[ 1 ]
என் அப்பா மரணப்படுக்கையில் கிடந்தபோதுதான் நான் நெய்யூர் ஆஸ்பத்திரிக்கு முதன்முதலாகச் சென்றேன். எனக்கு அந்த ஆஸ்பத்திரி அப்போது ஒரு மாபெரும் ஆச்சரியம். வெள்ளைவெளேரென்று இரட்டைப்பனைகளைப்போல எழுந்த தூண்கள் கொண்ட உயரமான கட்டிடத்தை பிரமித்துப்போய் அண்ணாந்து பார்த்துக்கொண்டு நின்றேன். அதன் உயரமான ஓட்டுக்கூரையின் இரண்டு விளிம்புகளிலும் இரு சிலுவைகள் நின்றன. கட்டிடத்தைசுற்றி நின்ற பெரிய வேப்பமரங்களின் பொன்னிறமான சருகுகள் கூரை முழுக்க விழுந்து கிடந்தன. ஆனால் ஆஸ்பத்திரிமுற்றம் சுத்தமாக கூட்டப்பட்டிருந்தது. வாரியல் கோடுகள் அலையலையாக படிந்த மண்ணில் விதவிதமான காலடித்தடங்கள் கிடந்தன.
தலையில் வெண்ணிற குல்லா வைத்து நீளமான காலுறைகளும் கவுன்களும் அணிந்த நர்ஸம்மாக்கள் கைகளில் வெவ்வேறு பொருட்களுடன் விரைவாக நடந்து சென்றார்கள். வெள்ளைநிறமான கால்சட்டை அணிந்த உயரமான மனிதர் ஒருவர் இரண்டு காக்கி ஆடை பெண்கள் பின்னால் வேகமாக என்னைக்கடந்து சென்றார். அப்பகுதியே குளிர்ந்து கிடந்தது.நாசியை எரிக்கச்செய்யும் வினோதமான வாசனை அங்கே எழுந்தது. அதை நான் முழுக் கவனத்துடன் உள்ளே இழுத்து எனக்குள் நிரப்பிக்கொண்டேன். ஆஸ்பத்திரி வராண்டாவில் கருப்பு விளிம்புகொண்ட மிகப்பெரிய வெள்ளைநிற வட்டிகை ஒன்று கம்பிமுக்காலிமேல் அமர்ந்திருந்தது. உள்ளிருந்து வந்த ஒரு நர்சம்மா அதில் கைகழுவினாள். கைகழுவுவதற்குச் சாப்பிடுவதைவிட பெரிய தட்டு. அவள் சென்றதும் நான் அந்த தட்டை மெல்ல தொட்டுப் பார்த்தேன். அந்த வெண்மை நிறம் முட்டை ஓடு போலிருந்தது. அந்தவளைவில் இருந்த மென்மை என்னைப் பரவசப்படுத்தியது. அதில் கையை வைத்து மீண்டும் மீண்டும் வருடினேன்.
என்னைக்கடந்துசென்ற ஒருவர் என்னிடம் உரக்க ‘தொடப்பிடாது’ என்று அதட்டினார். நான் கையை எடுத்துக்கொண்டேன். ‘தொட்டா உன்னை நான் அடிப்பேன்’ என்று சொல்லி உற்றுப்பார்த்துவிட்டு திரும்பிச் சென்றார். வாயில் வெற்றிலையை அதக்கியபடி பேசுவது போலிருந்தது. விசித்திரமான மனிதராக இருந்தார். அவர் முகம் தீயால் வெந்தது போல இருந்தது. காக்கி நிறத்தில் போலீஸ்காரர்களைப்போல கால்சட்டை அணிந்து மேலே வெண்ணிறமான சட்டை போட்டிருந்தார். மீசை இல்லாத வாய் கத்தியால் கீறிய சிவந்த புண்போல இருந்தது. நெற்றியைச் சந்திக்கும் இடத்தில் வளைவே இல்லாமல் நேராக இருந்த மூக்கு இருபக்கமும் பிடித்து சப்பியதுபோல தோன்றியது. வரிவரியாக பிளவுகள் ஓடிய நெற்றி. அதை விட அவரது கண்கள்தான் என்னை ஆச்சரியப்படச்செய்தன. காட்டுபூனைபோன்ற கண்கள். பூனைமனிதன்!
அம்மா ஒரு அறையிலிருந்து வெளிப்பட்டு என்னிடம் ‘என்ன அங்க எடுக்கே? கைய வச்சுகிட்டு இருக்கமாட்டியா…வாலே’ என்று சொல்லி என்னை இழுத்துக்கொண்டு சென்றாள். நான் ஒவ்வொரு அறையாக பார்த்துக்கொண்டே சென்றேன். அறைகளுக்குள் கம்பியாலான கட்டில்களில் நீலநிறப்போர்வை போர்த்தியபடி ஆட்கள் படுத்திருந்தார்கள். சில அறைகளில் மேஜைகளில் சிறிய கண்ணாடி புட்டிகள் பரப்பப்பட்டிருந்தன. ஒரு சன்னலுக்கு வெளியே நிறையபேர் கையில் குப்பிகளுடன் காத்து நின்றார்கள். அவர்களுக்கு ஒரு வெள்ளையாடை மனிதர் பாட்டில்களில் மருந்துகளை ஊற்றி கொடுத்துக்கொண்டிருந்தார். ‘சத்தம் போடப்படாது…ஏய் அந்தால போ.. இஞ்ச , கெளவீ’ என்றெல்லாம் கத்திக்கொண்டிருந்தார்.
ஆஸ்பத்திரிக்குப்பின்னால் ஒரு நீளமான கட்டிடத்தில் அப்பா கிடந்தார். அந்த கட்டிடம் முழுக்க சிறிய கட்டில்கள்தான். ஒவ்வொன்றிலும் ஒருவர் படுத்திருந்தார்.வெள்ளை நிறம்பூசப்பட்ட பெரிய இரும்புக் கம்பிகள் கொண்ட ஜன்னல்களுக்கு அப்பால் செம்பருத்திசெடிகள் தெரிந்தன. மண்ணாலான தரையோடு வேயப்பட்டிந்தது. சுவர்களில் எல்லாம் தமிழில் ஏதோ எழுதி வைக்கப்பட்டிருந்தது. நேர் எதிரில் இருந்த படம் ஏசுவுடையது. மார்பில் முள்சுற்றி சிவப்பாக எரிந்த இதயத்துடன் ஆசீர்வாதம்போல கையை காட்டும் படம். நல்ல சுருள் முடி. பெண்களுக்குரிய கண்கள். அந்த படத்தை நான் முன்னர் பார்த்திருந்தேன்.
அப்பா தூங்கிக்கொண்டிருந்தார். அவரது இடுப்பைச்சுற்றி கனமாக துணியால் சுற்றிக்கட்டப்பட்டிருந்தது. கழுத்தைச்சுற்றியும் கட்டு இருந்தது. இரு கைகளும் ஆமை போல வீங்கி இருந்தன. முகம் கன்றி வீங்கி இமைகள் கனத்து அவர் வேறு யாரோ போல இருந்தார். இருபக்கமும் இருந்த படுக்கைகளில் படுத்திருந்த ஒரு கிழவரும் இளைஞனும் எங்களை ஆர்வத்துடன் பார்த்தார்கள். நான்காம் படுக்கையில் ஒருவர் ஆ ஆ ஆ என்று முனகிக்கொண்டே இருந்தார். கொஞ்ச நேரம் முனகலைக் கேட்டால் அவர் பாடுவது போல தோன்றிவிடும்.
கிழவர் அம்மாவிடம் ‘என்னட்டீ, உனக்க கெட்டினவனா?’ என்றார். அம்மா ’ஓ’ என்றாள். ‘அவனுக்க காரியம் இனி செல்லாண்டா, இந்நேற்று லாக்கிட்டரு சொன்னாரு. அவன் இன்னி பிளைச்சுக்கிட மாட்டான் கேட்டியா?’ அம்மா ‘அய்யோ!’ என்றாள். ‘அந்நா பாத்தியா, அவனுக்க மூத்திரமாக்கும் போறது. பச்ச ரெத்தம். கட்டிகட்டியாட்டு ரெத்தமாக்கும் நவதுவாரங்களிலேருந்தும் போறது… நீ இனி அவன கணக்கு வைக்காண்டாம் கேட்டியா?’ என்றார். அந்த இளைஞன் எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருவரையும் சும்மா மாறி மாறி பார்த்தான்.
அம்மா ‘அய்யோ எனக்க சாத்தாவே…எனக்க தேவரே’ என்று மார்பிலறைந்து அழ ஆரம்பித்தாள். ஒரு நர்ஸம்மா எட்டிப்ப்பார்த்து ‘ ஏ அங்க ஆரு சத்தம் போடுயது? போ வெளிய போ’ என்றாள். ‘தாயே எனக்க பிள்ளியளுக்கு ஆருமில்லே அம்மா’ என்று அம்மா மார்பில் அறைந்து மேலும் அழுதாள். ‘வெளியெ போறியா இல்லியா?’ என்றாள் நர்ஸ். ‘இந்த பஞ்சபாவி இந்த மாதிரி சொல்லுகானே…எனக்க ராஜாவுக்கு அந்தி அடுத்தாச்சுன்னு சொல்லுகானே பேதீல போற நாயீ’ என்று அம்மா அழுதாள். அந்த நர்ஸம்மா கறுப்பாக திடமாக இருந்தாள் . நேராக வந்து அம்மாவை புஜத்தில் பற்றி இழுத்துக்கொண்டு வெளியே விட்டு ‘அங்க நில்லு…உள்ள வரப்பிடாது. உள்ள வேறயும் நோயாளிகள் உண்டு’ என்றாள்.
அம்மாவும் நானும் வராந்தாவில் நின்றோம். பொன்னிறமாக உருண்டுகிடந்த வேப்பம்பழங்களை பொறுக்கி நான் தூணோரமாக வைத்தேன். அம்மா தூணில் சாய்ந்து அமர்ந்துகொண்டாள். ஒப்பாரி பாடுவது போல மெல்லியகுரலில் நீளமாக ஏதேதோ சொல்லி அழுதாள். திடீர் திடீரென்று மார்பில் ஓங்கி அறைந்துகொண்டு கதறினாள். அப்போது நர்ஸம்மா ‘தே…அங்க என்ன சத்தம்?’ என்று அதட்டல் போட்டபோது மீண்டும் குரலை தாழ்த்தினாள். நான் அம்மா மேல் சாய்ந்துகொண்டேன். அம்மாவின் மார்பில் போட்டிருந்த அழுக்கு துணிநனைந்து ஈரமாக இருந்தது. அந்த துணிக்கு அப்பால் அம்மாவின் மார்பு துடிப்பதை உடலால் கேட்டேன்.
திடீரென்று அம்மா என்னை உசுப்பி ‘லே உறங்குதியா? வேகம்போ….இந்தா இந்த கால்சக்கறத்த கொண்டு போயி சந்தமுக்கு சாத்தாவுக்கு போட்டுட்டு வா…’ என்றாள்.நான் அவள் தன் வேட்டிமடியில் இருந்து எடுத்த செம்புதுட்டை வாங்கிக்கொண்டேன். ‘லே, என்னன்னு சொல்லி போடுவே?’ நான் பேசாமல் நின்றேன் ‘அப்பனுக்கு செரியாகணும் சாத்தாவே. அனாதைகளாக்கும் சாத்தாவே. கெதியில்லாத்தவங்களாக்கும் சாத்தாவே. எட்டுகுட்டிகளோட தெருவிலே நிக்கேன் சாத்தாவேண்ணு சொல்லி போடணும்…என்னலே?’ சொல்லும்போதே மீண்டும் அழ ஆரம்பித்தாள். நான் தலையசைத்தேன்.
ஆஸ்பத்திரி முற்றம் வழியாக ஓடி தெருவுக்கு வந்தபோது என் மனம் முழுக்க அந்த ஒற்றைச்சக்கரம்தான் இருந்தது. அதைக்கொண்டு எட்டு தோசை தின்று ஒரு கருப்பட்டிக்காப்பி குடிக்க முடியும். பொரிகடலை வாங்கினால் நான்குபேர் வயிறு முழுக்க தின்னமுடியும். இல்லை உண்ணியப்பம் வாங்குவதா? பத்து உண்ணியப்பம். என் வாய் நிறைந்து வெற்று மார்பில் வழிந்து விட்டது. இடுப்பில் கட்டியிருந்த கிழிந்த துண்டை அவிழ்த்து மேலேற்றி மார்பை துடைத்துக்கொண்டு மீண்டும் இறுக்கிக் கட்டிக்கொண்டேன்.
சந்தையடி கண்டன் சாஸ்தா கோயில் வரை வந்துவிட்டேன். என்னையறியாமலே வந்ததுதான். மர அழியிடப்பட்ட கோயிலுக்குள் களபமும் சந்தனமும் பூசிய சாஸ்தாவின் கருங்கல் சிலை தெரிந்தது. உண்டியல் இரும்பால் செய்யப்பட்டு முகப்பிலேயே இருந்தது. போடுவதா என்று எண்ணினேன். போட்டால் அதன் பின்னர் இந்த பணம் என்னுடையது இல்லை. ஆனால் அந்தக் கணம் அப்பா விழுந்து கிடந்த காட்சி என் கண்ணில் வந்தது.
அப்பா அதிகாலையில் எழுந்து பனையேறப்போவார். வீட்டில் நாங்கள் எட்டு குழந்தைகள். எனக்கு மூத்தவர்களாக மூன்று அக்காக்கள். கீழே இரண்டு தம்பிகள் இரண்டு தங்கைகள். தங்கைகள் காட்டுக்குச் சென்று சருகும் விறகும் அள்ளிவருவார்கள். அக்காக்களும் அம்மாக்களும் பதனீர் காய்ச்சுவார்கள். வெள்ளிதோறும் நானும் அம்மாவுமாக கருப்பட்டிகளை பனைச்சிப்பங்களாக கட்டி தலைச்சுமையாக எட்டுமைல் நடந்து கருங்கல் சந்தைக்குக் கொண்டுசெல்வோம். அப்பா கொரட்டிமேட்டிலும் ஆனைக்கயத்திலும் எல்லாம் இறக்கி வைக்கும் அக்கானியை சுமந்துகொண்டு வந்து வீடுசேர்ப்பது எனக்கும் சின்ன அக்காவுக்கும் தங்கைக்குமான வேலை.
மூன்றுநாட்களுக்கு முன்னால் அதிகாலையில் நாலாம்நடைக்கு நான் சுருட்டுபொற்றை மேல் ஏறி பத்துகூட்டம் பனையருகே சென்றபோது தரையில் ஏதோ நெளிவதை பார்த்தேன். திரும்பி வந்தவழியே ஓடிவிடவேண்டும் என்றுதான் முதலில் தோன்றியது. கொஞ்சதூரம் ஓடியபிறகுதான் அது அப்பா என்றே எனக்கு தெரிந்தது. திரும்பி ஓடிச்சென்றேன். இப்போது இன்னும் நல்ல வெளிச்சம் வந்திருதது. அப்பாதான் தரையில் இஞ்சிப்புல் மேல் விழுந்து கிடந்தார். அவரது கைகளும் கால்களுமெல்லாம் விசித்திரமாக வளைந்து ஒடிந்திருந்தன. தீப்பிடித்து எரியும் சுள்ளி போல மெல்ல நெளிந்துகொண்டிருந்தார். ரத்தத்தின் உப்புநாற்றம் எழுந்தது
நான் திரும்பி ஓடி வீட்டுக்கு போய் அம்மாவிடம் சொன்னேன். அக்கானியடுப்பை ஏற்றிக்கொண்டிருந்தவள் அப்படியே என்னை பார்த்தாள். கண்கள் விழித்திருக்க தலை ஓணான் போல ஆடியது. திடீரென்று வீரிட்டு அலறி, மார்பில் அறைந்து கதறியபடி மயானக்கொள்ளைக்கு போகும் பூசாரி போல இடைவழியில் இறங்கி ஓடினாள். நான் பின்னால் ஓடினேன். எனக்கு பின்னால் தங்கைகள் ஓடிவந்தார்கள். அவளுடைய ஓலத்தைக்கேட்டு ஆங்காங்கே பனைகளில் இருந்தவர்கள் இறங்கி ஓடிவந்தார்கள்
அருகே இருந்த ஒரு வீட்டின் கதவை கழற்றி அதில் அப்பாவை உருட்டி ஏற்றி நான்குபேர் நேராக நெய்யூர் ஆஸ்பத்திரிக்கு சென்றார்கள். இடைவழிகள் வரப்புகள் வழியாக அவர்கள் செல்ல பின்னால் அவிழ்ந்த கூந்தலுடன் கதறியபடி அம்மா போனாள். ‘லே மக்கா வீட்டிலே இருலே…வீட்டிலே நீதான்லே ஆண்தொணை..’ என்று அவள் சொன்னதனால் நான் வீட்டில் இருந்தேன். அக்காக்கள் அழுதுகொண்டிருந்தார்கள். அக்கானி பானையில் புளித்து விளிம்பு கவிந்து நுரை வழிந்துகொண்டிருந்தது. நான் கொஞ்ச நேரம் ஆட்டுக்கூட்டில் இருந்தேன். பசி தாளாமல் நானும் தங்கைகளும் அந்த கள்ளையே அள்ளி குடித்தோம். நால்வருமே படுத்து தூங்கிவிட்டோம்.
அப்பாவை பனை இசக்கி அடித்து போட்டுவிட்டது என்று கறுத்தான் மாமா சொன்னார். அவ்வப்போது பனையேறிகளை அந்த இசக்கி அடித்து தூக்கி வீசும். பனையேறிகள் பிடித்து ஏறும் பனைமட்டையை இளக்கி வைத்திருக்கும். உச்சிமட்டையில் மிதிக்கும்போது வழுக்கி விடும்.தேளாக வந்து அக்கானிச்சட்டிக்குள் பதுங்கி இருந்து கொட்டும். மழை முடிந்து முதல் ஊற்றுமாதங்களில் எப்படியும் நாலைந்துபேர் விழுவார்கள். விழுந்தவர்களில் எனக்கு தெரிந்து குணமணி மாமன் மட்டும்தான் உயிருடன் இருக்கிறார். அவரும் எந்நேரமும் திண்ணையில் தான் படுத்திருப்பார். எழுந்து ஒன்றுக்கடிக்கக் கூட முடியாது. அவர் மனைவி கொச்சம்மை சந்தையில் மூட்டை தூக்க போகிறாள். பிள்ளைகள் எல்லாரும் வேலைக்கு போவார்கள். குணமணி மாமன் பாயில் ஒன்றுக்கிருப்பது திண்ணையில் இருந்து முற்றத்துக்கு வழிந்திருக்கும். தன்னதனிமையில் கெட்டவார்த்தைகளையே பாட்டுகளாக பாடிக்கொண்டிருப்பார்.
கால்சக்கரத்தை போடாவிட்டால் பனை இசக்கி என்னை அடித்துவிடும் என்று நினைத்தேன். எங்கோ ஒளிந்துகொண்டு அவள் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறாள். நான் சக்கரத்தை உண்டியலில் போட்டுவிட்டு சம்புடத்தில் இருந்த செந்தூரத்தை ஒரு பூவரச இலையில் அள்ளிக்கொண்டு திரும்பி ஓடினேன். அப்பாவின் உயிரைக் காப்பாற்றும் ஒன்றை நானே சொந்தமாகச் செய்வது எனக்கு மனநிறைவை அளித்தது.
அம்மா அந்த செந்தூரத்தை எடுத்து ‘தேவரே’ என்று நெற்றியில் போட்டுக்கொண்டாள். எனக்கும் போட்டுவிட்டாள். பிறகு மெல்ல அறைக்குள் எட்டிப்பார்த்தாள். அந்த நர்சம்மா இல்லை. மெல்ல உள்ளே சென்று சற்றுமுற்றும் பார்த்துவிட்டு அப்பாவின் நெற்றியில் அதை போட்டுவிட்டாள். ‘சாமி பிரசாதமா போடுகே? இங்கிண அதெல்லாம் போடப்பிடாது பாத்துக்க’ என்றார் கிழவர். ’சும்மா கெட சவமே. சாவமாட்டாமெ’ என்று சொல்லிக்கொண்டு அம்மா திரும்பி வந்தாள். கிழவர் ‘அவ்வோ ஒரு சட்டம் வச்சிருக்காவள்லா?’ என்றார். அம்மா ‘சாவுலே நாயே’ என்று அவரைப்பார்த்து சொல்லிக்கொண்டு வெளியே வந்தாள். அந்த இளைஞன் கண்கள் பளபளக்க சும்மா பார்த்துக்கொண்டிருந்தான்.
எனக்கு பசிக்க ஆரம்பித்தது. ஆனால் எங்கள் வீட்டில் எப்போதுமே பசியைப்பற்றி எவரும் எதுவும் சொல்லும் வழக்கம் இல்லை. காலையில் பெரும்பாலும் பனம்பழம் சுட்டு தின்பதுதான். நான் அக்கானி கொண்டு வரும் வழியிலேயே கொஞ்சம் குடிப்பேன். மதியம் பெரும்பாலும் மரச்சீனி மயக்கியதும் கூடவே குடிப்பதற்கு தண்ணீர் நிறைந்த கஞ்சியும் இருக்கும். இன்னும் கொஞ்சம் கஞ்சி என்று கேட்டாலே அம்மா அகப்பையால் அடிப்பாள். நான் வராந்தாவில் கொஞ்சதூரம் நடந்து பார்த்தேன். ஒரு பெரிய மண்பானையில் தண்ணீர் இருந்தது. அதை குடித்துவிட்டு திரும்பி வந்து அமர்ந்தேன்.
சாயங்காலம் ஆவதை அங்கே புரிந்துகொள்ள முடியவில்லை. ஆஸ்பத்திரி வராந்தாவில் எப்போதுமே நிழலும் இருட்டுமாகத்தான் இருந்தது. ஆனால் நிழல்கள் விலகி மறுபக்கம் பெரிய கட்டிடத்தின் அருகே சென்று கிடந்தன. பெரியகட்டிடத்தில் இருந்து நான்குபேர் நடந்து வந்தார்கள். அவர்களில் முன்னால் வந்தவர் நான் ஏற்கனவே பார்த்த பூனைக்கண்ணர். ஓட்டு கம்பெனியில் வேலைபார்க்கிறவர்களைப்போல செம்மண் நிறத்தில் இருந்தார். கைகளில் வெள்ளை நிறமான மயிர் முளைத்திருந்தது. செம்மண்ணில் புல் தளிர்விட்டதுபோல. அதே காக்கி நிக்கரும் வெள்ளை சட்டையும் போட்டிருந்தார்.
அம்மா அவரைப்பார்த்ததும் எழுந்து கையைகூப்பியபடி ‘சாயிப்பே, பாவங்களுக்க தெய்வமே…சாயிப்பே…கைவிடப்பிடாது சாயிப்பே’ என்று அலறினாள். அவர் அவளுடைய அழுகையை பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. நர்ஸ் மட்டும் ‘த சத்தம் போட்டா சாயிப்பு தோக்காலே வெடிவச்சுபோட்டுவாரு…சும்ம கெட’ என்றாள். அம்மா ‘சாயிப்பே சாயிப்பே…பாவங்களுக்கு வேற ஒரு தெய்வமும் இல்ல சாயிப்பே’ என்று அழுதாள். அவர் எங்களை தாண்டிச் செல்லும்போது அவரது கண்கள் என்னை வந்து தொட்டுச்சென்றன. அவர்கள் ஓர் அறைக்குள் சென்று மறைந்தார்கள்
அந்த அறையில் இருந்து ஒரு நர்ஸம்மா வந்து ‘லே இந்நாலே…சாயிப்பு குடுத்தாரு’ என்று ஒரு ரொட்டியை எனக்கு கொடுத்துச் சென்றாள். நான் நான்குபக்கமும் பார்த்துவிட்டு அதை வாங்கிக்கொண்டு ஓரமாகச் சென்று சுவர் நோக்கி அமர்ந்து வேகமாக தின்ன ஆரம்பித்தேன். பாதி ரொட்டி முடிந்தபிறகுதான் அதன் ருசியே எனக்கு தெரிய ஆரம்பித்தது. தரையில் உதிர்ந்து கிடந்த துணுக்குகளையும் பொறுக்கி வாயில் போட்டேன். அவற்றில் ஒன்றிரண்டு துணுக்குகள் எறும்புகள் என வாயில் போட்ட பிறகே தெரிந்தது.
மீண்டும் அம்மா பக்கத்தில் வந்து அமர்ந்தேன். அறைகளுக்குள் சுரைக்காய் வடிவில் கண்ணாடிபோட்ட சிமினி விளக்குகளை ஏற்றி வைத்தார்கள். சிவந்த வேட்டி போல வாசல்கள் வழியாக விளக்கொளிகள் வராந்தாவில் விழுந்து கிடந்தன. அம்மா தனக்குள் மெல்ல அரற்றியபடி தூண் சாய்ந்து அமர்ந்திருந்தாள். வாசல் வெளிச்சங்களில் சட் சட்டென்று ஒளிவிட்டு இருண்டு மீண்டும் ஒளிவிட்டபடி ஒரு நர்ஸம்மா வந்து ஏதோ தேடுவது தெரிந்தது. அவள் எங்களைத்தான் தேடுகிறாள் என்று எனக்கு கொஞ்ச நேரம் கழிந்துதான் புரிந்தது. ’அம்மா..’ என்று அவளை உசுப்பினேன். அவள் எழுந்த அசைவை நர்ஸம்மா கண்டு ‘ஏட்டீ, வா..உன்னைய சாயிப்பு தேடுறார்’ என்றாள்
சாகிப்பின் அறைக்குள் நானும் அம்மாவும் உள்ளே நுழைந்தோம். அம்மா கைகூப்பி நடுங்கியபடி கதவைச்சாய்ந்து நின்றாள். சாகிப் என்னை ஒருகணம் பார்த்து ‘வாயிலே கை வைக்கப்படாது. நான் அடிப்பேன்’ என்றார். நான் எடுத்துக்கொண்டென். சாகிப் அறைக்குள் கைகழுவும் பாத்திரம் இருந்தது. சுவரில் ஏசு படம். இந்தபக்கம் மூன்று பெரிய குவியல்களாக உப்பு கொட்டி வைத்தது போன்ற ஒரு படம். மேஜை பெரிதாக இருந்தது. அதன்மேல் நிறைய பெரிய புத்தகங்கள். டப்பாக்கள். ஒரு கடிகாரம் டிக் டிக் டிக் என்று ஓடியது.
சாகிப் அம்மாவிடம் ‘உனக்கு எத்தனை குழந்தைகள்?’ என்றார். அவர் ஒவ்வொரு சொல்லாக நிறுத்தி நிறுத்தி பேசினார். அம்மா ‘எட்டு சாயிப்பே. இவன் நாலாமத்தவன். இவனுக்கு கீள இன்னும் நாலு குட்டிக கெடக்கு’ என்றார் ‘இவன் என்ன படிக்கிறான்?’ ‘எங்க படிக்கதுக்கு? இண்ணைக்கு வரை இவனுக்கு ஒரு நேரம் வயறு நெறைய கஞ்சி குடுத்தது இல்ல. பின்ன என்ன படிப்பு? அப்பன் கூட சேந்து அக்கானி சொமக்கான்’ சாகிப் ‘மத்த பிள்ளைகள் என்னா செய்றாங்க?’ என்றார். ‘எல்லாம் இந்த கருப்பட்டிவேலைதான் சாயிப்பே…பனை கேறுத மனுசன் இந்நா விளுந்து கெடக்கான்…இனி நான் என்னண்ணு ஜீவிப்பேன்…சாமிகளுக்கு கருணை இல்லாம போச்சே..’
சாகிப் என்னையும் அம்மாவையும் மாறி மாறி பார்த்தார். பின்பு ‘உனக்க கிட்டே ஒரு காரியம் சொல்லணும். உன் கெட்டினவன் இனிமே வாழ மாட்டான். அவனுக்கு லிவர் கிழிஞ்சிருக்கு. ரத்தம் கட்டியாயிட்டுது. இன்னைக்கு இல்லாட்டி நாளைக்கு செத்துப்போயிடுவான்’ என்றார். அம்மா பிரமித்தவள் போல அப்படியே பார்த்துக்கொண்டு நின்றாள். ‘என்னாலே ஒண்ணும் பண்ண முடியாது’ என்றார் சாகிப் மீண்டும்.
அம்மா உரக்க மூச்சுவிட்டுக்கொண்டு அப்படியே குந்தி அமர்ந்து விட்டாள். அவள் முகத்தை பார்த்தால் அவளும் அப்போதே செத்துவிடுவாள் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. நான் அவளோடு ஒட்டிக்கொண்டேன். அம்மா மெல்ல கண்களை துடைத்துக்கொண்டு எழுந்தாள். ‘செரி, அதாக்கும் விதிண்ணா அப்பிடி நடக்கட்டு. செத்தா இங்க வல்ல எடத்திலயும் குழிச்சு போடுங்க சாயிப்பே. வல்ல தெங்குக்கோ வாழைக்கோ உரமா போவட்டும். சீவிச்சநாளு முழுக்க மனசறிஞ்சு ஒரு வாயி கஞ்சி குடிச்சாத மனுஷனாக்குமே…கிட்டினதெல்லாம் பிள்ளைகளுக்கு பிள்ளைகளுக்குண்ணு கொண்டு வந்து குடுத்தவனாக்குமே… இனி அவனுக்க ரெத்தமும் சதையும் எல்லாம் வேரு உறிஞ்சி தின்னட்டு….’ அவள் தொண்டை அடைத்தது ‘அவனை தின்னு வளாந்துவாற மரமெல்லாம் நல்லா காய்க்கும் சாயிப்பே’ உதடுகளை கடித்துக்கொண்டு தன்னை அடக்கியபடி கையெடுத்து கும்பிட்டு அம்மா கிளம்பினாள்.
சுமையெடுப்வர்களின் ஓட்டம் போல அம்மா முற்றத்தில் ஓட நான் பின்னால் சென்றேன். பின்பக்கம் யாரோ ஓடி வருவது தெரிந்தது. நிக்கர் அணிந்த ஒரு ஆஸ்பத்திரி வேலையாள். ‘ஏட்டி சாயிப்பு விளிக்காரு…’ என்றான். அம்மா நின்று ‘நான் அடுத்த சென்மத்திலே வந்து சாபிப்புக்க காலிலே விளுந்து ஆயிரம் கும்பிடு போடுகேன்னு சொல்லும்வே’ என்றபின் மேலும் நடந்தாள். அவன் உரக்க ‘ஏட்டி சாயிப்பு விளிச்சா போவணும்…அதாக்கும் இங்க சட்டம், கேட்டியா?” என்றான்.
இம்முறை அம்மா அழாமல் திடமாக உள்ளே சென்று நின்றாள். சாகிப் என்னை கொஞ்ச நேரம் பார்த்தார். பின்பு ‘நீங்க பிணத்தை விட்டுட்டு போனா அதை கிறிஸ்தவமா மாத்தித்தான் அடக்கம் பண்ணுவோம்’ என்றார். ‘பண்ணுங்க சாயிப்பே. கும்பி காய்ஞ்சவனுக்கு எல்லா சாமியும் கல்லாக்கும்’ சாகிப் மீண்டும் என்னை பார்த்தார். ‘அப்ப நீங்க எல்லாரும் மதம் மாறலாமே? மதம் மாறினா உங்க வாழ்க்கைக்கு ஒரு வழி தெரியும். இந்த பையனுக்கு லண்டன்மிஷனிலே சொல்லுறேன். இங்கே வேலை போட்டு குடுக்க சொல்லுறேன்’
அம்மாவுக்கு அவர் சொன்னது புரியவில்லை. அவர் நிறுத்தி நிறுத்தி குழறிய குரலில் பேசினார். நர்ஸம்மா உரக்க ‘இந்நா பாரு, சாயிப்பு என்ன சொல்லுகாருண்ணா நீ மதம் மாறி வேதத்துக்கு வந்தேண்ணா சாயிப்பு இந்த பயல இங்க சேத்து படிக்க வைப்பாரு. உனக்கும் வல்ல வளியும் செய்வாரு. நீயும் உனக்க பிள்ளியளும் கஞ்சி குடிச்சு கெடக்கிலாம்…என்ன சொல்லுகே?’
அம்மா அந்த பிரச்சினையை அப்போதுதான் உள்வாங்கினவள் போல அனிச்சையாக அறையை விட்டு வெளியே போகப்போனாள். பின்னர் கதவை பிடித்துக்கொண்டாள். கதவு ர்ரீ என்று ஒலி எழுப்பியது. ‘என்ன சொல்றே?’ என்றார் சாகிப். அம்மா ஏதோ சொல்ல வந்தாள். என்னை பார்த்தாள். பிறகு ‘சாயிப்பே, எனக்க அப்பன் இண்டேரி சங்கரன் நாடாராக்கும். எட்டு தலமொறையா எங்க கரையிலே பேரு கேட்ட பூசாரிக்குடும்பம். ஏளுஅம்மையும் பத்ரகாளியும் இருந்து அனுக்ரகிக்குத பிரயிடமும் குடிலும் இப்பமும் எனக்கு இண்டேரியிலே இருக்கு. அப்பனையும் அம்மையையும் காட்டிலும் சாமிகள கண்டு வளந்தவளாக்கும். வேண்டாம் சாயிப்பே. சாயிப்பு என் மேலே எரக்கப்பட்டு கேட்டதுக்குண்டான கடனை நான் அடுத்த சென்மத்திலே அடைக்குதேன். நானும் என் பிள்ளையளும் கஞ்சியில்லாம சாகணுமிண்ணு அந்த தெய்வங்க நினைச்சா அப்பிடி நடக்கட்டு’
‘நீ போறதை கண்டு நான் பயந்தேன். நீ சாவுகதுக்கு போனே’ என்றார் சாகிப் . அதைக்கேட்டு அம்மா அனிச்சையாகத் திறந்த வாயில் கையை வைத்துக்கொண்டு பேசாமல் நின்றாள். ‘செரி நீ பூசாரிக்குடும்பம். இந்த குழந்தை என்ன தப்பு செய்தான்? அவனெ ஏன் கொல்லுறே?’ அம்மா என்னை பார்த்துவிட்டு ‘செரிதான்.’ என்றாள் ‘லே கொச்சப்பி, உனக்கு பிடிச்சிருந்தா நீ வேதத்துக்கு போ…சாயிப்பு உனக்கு சட்டையும் ரொட்டியும் தருவாரு’ என்றாள். நான் சாகிப்பை பார்த்துவிட்டு அம்மாவின் வேட்டியை பிடித்துக்கொண்டு ‘வேண்டாம்’ என்றேன். ‘லே’ என்றாள் அம்மா. ‘வேண்டாம் எக்கு வேண்டாம்’ என்று நான் அம்மாவை உலுக்கினேன். எனக்கு அழுகை வந்தது. கண்ணிருடன் முகத்தை அம்மாவின் மடியில் புதைத்துக்கொண்டேன்
சாகிப் ‘செரி…நல்லா யோசிச்சு பாரு…உனக்கு ஒரு வழி இங்க திறந்திருக்கு’ என்றார். ‘இப்ப உனக்கு அஞ்சோ பத்தோ ரூபா நான் நினைச்சா குடுத்திருவேன். ஆனா நான் இல்லேன்னாலும் உனக்கு எப்பமும் சகாயம் வேணுமானா வேதத்திலே சேந்தாத்தான் முடியும்’ என்றார். அம்மா ‘வாறேன் சாயிப்பே’என்றபின் திரும்பி வெளியே ஓடினாள். நானும் பின்னால் சென்றேன்
இருட்டுக்குள் இரு பேய்கள் போல நடந்தோம். வானம் முழுக்க நட்சத்திரங்கள். வயல்களில் இருந்து சீவிடுகளின் ஒலியும் தவளைக்கூக்குரல்களும் கேட்டுக்கொண்டிருந்தன. வரப்பு ஓரங்களில் இருந்து மின்மினிகள் எழுந்து, இளநீலம் இளமஞ்சள் என நிறங்கள் மாறி மாறி தெரிய, மின்னி மின்னி சுழன்று பறந்தன. வரப்புகளில் சேற்றில் மிதித்து, நண்டுக்குழிகளில் தடுமாறி, இடைவழிகளில் கூழாங்கற்களில் காலிடறி வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். வீடு இருட்டுக்குள் கிடந்தது. ஆனால் எல்லாரும் தூங்காமல் விழித்திருந்தார்கள்.
அம்மா சென்றதுமே படுத்துக்கொண்டாள். நான் அக்காவிடம் ‘நீ என்ன சாப்பிட்டே?’ என்றேன். ‘காலம்ப்ற பனம்பழம் நாலஞ்சு கிட்டிச்சு. சுட்டு பிள்ளையளுக்கு குடுத்தேன்…’ நான் ரொட்டி தின்றதை நினைத்துக்கொண்டேன். என் பாயை இழுத்து போட்டு படுத்தேன். மூன்றுநாட்களாக வெறும் பனம்பழம் மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். வீடு முழுக்க அழுகிய பனம்பழ வாசனை அடிப்பது போல் இருந்தது. பனம்பழ வாசனை அதிகமாகி கொண்டு வருவது போல. நான் எழுந்து ‘பனம்பழம் அழுகியிருக்கு’ என்றேன். ‘சின்னவனுக்கு வயத்தால போகுது’ என்று அக்கா சொன்னாள்.
திரும்ப படுத்துக்கொண்டேன். வீட்டுக்குள் வந்த ஒரு மின்மினி இருளுக்குள் சுற்றிச்சுற்றி பறந்தது. அது வீட்டை எரித்துவிடும் என்றும் பனையோலைக் கூரையும் பனையோலைச்சுவர்களும் பற்றி எரிந்து நாங்களெல்லாம் சாம்பலாகிவிடுவோம் என்றும் தோன்றியது. நான் கொஞ்சம் தூக்க மயக்கத்தில் ஆழ்ந்தபோது கடைக்குட்டி தங்கம்மை எழுந்து என்னவோசொன்னாள். நான் எழுந்து பார்த்தேன். அவள் தூக்கத்தில்தான் இருந்தாள். ஆனால் சிணுங்கிக்கொண்டு மழுங்கலாக ஏதொ சொன்னபடி கையால் எதையோ செய்வது தெரிந்தது.
கண்கள் சிலகணங்களில் தெளிந்தபோது அவள் என்ன செய்கிறாள் என்று கண்டேன். அவள் எதையோ அள்ளி அள்ளி தின்றுகொண்டிருந்தாள். சப்புக்கொட்டியபடி மென்றாள். கையை நக்கினாள். திடீரென்று விழித்துக்கொண்டவள் போல என்னை பார்த்து வாயை மட்டும் அசைத்தாள். ‘அண்ணா’ என்றாள். ‘உறங்குடீ’ என்றேன் அதட்டலாக. புன்னகையுடன் ‘கஞ்சி இருக்கு’என்றாள். அம்மா ’ஏட்டி உறங்குடீ சனியனே’ என்றாள். தங்கம்மை விழித்துக்கொள்ளாமலேயே திரும்பி படுத்துவிட்டாள்.
நான் ‘அம்மா’ என்றேன். ‘ஏம்ல?’ என்றாள். ‘நான் நாளைக்கு நெய்யூருக்கு போறேன்’ என்றேன். அம்மா ‘ஏம்ல?’ என்றாள். ‘நான் வேதக்காரனா ஆகப்போறேன்’அம்மா ஏதாவது சொல்லுவாள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவள் பெருமூச்சு மட்டும்தான் விட்டாள்
மறுநாள் நான் தனியாகக் கிளம்பிச் சென்றேன். நெய்யூர் ஆஸ்பத்திரிக்கு போனபோது அது எனக்கு நன்றாக பழகிய இடமாக தெரிந்தது. நான் நேராக அப்பா இருந்த கட்டிடத்துக்குச் சென்றேன். அங்கே அப்பாவின் கட்டிலில் வேறு ஒரு கிழவர் கிடந்தார். வெளியே வந்தேன். அந்த நர்ஸம்மா என்னிடம் ‘ஏலே உனக்க அம்மை எங்கலே?’ என்றாள். ‘அம்மை வரேல்ல’ என்றேன் ‘எனக்க அப்பன் எங்க?’ ‘அவரு ராத்திரி செத்தாச்சு. நீ அந்தால கொல்லமாவுத்தோட்டம் வளியாட்டு போனா சர்ச்சு தெரியும். அதுக்கு பொறத்தாலே கல்லறத்தோட்டம் இருக்கு. உனக்க அப்பன அங்க கொண்டு போயிருக்காவ’
நான் முந்திரிமரங்கள் நடுவே புகுந்து ஓடினேன். இருமுறை விழுந்தபோது என் இடுப்புத்துண்டு அவிழ்ந்தது. அதை சுருட்டி இடுப்போடு பிடித்துக்கொண்டு சர்ச் மேட்டை அடைந்து சர்ச்சை சுற்றிக்கொண்டு பின்பக்கம் சென்றேன். கல்லறை மேட்டில் நாலைந்து பேர் நின்றார்கள். ஒருவர் அங்கி போட்ட போதகர். இருவர் வேலைக்காரகள். நான் அருகே சென்று நின்றேன்.
ஆழமான சிவப்பு குழி. அது ஒரு பெரிய வாய் போல திறந்திருந்தது. அப்பாவின் உடல் கருப்பட்டிச் சிப்பம் போல ஒரு பனம்பாயில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து கசிந்த ரத்தம் கருப்பட்டிக்கசிவு போல பாயின் விளிம்புகளில் கருமையாக உறைந்திருக்க ஈக்கள் மொய்த்துக்கொண்டு பறந்தன. குழி அருகே நின்ற ஆள் ‘வச்சிருவோமே, என்னத்துக்கு நிண்ணு பாக்குதது?’ என்றார்.போதகர் ’சாயிப்பு வரட்டும். அனாதைப்பிரேதம்னா அவரு எப்பிடியும் வருவாரு’ என்றார். என்னை அவர்கள் கவனிக்கவில்லை.
கொஞ்சநேரத்தில் ஒரு பெட்டியை தூக்கியபடி ஒருவன் முன்னால் வந்தான். அவனுக்குப்பின்னால் ஜிப்பாவும் கணுக்கால் வரை காவிவேட்டியுமாக சாகிப் வந்தார். ஆஸ்பத்திரியில் மருந்துகள் வைக்கக்கூடிய இரு கள்ளிப்பெட்டிகளை இணைத்து ஆணி அடித்து அதைசெய்திருந்தார்கள். அதில் என்னென்னவோ மருந்து பெயர்கள் எழுதி காகிதங்கள் ஒட்டியிருந்தது. பெட்டியை கீழே வைத்ததும் இருவர் அதற்குள் அப்பாவை பனம்பாயுடன் அப்படியே தூக்கி வைத்தார்கள். அதை மூடி கயிற்றை குறுக்காக போட்டு மெல்ல குழிக்குள் இறக்கினார்கள். கயிற்றை உருவி எடுத்ததும் சாகிப் திரும்பி என்னிடம் ‘இங்க வா’ என்றார்.
அவர் என்னை கவனித்திருந்தார் என்பதை ஆச்சரியத்துடன் உணர்ந்தேன். ’ஃபாதர், இவன் செத்துப்போன ஜோசப்பு மகன்’ என்றார் சாகிப். ஃபாதர் தலையசைத்தார். ஃபாதர் அப்பாவைப்பற்றி சொன்னார். கர்த்தருக்குள் வந்த பிறகே அப்பா மரணமடைந்ததை அறிந்துகொண்டேன். சுருக்கமான ஜெபம் முடிந்ததும் ஃபாதர் என்னிடம் ஒரு கைப்பிடி மண் அள்ளி குழியில் போடச்சொன்னார். நான் மண்ணை போட்டேன். ஃபாதரும் சாகிப்யும் மண்ணை அள்ளி போட்டபின் வேலைக்காரர்கள் சரசரவென்று குழியை மூடினார்கள்.
திரும்பும்போது நான் சாகிப் பின்னாலேயே நடந்தேன். ஃபாதரும் பிறரும் நேர்வழியே செல்ல அவர்மட்டும் முந்திரிக் காடு வழியாக புகுந்து குனிந்தும் பாய்ந்தும் சென்றார். ஒரு கிளையை குனிந்து கடந்த பின் திரும்பி சாகிப் என்னிடம் ‘உன் அம்மா வரலையா?’ என்றார். ‘இல்லே.நான்தான் வந்தேன்’ என்றேன். அவர் ‘ஓ..ஐ சீ’ என்றார் தனக்குள். நான் திடீரென்று தழுதழுத்த குரலில் ‘நான் வேதக்காரனா ஆயிடுதேன். ரொட்டி குடுங்க சாயிப்பே…’ என்றேன். ‘ரொட்டி மட்டும் போருமா?’ என்று அவர் சிரித்துக்கொண்டே கேட்டார்.’ ’நெறைய ரொட்டி வேணும்…எனக்க வீட்டுக்கு குடுக்கணும் சாயிப்பே. எனக்க தங்கச்சிக்கு ரொட்டி வேணும் சாயிப்பே’
சாகிப் என்னை மெல்ல இழுத்து அணைத்துக்கொண்டார். அவரது வாசனை என்னை சூழ கண்ணீஇர் விட்டுக்கொண்டு அவர் உடையில் என் முகத்தை புதைத்தேன். என் மூச்சு உள்ளிருந்து விம்மல் விம்மலாக வெடித்து வந்தது.என் அப்பாவின் வியர்வை நெடி ஊறிப்போன பனைமட்டையும் குளத்துப் பாசியும் உப்பும் கலந்தது. சாகிப்பின் வியர்வை நெடியில் ஒரு மெல்லிய வெடிமருந்து வீச்சம் இருந்தது. அன்று முதல் அதன்மேல் எனக்கு ஒரு மோகம் உருவாகியது. கடைசிவரை அவரது உடைகள் கையில் கிடைத்தால் நான் முகர்ந்து பார்க்காமல் இருப்பதில்லை.
சாகிப் அவரது அறைக்குச் சென்றதும் ஒரு காக்கி நிக்கரை எடுத்து எனக்கு தந்து ’இதே போட்டுக்கோ..’ என்றார். நான் அதை வாங்கி மெல்ல முகர்ந்தேன். மனம் மயக்கும் ஒரு வாசனை. புதுத்துணியின் வாசனை. நான் அணியும் முதல் புதுத்துணி அது. ‘ஏசுவே கர்த்தரேண்ணு சொல்லி போட்டுக்கோ’ நான் ‘ஏசுவே கர்த்தரே’ என்றேன். எனக்கு மிகப்பெரிய கால்சட்டை அது. இடுப்பருகே பலமுறை சுருட்டிக்கொண்டேன். சாகிப் சிரித்தார், நானும் சிரித்தேன். துரை ‘சோறு தின்னுட்டா சரியாயிடும்’ என்றார்
சாகிப் பைபிளை எடுத்து பிரித்தார். ‘இங்கே வா’ என்றார். நான் அருகே சென்றதும் என் தலைமேல் கை வைத்து பைபிள் வாசகங்களை உரக்க வாசிக்க ஆரம்பித்தார். அவ்வாறு நான் கிறிஸ்தவனாக ஆனேன்.என் பெயர் ஜேம்ஸ் டேனியேல்.
[மேலும் பார்க்க ]