[அந்தியூர் மணி ஊட்டி குரு நித்யா அரங்கில் முன்வைத்த இரு மரபுக்கவிதைகளும் அவற்றின் மீதான வாசிப்பும்]
நண்பர்களே,
ஊட்டி காவிய முகாமில் நடந்த என்னுடைய மரபுக் கவிதை பற்றிய அரங்கில் நான் தேர்ந்தெடுத்து என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்ட இரு பாடல்களை பற்றி விளக்கமாக கட்டுரை வடிவில் எழுதுமாறு ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் கேட்டுக்கொண்டார். ஆகவே நான் தேர்ந்தெடுத்த இரண்டு பாடல்களையும் அதனுடைய விளக்கங்களையும் இந்த கட்டுரையாக்குகிறேன்.
1.புறநானூறு.பாடல்-12
பாடியவர் : நெட்டிமையார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை : பாடாண்.
துறை : இயன்மொழி.
பாணர் தாமரை மலையவும், புலவர்
பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்,
அறனோ மற்றஇது விறல்மாண் குடுமி!
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு,
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே?
இனி இதற்கான மரபான விளக்கம்.
உன்னைப் பாடும் பாணர்கள் நீ வழங்கும் பொற்றாமரை விருது அணிகலனைத் தலையில் சூடிக்கொள்கின்றனர். புலவர்கள் நீ வழங்கும் யானைமீதும் தேர்மீதும் ஏறிச் செல்கின்றனர். வெற்றியைக் குவிக்கும் ‘குடுமி’ வேந்தே! பிறர் மண்ணைக் கைப்பற்றும் கொடுமையைச் செய்து அங்குக் கிடைத்த பொருள்களைக் கொண்டு நீ விரும்புபவர்களுக்கு மட்டும் இன்ஃபம் தரும் செயல்களைச் செய்தல் அறச்செயலோ? என்பதாகும்.
இந்தப் பாடலைப் பொதுவாக வஞ்சப்புகழ்ச்சி எனச் சொல்வதுண்டு. அதாவது பாண்டியனான பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை அறம் இதுதானா என்று கேட்பதுபோல அவனுடைய கொடைத்தன்மையை வியந்து பாராட்ட கூடிய பாடல் இது என்று பொதுவாகச் சொல்வதுண்டு.
நான் அதிலிருந்து மாறுபட்டு இந்த பாடலை என் வாசிப்பில் எப்படி பொருள் கொள்கிறேன் என்பதை மூன்று கருத்துக்களைப் பார்க்கலாம்.
அ. முதலில் இந்தப் பாடல் மரபார்ந்த பார்வையில் இருந்து விலகி இது ஒரு வஞ்சப்புகழ்ச்சி என்று கொள்ளாமல் அறநெறியைப் போதிக்கக் கூடிய பாடல் என்று எண்ணுகிறேன். அதற்காக நான் இந்தப் பாடல் உருவான காலத்தில் இருந்த மற்ற பாடல்களையும் அந்தக் காலத்தில் மக்களுக்கு இருந்த நீதி நெறிகளை பற்றிய கண்ணோட்டமும் தேவை என்று எண்ணி அந்தக் காலத்தைப் பற்றிய வேறு ஏதேனும் பாடல்கள் புறநானூற்றில் இருக்கிறதா என்று தேடும்போது இந்த பாடலுடன் தொடர்புடைய காலத்தில் இருக்கக்கூடிய பாடல்கள் புறநானூற்றில் இருக்கின்றன.
இதில் பாடப்பட்ட குடுமியைப் பற்றிப் புறநானூற்றில் 6,9,12,15,64 ஆகிய பாடல்கள் பாடப்பட்டுள்ளன.அதில் முதல் பாடலான 6ல்
வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்,
குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்,
(பொருள்;வடக்கில் பனிபடர்ந்த இமயமலைக்கு அப்பாலும், தெற்கில் குமரிமுனைக்குத் தென்பாலும், கிழக்கில் தோண்டப்பட்ட கடலுக்கு அப்பாலும், மேற்கில் பழமையான கடலுக்கு அப்பாலும்,)
எனும் காரிக் கிழார் பாடிய பாட்டு இந்தியா என்று இன்று நாம் சொல்லும் இந்த நிலப்பரப்பு அன்றே ஒரு பண்பாட்டு அடையாளமாக உருவாகி வந்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் பண்பாட்டு அடையாளம் அதில் இருக்கக்கூடிய அனைத்து மக்களையும் தன்னுடைய மக்களாக பண்பாடு அடிப்படையில் அல்லது நிலப்பரப்பின் அடிப்படையில் ஏற்றுக்கொள்கிறது. இப்படி பண்பாடு அல்லது நிலப்பரப்பின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படும் மக்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட அறம் ஏதேனும் ஒன்று அன்று இருக்கிறதா என்று பார்த்தால் பாடல் 9ல் அப்படியான ஏற்றுக்கொள்ளத்தக்க அறம் என்று ஒன்று உருவாகி இருப்பதை காட்டுகிறது.
ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்.
(பொருள்:பசு, பசுப் போன்ற இயல்புடைய பார்ப்பனர், பெண்டிர், மரபுநோய் உள்ளவர், இறந்த முன்னோருக்குக் கடன் செலுத்தும் குழந்தைப்பேறு இல்லாதவர் ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள்.)
எனும் பகுதி போரில்கூட அறம் என்ற அடிப்படை கருத்து உருவாகி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது இந்தப் பாடலையும் பாடி இருப்பவர் நான் குறிப்பிடும் பாடலைப் பாடிய நெட்டிமையாரே.
ஒரு பண்பாட்டு அல்லது நிலத்தில் வாழும் அனைத்து மக்களையும் தன்னுடைய மக்களாக கருதுவதன் மூலம் உருவாக்கும் மனநிலை அனைத்து மக்களுக்குமான மானுட அறத்தை உருவாக்கி இருக்கும் என்று எண்ணி இது அறத்திற்காக நெட்டிமையார் பாடிய பாடல் என்று என்னுடைய வாசிப்பு முன்வைக்கிறேன்.
2.காலமும் சூழலும் இந்த பாடலை அறத்திற்கான பாடல் என்று சொல்லும்போது அந்த பாடலைப் பாடிய நபர் அந்த அறத்தை பெறுவதற்கான அறிதலை உடைய சாத்தியமான வரா என்று பார்க்கும்போது இந்தப் பாடலைப் பாடியவர் நெட்டிமையார் என்னும் பெண்பாற் புலவர். அனைத்து அன்னையரும் ஈன்று முலைதந்து பெற்ற ஞானம் என்பது பெரும் அறிதல். அந்த அறிவைக் கொண்டு இந்தப் பாடலில் இருக்கக்கூடிய அறிதலை அதாவது பிறரை துன்புறுத்தி தன்னைச் சார்ந்தவனுக்கு நன்மை செய்யும் குணத்தை மறுக்கும் அறக் கோட்பாட்டைப் பெற்றுக்கொள்ள தகுதியான நபர் தான் நெட்டிமையார் என்பது என்னுடைய கருத்து.
நான் விளக்கும் இந்தப் பாடலின் நோக்கில் வஞ்சப்புகழ்ச்சி என்ற எண்ணம் விலகி இது அறத்திற்கான பாடலாக எடுத்துக் கொள்ள முடியும். இந்த விளக்கத்தை நான் கொடுக்கும் போது ஜெ இதில் இருந்து மற்றொரு பார்வையை முன்வைத்தார் அது முக்கியமாக இதனுடன் தொடர்புடைய கருத்து. “நம்முடைய திணையும் துறையும் அதன்விளக்கமும் நமக்கு முழுவதுமாக சோழர் காலத்தில் உருவாகி வந்தவை. அன்றைய காலகட்டம் பேரரசுகளின் காலம் என்பதால் அரசனை போற்றி பாடக்கூடிய பாடலாகத்தான் அதற்கு முன்பு இருந்த பாடல்கள் இருந்திருக்கும் என்று எண்ணி அரசனை உயர்த்தும் வகையில் இருப்பதாக திணையும் துறையும் விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் சங்கப் பாடல்கள் உருவாகி வந்த காலங்கள் என்பவை குடியவைகளின் காலம். ஆகவே அங்கு புலவர்கள் அரசனை வியந்தேத்தாமல் அறத்தைப் பற்றிப் பாடி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. புலவர்கள் அனைத்து அரசர்களுக்கும் நீதி நெறிமுறைகளை போதிப்பதை மற்ற சங்கப்பாடல்களில் எளிமையாகவே நாம் பார்க்க முடியும் ஆகவே இதை எப்படி எடுத்துக் கொண்டு அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. மேலும் போருக்கான ஆதரவு குரலாக ஒரு பெண்பாற் புலவர் பாடி இருந்தாலும் அதற்கான எதிர்ப்பையும் சில பெண்பாற் புலவர்கள் பாடியிருக்கிறார்கள்” என்றார்.
3 இதனுடைய இலக்கியச் சுவை என்று பார்க்கும் போது” இந்தப் பாடலில் இருக்கக்கூடிய சமஸ்கிருதத்தில் காவியத்திற்கு அழகு சேர்க்க கூடிய வக்ரோக்தி எனும் வளைத்துச் சுட்டிச் சொல்லும் இலக்கிய முறை இந்த பாடலின் சிறப்பாக இருக்கிறது. அது இல்லாமல் இதை அறத்திற்கான பாடலாக எடுத்தால் இலக்கியமாக இந்தப் பாடலை மாற்றுவது எது “என்று ஜெ கேட்டார். இந்தப் பாடலில் இலக்கிய இன்பமாக இருப்பது ஒரு பாதியை சுட்டி மறுபாதியை நம்முடைய சிந்தனையால் விரித்துக் கொள்ள கவிஞன் கொடுக்கும் இடம் இந்தப் பாடலின் இலக்கிய இன்பமாக இருக்கிறது. பாணர் தாமரை மலையவும் என்பதில் இங்கு இவர்கள் நாட்டில் பாணர்கள் பூக்களை சூடும் போது இவர்கள் படையெடுத்துச் சென்ற எதிரி நாட்டில் அடுத்த ஒரு வருடம் யாரும் மலர்களை சூடாமல் அங்கு இருக்கக்கூடிய போரிடக் கூடிய அனைவரும் அழிக்கப்பட்டு விடுவார்கள். புலவர்கள் பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும் என்பதில் இங்கு புலவர்கள் பரிசாகப் பெற்று செல்லக்கூடிய யானையும் தேரும் எதிரி நாட்டின் நகரங்களை முழுவதுமாக அழித்து விடும். இவற்றில் ஒரு பாதியை சொல்லி மறுபாதியை நம்முடைய சிந்தனையால் விரிக்கச் செய்வது இந்த பாடலில் இலக்கிய இன்பம் ஆகும்.
இரண்டாவது பாடல்
எள்கல் இன்றி இமையவர் கோனை ஈசனை வழிபாடு செய்வாள்போல்
உள்ளத்து உள்கி உகந்துமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி வெருவி ஓடித்தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே
(பொருள்; எவ்வித ஐயங்களும் இன்றி தேவர்கள் அனைவருக்கும் தலைவனான ஈசனை வழிபாடு செய்ய மனத்தால் எண்ணி வழிபடச் செல்ல அதைக் கண்ட இறைவன் வெள்ளத்தைக் காட்டி மிரட்ட தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தான் வழிபட உருவாக்கிய லிங்கத்தை தழுவ வெளிப்பட்ட கள்ளக் கம்பனை என் தலைவனை காணக் கண் அடியேன் பெற்றவாறே) (திருமுறை 7-61-10)
இந்தப் பாடல் இரண்டு புராணக்கதைகளுடன் தொடர்புடையது.
அ.காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய ஏகாம்பரேஸ்வரர் கோவில் தல புராணத்தின் படி இத்தலத்தின் இறைவியான ஏலவார்குழலி அம்மையார், உலகம் உய்யவும், ஆகமவழியின்படி ஈசனை பூசிக்கவும் கயிலையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார். அங்கு கம்பையாற்றின் கரையில் திருவருளால் முளைத்து எழுந்த சிவலிங்கத் திருவுருவைக் கண்டு பூசித்தார். அதுபொழுது கம்பை மாநதி பெருக்கெடுத்து வந்தது. அம்மையார் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டார். அப்பொழுது இறைவனது லிங்கத் திருமேனி குழைந்து வளைத்தழும்பும் முலைத் தழும்பும் தோன்றக் காட்சியருளினார்.
ஆ.சுந்தரரர் பெருமான் திருவொற்றியூரில் சங்கிலியாரை மண முடித்தபின், திருவாரூர் செல்லவும், அங்குள்ள வீதிவிடங்க பெருமானாரை வழிபட எண்ணங் கொண்டு திருவொற்றியூரை வி்ட்டு நீங்கும் போது சங்கிலியாரை மணப்பதற்கு ” இவ்வூரை விட்டு போகேன் ” என செய்த சத்தியம் மீரப்பட்டதால், இதனா்ல் ஈசன் தந்த சபாத்தால் இருகண்களும் இழந்து குருடானார். அப்போது சுந்தரரர் இந்த கொடுந் துயரத்தை நீக்கும் பொரு்ட்டு இறைவரை நினைந்து திருப்பதிகங்கள் பாடினார். பின் காஞ்புரம் ெசன்று ஏகாம்பர நாதரை வணங்கி உன்னை தரிசிக்க என் கண்ணைத் தந்தருள் என்று வேண்டி மனம் உருகி பிராத்தனை செய்தார். அப்போது இறைவர் இடக்கண் மட்டும் பார்வை கொடுத்தருளினார். அப்போது பாடிய பதிகமே இது. இந்த இரு புராணங்களை வைத்து இந்தப் பாடலில் சூழலை நன்றாக புரிந்து கொள்ள முடியும்.
இ. இந்தப்பாடல் வழக்கமாக ஒரு உணர்வெழுச்சியைத் தூண்டக் கூடிய பக்தி பாடல் என்று பொதுவாக கூறப்படுகிறது. இதில் இருக்கக் கூடிய கள்ளக்கம்பனை என்பது இறைவனை செல்லமாக திட்டுவது உணர்வெழுச்சியை பக்தனுக்கு தூண்டக்கூடியது. இலக்கியமாக மாற்றுவது இதில் இருக்கக் கூடிய அஞ்சி வெருவி எனும் இரு சொற்கள். அவை உண்மையில் இதில் ஒரு நாடக தருணத்தை உருவாக்குகின்றன. இறைவன் வெள்ளத்தைக் காட்டி பார்வதியை அச்சமுறுத்த உடலில் ஏற்படும் அச்சமும் அதன் இணையாக மனதில் ஏற்படும் விரும்புதலும் நடைபெற்று தன் உயிரை விட மேலாக வழிபாடு செய்யக் கூடிய லிங்கத்தை காப்பாற்ற முடிவு எடுத்து அதைக் காப்பாற்ற ஆரத்தழுவுகிறாள். அப்போது தான் இறைவன் அவனுக்கு அருள் புரிகிறார் இதுவே இந்த பாடலை இலக்கியமாக மாற்றுகிறது.
ஈ. இதற்கு அடுத்து இந்தப் பாடலில் எனக்கு ஒரு அறிதல் அல்லது தரிசனம் இருப்பதாக தோன்றுகிறது. இதில் இருக்கும் இறைவியாகிய பார்வதியை போல எவ்வித தயக்கங்களும் இன்றி தன்னுடைய கொள்கையின் வழியில் அனைத்துச் செயல்களையும் செய்து கொண்டிருக்கும்போது அதை முறியடிக்கும் விதத்தில் சூழல் அதைக் கைவிட்டு போவதற்கான அனைத்து வேலைகளையும் செய்யும். சூழலின் காரணமாக உயிரா கொள்கையா எனும் சூழல் ஏற்படும்போது உயிரை விட கொள்கையே பெரிதென எண்ணி அதற்காக உயிரையும் கொடுக்கத் தயாராகும்போதுதான் அந்தத் துறை அல்லது கொள்கையின் உயரிய அறிதல் கிடைக்கும். அனைத்தையும் கைவிட்டு நிற்கும் நபரின் முன் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளுவதே உயரிய அறிதல்.அதுதான் இயற்கையின் விதி.