‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-36

ஆறாவது களமான குமரியில் அமர்ந்திருந்த சூதரான விசுத்தர் தாழ்ந்த குரலில் அகன்ற தோற்பரப்பு கொண்ட கிணைப்பறையை சுட்டுவிரலால் சுண்டி புலி உறுமுவது போன்ற மெல்லிய ஓசையை எழுப்பி பாடினார். அவருடன் இணைந்துகொண்ட பிற சூதர்களின் குரல்களும் அவ்வாறே உள்ளடங்கி நெஞ்சுக்குள் ஒலிப்பதுபோல் எழுந்தன. வெண்கல்லாக புதனும் பொற்கலத்தில் நீர் வடிவில் நாராயணனும் அச்சொற்களைக் கேட்டு அமர்ந்திருந்தனர். போர்க்களத்தின் காட்சியை விசுத்தர் பாடினார்.

தோழரே, இந்தக் காட்சியை நான் கண்டேன். இருபுறமும் படைவீரர்கள் தனித்து துயருற்று முகில் நிறைந்த வானின் கீழ் புழுக்களைப்போல சுருண்டு நிலம் செறிந்து கிடந்தனர். மழைக்குளிர் நிறைந்த காற்று அவர்களுக்கு மேல் ஓடிக்கொண்டிருந்தது. அவ்வப்போது எழுந்த இடியோசையில் அவர்கள் உடல் நடுங்கினர். பல்லாயிரக்கணக்கானவர்கள் கிடந்த அந்தக் களத்திலிருந்து எந்த ஓசையும் எழவில்லை. விழி நிறைக்கும் மாபெரும் ஓவியத்திரை எனத் தோன்றியது குருக்ஷேத்ரம். வீசும் காற்றில் அது சற்று நெளிவதுபோல், இடியோசையில் அதிர்வதுபோல், மின்னலில் பற்றிக்கொண்டதுபோல் தோன்றியது.

படைவீரர்கள் ஒவ்வொருவரும் களைத்து சொல்லிழந்துவிட்டிருந்தனர். வழக்கமாக ஒவ்வொருவரும் போர் முடிந்த பின்னர் தங்கள் இடங்களுக்கு திரும்புகையில் தங்கள் உற்றார் எவரையேனும் தேடி சேர்ந்துகொள்வதே வழக்கம். இன்நீரும் உணவும் அருந்தத் தொடங்குகையிலேயே அவர்கள் அக்கணம் வரை இருந்த இறுக்கத்தை இழக்கத் தொடங்குவார்கள். ஒவ்வொருவரும் தாங்கள் உயிருடன் இருப்பதன் உவகையை அடைவார்கள். ஆனால் அன்று உயிருடன் இருப்பதை அவர்கள் பிழையென்றும் சுமையென்றும் உணர்ந்தார்கள். ஒவ்வொருவரும் அதை உடலெங்கும் நிறைந்த ஒருவகைக் கசப்பென அறிந்தார்கள். அக்கசப்பு அவர்களின் முகத்தில் சுளிப்பென நிரம்பியிருந்தது.

ஒவ்வொருவரும் தங்கள் அருகிலிருந்தவர்களை வெறுத்தனர். தங்களை நீரிலோ ஆடியிலோ பார்த்துக்கொள்ள முடிந்தால் தங்களையும் அவ்வாறே வெறுத்திருப்பார்கள். வாளை எடுத்து தன் கழுத்தில் தானே பாய்ச்சிக்கொள்ள வேண்டுமென்ற உந்துதல் பலருக்கும் ஏற்பட்டது. மீளமீள எழுந்துகொண்டிருந்த அந்தத் தினவு ஏன் என்று அவர்களில் சிலர் உளம் விலகி எண்ணிக்கொண்டனர். பிற எந்த எண்ணத்தையும்விட உயிர் மாய்த்துக்கொள்ளும் எண்ணம் அகத்திற்கு மென்மையானதாக இருந்தது. அடிபட்டுக் கன்றிய தசைப்பரப்பின் மீது மெல்ல விரலோட்டுவதுபோல. அவ்வாறு தாங்கள் செய்யப்போவதில்லை என்று ஆழத்தில் அறிந்திருந்தும் அவர்கள் அதில் திளைத்தனர்.

சிலர் தன்னந்தனியாக படுத்து வானை நோக்கி விழிநீர் உகுத்துக்கொண்டிருந்தனர். சிலர் மண்ணில் முகம் புதைத்து மேலும் உள்ளே செல்ல விரும்புபவர்கள்போல் படுத்திருந்தனர். போர்க்களத்திலிருந்து இறந்த உடல்களை இழுத்துக்கொண்டு சென்ற ஏவலர்கள் இறந்தவருக்கும் வாழ்பவருக்கும் எந்த வேறுபாடும் தெரியவில்லை என்று கண்டனர். சடலங்கள் நடுவே கிடந்த சிலர் அவர்களின் கைபட்டதும் விழித்து சிலிர்ப்புடன் எழுந்தனர். பிணங்கள் எழுவதுபோல திடுக்கிடச் செய்தனர். பின்னர் பிணங்கள் எழுந்தாலும் திடுக்கிடாதவர்களாக அவர்கள் மாறினர்.

அவர்கள் கண் முன் பாண்டவப் படைகள் உரு சிறுத்து சுருங்கி வெறும் மக்கள் திரளென ஆகியிருந்தன. முன்பெல்லாம் படைவிரிவை நோக்குபவர்கள் நான்கு புறமும் விழி எல்லை கவிந்து பரந்திருக்கும் அதன் திரள்வைக் கண்டு விந்தையானதோர் உள எழுச்சியை அடைவதுண்டு. மானுடத்திரள் எந்நிலையிலும் தனிமனிதனுக்கு கொண்டாட்டத்தின் உவகையை, தான் கரையும் உணர்வை, தான் பெருகி பேருருக்கொண்ட பெருமிதத்தை அளிக்கிறது. அவனுள் என்றும் நலுங்கிக்கொண்டிருக்கும் தனிமையுணர்வு அழிகிறது. விழவுகளில் கைவீசி கூச்சலிட்டு கூவிக் கொந்தளிக்கும் நினைவுகள் அறியாமலேயே அவர்களுக்குள் எழுந்து முகம் மலரச்செய்யும்.

“விழி சென்று தொடவில்லை அல்லவா?” என்று இன்னொருவரிடம் ஒரு சொல்லேனும் அவர்களால் உசாவாமல் இருக்க இயலாது. “ஆம், பெருந்திரள்!” என்று மறுமொழி சொல்லும் முகமும் மலர்ந்தே தென்படும். தம்மவரும் அயலவரும் என அங்கிருக்கும் படை பிரிந்திருப்பதை அவர்கள் அறிந்திருந்தாலும்கூட விழி நேரடியாக உள்ளத்திற்கு அனுப்பும் காட்சியை ஆழம் பெற்றுக்கொள்வதில்லை. நாம் நாம் என்றே அவர்கள் திளைத்தனர். போர்க்களத்திலிருந்து குருதியாடி திரும்பி மதுக்களியாட்டமிட்டு துயின்று பின்னிரவில் சிறுநீர் கழிக்க எழும்போது விழிதொடும் வான்கோடு வரை சூழ்ந்திருக்கும் பந்தங்களின் பெருக்கைக் கண்டு உளம் விம்மி விழிநீர் உகுத்தனர்.

ஆனால் படை குறுகி வரத் தொடங்கிய பின்னர் ஒவ்வொரு முறை விழியோட்டி நோக்குகையிலும் அவர்கள் ஒரு துணுக்குறலை அடைந்தனர். ஒவ்வொரு நாளும் “எத்தனை சிறிதாகிவிட்டது படை” என்னும் சொற்களையே வெவ்வேறு வகையில் கூறினார்கள். “தெற்கு எல்லை மிக அணுகிவிட்டது” என்றோ “பீஷ்மரின் படுகளம் எத்தனை அப்பால் சென்றுவிட்டது” என்றோ “காடு அணுகி வந்துவிட்டதுபோல் தோன்றுகிறது” என்றோ கூறுவார்கள். எதிர்ச்சொல் எடுப்பவர்கள் பெரும்பாலும் தானும் ஒருமுறை அப்போதுதான் முதல் முறை என நோக்கிவிட்டு “ஆம்” என்றோ “நான் முன்னரே பார்த்தேன்” என்றோ ஒரு சொல் உரைப்பார்கள்.

அக்களத்திற்கு வந்த முதல் நாள் அவர்கள் அனைவருமே அங்கே விழுந்த உடல்களைக் கண்டு உளம் திகைத்து அமர்ந்திருந்தனர். சென்றவர்களை எண்ணி ஏங்கி அழுதனர். கொந்தளித்துக் குமுறி மெல்ல அடங்கி துயின்று மறுநாள் காலையில் எழுந்தபோது இருக்கிறேன் என்னும் தன்னுணர்வை அடைந்தனர். இதோ இங்கிருக்கிறேன். இவ்வொரு காலை, இன்றொரு நாள் மட்டுமாக இருக்கலாம். ஆனால் இன்னும் நான் இறக்கவில்லை. அவ்வுணர்வு அந்தக் காலையை அழகியதாக்கியது. அதன் வண்ணங்கள் செறிந்தன. அதன் ஒளி இனிதாக இருந்தது. அன்றைய ஒலியில் இருந்த இசைவை, அன்று காட்டிலிருந்த நறுமணத்தை, அன்று சந்தித்த முகங்களிலிருந்த நட்பை அவர்கள் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை.

பின்னர் ஒவ்வொரு காலையும் ஒளி கொண்டதாக, ஒவ்வொரு மாலையும் துயரின் அமைதியான இருள் செறிந்ததாக மாறியது. மாலையின் இருளே மறுநாள் காலையை அழகியதாக்கியது. காலையின் அழகு மாலையை மேலும் இருளாக்கியது. அந்தியின் உளம் அழுத்தும் சோர்வை வெல்ல அவர்கள் உளம் அழியும்படி குடித்தனர். கீழ்மைப் பாடல்களில் திளைத்தனர். தங்கள் எஞ்சுதலை தாங்களே கொண்டாடினர். சாவை கேலிநாடகமாக்கி கூத்திட்டனர். செத்தவர்கள் மீண்டதுபோல் நடிப்பது இரு படைகளிலும் ஒரு வேடிக்கையாக இருந்தது. ஒப்பாரிப் பாடல்களை வெவ்வேறு பகடிச்சொற்களுடன் கோத்துப்பாடுவது அவர்களை சிரிப்பில் கொப்பளிக்கச் செய்தது.

ஓரிரு நாட்களுக்குப் பிறகு இரு படையிலும் வெற்றி தோல்வி என்பது முற்றிலும் மறைந்து போயிற்று. எவர் வென்றனர் எவர் விழுந்தனர் என்பதையே எவரும் பேசாமலாயினர். ஒவ்வொருவரும் தங்கள் உள்ளிருந்து புத்தம் புதியனவற்றை ஒவ்வொரு நாளும் வெளியே எடுத்தனர். பிறரை வெடித்துச்சிரிக்க வைக்கும், பிற செவிகளை தன்னை நோக்கி கூரச்செய்யும் எதையேனும் சொல்ல வேண்டுமென்பதை அவர்கள் கற்றுக்கொண்டனர். வெளிப்படுவதனூடாக மேலும் இருக்கிறேன் என்று, பிறர் நோக்குகையில் அங்கிருப்பதை மேலும் உறுதி செய்துகொள்கிறோம் என்று உணர்ந்தனர்.

அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் கூச்சங்களும் தயக்கங்களும் அகன்றன. சிலர் பாடினர், சிலர் நடித்தனர், சிலர் ஆடினர், சிலர் இளிவரல் புனைந்தனர், சிலர் வாள் தூக்கி வானிலிட்டு கழுத்தைக்காட்டி நின்று இறுதி கணத்தில் ஒழியும் இடர் மிகுந்த விளையாட்டுகளை ஆடினர். ஓரிரு நாட்களுக்குப் பின்னர் அந்தப் போரின் நிகழ்வுகள் அவ்வண்ணம் ஓர் ஒழுங்கு பெற்று அதுவே இயல்பென்றாகியது. அவ்வாறே நெடுங்காலமாக நடந்துகொண்டிருக்கிறதென்று தோன்றச்செய்தது. அவர்கள் பின்னர் இறந்தவர்களுக்காக வருந்தவில்லை. எஞ்சியிருப்பதன் உவகையொன்றே அவர்களை ஆண்டது. ஆனால் பின்னர் சில நாட்களில் ஒவ்வொருவராக தங்கள் சாவு குறுகியணைவதை உணரத்தொடங்கினர். படைவெளி சுருங்குந்தோறும் அவர்களுக்குள் எரிந்தவை அணைந்து குளிர்கொள்ளத் தொடங்கின.

அன்றிரவு மட்டும் அவர்கள் உயிரோடிருப்பதையே வெறுத்தனர். எஞ்சியிருப்பவர் சென்றவர்களுக்கு ஏதோ பெரும்பழியை இயற்றிவிட்டதாக உணர்ந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் உடலுக்குள் குருதி நிறைந்து விரல் முனைகளை அழுத்தி விம்மச் செய்வதை, செவிமடல்களை வெம்மை கொள்ளச் செய்வதை அறிந்தனர். ஒரு சிறு வாள்முனையால் கீறலிட்டால் அதனூடாக உள்ளிருக்கும் குருதியனைத்தும் பீறிட்டு வெளியேறிவிடும். உடல் உடைந்து வெறுங்கலமென ஆகி அங்கே கிடக்கும். அதில் வான் வந்து நிறைகையில் எழும் முழுமை அத்துயரிலிருந்து விடுதலை அளிக்கும்.

ஒருவர்கூட அன்று களத்தில் துச்சாதனனின் உடல் உடைத்து குருதி அருந்திய பீமனைப்பற்றி எண்ணிக்கொள்ளவில்லை. அதை எண்ணி தவிர்க்கவில்லை. அவர்களின் ஆழமே அதை தவிர்த்தது. ஆழமும் அறியாது எங்கோ புதைந்தது அது. ஆனால் அங்கிருந்து அதன் கடுங்குளிர் அவர்கள் உள்ளத்திலும் உடலிலும் பரவிக்கொண்டிருந்தது. அங்கிருந்த அனைவரும் அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தனர் என தெய்வங்கள் மட்டுமே அறிந்திருந்தன.

சுபாகு தன் படைகளினூடாக புரவியில் சென்றபோது இருபுறமும் கௌரவப் படைகள் முற்றாகவே இறந்து பிணங்களின் நிரையாகக் கிடப்பதுபோல உணர்ந்தான். எங்கும் எந்த ஓசையும் எழவில்லை. உணவு விளம்புபவர்கள் தங்கள் பணியை தொடங்கியிருக்கவில்லை. தெற்கிலிருந்து வடமேற்கு நோக்கி வீசிக்கொண்டிருந்த காற்றில் கொடிகள் துடிதுடித்துப் பறந்துகொண்டிருந்தன. வானில் எழுந்த மின்னல்களில் படைக்கலங்களும் உலோக வளைவுகளும் சுடர்ந்து அதிர்ந்து அணைந்தன. அவன் புரவி ஏனென்று தெரியாமல் தும்மலோசை எழுப்பிகொண்டே இருந்தது. காதுக்குள் ஏதோ புகுந்ததுபோல் தலையை உலுக்கி மணியோசையை எழுப்பியது. அவ்வப்போது நின்று குளம்புகளால் தரையை தட்டிக்கொண்டது.

அவன் அதன் கழுத்தை தட்டி அதை ஊக்கி முன் செலுத்தினான். ஒவ்வொரு முறையும் எங்கேனும் அது நின்று எடை கொண்ட தலை மேலும் எடை கொண்டதுபோல் மெல்ல தாழ துயிலில் ஆழ்வதுபோல் ஒற்றைக்கால் தூக்கி மூன்று காலில் நின்றது. அதற்கு என்ன ஆயிற்று என்று அவன் குனிந்து முகத்தை பார்த்தான். காதைப் பற்றி உள்ளே வண்டு ஏதேனும் சிக்கியிருக்கிறதா என்று நோக்கினான். அதன் நெற்றியிலும் கழுத்திலும் தட்டி ஆறுதல்படுத்தி மேலும் செலுத்தினான். அது உடல் எடை மிகுந்துவிட்டதுபோலத் தோன்றியது. ஒவ்வொரு காலடிக்கும் மூச்சு சீறியது. அவ்வப்போது நின்று இருமல்போல ஒலியெழுப்பியது.

புரவிகள் மானுடரின் உளநிலையை தாமும் கொண்டுவிடுவதை புரவியேற்றம் கற்ற காலத்திலிருந்து அவன் அறிந்திருந்தான். போர்க்களத்தில் திரளென எழும் வெறியையும் குருதிக்களிப்பையும் அவை மானுடரிடமிருந்து பெற்றுக்கொள்கின்றன. அவை மானுடரின் விழைவு விலங்குடலில் எழுந்த வடிவங்கள். அன்னை உடலுக்குள்ளிருந்து ஒரு புரவிக் குழவியை வெளியே எடுக்கையில் மானுடன் முதற்சொல் வழியாக தன் உள்ளத்தை அதற்கு அளிக்கிறான். தன் நாவிலிருந்து ஒரு பெயர். தன் நினைவிலிருந்து முந்தைய புரவிகளின் அடையாளம். தன் உடல் வழியாக, சொற்களின் வழியாக, தன் உள்ளத்தை அதில் பெய்து நிரப்புகிறான். பின்னர் அதை பயிற்றுவித்து போர்ப்புரவியாக்குகிறான். அதற்குள்ளிருந்து விலக்கப்பட்ட தெய்வம் அதன் ஆழத்திலெங்கோ இருண்ட சுனையின் கரிய நீரின் அடியில் கிடக்கும் சிறு அருமணியென சென்று மறைந்துவிடும். அங்கே ஒரு ஆழ்விழியென அதை நோக்கிக்கொண்டிருக்கும்.

புரவி பெருமூச்சுவிட்டு நின்றபோது அவன் அதிலிருந்து இறங்கி அதன் கழுத்தையும் தோளையும் தட்டியபடி மெல்லிய குரலில் “என்ன ஆயிற்று? எழுக! எழுக!” என்றான். புரவி தளர்ந்த காலடிகளை எடுத்து வைத்து நடக்கத் தொடங்கியது. அவன் அதன் உடலில் எங்கேனும் புண்கள் இருக்கின்றனவா என்று பார்த்தான். அது முற்றிலும் திறந்த உடல் கொண்டிருந்தது. போருக்குச் சென்று மீண்டபின் அனைத்துக் கவசங்களையும் கழற்றி புரவிகள் எங்கேனும் புண்பட்டுள்ளனவா என்று பார்ப்பது சூதர்களின் வழக்கம். புண்படாத புரவிகளை ஒருமுறை இலை தழையாலோ தோலாலோ உருவி கள்ளும் வெல்லமும் கலந்த நீரைப் புகட்டி உடனடியாக குறும்பயணத்திற்கு கொடுப்பார்கள். அந்திப்பயணங்கள் முடிந்து அவை கொட்டில்களுக்கு திரும்பும். மீண்டும் உணவளித்து துயிலச்செய்வார்கள்.

அந்தப் புரவி போருக்குச் சென்று மீண்டது என்பதை அதன் நடையிலிருந்து உணர முடிந்தது. அதன் கண்கள் இமை சரிந்து நிலம் நோக்குபவை போலிருந்தன. அதன் கடிவாளத்தைப் பற்றி மெல்ல இழுத்தபோது குளம்புகளை தூக்கி வைத்து அவனுடன் அது வந்தது. அதன் உடல் நன்கு நிகர்கொண்டிருந்தது. பல்லாயிரத்தில் ஒன்றே நிகருடல் கொண்ட புரவி. எஞ்சியவை கடும் பயிற்சியினால் நிகருடலை ஈட்டிக்கொண்டவை. அது போருக்குச் சென்ற முதன்மை வீரன் ஒருவனின் புரவியாகவே இருக்கக்கூடும். அவன் புரவிகளை பொதுவாக நோக்குவதில்லை. துச்சாதனன் புரவிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக அறிந்தவன். தன்னுடைய புரவிகளுடன் பேசிக்கொண்டிருப்பவன். புரவி அறியும் ஒன்றை தான் அறிந்துகொள்ள முயல்வதுபோல, தன்னுள்ளிருந்து சொல் திரளாத ஒன்றை புரவிக்கு புகுத்திவிட எண்ணுபவன்போல.

புரவி மீண்டும் நிற்க அவன் எதிரே வந்த ஏவலனிடம் “இப்புரவி புண்பட்டுள்ளதா?” என்றான். ஏவலன் புரவியை ஒருமுறை சுற்றிப் பார்த்து “இல்லை அரசே, புரவி நல்ல நிலையில்தான் உள்ளது. அது நன்கு களைப்படைந்திருக்கலாம். அல்லது அச்சமோ பெருந்துயரோ கொண்டிருக்கலாம். அதன் கழுத்து நரம்புகள் புடைத்துள்ளன. மயிர்ப்பும் தெரிகிறது. ஆகவே உளக்கொதிப்பு கொண்டுள்ளது. அது எதையோ கண்டு பேரச்சம் அடைந்துள்ளது” என்றான். “போரில் அழிவுகளைக் காணாத புரவிகள் எவை? சென்ற சில நாட்களாக களத்தில் இடியோசையும் மின்னல்களுமல்லவா நிறைந்துள்ளன” என்றபின் புரவியை கழுத்தைத் தட்டி மீண்டும் முன்னிழுத்து சேணத்தை மிதித்து கால் சுழற்றி ஏறிக்கொண்டான். புரவி அவன் எடையுடன் கண்ணுக்குத் தெரியாத பேரெடை ஒன்றை ஏற்றியதுபோல நடந்தது.

துரியோதனன் குடில் முகப்பு வரை மிக மெதுவாகவே சென்றது. ஓரிரு அடிகளுக்குப் பின்னர் அவனும் அந்த விரைவிலா நடையை விரும்பலானான். துச்சாதனன் வீழ்ந்ததுமே துரியோதனன் களம்விட்டு அகன்றான். போர் முடிந்ததும் சுபாகு புரவியில் சென்று காவல்மாடங்களை ஒருமுறை நோக்கிவிட்டு துச்சாதனனுக்கான சிதை ஒருக்கத்தையும் பார்வையிட்டுவிட்டு மீண்டும் களத்திற்கு வந்தான். பாடிவீடு திரும்ப அவன் விரும்பவில்லை. அங்கே அச்சமூட்டும் எதுவோ ஒன்று காத்திருப்பதுபோல் உள்ளம் தயங்கியது. அவனைத் தேடிவந்த ஏவலன் “தாங்கள் உடனே அரசரை சென்று பார்க்கவேண்டும் என்று ஆணை” என்றான். “எவருடைய ஆணை?” என்று சுபாகு கேட்டான். “காந்தார அரசரின் ஆணை. மத்ரரும் உத்தரபாஞ்சாலரும் கிருதவர்மரும் அரசரைப் பார்க்கும்பொருட்டு சென்றிருக்கிறார்கள். தங்களை உசாவினார்கள். தெற்குக்காட்டிற்குச்சென்றுள்ளார் என்று நான் சொன்னேன்” என்றான் ஏவலன்.

சுபாகு நன்று என்று தலையசைத்தான். ஆனால் மீண்டும் ஒரு நாழிகைக்கு மேல் களத்திலேயே ஏதேனும் பணியை கண்டுபிடித்து அதை இயற்றுபவன்போல் நடித்து பொழுதோட்டினான். மீண்டும் ஒரு ஏவலன் அவனைக் கண்டு தலைவணங்கி காந்தாரரின் ஆணையை அறிவித்தபோது “மூத்தவர் என்ன செய்கிறார்?” என்று கேட்டான். “அவர் துயில்கொண்டிருக்கிறார். களத்திலிருந்து அவரை கொண்டுசென்றதும் அகிபீனா அளித்து படுக்க வைத்துவிட்டார்கள். விழிப்பே கூடவில்லை” என்று ஏவலன் சொன்னான். “விழிப்பு கொள்ளவில்லையா?” என்றான் சுபாகு. “இத்தருணம் வரை விழி திறக்கவில்லை” என்றான் காவலன். சுபாகு தலையசைத்தான். காவலன் “எங்கிருந்தாலும் தங்களைக் கண்டுபிடித்து வரச்சொல்லும்படி ஆணையிடப்பட்டிருக்கிறேன்” என்றான். “செல்க, நான் வருகிறேன்!” என்று சுபாகு சொன்னான். பின்னர் புரவியின்மீது அமர்ந்தபடி கைகளை கட்டிக்கொண்டு இரு படைகளுக்கும் நடுவே வெளித்துத் திறந்திருந்த குருக்ஷேத்ரத்தை பார்த்துக்கொண்டிருந்தான்.

உடல்களைச் சுமந்தபடி வண்டிகள் சகடங்கள் ஒலிக்க சென்றன. அத்திரிகள் செருக்கடித்து குளம்புகளின் ஓசையுடன் எடைசுமந்து நடந்தன. குருதியும் விலங்குகளின் சாணியும் கலந்த வாடையுடன் குருக்ஷேத்ரம் ஒழிந்து கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் அது மூளியாகிவிடும். அச்சொல்லாட்சி அவனை திகைக்கச் செய்தது. போர்க்களத்திற்கு இறந்த உடல்கள் அணிகளா? ஒருநாள் முழுக்க இவள் அணி பூண்கிறாளா? அந்தியில் அவற்றைக் கழற்றி ஆமாடப்பெட்டிகளில் வைத்துவிட்டு துயில்கிறாளா? இதை ஏதேனும் சூதர் பாடி என் நினைவுக்கு எழுகிறதா? மேலும் எண்ணங்கள் எழுந்தபோது எப்போதும் இத்தகைய பொருளின்மையை தான் அடைந்ததில்லை என்று உணர்ந்தான். அங்கு நின்றுகொண்டிருப்பதில் எந்தப் பயனுமில்லை. புரவியைத் தட்டி துரியோதனன் குடில் நோக்கி செலுத்தலானான்.

துரியோதனனின் குடிலுக்கு முன்னால் காந்தாரரின் தேர் நின்றது. சற்று அப்பால் நின்றிருந்த புரவிகள் கிருதவர்மனும் அஸ்வத்தாமனும் வந்தவை என்று தெரிந்தது. அவன் விழிகளை ஓட்டி மிக அப்பால் சல்யரின் தேர் நிற்பதை பார்த்தான். தன் புரவியிலிருந்து இறங்கி அவன் நடக்கத்தொடங்கியபோது அவனுக்கு எதிராக ஓடிவந்த வீரனின் விழிகளில் ஒரு பதைப்பு தென்பட்டது. அவன் தன்னிடம் ஏதோ சொல்ல எண்ணுவதுபோல. சுபாகு “என்ன?” என்றான். அதற்குள் தனக்குப் பின்புறம் உடல் விழும் ஓசை கேட்டு திரும்பிப்பார்த்தான். அவன் ஊர்ந்த புரவி நிலத்தில் விழுந்து கால்களை ஓடுவதுபோல் உதைத்துக்கொண்டிருந்தது. அதன் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் குருதியும் நுரையும் கலந்து வழிந்து மண்ணை நனைத்தன. அவ்வீரன் புரவியை நோக்கித்தான் ஓடினான்.

“என்ன ஆயிற்று?” என்று சுபாகு கேட்டான். மேலும் ஏவலர்கள் அதன் அருகே ஓடிச்சென்றனர். முதல் ஏவலன் குனிந்து அதன் கால்களை பற்றினான். ஒருவன் அதன் முகத்தைப் பிடித்து தூக்கிப் பார்த்தான். “நோயுற்றிருக்கிறது. ஆனால் உடலில் எங்கும் புண்ணில்லை” என்றான். இன்னொரு முதிய ஏவலன் ஓடிவந்து குனிந்து அதன் விழிகளை இமை விலக்கி நோக்கியபின் “நெஞ்சு உடைந்துவிட்டது, அரசே” என்றான். “ஏன்?” என்று சுபாகு கேட்டான். முதியவன் பார்த்துவிட்டு மறுமொழி சொல்லவில்லை. அதன் பின்னங்கால் மட்டும் உதைத்துக்கொண்டே இருந்தது. சுபாகு இடையில் கைவைத்து அதை பார்த்துக்கொண்டு நின்றான். அதன் கால் இழுபட்டு எதையோ உதற முயல்வதுபோல் காற்றில் உதைத்துக்கொண்டது. பின்னர் மெல்ல அடங்கி எடை மிக்க குளம்பு தரையை தட்டியது. அதன் விழிகள் திறந்திருந்தன. இமைகளிலும் வாயின் தொங்கு தசையிலும் மட்டும் சிறிய அசைவு இருந்துகொண்டிருந்தது.

முதிய காவலன் “நெஞ்சுடைவது புரவிகளுக்கு வழக்கம்தானே?” என்றான். “ஏன்?” என்று சுபாகு கேட்டான். “எடைமிக்க புரவிகள் நெடுந்தொலைவு ஓடும்போது நெஞ்சுடையும் என்று கேட்டிருக்கிறேன்” என மேலும் சொன்னான். “இது உடல் தகைந்த போர்ப்புரவி. உளம் உடைந்திருக்கக்கூடும்” என்று குனிந்து பார்த்தபடி அமர்ந்திருந்த ஏவலன் சொன்னான் . “ஏன்?” என்று உரக்க கேட்டான் சுபாகு. ஏவலன் மறுமொழி சொல்லவில்லை. சுபாகு இரண்டு எட்டு எடுத்து வைத்து முன்னால் வந்து ஓங்கி அவனை உதைத்து மல்லாந்து விழச்செய்து “அறிவிலி, சொல்! ஏன்?” என்றான். அவன் விழுந்து கிடந்தபடி வெறுப்பும் கசப்பும் நிறைந்த நோக்கால் அவனைப் பார்த்து “இது இளைய அரசர் துச்சாதனனின் புரவி” என்றான்.

சுபாகு திகைப்புடன் “இன்று அவர் இதில்தான் போருக்குச் சென்றாரா?” என்றான். “இல்லை. ஆனால் இதுவும் அவர் தேருக்குப் பின்னால் சென்றது” என்று ஏவலன் சொன்னான். “போருக்குச் சென்றதா?” என்று மீண்டும் சுபாகு கேட்டான். சற்று நேரம் கழித்து எந்த மறுமொழியும் சொல்லாமல் வீரன் எழுந்து தன் ஆடையை சீர்படுத்தியபடி அகன்று சென்றான். முதிய காவலன் “புரவிகளின் உள்ளத்தின் விசை அவற்றின் உடலைவிட பன்மடங்கு மிகுதி, அரசே” என்றான்.

முந்தைய கட்டுரைமலைகளை அணுகுவது
அடுத்த கட்டுரைநிழலின் தனிமை பற்றி… சுரேஷ் பிரதீப்