழியைச் செயல்படுத்துங்கள். நீங்கள் இதுவரை கண்டதிலேயே மிக ஏழ்மையான மனிதரை உங்கள் கண் முன்னே கொண்டு வாருங்கள். நீங்கள் செய்யப்போகும் செயல், அந்த மனிதரின் நிலையை முன்னேற்ற உதவுமா?  பசியிலிருந்தும், ஏழ்மையிலிருந்தும் அவர்களை விடுவிக்க உதவுமா என யோசியுங்கள். உங்கள் சந்தேகம் மறைந்து போவதைக் காண்பீர்கள்”

 

இது, தனி மனிதர்களை விடவும், அரசுகளுக்கு அதிகம் பொருந்தும். குறிப்பாக இந்திய அரசுக்கு. அரசின் மக்கள்நலத் திட்டங்கள் பொருளாதார நிலையின் கோடியில் இருப்பவர்களுக்குப் பயன் திறன் மிக்க வகையில் சென்றடைய வேண்டியது மிக அவசியம். அந்தக் குறிக்கோளைச் சென்றடைய பல வழிகள் உள்ளன. அர்விந்த் கண் மருத்துவக் குழுமம் காட்டும் காந்தியத் தொழில்முறை வழி, அவற்றுள் மிக முக்கியமானது. செயல் திறன் மிக்கது. அது இந்தியப் பொருளாதாரத்தையே செயல்திறன் மிக்கதாக மாற்றும் வல்லமை கொண்டது. இன்று, மருத்துவச் சுற்றுலா என்னும் பெயரில், உலகின் முன்னேறிய நாடுகளில் இருந்து, நோயாளிகள் இந்தியா வந்து சிகிச்சை பெற்றுச் செல்வது அதன் ஒரு வெளிப்புற அடையாளம்.

 

”when we grow in spiritual consciousness, we identify with all that is in the world. So, there is no exploitation. It is ourselves we are helping; It is ourselves we are healing”. – Dr.G.Venkitaswamy

 

 

 

 

முந்தைய கட்டுரைஇ.பா.வின் ஔரங்கசீப்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-46