மலைகளை அணுகுதல் – கடிதங்கள்

மலைகளை அணுகுவது

அன்புள்ள ஜெ வணக்கம்…

 

சைதன்யாவின் கடிதம் வாழ்வின் இரண்டு முக்கியமான பகுதிகளை குறித்து சிந்திக்க வைத்தது.

 

நான் பிறந்தது முதல் 18 வயது வரை வாழ்ந்த ஒரு பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து பத்து ஆண்டுகளுக்குப் பின் அங்கே சென்றபோது அடைந்தது கடும் ஏமாற்றமே.

 

குழந்தைப் பருவத்திலும் முதிரா இளமையிலும் உயிரியக்கத்தின் உச்ச வேகத்தில் கனவுகளும் ,கற்பனைகளும், வெடித்துப் பரவி வாழ்ந்திருந்த தெருக்களிலும்,  உடனாடிய பழைய நண்பர்களையும், காண்கையில் அவைகள் எல்லாம் வேறு ஒரு தாள கதியில் ஒரு பழைய காலத்தில் உறைந்து நின்று விட்ட எண்ணம்தான் முதலில் எழுந்தது.

 

உண்மையில் மாறியதும் வளர்ந்துள்ளதும் நான்தான், முந்தைய கொந்தளிப்புகளையும் ,கற்பனைகளையும் , விட்டு விட்டு உள்ளதை உள்ளபடி பார்க்கையில் எழும் உணர்வு தான் அது…மலைச்சிகரங்கள் வளர்வதுமில்லை தளர்வதுமில்லை….

 

உண்மையில் கிளென் மார்கனில் சந்தித்துக் கொண்டது இரு எல்லைகள் இரு முனைகள், சென்றிருந்த அறுவரும் மலையிறங்கும் காட்டாறுகள், ஒரு கணம் அருவியாகி மறுகணம் ஆறாகி, எதிர்ப்படும் அனைத்தையும் தன்னோடு இழுத்துக்கொண்டு விசையேவேதமென  இலக்கு நோக்கி பாய்பவர்கள்…

 

அங்கிருப்பவர்களோ, பழுத்துக் கனிந்தவர்கள், பயணித்து நிறைந்தவர்கள், மலைச்சிகர புல் நுனிக்கு பனித்துளியாய் திரும்பி வந்த விரிகடல்கள், அலை ஓய்ந்து அமர்ந்தவர்கள்.

 

இருதரப்பும் கொண்டும் கொடுத்தும் இருக்கும்…இவர்கள் புயல் அவர்கள் அதன் மையம், இரண்டுமே வேண்டும் பின் எப்படி புடவி சுழலும்…

 

மு.கதிர் முருகன்

கோவை

கிளென்மார்கன் பற்றிய கட்டுரை அருமையாக இருந்தது. ஒரு சிறிய ஆன்மிக சாதகர்களின் அன்றாட வாழ்க்கையைப்பற்றிய சித்திரம். அதில் லைகீகமாக சிறிய விஷயாங்களைச் சொல்லியே அவர்களின் வாழ்க்கைச்சூழல் ஆன்மிக நிலை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டியிருந்தது மிகச்சிறப்பாக இருந்தது.  குறிப்பாக அவர்கள் கம்பளிப்பூச்சியை [லிட்டில் கை] எடுத்து வீசும் இடம்.

 

அது அவர்கள் லௌகீகமாக எத்தனை நுட்பத்துடன் இருக்கிறார்கள் என்பதை காட்ட் கூடவே அவர்களின் கருணை எவ்வளவு கனிந்திருக்கிறது என்பதையு காட்டியது. மலைகளுக்கு ஒரு சிறப்பு உண்டு. அவை நம்மை பொருட்படுத்துவதில்லை. அவை நம்மை பார்ப்பதுமில்லை. நாம் அவற்றைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். நம் உணர்ச்சிகளை அவற்றின்மேல் ஏற்றிக்கொண்டே இருக்கிறோம்.

 

விஷ்ணுபுரத்தில் ஹரிததுங்கா அப்படித்தான் ஒரு சாட்சியாக இருக்கிறது. வெறும் சாட்சி. ஒரு குறியீடாகவோ அடையாளமாகவோ கூட அது மாறவில்லை. விஷ்ணுபுரத்தில் குறியீடாக மாறாத ஒரே பொருள் அதுதான் என நான் நினைப்பதுண்டு. நம்மால் மலைகளை அர்த்தப்படுத்திக்கொள்ளவே முடிவதில்லை.

எஸ்.விஸ்வநாதன்

அன்புள்ள ஜெ,

 

சைதன்யாவின் கடிதம் தேர்ந்த எழுத்தாளர் எழுதுவது. ஆனால் தமிழில் கொஞ்சம் பிழைகள். ஆங்கிலம் எழுதிய கை எனத் தெரிந்தது. இந்த தளத்தில் உங்கள் குடும்பத்தில் எல்லாருமே எழுதிவிட்டார்கள் என நினைக்கிறேன்.

வேலியை மீறி உள்ளே நுழையும் புழு பூச்சிகளை மெல்ல உந்தி வெளியே தள்ளி விட்டனர்- என்ற வரியிலிருந்த நுட்பமான நகைச்சுவை ஒரு நல்ல எழுத்தாளரைச் சுட்டிக்காட்டுகிறது.

 

ஆர். குமரவேல்

முந்தைய கட்டுரைதிராவிட இயக்கம் – கடிதம்
அடுத்த கட்டுரைஊட்டி குருநித்யா ஆய்வரங்கு- மீண்டும் ஒரு நினைவுத் தொகுப்பு