புதிய கவிகளில் நம்பிக்கையூட்டும் கவிகளாக மூவரை சொல்லலாம்.விஷ்ணு குமார், சூர்யா, துரை ஆகியோர். தங்கள் கவிதைகளை மங்கலாக தெரிந்து கொண்டிருப்பவர்கள் இவர்கள். பொது உலகப்பாடுகளில் இருந்து விலகி தங்கள் கவிதைகள் இன்னதென உணர்ந்து கொள்வதே, வெளிப்படுத்துவதே புதிய கவிஞனை அடையாளம் காணச் செய்கிறது. ஆரம்பகால கவிஞன் புதிய மின் ஊட்டம் ஒன்றினை தன்னில் கொண்டிருக்கிறான். இந்த அம்சம் இம்மூவருக்குமே பொதுவானது. ஆரம்ப கால கவிகள் தங்களை மிகைப்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தால், அந்த எதிர்மறைப் பண்பிலிருந்து வெளியேறி வர நெடுங்காலம் ஆகிவிடும். இந்த மூவரிடமும் இந்த எதிர்மறை பண்பு குறைவு. தங்களுக்கான தன்மை என்ன என்பதை கண்டுணர்ந்தவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.
ஒரு புதிய கவிஞனின் ஆரம்ப நூலில் ஐந்திற்கும் மேற்பட்ட கவிதைகளை; அவனுடைய சுயத்தை அடையாளம் காட்டுவனவாக, அவனில் இருந்து மட்டுமே உதிக்கத் தகுந்தனவாக ஏற்க இயலும் எனில் அவன் ஒரு சிறந்த கவியாகும் வாய்ப்பு கொண்டவன் என கருதலாம். அவ்வகையில் துரையின் மத்தி கவிதைத் தொகுப்பில் சிறந்த கவிதைகள் பல உள்ளடங்கியிருக்கின்றன. ஒரு கவிக் குரல் இந்த கவிதைகளில் அடிப்படையாக தொனிக்கிறது. மீன்கள் பற்றிய நிறைய கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது என்றாலும் எனக்கு விஷேசமாக பிடித்த கவிதை இது
“வயோதிக யாசகனுக்கு
யாசகமிட மனமிருந்தும்
இடாது வந்தவன்
அன்றிரவு கை கழுவினான்
அவை வேறு யாரோ
கைகளை போலிருந்தது
அத்தனை முறைக்கு மேல் கழுவியும்
இன்னும் வழுவழுத்துக் கொண்டேயிருக்கிறது
வெள்ளைத் திருவோடு மாதிரியான வாஸ்பேசினில்
விடிய விடிய உதறிக் கொண்டேயிருக்கிறான்”
இந்த கவிதையின் உள்ளடக்கம் மிகவும் எளிமையானது.இந்த உள்ளடக்கத்திற்கு எத்தனையோ பக்கங்கள் உண்டு.அதில் சுய அருவெறுப்புணர்ச்சியும் ஒன்று.அதனை அவ்வளவு கச்சிதமாக ஒருவனால் நமக்குள் பொருத்திவிட இயலுமாயின் அவன் கவியாகத்தானே இருந்தாக வேண்டும் ?
“கூடாரமொன்றினுள் அடுக்கிய
டம்ளர் கோபுரத்தின் மீது
பந்து எறியப்படுகிறது
டம்ளர்கள் சரிகின்றன
துளி மோதி நினைவுகள்
உதிருமே அதுபோல
பெரிய எலும்புத் துண்டை
கவ்விய டாபர்மேனைப்போல துள்ளுகிறான்
எல்லோரும் கைதட்டுகிறார்கள்
கூடாரத்தின் பின்னிருந்து மீண்டும்
பழையபடி டம்ளர்களை
சோர்வோடு கோபுரங்களாய்
அடுக்குகிற கிழவனே !
நீதான் நீயேதான்
பழஞ்சேர்த்தி
ஞாபக அழுத்தி
நினைவடர்த்தி
மீள்மனதி”
இதுபோன்ற தன் உலகம் சார்ந்த சிறப்பான கவிதைகள் நான்கைந்து உள்ளன.
“தவளையொன்று
இருளுக்குள் பாய்ந்தது
இருளுக்குள் நுழைய கதவுகள் இல்லையென்கிறார்கள்
உண்மைதான் வெளிச்சத்திலிருந்து
இருளுக்குள் நுழைய கதவுகளேயில்லை
ஆனால் இருளுக்குள்ளிருந்து
இன்னொரு இருளுக்குள் நுழைவதற்கு
நிறைய தடுப்புகள்”
இந்த கவிதைகளை போன்றே “கூடை நிறைய”,”அவளுக்கு எதிரே கடல் அமர்ந்திருந்தது ” போன்ற கவிதைகளும் சிறப்பானவை.பாலை நிலவனுக்கும் இவருக்கும் இடையில் நீளமான கவிதைகளில் சொல்முறையில் ,திடுக்கிடும் வரிகளை உருவாக்குவதில் சில ஒருமைப்பாடுகளைக் காண முடிகிறது.”இன்னொரு தலையையும் அவருக்கு தின்னக் கொடுக்க வேண்டும்”,”பின்னிரவில் ஒரு இருமல் சப்தம் கேட்டது .யாரென்று கேட்டேன் ? நான்தான் அமைதி என்றோரு குரல் கேட்டது ” போன்ற வரிகள் அதற்கு உதாரணமாகத் தக்கவை.
மீன்கள் பற்றிய துரையின் கவிதைகளில் மிகவும் விஷேசமான கவிதை இது
பின்னிரவு அவனிடத்தே பிடிபட்ட
எல்லா மீன்களும் காகங்களின்
சாயலை ஒத்திருந்தன
பரப்பி விலையைக் கூவத் தொடங்கியவன்
சமயத்திற்கு மேல் கிலோ காகம்
எழுபதுவென பலத்து அலறத் தொடங்கினான்
சந்தையே அவனைத் தான் பார்த்தது
சொன்னால் நம்பமாட்டீர்கள்
எங்களூர் சமுத்திரம் கூட
சில நுற்றாண்டுகளுக்குப் பிறகு அன்றுதான்
படுவேகமாக பின்னோக்கியும் நடந்தது”
தமிழுக்குச் சிறந்த கவியொருவனின் வருகை.நல்வரவாகுக .துரைக்கு வாழ்த்துகள்
லக்ஷ்மி மணிவண்ணன்
***