ஊட்டி- கடிதம்

ஊட்டி சந்திப்பு – நவீன்

ஜெ. அவர்களுக்கு

 

வணக்கம். ஊட்டி சந்திப்பு குறித்து நவீன் எழுதிய பதிவை வாசித்தேன். நவீனுடன் பயணித்து, அவருடனே முகாமில் கலந்து கொண்டதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டார். அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.  உங்கள் பார்வையை பலியாட்டை தேடும் பூசாரியின் கண்கள் என்று சொன்னதை பொங்கி சிரித்தபடி வாசித்தேன். நவீன் பகிர்ந்த பல விஷயங்களுக்குள், அவர் இந்த அமர்விற்கான முன் தயாரிப்பு செய்தது எனக்கு மிகவும் ஆச்சரியம் அளித்தது. மலேசிய சிறுகதைகள் 86 ஐ படித்து, 10 கதைகளை தேர்வு செய்து, அதன் பின் ஒரு கதை தான் என்பதற்கு சமரசமானது அத்தனை எளிதானதல்ல.. உங்கள் முகாமுக்கு வரும் ஒவ்வொருவரும் இவ்வாறான அர்ப்பணிப்புடன், தீவிர செயல்பாடுடையவர்கள் என்பது புரிகிறது. என் வாழ்த்துக்கள்.

 

அவர் பகிர்ந்திருந்த புகைப்படங்களில், அருண்மொழி அவர்கள் பேசும் புகைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் கண்களில் தெரியும் ஆர்வமும், சொல்ல வந்த விஷயத்தை முழுதாய்  எதிரே இருப்பவர்களுக்கு கடத்தி விட முயற்சிக்கும் உடல்மொழியும் இணைந்து காட்சியளித்தார். நீங்கள் அவரைப் பார்ப்பது அத்தனை இயல்பாக, ஆர்வமாக, பெருமையாக என்று பலவித உணர்ச்சிகளை கொண்ட உடல்மொழி. உங்களுடைய குடும்ப போட்டோ ஆல்பத்தில் எத்தனையோ புகைப்படங்கள் இருக்கலாம்.. அவற்றில் ஆகச்சிறந்ததாக இந்த புகைப்படம் அமையும்..

 

வாழ்த்துக்கள்.

 

 

என்றும் அன்புடன்

பவித்ரா.

ஊட்டி சந்திப்பு -சிவமணியன்

முந்தைய கட்டுரைநிழலின் தனிமை பற்றி… சுரேஷ் பிரதீப்
அடுத்த கட்டுரைகுமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருதாளர்கள்.