1986 ல் ஆ.மாதவனைச் சந்திக்க திருவனந்தபுரம் சாலைத்தெருவில் இருந்த அவருடைய செல்வி ஸ்டோருக்குச் சென்றிருந்தேன். ஒரு கைப்பிரதியை வாசித்துக்கொண்டிருந்தார். “ஒரு மிளகா வியாபாரி எழுதினது. நல்லா பண்ணியிருக்கார். சுந்தர ராமசாமி கிட்ட காட்டச் சொல்லியிருக்கேன். அவரு நெனைச்சா பப்ளிஷ் ஆயிரும்” என்றார். ஆறுமாதம் கழித்து சுந்தர ராமசாமியைச் சந்தித்தபோது அவரும் “நம்ம தேங்காப்பட்டினத்துக்காரர் ஒருத்தர் ஒரு நாவல் எழுதியிருக்கார். நல்லா இருக்கு. எம்.எஸ். அதை எடிட் பண்ணிட்டிருக்கார்” என்றார்.
அவ்வாறுதான் நான் தோப்பில் பற்றி கேள்விப்பட்டேன். அடுத்த ஆண்டு ஒரு கடலோரக் கிராமத்தின் கதை நாவல் வெளிவந்தது. அது தமிழில் ஓர் அலையை உருவாக்கியது. அதற்கு நான் மதிப்புரை எழுதியிருக்கிறேன். அதன்பின் தோப்பில் எழுதிய எல்லா நாவல்களுக்கும் நான் மதிப்புரையும் விமர்சனமும் எழுதியிருக்கிறேன். அவரைப்பற்றி அதிகமாக எழுதியவன் நான் என தோன்றுகிறது.என்றும் என் பிரியத்திற்குரிய அண்ணாச்சியாகவே இருந்தார்.
தோப்பிலுக்கு அஞ்சலி.