ஊட்டி குருநித்யா ஆய்வரங்கு- மீண்டும் ஒரு நினைவுத் தொகுப்பு

ஊட்டி புகைப்படம் விஜய் ரங்கநாதன்

மலைகளை அணுகுவது

ஊட்டி சந்திப்பு – நவீன்

ஊட்டி சந்திப்பு -சிவமணியன்

ஊட்டி குருநித்யா இலக்கியக் கருத்தரங்குக்கு செல்வதில் உள்ள சிக்கல் பேருந்தில் பயணம் செய்யவேண்டும் என்பதுதான். முன்பெல்லாம் அது எனக்கு ஒரு பிரச்சினையே அல்ல. இப்போது கழுத்துவலி, இடுப்பு வலி. கோவை வரை ரயிலில் வந்து பேருந்தில் செல்லலாம். ஆனால் கோவை ரயில் காலை 7 மணிக்கே வரும். அதன்பின் கிளம்பினால் 11 மணிக்கே ஊட்டி செல்லமுடியும். ஒருநாள் முன்னரே வந்து தங்கலாம். அருண்மொழி, சைதன்யா உடன்வந்தமையால் அதுவும் இயல்வது அல்ல. ஆகவே பேருந்து

அரசுப்பேருந்துதான் நாகர்கோயிலில் இருந்து. மாலை ஐந்தரைக்குக் கிளம்பி மறுநாள் காலை ஆறுமணிக்கு ஊட்டி சென்றது. தூக்கம் வரவேண்டும் என ஒரு அவாமின் சாப்பிட்டேன். அது வம்பாகி மறுநாள் தூக்கம் சுழற்றிக்கொண்டிருந்தது. ஒருமாதிரி சமாளித்தேன் என நினைக்கிறேன். ஊட்டி நிகழ்ச்சியில் இப்போதெல்லாம் எல்லாருமே நன்றாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். சென்ற சில ஆண்டுகளாகவே இளையவர்கள் மிகுதி. அவர்களின் ஊக்கம் நிகழ்ச்சியின் தீவிரத்தைக் கூட்டியது

நாகப்பிரகாஷ், புகைப்படம் விஜய் ரங்கநாதன்

இம்முறை பெண்கள், குறிப்பாக இளம்பெண்கள் மிகுதி. அவர்கள் அனைவருமே விரிவாக தயாரிப்புகள் எடுத்துக்கொண்டு வந்து கூர்மையாகப் பேசினார்கள். இவ்வாண்டு நிகழ்ச்சி அவர்களால் தனித்தன்மைகொண்டதாக ஆகியது. ஸ்வேதா, நிகிதா, சுசித்ரா மூவரின் பங்களிப்பும் மிக முக்கியமானவை.

நாஞ்சில்நாடனின் கம்பராமாயணம் இவ்வாண்டுடன் 9 ஆண்டுகள் நிறைவுசெய்கிறது. கம்பராமாயணத்தை வாசிப்பதாற்கான ஒரு தொடக்கப் பயிற்சிதான் இது. கம்பராமாயணம் போன்ற ஒரு செவ்வியல்படிப்பை எப்படிப் படிப்பது என்ற பிரமிப்பும் தயக்கமும் பலருக்கு இருக்கும். அதை வாசிப்பதற்கான ஒரு வழிமுறையை காட்டி சற்று சுவையும் அறிவிக்கும் இந்நிகழ்ச்சியால் பலர் கம்பராமாயணத்தை வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இம்முறை யுத்தகாண்டம். கும்பகர்ணன் வதைப்படலம். உச்சகட்ட நாடகீய உணர்ச்சிகளால் ஆனது

மாரிராஜ் இந்திரன், புகைப்படம் விஜய் ரங்கநாதன்

இம்முறை தனிச்சிறப்பாக அமைந்தது அறிவியல் புனைவுகள் பற்றிய அமர்வு. சுசித்ரா கமலக்கண்ணன் இருவரும் கட்டுரைகள் முன்வைக்க அதையொட்டிய விவாதம். தமிழில் அறிவியல் புனைவுக்காக இப்படி ஒரு தனி அமர்வு முன்னர் நடந்ததில்லை. அறிவியல்புனைவுகளின் வடிவச்சவால்கள், தத்துவ அடிப்படைகள் ஆகியவற்றைக் குறித்து பலகோணங்களில் பேசப்பட்டது.

நாவல் குறித்த பாலாஜி பிருதிவிராஜின் அமர்வும் தனிச்சிறப்பு கொண்டதாக அமைந்தது. செவ்வியல் நாவல்களை ஒட்டி நாவல் என்னும் வடிவம் குறித்த தன் பொதுவான அவதானிப்புகளை அவர் முன்வைத்தார். பொதுவாக எல்லா அமர்வுகளுமே விவாதத் தன்மைகொண்டவைதான். சிறுகதைகள், கவிதைகள், மரபுக்கவிதைகள் என அரங்குகள் மாறிக்கொண்டே இருந்தன.

சுசித்ரா, புகைப்படம் விஜய் ரங்கநாதன்

புதியதலைமுறையினர் வந்து சிறுகதைகளைத் தெரிவுசெய்தபோது அவற்றின் தரமும் இயல்பும் மாறிக்கொண்டிருந்தன. பொதுவாக பேசாத களங்கள் எழுந்து வந்தன. மாரிராஜ், நிகிதா, ஸ்வேதா, நவீன், விஜயராகவன், பாரி, நாகப்பிரகாஷ் ஆகியோர் சிறுகதைகளை ,   வி.என்,சூரியா, வேணு வேட்ராயன், சாம்ராஜ் ஆகியோர் கவிதைகளைப் பற்றி பேசினார்கள்.

அரங்கில் தேவதேவன் வழக்கத்திற்கு மாறாக நிறையவே பேசினார். லக்ஷ்மி மணிவண்ணன், நாஞ்சில்நாடன் ஆகியோரும் விவாதங்களில் தொடர்ச்சியாக பங்கெடுத்தார்கள். இம்முறை சு.வேணுகோபால் பங்கெடுக்க முடியாமல் போய்விட்டது

பாரி, புகைப்படம் விஜய் ரங்கநாதன்

இப்போது குரு நித்யா அரங்குக்கு வருபவர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து பங்கேற்பாளர்கள் இருந்தனர். குருகுலத்திற்கு வெளியே மூன்று மாளிகைகளை வாடகைக்கு எடுக்கவேண்டியிருந்தது. குருகுலத்திற்கு இவ்வாண்டுக்குள் சுற்றுவேலி கட்டி உள்ளே காட்டுமாடு நுழைவதை தடுக்க முடியும் என்றால் அடுத்த ஆண்டு கூடாரங்கள் கட்டி பெரும்பாலும் அனைவரையுமே உள்ளே தங்கவைத்துவிடலாம் என்பது எண்ணம். நிதிதான் குருகுலத்தின் சிக்கல்.

எப்போதுமே ஊட்டி அரங்கில் நல்ல பாடகர் சிலர் இருப்பார்கள். இம்முறை சுசித்ரா, பழனி ஜோதி இருவருமே போட்டிப்போட்டுக்கொண்டு பாடினார்கள். இருவருமே முறையான இசைப்பயிற்சி பெற்றவர்கள். சுசித்ரா வீணைக்கலைஞரும்கூட. திருமூலநாதன் பண்ணிசைப் பயிற்சி பெற்றவர். அவரும் பாடினார். ஒவ்வொரு அரங்கும் பாடலுடன் தொடங்கியது. இரவில் சினிமாப்பாடல்கள்.

காலையிலும் மாலையிலும் கூட்டமாக நடைசெல்வது ஊட்டி நிகழ்ச்சியின் உற்சாகமான நிகழ்வுகளில் தலையாயது. ஊட்டியின் குளிரும் பசுமையும் அந்த பொழுதை அற்புதமானவையாக ஆக்கும். ஊட்டியின் வெயிலின் அழகு கீழ்நிலத்தில் எங்குமே பார்க்க முடியாதது. வெம்மை ஆற்ற வெள்ளித் திரவப்பெருக்கு. அருகிருக்கும் தேயிலைத் தோட்டத்திலும் அப்பாலிருக்கும் குறுங்காட்டிலும் நடைசென்றோம். தேயிலைத்தோட்டத்தில் காட்டெருதுக்கூட்டம் நின்றிருந்தமையால் முதல்நாள் மேலே செல்லமுடியாமல் திரும்பவேண்டியிருந்தது.

ஜப்பான் பயணத்திற்காக நேரடியாக ஊட்டியிலிருந்து கோவை வழியாக சென்னை திரும்பினேன். இம்முறையும் குரு முனி நாராயணப் பிரசாத் அவர்கள் குருகுலத்தில் இருந்தார்கள். நிகழ்வை துவக்கிவைத்து உரையாற்றினார்கள். அவரை வணங்கி விடைபெற்றுக்கொண்டோம்.

நிர்மால்யா ஒருங்கிணைப்பது இந்நிகழ்ச்சி. எல்லாப் பொறுப்பும் அவருடையதுதான். உணவு, மாளிகைகள், படுக்கைகள், பயணங்கள் எல்லாமே அவருடைய ஏற்பாடு. ஊட்டி குருநித்யா கருத்தரங்கு அவருடைய தனிப்பட்ட சாதனை என்றே சொல்லலாம் அது நித்யாவுக்கு அவர் செய்யும் காணிக்கை

மூன்றுநாளும் நிகழ்ச்சியை பின்னணியில் வழிநடத்தியவர் செந்தில்குமார் என்னும் குவிஸ் செந்தில். நவீன் நிதியை கையாண்டார். சுசீல்குமார் நிகழ்ச்சியை நடத்த உதவினார். மெல்ல மெல்ல நிகழ்ச்சியில் என் பங்களிப்பு என்பது எல்லா வகையிலும் குறைந்து வருகிறது. அது ஒரு பெரிய விடுதலையையும் உணரச்செய்கிறது.

திரும்பி வரும்போது எண்ணிக்கொண்டிருந்தேன். ஊட்டியில் இந்தச் சந்திப்பு தொடங்கி கால்நூற்றாண்டு ஆகிறது. இப்போதிருக்கும் பங்கேற்பாளர்களின் சராசரி வயதைக் கொண்டு நோக்கினால் அவர்கள் நான்காம் தலைமுறையினர். இங்கு வந்து தங்களை உருவாக்கிச் சென்ற எழுத்தாளர்களின் ஒரு நிரை  தமிழிலும் மலையாளத்திலும் உள்ளது. நாளையும் வருவார்கள். குருவுக்கு நான் திருப்பிச்செய்ய இப்படி ஒன்று இருப்பது எவ்வளவு அற்புதமானது!

 

 

லகுலீச பாசுபதம் – கடலூர் சீனு உரை

குரு நித்யா ஆய்வரங்கப் படைப்புக்கள்

முந்தைய கட்டுரைமலைகளை அணுகுதல் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைலண்டன் தமிழ் இலக்கியக் குழுமம்