குரு நித்யா ஆய்வரங்கு, ஊட்டி – கடலூர் சீனு

 

இனிய ஜெயம்

 

மகிழ்சிகரமான மற்றொரு மூன்று நாட்கள்.  மூன்று நாட்கள் தீவிரமான விஷயங்களை மட்டுமே பேசியபடி இரவுகளில் பாடல்களும் சிரிப்புமாக என உண்மையில் இந்த மூன்று நாட்களும் ஓடிய வேகமே தெரியவில்லை.  திரும்புகையில் நண்பர்கள் உரையாடலிலும் இதையே தெரிவித்தனர். செறிவான கலந்துரையாடல்கள் அமைந்த கச்சிதமான நேரக்கட்டுப்பாட்டின் மீது அமைந்த கூடுகை.

 

எப்போதும்போல நாஞ்சில் சாரின் கம்பராமாயண அமர்வு கனவுகளை எழுப்பும் ஒன்றாக அமைந்தது.குளிக்கையில் உடல் தேய்க்க மேரு மலையை பயன்படுத்துபவன் கும்பகர்ணன் எனும் கம்பனின் வர்ணனை வரும்போது, ரொம்ப ரொம்ப மிகையா சொல்றார் கம்பன் என்றார் நாஞ்சில். ஆனால் எனக்கு அது கதகளி ஆட்டம் ஒன்றில் ஒரு சிறந்த நடிகரின் வெளிப்பாடு போலவே தோன்றியது. முந்தய முகாம் ஒன்றினில் ராஜீவன் மாஸ்டர் ராவணன் கைலை மலையை மேலே தூக்கி எறிந்துவிட்டு அது கீழே வரும் வரை,தாம்பூலம் தரித்தபடி காத்திருக்கும் நிகழ்வை நிகழ்த்திக் காட்டினார். அது மனதில் எழுந்தது. வாரணம் பொருத மார்பும், மேருமலையை குளிக்கப் பயன்படுத்தும் தோளும் கொண்ட கும்பகர்ணனை ஒரு  சிறந்த கதகளி மாஸ்டர் தன்னில் நிகழ்த்திக் காட்டிவிடுவார் என்றே தோன்றியது.

கம்ப இராமாயண உரை பிரதிகளில் உள்ள பாடபேதம், குருமுகமாக தான் மனப்பாடமாக கற்றவை, என பல விஷயங்களை நாஞ்சில் சாரும், இணையாக பேராசிரியர் யேசுதாசன் அவர்களின் கம்பராமாயண வகுப்புகள் குறித்து நீங்களும் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் சுவாரஸ்யமும் முக்கியத்துவமும் கொண்டதாக அமைந்திருந்தது.

 

கவிதை அமர்வுகளில் அந்தியூர் மணி அவர்களின் அமர்வு முதன்மையானது என்பது என் எண்ணம். புறநானூறு,திருமுறை இவற்றில் இருந்து அவர் எடுத்தாண்ட பாடல்கள் வழியே அறம் என்பதன் வளர்ச்சி, அதன் கருத்து நிலை வெளிப்பாடு குறித்து பகிர்ந்து கொண்ட்டார்.  பகிர்வு உரையாடல் வழியாகவே  நிகழும் அக் கணம் வழியாகவே அவர் முன்வைத்த தனித்துவமான கோணம் துலங்கி வந்தமை இணையற்ற அபாரமான அனுபவம் எனக்கு. பிறரும் அவ்வாறே உணர்ந்திருப்பார்கள் என எண்ணுகிறேன்.

வெ நி சூர்யா தேர்வு செய்த கவிதைகள் வழியே அவர் விவாதிக்க முனைத்த [வரலாற்று வளர்ச்சிப் போக்கில் தமிழ் கவிதைகளின் உள்ளடக்க நிலை] கான்செப்ட் அந்த கவிதைகளின் வைப்பு முறை பிழையால், அவரால் வலிமையாக முன்வைக்க முடியவில்லை எனத் தோன்றியது.  உதாரணமாக  ஒளிரும் பல்பு கவிதையை முதலாவதாகவும்,  மிஸ்டர் இடியட் கவிதையை இரண்டாவதாகவும் ஒலிக்கிடங்கு மைதானம் கவிதையை மூன்றாதாகவும் அவர் வைத்திருக்க வேண்டும்.

 

அப்படி வைத்தால் முதல் கவிதை சாரமான ஒன்றில் சென்று முடிவதையும், இரண்டாவது கவிதை சாரம் என்பதை தவிர்த்து முற்றிலும் மனிதனின் எல்லைக்குள் சென்று முடிவதையும், மூன்றாவது இந்த சாரம் மனிதன் இரண்டையும் விடுத்து துண்டுபடுதல் எனும் நிலையை கையாள்வதையும் காண முடிகிறது.  இந்த அமர்வில் கவிதை வாசிப்பு  மீதான முக்கிய அவதானங்கள் முன்வைக்கப்பட்டன .

பிரமிளின் கேள்விக்கு தாயுமானவரின் விடையை முன்வைத்து ஜெயகாந்த் ராஜு அவர்கள் தனது நோக்கை முன்வைத்த அமர்வு, என்னுள் எங்கோ தைத்து ஜெயகாந்தன் அவர்களின் நினைவை எழுப்பியது. ஜெயகாந்தன் சபையாக எனக்குள் அந்த அமர்வு தோன்றியது.

 

வேணு வெட்ராயன் தான் தேர்வு செய்த கவிதைகள் வழியே, மூளை நரம்பியல் அழகு என்பதை எவ்வாறு அணுகி அறிகிறது என்பதை பகிர்ந்து கொண்டார்.  லட்சுமி மணிவண்ணன் இத்தகு பார்வைகள் கவிதைகளை இன்னும் நெருங்கி ஆழமாக உணர்த்து கொள்வதற்குப் பதிலாக, கவிதைகளை மர்மமழிப்பு செய்யும் குறுகல் பார்வையாக நின்று விடும் நிலைகளை சொன்னார். மொழி இயல்,பின் மொழி இயல் விவாதங்கள் வழியே கவிதை எவ்வாறு பிரித்து அடுக்கப்பட்டது, இனி கணிப்பொறி கூட கவிதை எழுதும் எனும் நிலை வரை அந்த விவாதப் பார்வைகள் சென்றது, அவை எல்லாம் பின்னடைந்து கவிதை தொடர்ந்து முன்சென்று கொண்டிருப்பது குறித்து நீங்கள் பகிர்ந்து கொண்டீர்கள். கவித்துவம் என்றால் என்ன? என்பது ஒரு தத்துவக் கேள்வி. இந்தக் கேள்விக்கு மூளை நரம்பியல் என்ன விடை தரும் என்றவகையில் இந்த அமர்வும் முக்கியமானதே.

என்றும் என் பிரியத்துக்கு உரிய நண்பர் கவிஞர் எழுத்தாளர் சாம்ராஜ் அவர்களின் அமர்வு அனைவருக்குமே பிடித்த ஒன்றாக அமைந்திருந்தது. கவிதை வாசிப்பு என்பது பொழுது போக்கா, , இது ஒரு பேஸ் புக் கவிதை என விமர்சனங்களை அடைந்த லிபி ஆரண்யா அவர்களின் கவிதையை, விரித்துப் பொருள்கொள்ள சாம்ராஜ் மற்றும் நீங்கள் அளித்த பின்புலம் வழியே அந்தக் கவிதை அளிக்கும் அனுபவம் துலங்கி வந்தது.

 

கமலக்கண்ணன் சுசித்ரா அருணாச்சலம் மகராஜன் தேர்வு செய்த கதைகளில் தமிழ் டப்பிங் செய்யப்பட்ட கதைகளை வாசித்திருந்தேன். மூவரும் தத்தமது அமர்வுகளில் முன்வைத்த பார்வைகள் வழியே அறி புனைக்கான இன்றைய தேவையும் இன்றைய சவால்களும் விவாதிக்கப் பெற்றது.  குறிப்பாக விளையாட்டாக அன்றி தீவிர நிலையில் எழுதப்பெறும்  அறிபுனை கதைகளுக்கு நிகழும் வடிவ மொழிச்  சிக்கல் மீது. லட்சுமி மணிவண்ணன் இத்தகு ஜானரில் விடுபடும் பிராந்தியத் தன்மை குறித்து விமர்சனம் எழுப்பினார், மற்றொரு முனையில் சுசித்ரா கதையில் உள்ள இந்தியத் தன்மை, கடவுளும் கேண்டியும் கதை நிகழ்த்திய மறு உருவாக்கம் இவை கவனம் கொள்ளப்பட்டது. நேற்றும் இன்றும் நாளையும் என என்றும் தொடரும் மானுடத் துயர் எழுப்பும் வினாக்களை கையாள அறி புனைகள் சில புதிய வாசல்களை திறக்க சாத்தியம் கொண்டது இத் தகு தீவிர அறி புனைகள் தேவை என்போர் கை உயரத்துக என நீங்கள் சொல்ல, நாஞ்சில் சார் தவிர்த்த பெரும்பாலானோர் கை உயர்த்தி இருந்தனர். நாஞ்சில் சாரின் தரப்புக்கு  ஒரு தனி அமர்வு வைக்கலாம்.

ஸ்வேதா நிகிதா இருவரும் ஒரு இனிய வரவாக, சிறப்பான முன் தயாரிப்புடன் தங்களது நோக்கை தெளிவாக முன் வைத்தனர். ஹமிங் வே ஆளுமை அவர் வாழ்ந்த விதம் குறித்து நீங்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் அனைத்தும் சுவாரஸ்யமாக இருந்தது. வயதாகிறதே என்பதால் தற்கொலை செய்து கொள்ளும் எழுத்தாளர்.

 

நிகிதா தேர்வு செய்திருந்த கதையை முன்பே [சி மோகன் என நினைவு] மொழிபெயர்ப்பில் வாசித்திருக்கிறேன். இந்த ஒளிஞ்சான் கண்டான் வகை கதைகளில் முன்பு எனக்கு நிறைய ஈடுபாடு [கண்டு புடிச்சி புட்டோம்ல] இருந்தது. இன்று இந்தக் கதைகள் எல்லாம் எங்கோ கேட்கும் எதிரொலி போல உள்ளே கிடக்கிறது. புத்தி ஜீவி புத்தியைக் கொண்டு பர்பெக்ட் ஆக ஒரு கதையை எழுதிவிட முடியும். ஆனால் எக்ஸலன்ட் என்பதை புத்திசாலித்தனத்தால் ‘உருக்காக்க’ முடியாது என்பதை  மீண்டும் நினைவுறுத்திய கதை.

விஜயராகவன் தேர்வு செய்த கதை வழியே, கோணங்கி தொட்டு தாண்டவராயன் கதை எழுதிய வெங்கடேசன் வரை அவர்களின் மொழி வடிவ போதம் சார்ந்து உரையாடல் விரிந்து சென்றது. மலேஷியா எழுத்தாளர் நவீன், சீ முத்துசாமி அவர்களின் இரைகள் குறித்து புதிய வாசிப்புக் கோணம் ஒன்றை திறந்து விவாதித்தார்.

 

ப்ரியம்வதா தேர்வு செய்த வெற்றுப் பக்கம் கதையின் ஆழம் செல்ல நீங்கள் அளித்த அக் கதை நிகழும் பண்பாட்டுப் பின்புலம் வழியே, உரையாடலில் அக் கதை வினவும்  கன்னிமை என்பதின் மீதான  வெவ்வேறு பார்வைகள் எழுந்து வந்தன.

நவீன் தேர்வு செய்து விவாத்தித்த பிரக்ஞ்சைக்கு அப்பால் கதையும், பாரி தேர்வு செய்த லெனினை வாங்குதல் கதையும், சம காலத்தில் தமிழ் மற்றும் உலக அளவில் எப்படி கதைகள் தன்னியல்பாக உருவாதில் இருந்து  வெளியேறி கதைகளை ‘செய்து நிறுத்தும்’ போக்கு எழுத்தாளர்களில் கூடிய போக்கு, மக்களுக்குப்  பிடித்ததை எழுதக்கோரும் அமெரிக்க பதிப்பகங்களின் போக்கு, இங்கே தமிழில்  அமேசான் நாவல்கள் வரை வந்துவிட்டமை குறித்து விவாதங்கள் சுழன்றது.

 

மாரிராஜ் இந்திரன், நாகப் பிரகாஷ் கதைகளின் வழியே,  அழகிரிசாமி தனது குழந்தைகள் வழியே உருவாக்கும் உன்னதமாக்கல், அசோகமித்திரன் தனது கதையில் காட்டும் குழந்தமைக்குள் இயல்பாக உறையும் தீமையின் சித்திரம், அ.முத்துலிங்கம் கதைகளில் உருவாகி வரும் வாழ்வின் தாள இயலா இலகுத்தன்மை என்ற தனித்துவங்கள் மீது விவாதப் புள்ளியின் கவனம் சென்று குவிந்தது.

பாலாஜி ப்ரித்வி ராஜ்  தனது நோக்கில், உணர்வு ரீதியாக, தர்க்க ரீதியாக, குறியீட்டு ரீதியாக, பிரதியை மையமாகக் கொண்டு,எழுத்தாளரை மையமாகக் கொண்டு, வாசகரை மையமாகக் கொண்டு நாவல் வாசிப்பு என்பதை அணுகி,அதன் உள்ளடுக்குகளை பகிர்ந்து கொண்டார்.

 

கிருஷ்ணன் சங்கரன் அவர்கள் அறிமுகம் செய்து பேசிய  சுகுமார் ஆழிக்கோடு எழுதிய தத்வ மசி உபநிடத ஆய்வு நூல் மிக முக்கியமான ஒன்று. வெண் முரசின் சொல்வளர் காடு நாவலுக்கு சாவி நூலாக நான் பயன்படுத்தும் நூல் அது.  முழுமையான நிறைவான அனுபவம் அளித்த இந்த அரங்குக்கு வரும்போதும் போகும்போதும் காட்டு யானைகள் குட்டிகளுடன் சாலை கடக்க, காட்டுப் பன்றிகளும் எருதுகளும் தரிசனம் தர கோலாகலமாக அமைந்தது பயணம்.

அவருக்கு மிக மிக அருகே நின்றிருந்த காட்டுயானையை கவனிக்காமல், நாங்கள் காட்டு யானைகள் சாலையை கடக்கும் வரை சாலையில் காத்திருக்கப் போகிறோம் என குழுமத்துக்கு கண்ணும் கருத்துமாக தகவல் தட்டச்சிட்டுக் கொண்டிருந்த விஜய் சூரியன் இந்த ஆண்டின் ஹைலைட்.

 

இரவுகளில் பாடலில் அனைவரையும் மூழ்கடித்த வால்மார்ட் பழனி அவர்களும் சுசித்ராவும் அடுத்த ஹைலைட். நன்றாக உறங்கிக் கொண்டிருந்த திருமூலனாதன் அவர்களை பாடச் சொல்லிக் கேட்டு எழுப்ப, திடுக்கிட்டு எழுத்த அவர் ”நான் யாரு, எங்கிருக்கேன், நீங்கெல்லாம் யாரு” என்ற ரீதியில் விழித்தபடி அமர்ந்திருந்தது மூன்றாவது ஹைலைட்.

எனக்கான தனிப்பட்ட ஹைலைட்டுகள்  மூன்று . முதலாவது வால்மார்ட் பழனி அவர்களின் குறட்டை. மெல்ல மூடும் மரக்கதவு போல, காற்றில் படீரென மூடும் ஜன்னல் கதவு போல, மலையேறும் ட்ராக்டர் போல, தூரத்தில் மலையிறங்கும் புல்லட்டின் ஓசை போல, என விதவிதமாக குறட்டை விட்டார். இரண்டாவது விஜயராகவன் அண்ணா விட்ட குறட்டை. மரக் கட்டிலை, சிமின்ட் தரையில் குப்பறப் போட்டு,சீராக அந்தப் பக்கமும் இந்தப்பக்கமும் இழுத்தால் வருமே ஒரு ஒலி,அத்தகு சீரான ஒலி கொண்ட குறட்டை. மூன்றாவது அறை வாசலை மறித்தபடி நின்று, வாசலின் மீன் தொட்டி நீரை நிதானமாக உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்த எருமை ராஜாவின் தரிசனம். அது போன பிறகு தொட்டியை எட்டிப் பார்த்தேன். நான்கு ஜப்பானிய கோயி மீன்களும் பத்திரமாக இருந்தது.

 

மற்றபடி முகாமில் அஜிதன் சைதன்யாவை சந்தித்தது, மலேஷியா நண்பர்களை சந்தித்தது,குறிப்பாக நவீன் அவர்களை சந்தித்தது மிக்க உவகை அளிக்கும் அனுபவமாக இருந்தது. நவீன் அவர்களை கேட்டேன். அடுத்து மலேஷ்யாவில் இப்படி ஒரு அரங்கம் எனும் திட்டத்துடன் விடை பெறுகிறீர்களா என்று. அவரது பதில் ”வாய்ப்பே இல்லை. இங்கே ஜெயமோகன் உக்காந்திருக்க நாற்காலில அங்கே குறைந்தது பத்து பேரை அமர வைக்க வேண்டியது வரும் ” என்றார்.

எல்லாம் முடிந்தது சேலம் பேருந்து நிலையம் வந்தேன்.கடலூர் பேருத்துக்காகக் காத்திருந்தேன். சுற்றி உள்ள திருடர்கள் வசமிருந்து கொலைகாரர்கள் வசமிருந்து உங்களை நீங்களே எப்படி ஜாக்கிரதையாகக் காப்பாற்றிக் கொள்வது என்பதை பேருந்து நிலைய  காவல்துறை  ஒலிபெருக்கி ஓயாமல் கூவிக் கொண்டிருந்தது. மலையிறங்கிவிட்டேன் என்பது உறுதியானது.

 

முந்தைய கட்டுரைகுமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருதாளர்கள்.
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-37