மலைகளை அணுகுவது

நவீன துரோணர்

[ஊட்டி சந்திப்புக்குப்பின் சைதன்யா நண்பர்களுடன் க்ளென்மோர்கனில் உள்ள குரு டேவிட்டின் ஆசிரமத்திற்குச் சென்றிருந்தாள்.  அவர்கள் குரு ஃப்ரெடியின் மாணவர்கள். குரு ஃப்ரெடி என அழைக்கப்படும் ஃப்ரெடி வான் ஃபோர்ட்  நடராஜகுருவின் மாணவர். விற்கலை நிபுணர். அதையே யோகசாதனையாகக் கொண்டவர். அவருடைய குருமரபு நித்ய சைதன்ய யதியின் மரபுக்குத் தொடர்பில்லாத தனியான அமைப்பாக நீடிக்கிறது.  அதில் ஒரு கிளை குரு டேவிட்டின் அமைப்பு. ஊட்டி எமரால்ட் அணைக்கட்டுக்கு அப்பால் கிளென் மார்கன் என்னும் ஊரில் உள்ளது அவருடைய குருகுலம். 2010ல் அங்கே சென்றிருக்கிறோம். நான் அதன்பின் சென்றதில்லை. வனத்துறை அனுமதி பெற்றுச் செல்லவேண்டிய இடம்].  சைதன்யா எழுதிய கடிதம்]

அன்புள்ள அப்பா,

என் நினைவில் க்ளென்மோர்கனில் உள்ள நடராஜ குருகுலத்திலிருந்து தெரியும் அந்த மலைச்சிகரம் மிக பெரிதாக இருந்தது. குரு டேவிடையும்  குரு பிரிட்ஜெட்டையும் நாங்கள் பார்க்க அங்கு சென்றோம். அந்த மலை சரிவை பல வருடங்களுக்கு பிறகு மீண்டும்  பார்த்த  போது எனக்கு முதலில்  தோன்றியது ஒரு சிறிய ஏமாற்றம் தான்.

வண்டியில் இருந்து இறங்கிய உடன் நிகிதா ஆஷ்ரமத்திற்கு வெளியே மேய கட்டப்பட்டிருந்த கரிய கன்றை நோக்கி சென்றாள். தலையை ஆட்டி ஆட்டி ஆர்வத்துடன் மேய்ந்து கொண்டிருந்த அதன் மூக்கிலும் முதுகிலும் தடவி கொடுத்து சிரித்தாள். அஜி சென்று வெளியிலிருந்து பூட்டப்பட்டிருந்த ஆஷ்ரம ‘கேட்’ஐ தள்ளி பார்த்தான். உடனே உள்ளிருந்து குரு டேவிட் உற்சாகமாக சிரித்தபடி வந்து கேட்’ஐ திறந்தார்.

எனக்கு அவர் முகம் ஞாபகம் இல்லை. ஆனால் அவரது சிரிப்பும் அவர் நடையும் “நமக்கு மிகவும் பழக்கம் உள்ளவர் இவர்”  என்ற உணர்வை அளித்தது. ஸ்வேத்தா, நிகிதா, அஜி, நவீன் மற்றும் விஜயபாரதி என்று நாங்கள் ஆறு பேர் சென்றிருந்தோம். உள்ளே வந்த உடன் இருக்கைகள் குறைவாய் இருப்பதை கண்டு யார் இருக்கையில் அமர்வது யார் தரையில் அமர்வது என்று தடுமாறினோம். பின் இருக்கையை எங்கு போடுவது எதை நோக்கி போடுவது என்று சிறிது நேரம் சென்றது. அதற்குள் டேவிட் காவி வேஷ்டியை மடித்து கட்டி கொண்டு மூன்று சேர்களை உள்ளிருந்து எடுத்து வந்து போட்டார்.

அவர்களது ஆஷ்ரமத்தின் ஒரு பக்கம் ரோடும் மறு பக்கம் பள்ளத்தாக்குமாக, அதன் மறு எல்லையில் அந்த செங்குத்தான மலைசிகரமும் அமைந்திருந்தது. இரு பாகங்களாக பிரிக்கப்பட்டிருந்த அவர்களது ஆஷ்ரமம் மொத்தம் ஆறு சிறிய அறைகளே கொண்டிருந்தது. அதற்குள் மூன்று படுக்கை அறைகள்,  முக்கிமான இலக்கிய மற்றும் தத்துவ நூல்கள் அடங்கிய ஒரு சிறு லைப்ரரி. ஊறுகாய் குப்பிகள் வரிசையாக அடுக்கப்பட்ட, மலைச்சரிவை நோக்கி திறக்கும் சன்னல்களை கொண்ட, சிறிய சமையலறை. மற்றும் அந்த ஊர் மக்களுக்காக சில அவசிய மருந்துகளை கொண்ட ஒர் அறை.

நாங்கள் இருக்கைகளை வட்டமாக போட்டுக்கொண்டு அமர்ந்தோம். ஆரம்பத்தில் குரு டேவிட் அதிகம் பேசவில்லை. குரு பிரிட்ஜெட் குழந்தைகளிடம் கேட்பது போல “நீ என்ன செய்கிறாய்?” என்று பொறுமையாக ஒவ்வொவரிடமும் கேட்டு கொண்டார். டேவிட் அவ்வப்போது பிரிட்ஜெட் கூறியதை ஒரு கண்ணை சுருக்கி தலையை ஒரு பக்கம் சரித்து பிரிட்டிஷ் உச்சரிப்பில் ஆமோதித்து ஏதேனும் கூறினார். அவரது உச்சரிப்பு பிபிசி ஆங்கிலம் போல் அல்லாமல் கொஞ்சம் கிராமத்து மொழியாக இருந்தது.

குரு பிரிட்ஜெட் சில அறிவுரைகள் கூறினார். அவை நாம் பல நூறு முறை வாட்ஸாப் ஸ்டேட்டஸ்’இல் பார்த்தவை தான். ஆனால் அந்த மலை உச்சியில் இருந்து கொண்டு அவர்கள் அதை கூறும்போதே அவை அர்த்தம் கொள்கின்றன. குரு டேவிடிடம் அஜி வழக்கம் போல் ஷோபென்ஹயூர் குறித்தும் வாக்னர் குறித்தும் கூறினான். டேவிட் வாக்னர் பெயரை அவன் கூற கேட்டு மிகவும் ஆச்சரியபட்டு “நான் உன் வயதில் இருந்த போது ராக் அண்ட் ரோல் கேட்டு கொண்டிருந்தேன்” என்று கூறி சிரித்தார்.

பின் அவர்கள் ஆஷ்ரமத்தை சுற்றி காண்பிக்க எழுந்தனர். அப்போது டேவிட்  “கவிதை உள்ளுணர்வு சார்ந்தது என்று கூற முடியுமா ?”என்றார். நான் “ஆம் கவிதைக்கான மொழி ஆழ்மனதிலிருந்து எழ வேண்டும். அது பெரும்பாலும் கவிஞர் விழிப்புணர்வுடன் இல்லாத போதே நிகழ்கிறது” என்று பொதுவாக கூறினேன். அவர் ஷெல்லி, ராபர்ட் பர்ன்ஸ் மற்றும் வில்லியம் பிளேக்கை அவருக்கு பிடித்தமான கவிஞர்கள் என்று கூறினார். அவர்கள் இருவருமே எங்களை நடராஜ குருவின் புத்தகங்களை வாசிக்கும்படி கூறி வலியுறுத்தினார். டேவிட் ஏதும்  சந்தேகங்கள் இருந்தால் அவரிடம் வந்து கேட்கும்படி சொன்னார்.

பின்னர் அவர் இப்போது மனிதர் செய்யும் வேலைகள் அனைத்தும் அவன் ஆன்மாவை திருப்தி படுத்தாமல் வெறும் பொருட்கள் சேர்க்கும் எந்திரமாக அவனை மாற்றுகிறது என்றார். ஆனால் அந்த எல்லைக்கு சென்று பின் இங்கு தான் திரும்பி வருவான் என்று தலையை சரித்து கொண்டு கூறினார்.  பின் என்ன குடிக்கிறீர்கள் என்று கேட்டனர். சிறிது நேரம் “கிரீன் டீ!” “மின்ட் டீ!” “நார்மல் டீ” “வித்… வித்தவுட்” என்று எது சுலபம் என்று தெரியாததால் மாறி மாறி கூறிக்கொண்டிருந்தோம்.

பின்னர் குரு டேவிடே ஒரு முடிவுக்கு வந்து எங்களுக்கு மின்ட் கிரீன் டீ போட்டு வைத்து விட்டு வெளியே வந்தார். அது தயார் ஆவது வரை தோட்டத்தை பார்க்கலாம் என்று பின் புறம் அழைத்து சென்றனர். டேவிட் அவரது காய்கறி தோட்டத்தை பற்றி பேச பேச மேலும் உற்சாகம் அடைந்தார். ஒரு வரிசையில் தேங்காய் கொப்பரைகள் வைக்கபட்டிருந்தன. அதை சுட்டி அது எதற்கு என்று கேட்டேன். அது முளைவிட்டிருக்கும் விதைகளை வெயிலில் இருந்து பாதுகாக்க என்று கூறினார்.இன்னொரு வரிசையில் மூட மறந்துவிட்டிருந்தார்.  அவர்  அதை ஓடிப்போய் மூட நானும் இணைந்து கொண்டேன்.

மேலே தெரியும் இலைகளை வைத்து வேரில் கம்பிளிப்புழு இருப்பதை கண்டறிய முடியும் என்று கூறி கொண்டு சிறிது பாதிப்படைந்திருந்த ஒரு செடியை சுற்றி விரலால் மெல்ல தோண்டினார். உள்ளே ஒரு சாம்பல் நிற கம்பிளிப்புழு சுருண்டு கிடந்தது. அதை எடுத்து அஜியின் கையில் மெதுவாக வைத்தார். அதன் உடலில் உயிர் விசை வட்ட வட்டமாக வந்து அதை முன்னால் உந்த அது பதறியடித்து கொண்டு ஊர்ந்து சென்று அஜியின் விரல் இடுக்கில் தலைகுப்புற விழுந்தது. டேவிட் பரிவுடன் அந்த “லிட்டில் கய்”யை எடுத்து ஆஷ்ரமத்திற்கு வெளியில் போட்டார்.

குரு ஃப்ரெடி

எதற்காக கேட்’ஐ வெளியில் இருந்து பூட்டி வைத்திருக்கிறீர்கள் என்று அஜி கேட்டான். டேவிட் அதற்கு “அப்போது தான் மனதை திறந்து வைக்க முடியும்” என்று கூறினார். அவர்கள் அந்த வேலிக்குள் அவர்களின் விழைவை ஒடுக்கி கொண்டு இயல்பான ஒரு வாழ்க்கையை வாழ்வது போல் தோன்றியது. வேலியை மீறி உள்ளே நுழையும் புழு பூச்சிகளை மெல்ல உந்தி வெளியே தள்ளி விட்டனர். கிளம்ப தயார் ஆனோம். பிரிட்ஜெட் உள்ளே சென்று ஆளுக்கொரு மாம்பழம் எடுத்து வந்து கொடுத்தார். அதை வாங்கி கொண்டு இறுதியாக ஒரு முறை அந்த சிகரத்தை பார்த்தேன். அப்போதும் அது என் நினைவில் இருந்த மலைச்சிகரத்தை விட சிறிதாகவே தோன்றியது.

சைதன்யா

முந்தைய கட்டுரைஇஸ்லாமும் உபநிடதங்களும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-36