மலைக்காட்டுப் பிச்சாண்டி

சீ முத்துசாமி, ஒருங்கிணைப்பு காளிப்பிரசாத்

[சீ முத்துசாமியின் மலைக்காடு பற்றி அழகு நிலா எழுதிய கட்டுரை]

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

உலகிலேயே மிக மோசமான வன்முறை என்பது ஒரு மனிதன் தான் பிறந்து வாழ்ந்த நிலத்தை விட்டு முற்றிலும் அந்நியமான வேறொரு நிலத்தில் வாழ நிர்பந்திக்கப்படுவதுதான். போர்கள், பஞ்சங்கள், அதிகாரத்தின் அடக்குமுறைகள் போன்ற பல காரணங்களால்மனிதனின் குடிபெயர்வுஇன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நவீன காலத்தின் குடிபெயர்வு வேறொரு வடிவத்தையும் அடைந்திருக்கிறது. முதலாளித்துவ நாடுகளது கார்ப்பரேட் நிறுவனங்களில் White Collarவேலைகளுக்காகவும் மனிதர்கள் பல நாடுகளுக்குக் குடிபெயர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் எதுவாக இருந்தாலும் ஒருவன் தனது சொந்த மண்ணை விட்டு விலகிச்செல்லுதல் என்பது வலியும்வாதையும் நிரம்பியது.

இப்பெரும் துயரத்தைக் காட்சிகளாக விவரிப்பதில் தொடங்குகிறது மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமியின்‘மலைக்காடு’ நாவல்.தர்மபுரி மாவட்டத்திலுள்ள பள்ளப்பட்டி என்ற கிராமத்திலிருந்து மாரிமுத்து தனது பதினைந்து வயது மகன் உண்ணாமலையுடன் மலாயாவுக்குச் செல்ல நாகப்பட்டினத்திலிருந்து தொடங்கும் கப்பல் பயணத்தின் கொடூர முகம் நம்மைப் பயமுறுத்துகிறது. எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டுமென்ற மனிதனின் தீரா வேட்கைதான் அவர்களை அதிகாரத்தின் பசிக்கு எளிதில் சிக்கவைத்துவிடுகிறது. அந்த விழைவோடும் பெரும் கனவோடும் சஞ்சிக்கூலியாகத் தாய்ப் பாலை மறந்து கப்பலேறிய ஒவ்வொரு தமிழனுக்கும் மலாயா மண் ரப்பர் பாலைத்தந்த கதையைச் சொல்கிறது இந்நூல்.

முதல் பாகத்தில் கடல் கடக்கும் மாரிமுத்துவோடு தொடங்கும் கதை  இரண்டாவது பாகத்தில் மாரிமுத்துவின் கொள்ளுப்பேரன் குட்டிக்குத் தாவுகிறது. ஒரு நூற்றாண்டு காலகட்டத்தை ஒரே அத்தியாயத்தில் நூலாசிரியர் அநாயசமாக கடக்கையில் அந்த நீண்டதொரு காலப்பரப்பில் கித்தாக்காட்டு மனிதர்களின் வாழ்வில் நான்கு தலைமுறைகளாக பெரியதொரு மாற்றமோ உயர்வோ ஏற்படவில்லை என்ற உண்மை வாசகனை வலுவாகத் தாக்குகிறது.

சேற்றில் ஊறி கலங்கள் மிதந்த குட்டைத் தண்ணீரைப் பயன்படுத்தும் தனது தோட்டத்து (புக்கிட் செம்பிலான் தோட்டம்) மக்களுக்கு நல்ல தண்ணீர் கிடைக்க வேண்டுமென்ற ஆதங்கத்தில் குட்டி தனது சகாக்களான டிரசர் பாலையா, நெட்டைமணி, சின்ன காளி ஆகியோரோடு இணைந்து பெரிய துரை ஜேம்ஸ்கோனல்லிக்கு லோரியில் செல்லும் நல்ல தண்ணீரைக் கடத்திக்கொண்டு வருவதுதான் நாவலின் மையச்சரடாக எழுகிறது. இந்நிகழ்வால்அதிகார சக்திக்கும் மக்கள் சக்திக்கும் ஏற்படும் மோதலையும் ஆனால் வழமை போல் நியாயம் கிடைக்காத எளிய மனிதர்களது வாழ்க்கைப்பாட்டையும் மண் சடக்குகளில் புழுதி பறக்க எழுதியிருக்கிறார் சீ.முத்துசாமி.

குட்டி, நெட்டைமணி இருவரும் காணாமல் போக அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற பதற்றத்தில் தோட்டமே துடிக்க அவர்களைத் தேடும் குழுவிலுள்ள காவல்துறை அதிகாரி கோப்ரல் மணியம் இறுதியில் அவர்களைக் கண்டடைந்து அவர்களது இடதுசாரி பாதையில் தன்னையும் இணைத்துக் கொள்வதன் வழியாக தனது தன்னறத்தைப் பேணிக்கொள்கிறார்.

சீமையிலிருந்து கொண்டு வரப்பட்ட கருப்புக் குதிரையில் துரை ஜேம்ஸ்கோனல்லி ஏறி அமர்ந்து கித்தாக்காட்டைச் சுற்றி வருகையில் அந்த ‘பிளேக் பியூட்டி’யின் அழகை ரசிக்கும் தமிழ் பிளேக் பியூட்டிகளுக்கு அக்குதிரையைப் போலவே தங்களது கடிவாளமும் துரையின் கையில்தான் இருக்கிறது என்பது நன்றாகத் தெரியும். அதனால்தான் துரைக்கு உலா வரும் இடமாக இருக்கும் ரப்பர் காடு ஏதேதோ பெயர் தெரியாத நூற்றுக்கணக்கான மிருகங்களின் நடுங்குற வைக்கும் பெருங் கூச்சலுலோடு பேருரு கொண்டு மாரிமுத்துவைப் பயமுறுத்துகிறது.

வேட்டைக்காரர் காட்டில் பார்க்கும் புலி பன்றியை வேட்டையாடும் காட்சியும் கோபால் வீட்டில் பார்க்கும் பல்லி பூச்சிகளை வேட்டையாடும் காட்சியும் பிரிட்டிஷ் அரசு என்னும் வேட்டைக்காரன் கித்தாக்காட்டில் தொடர்ச்சியாக நடத்திய உயிர் வேட்டை, உழைப்பு வேட்டை, பாலியல் வேட்டைகளை மறைமுகமாகச் சித்தரிக்கிறது. அதிகார வலுவும் பொருளாதார வலுவும் கொண்ட பிரிட்டிஷார் எளிய, எதிர்க்கத் திராணியற்ற மக்களை வேட்டையாடிய மலைக்காட்டை சீ.முத்துசாமி வெகு துல்லியமாக காட்சிப்படுத்தி நம் முன் வைக்கிறார்.

தோட்டப்புறத் தொழிலாளர்களின் முதல் போராட்டமான 1912 ஆம் ஆண்டில் 1500 தெலுங்கு மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், 1941 ஆம் ஆண்டு கிள்ளான் வேலை நிறுத்த போராட்டம்,சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசியப் படை கலைக்கப்பட்ட பிறகு அதில் பங்கெடுத்தவர்களால் உருவாக்கப்பட்ட தொண்டர் படை,ஜப்பானின் வீழ்ச்சிக்குப் பிறகு மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் எழுச்சி,1947 ஆம் ஆண்டு தொண்டர் படையால் நடத்தப்பட்ட கள் எதிர்ப்பு போராட்டம், தொழிற்சங்க போராட்டவாதியான எஸ்.ஏ.கணபதி கம்யூனிஸ்ட் என குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலடப்பட்டது போன்ற பல வரலாற்று நிகழ்வுகளைக் கண்ணியாக கொண்டு உருவாகி வந்த எதிர்ப்புச்சங்கிலிமலாயாவில் பிரிட்டிஷ் அரசின் குரல்வளையைநெருக்கும் சமூகச் சூழலை மலைக்காடு விவரித்தாலும் மறுபுறத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உளவியலையும் மிக நேர்த்தியாக சித்தரித்துச் செல்கிறது.

தனது முதல் மனைவியையும் அவளது கள்ளக்காதலனையும் கொல்லும் கோபால் தனக்குப் பிறக்காத மகன் குட்டிக்காக யூனியன் தலைவரைக் கொல்லும் முரண், தனது மகன் காணாமல் போனதும் சித்தம் கலங்கிப் போகும் முத்தாயியின் தாய்மை,கணவனை இழந்த பிறகு எதிர் வீட்டு நொண்டி கிருஷ்ணனோடு உறவு வைத்திருக்கும் லெட்சுமி சின்ன துரையின் பாலியல் இச்சையை தீர்த்து வைக்க பெரிய தண்டல் கூப்பிடுகையில் தன்னால் வர முடியாது என மறுக்கும் துணிச்சல், தனது வீண் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள மனைவியைச் சின்ன துரைக்கு விருந்தாக்கும் பெரிய தண்டலின் மிருகத்தனம்,குட்டிக்குப் பதிலாக தனது மகனை அனுப்பாமல் அவனைப் பெரும் கண்டத்திலிருந்து காப்பாற்றும் யூனியன் தலைவர் மணியத்தின் தந்தைமை,என்றாவது ஒரு நாள் குட்டி திரும்பி வருவான் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் பவானியின் காதல்,வேப்ப மரத்துல இருக்கிற நாகத்தை தெய்வமாக வணங்கும் சீன கம்யூனிஸ்ட் சுவானின் நட்பு என சீ.முத்துசாமியின் புனைவு வெளியில் உதித்த ஒவ்வொரு கதைமாந்தரும் வாசகனின் மனதுக்கு மிக அணுக்கமானவர்களாக இருக்கிறார்கள்.

“நம்ம உசுர இப்பிடி அன்னாடும் மாக்கு மாக்குனு இடிச்சு மாவாக்கி சலிச்சு எடுக்கிற சாமி நெசமா சாமியா? இல்ல பூதமா?”என்ற நம்பிக்கையின்மையும் “ஒம் பையனுக்கு ஒண்ணும் ஆவாது. நம்ம மலைமேட்டு முனி அவனோடதொணக்கி இருப்பாரு” என்ற நம்பிக்கையும் குட்டியை பழி வாங்கும் நோக்கில் அவனது வளர்ப்பு பிராணியை விஷம் வைத்துக் கொல்லும் பொய்யாமொழியின் கீழ்மையும் “மனுசாலும் எல்லாம் ஒண்ணுதான்டா. தோலு நெறந்தாண்டா வேற” எனக் கூறும் சுவான்தாயின் பேரன்பும் தோட்டப்புறத்தின் நான்கு திசைகளிலிருந்து வீசும் காற்றாக இருந்து அம்மக்களின் வாழ்க்கையை நகர்த்திச் செல்கிறது.

சீ முத்துசாமியின் படைப்புகளில் மனிதர்களுக்கு இணையான முக்கியத்துவம் நாய்களுக்கு உண்டு. இந்நாவலிலும் நாய் வாலை ஆட்டிக்கொண்டு மலைமேட்டு முனியில் தொடங்கி முக்கிய கதைமாந்தர்கள் வரை அனைவரோடும் மணி, பீட்டர், சீசர், வெள்ளச்சி, டைகர், ஜிம்மி என வெவ்வேறு பெயர்களில் நிழல் போல பயணிக்கிறது. மனிதர்கள் அவ்வப்போது மறந்து போகும் அன்பையும் நன்றியையும் தனது இருப்பின் வழியாக தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.2017 ஆம் ஆண்டு எனது கெடா பயணத்தின் போது சீ.முத்துசாமியைச் சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றபோது கறுப்பு நாய் பின்தொடர அவர் வந்து கதவைத் திறந்த காட்சி ஒரு சித்திரமாய் மனதில் நிழலாடுகிறது.

வெண்முரசின் கிராதம் நாவலில்“இடக்கையில் மண்டைக்கப்பரை வெண்பல் சிரிப்புடன் இருக்க இடைதொட்டுத் தொங்கிய கங்காளத்தை வலக்கையின் சிறுகழியால் மீட்டியபடி நடந்து வந்தான். அவனுக்குப் பின்னால் நிலம் முகர்ந்தும், காற்றுநோக்கி மூக்கு நீட்டியும், விழிசிவந்த கரியநாய் வால் விடைக்க தொடர்ந்து வந்தது” என காட்டாளனாக சிவன் வருவதை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருப்பார். சீ.முத்துசாமி என்ற காட்டாளனும் கித்தாக்காட்டு மொழி என்னும் கங்காளத்தை மீட்டிக் கொண்டு தோட்டப்புறத்து மண்ணை உடலெல்லாம் பூசிக்கொண்டு கரிய நாய் பின்தொடர மண்டைக்கப்பரையில் தனது மக்களின் வாழ்க்கை நினைவுகளை நிரப்பிக்கொண்டு ஒவ்வொரு படைப்பிலும் வாசகனை நோக்கி இறங்கி வருகிறார். இந்த மண்ணின் மணத்திலும் மொழியின் சுகத்திலும் ரிஷி பத்தினிகளைப் போல் மனம் கிறங்கிப்போகும் வாசகன் இந்த பிச்சாண்டியைப் பின்தொடர்வது அன்றி வேறு என்ன செய்ய இயலும்?

அழகுநிலா

சிங்கப்பூர்

சீ.முத்துசாமியின் மலைக்காடு – காளி பிரசாத்
சீ.முத்துசாமியின் மலைக்காடு- ஹரன் பிரசன்னா
எழுச்சியின்மையின் கலை – சீ.முத்துசாமியின் புனைவுலகு
சீ.முத்துசாமி என்னும் முன்னோடி
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-41
அடுத்த கட்டுரையானை – கடிதங்கள்