பீமன் வருவதை தொலைவிலேயே மிருண்மயத்தின் மாளிகையின் காவல்மாடத்திலிருந்த வீரர்கள் பார்த்தனர். அவர்களிலொருவர் கொம்போசை எழுப்ப கீழ்த்தளத்திலிருந்து காவலர்கள் வெளியே வந்து நோக்கினர். புரவி அணுகி விரைவழிந்து நின்றதும் பீமன் அதிலிருந்து கால்சுழற்றி இறங்கி தன் இடக்கையிலிருந்த குருதிக்கலத்துடன் எடை மிக்க காலடிகள் மண்ணில் பதிந்தொலிக்க எவரையும் நோக்காமல் சென்று மாளிகையின் சிறு முற்றத்தில் நின்று உரத்த குரலில் “அரசியர் எங்கே?” என்று கேட்டான். கொம்பொலி கேட்டு உள்ளிலிருந்து வந்த ஏவலன் தலைவணங்கி “அரசியர் ஓய்வறையில் இருக்கிறார்கள், அரசே” என்றான்.
“சேடியரை அழைத்து சொல், உடனே அவர்கள் இங்கு வந்தாகவேண்டும் என்று சொல். உடனே சொல்” என்று உரத்த குரலில் பீமன் ஆணையிட்டான். அதற்குள் அறைக்குள்ளிருந்து எட்டிப்பார்த்த சேடியர் அச்செய்தியை சொல்வதற்காக உள்ளே ஓடினர். பீமன் குருதியும் சேறும் உலர்ந்து அரக்குபோல் பற்றியிருந்த இரும்புக்குறடுகளை கழற்றாமல் மரப்படிகளில் மிதித்து மேலேறி உட்கூடத்திற்கு சென்றான். உள்ளிருந்து சேடியொருத்தி வெளிவந்து “பாஞ்சால அரசி எழுந்தருள்கிறார்கள்” என்றாள். அவள் குரல் அடைத்திருந்தது. “வரச்சொல்! உடனே வரச்சொல்!” என்று மதுவெறியில் இருப்பவன்போல் பீமன் குரல் கொடுத்தான்.
சிற்றறையின் வாயிலுக்குள் இருந்து நன்கு குனிந்து திரௌபதி வெளிவந்தாள். அவனைக் கண்டதும் விழிகள் சற்று விரிந்தன. சொல்லுக்கென இதழ்கள் மெல்ல பிரிந்தன. இரு கைகளும் தளர்ந்து விழ வளையல்கள் ஒலியெழுப்பின. மூச்சில் அவள் முலைகள் எழுந்தமைந்தன. நோயுற்றவள்போல் அவள் நடுங்கிக்கொண்டிருந்தாள். பீமன் அவளை நோக்கி “இதோ நீ காத்திருந்தது. உன் ஆடை தொட்டு இழுக்கத்துணிந்தவனின் நெஞ்சக்குருதி… அள்ளிப் பூசி குழல் முடிந்துகொள்” என்றான். அச்சொற்களை நெடுநாட்களாக அவன் உளம்பயின்றிருந்தமையால் அது பொருளில்லா பூசனைமொழி என ஒலித்தது.
அவள் உடலில் ஓர் அதிர்வு கடந்து சென்றது. “இதோ!” என்று பீமன் அந்தத் தலைக்கவசக் கலத்தை நீட்டினான். அவள் ஓரடி எடுத்து பின்னால் வைத்தாள். “திரும்பு. உன் குழலில் நானே பூசிவிடுகிறேன் இக்குருதியை” என்றான். வேண்டாம் என்பதுபோல் அவள் தலையை அசைத்தாள். பீமன் “என் வஞ்சினத்தை அங்கு களத்தில் முடித்துவிட்டேன். இக்கீழ்மகனின் குருதியை உண்டு என் உடலுக்குள் தேக்கியிருக்கிறேன். இவ்வெறுங்கைகளால் அவன் நெஞ்சக்கூட்டை உடைத்துப் பிளந்தேன். அங்கிருந்த குலையை பிழுதெடுத்து பிழிந்து இச்சாறை உனக்கென கொண்டுவந்தேன்” என்றான்.
திரௌபதி மேலுமிரு அடிகள் பின்வைத்து மூச்சு இளைத்தாள். அவள் கழுத்து ஏறி இறங்கியது. முகத்தில் தெரிந்த பதைப்பு பீமனை மேலும் சினம்கொள்ள வைத்தது. “அஞ்சுகிறாயா? நீ அஞ்சவேண்டியது உன் சொல்லை. நாவிலெழுந்தவை பூதமென பேருருக்கொண்டு சூழ்ந்துகொள்ளுமென அறிந்திருப்பாய், இன்று தெரிந்துகொள் உன் நாவிலெழுந்தது கௌரவக் குலம் முடித்து குருதி குடிக்கும் கொற்றவையின் சிம்மம்” என்று தன் தொடையில் வலக்கையால் ஓங்கி அறைந்து வெடிப்பொலி எழுப்பி பீமன் சொன்னான். “இதோ அத்தருணம்” என அக்கலத்தை நீட்டினான்.
அறைக்கு அப்பால் நின்று நோக்கிய ஏவலர்களுக்கு அது விந்தையானதோர் நாடகக்காட்சி போலிருந்தது. இப்புவியில் பிறிதொரு முறை நிகழாதவை, முன்பு இலாதவை, அவ்வண்ணம் பொருந்தா நடிப்பென வெளிப்படுகின்றன. அவை மானுடரின் தருணங்களல்ல. மானுடரை ஆளும் மேல், கீழ், ஒளி, இருள் தெய்வங்களுக்குரியவை. வெறியாட்டு எழுந்தவர்களின் உடலில் கூடும் பொருந்தாமை அதிலுள்ள அனைவரிலும் வெளிப்படுகிறது. அந்தக் கலம் ஏவலரை அச்சுறுத்தியது. சிலர் குமட்டியபடி வாய் பொத்தி உடல்நடுங்கி மடிந்து அமர்ந்தனர். குந்தி வரும் ஒலி கேட்க அவர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு சுவரோடு ஒண்டிக்கொண்டனர்.
சிற்றறையிலிருந்து வெளிவந்து பீமனை நோக்கிய குந்தி “என்ன செய்கிறாய், மந்தா?” என்றாள். அவன் தோற்றம் அவளை திகைக்கச் செய்தது. அவள் செய்தியை அறிந்திருக்கவில்லை. பீமன் அவளை நோக்கி திரும்பி கலத்தை நீட்டி “இவள் குழல் முடிக்க கொண்டுவந்தேன். எஞ்சியதை நீ உன் முகத்தில் பூசிக்கொள். வேண்டுமென்றால் சற்று அருந்து, உன் மைந்தன் அருந்திய குருதியின் மிச்சில் இது. உன்னுள் எரியும் அந்த அனல் இதனால் முற்றவியக்கூடும்” என்றான். “என்ன சொல்கிறாய்?” என்று மொந்தையைப் பார்த்த பின் முகம் சுளித்து பற்களைக் கடித்து “பழிகொண்டவனே… என்ன செய்தாய்?” என்று மூச்சொலியின் குரலில் கூவினாள் குந்தி.
“நம் குலமகளை சிறுமை செய்த வீணனின் நெஞ்சக்குருதி. இவன் வீழ்ந்தபின் இனி துரியோதனன் உயிர்வாழமாட்டான். இன்றல்லது நாளை அவன் குருதியையும் இங்கு கொண்டுவருகிறேன். உன்னை ஒரு மணையிட்டு அமரவைத்து தலையில் ஊற்றி முழுக்காட்டுகிறேன். அஸ்தினபுரியின் வாயில் கடந்து நீ உள் நுழைந்தபோது தெய்வங்கள் இத்தருணத்தை கருதியிருக்கின்றன. ஆம், இதோ உன் வருகை நிறைவுறுகிறது” என்றான் பீமன். “சீ அறிவிலி! பெண்சொல் தலைக்கொண்டு இக்கீழ்மையை நிகழ்த்தினாயா நீ? போரில் வெல்வது ஆணுக்குரிய செயல். குருதியள்ளிக் குடிப்பதும் நெஞ்சைப்பிழிந்து மொந்தையில் கொண்டுவந்து சேர்ப்பதும் அரக்கனின் குணங்கள். நீ என் மைந்தனே அல்ல. உன் பொருட்டு எண்ணி உளம் கூசுகிறேன். விலகு! இக்கணமே விலகிச்செல்!” என்று குந்தி கூவினாள்.
பீமன் விந்தையான இளிப்புடன் அவளை நோக்கி சென்று “இதை நீ விழையவில்லை என்று சொல். உன் மறுமகள் இவ்வஞ்சினத்தை உரைத்தபின் இத்தனை ஆண்டுகளில் நீ ஒருமுறையேனும் இதை மறுத்துச் சொல்லியிருக்கிறாயா? இப்போர் தொடங்கிய பின்னரேனும் இதை ஒழியும்படி அறிவுறுத்தியிருக்கிறாயா? இந்தக் குருதியின் பழி உன்னைத் தேடி வருகையில் பின்னடி வைத்து ஒளிகிறாய் அல்லவா? சொல், பன்னிரண்டு ஆண்டுகாலம் ஆற்றியிருந்த போதெல்லாம் எத்தனை ஆயிரம் முறை இவ்வஞ்சினத்தை நீ உரைத்திருப்பாய்?” என்றான்.
குந்தி முகம் குருதியெனச் சிவக்க “வீணன்! இன்று பெண்ணை அவைச்சிறுமை செய்பவன் நீ! பிழுதெடுக்க வேண்டியது உன் நாக்கை!” என்றாள். “ஆம், இப்பழியை நான் கொள்ளமாட்டேன். உடன்பிறந்தானின் நெஞ்சு பிளந்தெடுத்த குருதியுடன் வந்திருக்கும் நீ என் மைந்தனல்ல. இனி ஒருபோதும் உன் கை என் மேல் படுவதற்கு நான் ஒப்பமாட்டேன். நான் மண் மறைந்தபின் உன் கைகளால் அளிக்கப்படும் நீரும் அன்னமும் எனக்கு வரக்கூடாது. இன்றிலிருந்து நீ பாண்டவனல்ல, கௌந்தேயனுமல்ல. அகல்க… என் விழிமுன்னிருந்து செல்க…” என்றாள்.
உறுமலோசை கேட்டு பீமன் திரும்பிப் பார்த்தான். திரௌபதியின் விழிகள் வெறித்துத் திறந்திருக்க வாய் பின்னுக்கு விரிந்து பற்கள் அனைத்தும் வெளியில் தெரிந்தன. பிறிதொரு பெரிய உறுமல் அவளிடமிருந்து வெளிவந்தது. கூந்தலை தலையுலைத்து முன்னால் கொண்டு இட்டு கைகளை நீட்டி “ம்” என்றாள். அவளில் பிறிதொரு தெய்வம் எழுந்ததை பீமன் உணர்ந்தான். குந்தி “என்ன செய்கிறாய் பாஞ்சாலி? தீராப் பழி கொள்ளவிருக்கிறாய்… இதை சூதர்கள் ஒருபோதும் மறவார். உனது கொடிவழியினரை ஷத்ரியர்கள் எந்நிலையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தலைமுறை தலைமுறையென இப்பழி தொடர்ந்து வந்து அவர்களை கருவறுக்கும். வேண்டாம்” என்றாள்.
“ம்ம்…” என்று உறுமியபோது திரௌபதியின் விழிகள் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்பவைபோல் கோணலாயின. “ம்ம்… கொண்டு வா!” என்று சொன்னபோது அவள் குரல் பிறிதொன்றாக ஒலித்தது. பீமன் அவளை கூர்ந்து பார்த்தபடி மெல்லிய அடிவைத்து அவளை அணுகினான். “பூசுக!” என்று அவள் சொன்னாள். “ம்ம்ம்… பூசுக!” என்று மீண்டும் சொன்னாள். பீமன் அவளிடம் “நீ யார்?” என்றான். “நான் மாயை. நான் விண்ணில் இத்தருணத்திற்காகக் காத்திருந்தவள். நான் மாயை! விடாய்கொண்டவள். குருதிக்காக நோற்றிருந்தவள்!” என்று அவள் உரக்கக் கூவினாள்.
பீமன் உடல் தளர்ந்து “ஆம், காத்திருந்தவள் நீதான்” என்றபின் அக்குருதியை அள்ளி கரிய மெழுக்கை அவள் கூந்தலில் நீவினான். அவள் வெறித்த விழிகளுடன் குனிந்து தன் இரு கைகளாலும் அக்கலத்திலிருந்த குருதி விழுதை அள்ளி தலையிலும் கூந்தலிலும் பூசிக்கொண்டாள். இரு கைகளையும் முகத்திலும் நெஞ்சிலும் அறைந்தாள். இளிப்பு மேலும் பெரிதாக “கொழுங்குருதி! ஆம், கொழுங்குருதி!” என்றாள். பீமன் அவளை தொடும்போது கைகள் நடுங்கினான். “ம்ம் ம்ம்ம்” என உறுமியபடி திரௌபதி குருதியை அள்ளி உடலிலும் குழலிலும் பூசிக்கொண்டாள்.
“விலகிச்செல்! அறிவிலி, விலகிச்செல்! அவளில் எழுந்திருப்பது நம் குலம்முடிக்க வந்த கொடுந்தெய்வம். உன் நெஞ்சம் பிளந்து குருதி அருந்தக்கூடும் அது. விலகு!” என்று குந்தி கூவினாள். அஞ்சி சுவரோடு சேர்ந்து நின்று கைநீட்டி பதறினாள். கலத்தை இரு கைகளாலும் வாங்கி தன் தலைமேல் கவிழ்த்த பின் தூக்கி அப்பால் வீசினாள் திரௌபதி. இரு கைகளையும் விரித்து, கழுத்து நரம்புகள் சொடுக்கி இழுக்க, உடல் அதிர்ந்து துள்ள, வான் நோக்கி தலைதூக்கி ஓலமிட்டாள். பின்னர் உந்தித் தள்ளப்பட்டவள்போல் பின்னால் சரிந்து உடல் நிலமறைய விழுந்தாள். கைகளும் கால்களும் இழுத்துக்கொள்ள மெல்ல துடித்து அடங்கினாள்.
பீமன் அவளை நோக்கியபடி கைகள் இனி என்ன என்பதுபோல் விரிந்திருக்க நின்றான். குந்தி “ஏன் நோக்கி நின்றிருக்கிறீர்கள்? அறிவிலிகளே, அரசியைத் தூக்கி மஞ்சத்திற்கு கொண்டுசெல்லுங்கள். உடனே” என்றாள். ஆனால் ஏவல்பெண்டுகள் அருகே வரத் தயங்கினர். பீமன் அவளை தூக்கச் செல்ல “விலகு! இனி அவள் சொல் பெறாது அவள் உடலை நீ தொடலாகாது. அந்தக் கைகளால் இனி நீ என் குலத்துக் குழவியர் எவரையும் தொடலாகாது. விலகு!” என்றாள் குந்தி. பின்னர் குனிந்து திரௌபதியைத் தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டு “இக்கணமே இங்கு வந்து இவளைத் தூக்காத ஏவற்பெண்டிரின் தலை கொய்து வீசப்படும். ஆணை” என்றாள்.
துடிப்பு கொண்டு ஏவற்பெண்டுகள் ஓடிவந்து திரௌபதியை பற்றினர். நான்கு பெண்டிர் அவள் கையையும் காலையும் பிடிக்க அவளைத் தூக்கி உள்ளே கொண்டுசென்றனர். அவள் உடல் அவர்கள் அனைவரையும்விட அரைமடங்கு உயரமும் பருமனும் கொண்டிருந்தது. கருவண்டொன்றை தூக்கிச்செல்லும் எறும்புகள்போல் அவர்கள் தோன்றினார்கள். சிறுவாயிலினூடாக அவர்கள் சென்று மறைய பீமன் அதை நோக்கியபடி அங்கேயே நின்றான்.
சற்று நேரம் கழித்து வெளியே வந்த ஏவற்பெண்டிடம் “அரசி விழித்துக்கொண்டாரா?” என்று பீமன் கேட்டான். அவள் அவன் அங்கே நின்றிருப்பதை எதிர்பார்க்கவில்லை. திகைத்து பின்னடைந்து “ஆம்” என்றாள். “ஆனால்…” என்று மீண்டும் தயங்கி “நான் கேட்டுவிட்டு வருகிறேன்” என்று சிறுவாயிலினூடாக உள்ளே சென்றாள். நெடுநேரம் கழித்து வெளியே வந்த இன்னொரு சேடி பீமனைக் கண்டதும் பதறி உள்ளே செல்ல முயல “இங்கு வா! வா, என் ஆணை!” என்று பீமன் உரக்கக் கூவினான். அவள் நடுங்கும் உடலுடன் வந்து கைகூப்பி நின்றாள். “உள்ளே அரசி விழித்துக்கொண்டாயிற்றா?” என்றான். “ஆம் அரசே, விழித்துக்கொண்டுவிட்டார்” என்றாள்.
“நான் அவளை பார்க்க வேண்டும்” என்று பீமன் சொன்னான். “சென்று சொல், நான் காத்திருப்பதாக. அவளைப் பார்த்து ஒருசொல் உரைக்கவேண்டும் என.” அவள் “நான் போய் உசாவி வருகிறேன்” என்றாள் . “உடனே உசாவி வரவேண்டும். இல்லையேல் வாயில் கடந்து நான் உள்ளே வருவேன் என்று அவளிடம் சொல்” என்றான். நெடுநேரம் கழித்து ஏவற்பெண்டு மீண்டும் வந்து “அரசே, பாஞ்சால அரசி தங்களை பார்க்க விழையவில்லை என்றார்கள்” என்றாள். பீமன் சீற்றத்துடன் கைகளை விரித்து அவளை தாக்கவருவதுபோல் முன்னால் வந்து “நான் பார்த்தாக வேண்டுமென்று சொன்னேன் என்று அவளிடம் சொல். பார்க்காமல் செல்லமாட்டேன் என்று சொல்” என்றான்.
“நான் கூறிவருகிறேன்” என்று அவள் உள்ளே செல்ல பீமன் வெளியே நின்றபடி “நான் பார்த்தாகவேண்டும். அன்னையிடம் சொல், நான் பார்த்தாக வேண்டும். அன்னையின் ஆணை இது என அறிவேன்” என்று கூவினான். மீண்டும் நெடுநேரம் வாயிலில் எவரும் தோன்றவில்லை. பீமன் தன் இரு கைகளையும் ஓங்கி அறைந்து ஓசையெழுப்பி “யார் அங்கே? சேடியர் எவராயினும் வெளியே வருக! நான் உள்ளே வந்து அரசியை பார்த்தாக வேண்டும். என்னை எவரும் தடுக்க இயலாது” என்று கூவினான். ஓங்கி கதவை மிதிக்க அது பேரோசையுடன் சுவரில் அறைந்தது. “எவராயினும் வெளியே வருக! நான் அவளை பார்த்தாகவேண்டும். பார்க்காமல் செல்லமாட்டேன்!”
உள்ளிருந்து குந்தி சினத்தால் சுருங்கிய விழிகளுடன் வெளியே வந்தாள். அவள் முகம் வெளிறி தசைகள் நீரற்றவைபோல் சுருங்கியிருந்தன. உதடுகள் வளைந்து வெண்பற்கள் சற்றே தெரிய, கழுத்தில் நீலநரம்புகள் புடைத்திருக்க, வஞ்சம் உருக்கொண்டவள்போல் தோன்றினாள். “ஏன் கூச்சலிடுகிறாய்? முற்றிலும் விலங்கென்றே ஆகிவிட்டயா?” என்று அவள் பற்களைக் கடித்தபடி நாகச்சீறல் என ஒலியெழுப்பி கேட்டாள். “நான் அவளை பார்க்கவேண்டும். அவளிடம் ஒரு சொல்லேனும் பேசவேண்டும்” என்றான் பீமன். “அவள் களைத்திருக்கிறாள். நினைவு மீண்டபின் அவளால் நிகழ்ந்தவற்றை தாள இயலவில்லை” என்றாள் குந்தி.
அருவருப்புடன் முகம் சுளித்து “உன்னைப்போல் இழிவிலங்கல்ல அவள். உயர் ஷத்ரியக் குடியில் பிறந்தவள். குருதி அள்ளி குழல் முடிந்து நின்றிருப்பாள் என்று எண்ணினாயா? செல், சற்றேனும் நெறியறிந்தவன் என்றால் இனி இங்கே நில்லாதே!” என்றாள். பீமன் குந்தியைக் கடந்து நடந்து வாயில்கதவை காலால் உதைத்துத் திறந்து உள்ளே புக முயல அவள் விலகித்தெறித்து “என்ன செய்கிறாய்? பெண்டிர் தளத்திற்குள் எல்லை மீறி நுழைகிறாயா? எங்குள்ள பழக்கம் இது?” என்றாள். “நில், நான் வீரர்களுக்கு ஆணையிடுவேன். உன்னை கொல்லும்படி சொல்வேன்” என பிச்சிபோல கூச்சலிட்டாள். “இழிமகனே, காட்டாளனே, நில்!” என்று அலறினாள்.
திரும்பி அவளை நோக்கி ஏளனத்தால் இளித்த முகத்துடன் “நான் காட்டு மனிதன் ஆகிவிட்டேன். இனி நெறிகளுக்கு அஞ்சவேண்டியதில்லை” என்றபின் பீமன் உள்ளே சென்றான். சிறிய வாயிலினூடாக தலைகுனிந்து உடலைத் திருப்பி நுழைய வேண்டியிருந்தது. உள்ளே நின்றிருந்த சேடியர் அவனைப் பார்த்ததும் எலிகள்போல் கீச் ஒலி எழுப்பிச் சிதறி கிடைத்த இடுக்குகளிலெல்லாம் புகுந்துகொண்டனர். அவன் தன்முன் திகைத்து நின்ற முதிய சேடியிடம் “எங்கே அரசி?” என்றான். அவள் நடுங்கும் விரலால் சுட்டி “அங்கே” என்றாள். பீமன் அங்கு வாயில்காப்பு நின்றிருந்த பிறிதொரு சேடியைப் பிடித்து அப்பால் தள்ளிவிட்டு குனிந்து சிறிய மஞ்சத்தறைகுள் நுழைந்தான்.
மிகச் சிறிய மர அறைக்குள் தாழ்வான மஞ்சத்தில் திரௌபதி மல்லாந்து படுத்திருந்தாள். அவள் கால்கள் மஞ்சத்திலிருந்து வெளிநீண்டிருந்தன. உடல் மஞ்சத்தை நிறைத்திருந்தது. அவள் கன்னங்களிலிருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது. உதடுகளை இறுகக் கடித்திருந்தாள். அவன் உள்ளே நுழைந்ததும் அவளுடைய வெறித்த விழிகள் அவனை நோக்கின. அஞ்சியவள்போல படுக்கையிலேயே சற்று நெளிந்தாள். பீமன் அவளருகே நின்று “உன் சொல் என்னவென்று அறிந்து போக வந்தேன். உன் பொருட்டு இன்று அவனை களத்தில் கொன்று அக்குருதியுடன் வந்திருக்கிறேன். சொல், உன் நெஞ்சம் நிறைவுற்றதா?” என்றான்.
அவள் அவனை நடுங்கும் முகத்துடன் வெறுமனே பார்த்தாள். “வீண்மருட்சி காட்டாதே. உன்னுள் அவ்வஞ்சம் குளிர்ந்ததா? இனி ஏதேனும் எஞ்சுகிறதா உன்னுள்?” என்றான் பீமன். அவளால் மறுமொழி கூற இயலவில்லை. சொல் உடலுக்குள் சிக்கிக்கொண்டதுபோல வாயும் நெஞ்சும் தவித்தன. பீமன் தன் இரு கைகளையும் அவள் மஞ்சத்தின் மீது ஊன்றினான். “உன் அச்சம் என்னை விலக்குகிறது. இத்தனை ஆண்டுகள் நீ விடுத்த சொல்லை உளம் கொண்டிருந்தவன் நான் மட்டுமே. அதன் பொருட்டு நான் அடைந்த அனைத்தையும் விலக்கிக்கொண்டேன். அடையக்கூடுமென என் முன் எழுந்த மெய்மையையும் விலக்கினேன். இன்று உன் துயரால் என் கொடையை நீ பொருளற்றதாக்குகிறாய். கூறுக!”
அவள் ஓசையின்றி நடுங்கிக்கொண்டிருக்க இரு கைகளாலும் ஓங்கி அவள் மஞ்சத்தை அறைந்து “கூறுக!” என்று பீமன் கூவினான். மஞ்சத்தின் கால்கள் நொறுங்க அது ஒரு புறமாக சரிந்தது. அவளால் ஒரு சொல்லும் உரைக்க இயலவில்லை. உதடுகள் நீருக்குத் தவிப்பவைபோல் அசைந்தன. பின்னால் அறைவாயிலில் வந்து நின்ற குந்தி “வெளியேறுக, கீழ்மகனே! அவள் உன்னிடம் ஒரு சொல்லும் உரைக்க விரும்பவில்லை. அதற்கு அப்பால் நீ தெரிந்துகொள்வதற்கு என்ன உள்ளது இங்கே?” என்றாள்.
“ஏன் என்று நான் அறிந்தாகவேண்டும்” என்று பீமன் சொன்னான். “நான் அறிந்தே ஆகவேண்டும். அவள் அகம் நிறைவுற்றதா? அவள் சொல் நிலைகொண்டது என உணர்கிறாளா? அவளில் எழுந்த பெருந்தோழி அவளேதான் அல்லவா? அவள் சொல்லட்டும்…” குந்தி “நீ அறிய வேண்டியது ஒன்றே. இக்கீழ்மையில் அவளுக்கு பங்கில்லை. இப்பழி அவளால் சூடப்படப் போவதில்லை” என்றாள். “இப்பழியை எவரும் ஏற்கப்போவதில்லை. இதைச் செய்தவன் நீ. தெய்வங்கள் முன்பும் மூத்தோர் முன்பும் பொறுப்பேற்கவேண்டியவனும் நீயே… இது உன் பிறவிச்சுமை. ஏழு பிறவிக்கும் நீ மட்டுமே தீர்க்கவேண்டிய கடன்.”
“நன்று” என்றபடி பீமன் திரும்பிப் பார்த்தான். “இது அத்தனை எளிதாக அகலும் பழியா என்ன? இதை சூதர்கள் பாடப்போவதில்லையா?” என ஏளனச் சிரிப்புடன் குந்தியை நோக்கி கேட்டான். “சூதர்கள் பாடட்டும். எவர் பாடினால் என்ன? அவள் அதை தான் ஏற்றுக்கொள்ளவில்லை. உன் குருதிக்கலத்தை நான் உள்ளத்தாலும் தொடவில்லை. உயிர் வாழும் காலம் வரைக்கும், நீத்த பின்னரும் அது அவளையும் என்னையும் விடுதலை செய்யும். நீ உடனே வெளியேறு. இப்போதே வெளியேறு” என்று உரக்கக் கூவினாள் குந்தி.
முனகலோசை கேட்டு பீமன் திரும்பிப்பார்க்க அவன் மஞ்சத்து வெண்பட்டுவிரிப்பில் கையூன்றிய தடத்தில் இருந்த குருதியைக் கண்டு திரௌபதி அஞ்சி எழுந்து மறுசுவர் நோக்கி சென்று ஒட்டிக்கொண்டு நின்றாள். இரு கைகளையும் நெஞ்சோடு சேர்த்து பதறி அலையும் கண்களால் அதை பார்த்தாள். அவள் பார்ப்பதென்ன என்பதை தான் பார்த்த பீமன் தோள் தளர்ந்து புன்னகைத்தான். “நன்று, இப்பழியை முற்றிலும் ஏற்கும் தோள்கள் எனக்குண்டு. இதில் பங்குகொள்ளும்படி எவரிடமும் சென்று மன்றாடி நிற்கப்போவதில்லை. எஞ்சும் நூற்றுவரையும் நானே கொல்வேன். குலமழித்தவன் என்னும் பழி சூடி நிமிர்ந்து தெய்வங்களை நோக்கி நின்றிருப்பேன்” என்றான்.
தன் நெஞ்சில் ஓங்கி அறைந்து “ஆம், பிதாமகரைக் கொன்றவன், தந்தையரைக் கொன்றவன். தெய்வங்கள் என்னை நோக்கி கேட்கும் இப்பழியைச் சூடுகிறாயா என. ஏழு யுகங்கள் இருள் நரகில் உழல்கிறயா என்று. ஆம் என்று சொல்வேன். என் குலக்கொடியின்மேல் கைவைத்தவனைக் கொன்று குருதி குடிப்பேன் என்னும் வஞ்சம் என்னுடையது. அது எவரும் சொல்லி நான் ஏற்றது அல்ல. அன்று செயலற்று அந்த அவையில் நின்றமையின் கீழ்மையை வெல்லும் பொருட்டு அவ்வாறு எழுந்தேன். தெய்வங்களை அழைத்தே ஆணையிட்டேன். இன்று இவள் சொல் பொருட்டு குருதியுடன் வந்த பழியையும் நானே சுமக்கிறேன்” என்றபின் குனிந்து வெளியேறினான்.
கூடத்திற்கு வந்து பிறிதொருமுறை திரும்பி நோக்கியபின் முற்றத்தை அடைந்து தன் புரவியை நோக்கி சென்றான் ஏவல்வீரர்கள் அவனுக்குப் பின்னால் விழிநட்டு வெறித்து நோக்கி நின்றனர்.