பிரபஞ்ச மௌனம்- கடிதம்

பிரபஞ்ச மெளனம்- டெட் சியாங்

அன்பு ஜெயமோகன்,

 

பாரியின் மொழிபெயர்ப்பில் வெளியான பிரபஞ்ச மெளனம் சிறுகதையை வாசித்தேன். குரலின் மெளனம்எனும் தலைப்பு பொருத்தமானதாக இருக்கும் எனத் தோன்றியது.

 

மிக மிக எளிய கதை; ஐந்து நிமிடங்களில் வாசித்துக் கடந்து விடலாம். அக்கதைக்குள் அமர்ந்து கொண்டு நமக்கு அதைச் சொல்லிக் கொண்டிருந்த கிளியின் குரலை அப்படி கடந்துவிட முடியுமா? என்னால் இயலவில்லை.

 

கிளி என்றதும் நினைவுக்கு வருவது குரல்தான். அவ்வகையில் அதன் குரலிலேயே கதை துவங்குவது சிறப்பு. பறவைகளில் அறிவுக்கூர்மையான கிளியின் சொற்கள் நிதானமாக எனக்குள் விழுந்து கொண்டே இருந்தன. சொன்னதைத் திரும்பச் சொல்பவையாகவே அவற்றைக் கருதுகிறோம். உண்மையில் அவை புதிய ஒலிகளையும், சொற்களையும் உருவாக்க வல்லவை.

 

அலெக்ஸ் எனும் தன் நண்பன் தொடர்பான கிளியின் குறிப்பு மிகச் சுருக்கமானது; அதேசமயம் நுணுக்கமானது. தன் இறப்புக்கு முன்னர் அலெக்ஸ் குறிப்பிடும் “நீ நலமாக இரு, நான் உன்னை நேசிக்கிறேன்” எனும் வரியின் வேர்களில் இழையோடும் அருட்தன்மையை மன,வாக்கு கொண்டு உணர்ந்து கொள்ளல் அதிசிரமம்.

 

பிரபஞ்சத்தின் பல்லுயிர்ச்சூழலை மறந்து, அதைத் தன்சூழலுக்கு இழுக்கத் தீவிரமாய் முயன்று கொண்டிருக்கும் மனிதச்சமூகத்தின் ஒருவனான என் காதுகளுக்கு அக்குரல் தெளிவாகக் கேட்கவும், புரியவும் செய்கிறது. இருந்தும் அக்குரலைச் செவிமடுக்காதவன் போன்றே அமர்ந்திருக்கிறேன். என்னை மன்னியும் அலெக்ஸ்!

 

இங்கு வாசிப்பின் மற்றுமொரு கதவு திறந்தது. மனிதச்சமூகத்திலேயே ஆதிக்க, ஒடுக்கப்படும் பிரிவுகள் இருப்பதை நாம் அறிவோம். ஒடுக்கப்படும் பிரிவின் முகமாகக் கிளியின் குரல் தொனிக்க, ஆதிக்கம் செய்யும் குழுவின் முகமாக மனிதர்கள் வெளிப்பட.. என் புலன்கள் விழித்துக் கொண்டன.

 

ஒடுக்கப்படும் மக்களின் குழுவிற்கு என்னால் முடிந்த அளவு துணைநிற்கத் தூண்டிய வாசிப்பில் மனம் நிறைந்தது. சிறுவயது முதற்கொண்டு நான் கடந்து வந்த அனுபவங்களை நினைவுகூர்ந்தேன். பல இடங்களில் ஒடுக்கப்பட்ட குழுவைச் சார்ந்த எளிய மக்களின் கண்ணீரை அருகில் இருந்தே கவனித்திருக்கிறேன்.

 

அப்போது அவர்களிடம் சொல்லத் தெரியவில்லை. இப்போது சொல்கிறேன் – “நீங்கள் நலமாக இருங்கள். நாங்கள் உங்களை நேசிக்கிறோம்”. எங்களை ஆசிர்வதியும் அலெக்ஸ்!

 

உயிர்நலத்தை விரும்பும்,

சத்திவேல்,

கோபிசெட்டிபாளையம்.

அன்பின் ஜெ,

 

இந்நாளை இனிதாக்கியமைக்கு நன்றி. ‘முழுக் கோடையும் ஒரே நாளில்’ மொழியாக்கத்தை வெளியிடுவீர்கள் என எதிர்பார்த்திருக்கவில்லை. முதலிரு மொழியாக்கங்களை தங்களுக்கு அனுப்பிய பின்னரும் பிரதியில் மேம்படுத்த ஏதேனும் மிச்சமிருப்பதாய் தோன்றிக் கொண்டே இருந்தது.  எனவே குறைந்தது பத்து கதைகளையேனும் (பத்து வாரங்களில் பத்து என்பது இலக்கு) மொழியாக்கம் செய்தபின்னரே தங்களிடம் முழுமையாக பகிரவேண்டும் என்ற எண்ணத்தில் அடுத்த கதைகளை மொழியாக்கம் செய்துகொண்டிருந்தேன். அதுவரை நண்பர்களிடம் பகிர்ந்து பிரதியை செம்மையாக்கும் நோக்கில் இவ்வலைப்பக்கத்தை தொடங்கினேன்:

https://paritranslations.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88

 

இப்போது இதை சொல்ல நேர்ந்தமையும் ஒரு நல்லூழே. இனி ஒரு நிபந்தனையாக இது இங்கிருக்கும், நிறைவேற்ற முயல்கிறேன்.

 

தற்போது ஸ்டீபன் லீகாக்கின் Nonsense Novels தொகுப்பிலிருந்து ஓர் கதையை (அஸ்பெஸ்டாஸ் மனிதன்) செய்துவருகிறேன்.

 

 

பாரி,

பெருந்துறை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-43
அடுத்த கட்டுரைதுங்கா நதிக்கரை ஓரத்திலே