லகுலீச பாசுபதம் – கடலூர் சீனு உரை

[ கடலூர் சீனு 4-5-2019 ஊட்டி குரு நித்யா ஆய்வரங்கில் பேசிய உரை]

இவ்வெளிய உரை பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்களுக்கு வணக்கத்துடன்

 

ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம்,

நண்பர்களே, மங்கை ராகவன் குழுவினர் எழுதிய இந்த தமிழகத்தில் லகுலீச பாசுபதம் நூலினை முகாந்திரமாகக் கொண்டு, நமது பண்பாட்டில் மதங்கள் பரிணாமம் பெற்று வளர்ந்த விதம், அதன் பின்னால் செயல்பட்ட முறைமை, இதில் இந்திய அளவில் லகுலீச பாசுபதம் அமைந்த விதம்,அது ஆற்றிய பணி, அந்தப் பணியின் ஒரு பகுதியாக தமிழகத்தில் லகுலீச பாசுபதம் வந்தமைந்து ஆற்றிய பணிகள் குறித்த ஒரு அடிப்படைக் கோட்டுச் சித்திரம் ஒன்றினை உங்கள் முன்பு வைக்க இந்த உரையில் முயல்கிறேன்.

இந்த நூலை அணுகுகையில் முதன்மையாக நான் எதிர்கொண்ட சிக்கல்கள் இரண்டு. முதலாவது இந்த நூல் சொன்னதையே வேறு வேறு விதங்களில் சொல்ல வரும் வழமையான நூல்களில் ஒன்றாக இல்லாமல் புதிதாக ஒன்றை சொல்கிறது. இயல்பாகவே புதிய ஒன்றை புரிந்து வகைப்படுத்திக் கொள்ள உருவாகும் இடர். இரண்டாவது முதன்மையாக இது தமிழகத்தில் லகுலீச பாசுபதம் சார்ந்த ஆய்வுகளை துவங்கி மேற்கொள்ள தயாராகும் ஆய்வாளர்களுக்கு, அவர்களின் ஆய்வுகளுக்குத் தேவையான தொடக்கப் புள்ளிகள் இந்த தலைப்பின் கீழ் எங்கெல்லாம் உண்டோ, தொன்மங்கள், சிற்பங்கள், நாணயங்கள், கல்வெட்டுக்கள், இலக்கியங்கள் என இங்கிருந்தெல்லாம் திரட்டித் தொகுத்து ஒரு தொகுப்பாக்கி அளிக்கும் வகைமையை சேர்ந்த நூல். இந்த நூலை கையில் எடுக்கும் ஒரு ஆய்வாளருக்கு அவர் கற்ற முறைமைகள் சார்ந்து இந்த நூலின் ஒவ்வொரு இயலும், அவருள் தன்னியல்பாக சென்றமைந்து அவருக்கு பொருள் கொடுக்கும். நான் ஆய்வாளன் அல்ல. ஆர்வம் கொண்ட வாசகன் மட்டுமே

[p70] லகுலீசரில் இருந்தது யோக குருவாக உயர்ந்து, தயார் நிலையில் இருக்கும் லகுலீசர் கை ஆயுதம் ஓய்வு நிலைக்கு திரும்பும் படம்

எனவே  இந்த நூலுக்குள் நுழைந்து புரிந்து கொள்ள இந்த நூலுக்குள்ளிருந்து முன்பின்னாக சிதறிக் கிடக்கும் தகவல்கள், இந்த நூலுக்கு வெளியே இது சார்த்து மேலதிகமாக புரிந்து கொள்ள கிடைத்த குறிப்புகள் இவற்றை ஒரு வரிசையில் அமைக்கவேண்டி இருந்தது. அந்த வரிசை நமது பண்பாட்டில் எந்த முறைமையின் அடிப்படையில் மதப் பரிமாணம் நிகழ்ந்ததோ, அந்த இயங்கு தளத்தின் மேல் பிறழ்வின்றி  அமையவேண்டிய ஒன்றாகவும் இருந்தது. அப்படி அமைந்த ஒரு பகைப்புலத்தில், இந்த நூலைக் கொண்டு வைத்ததில் அது அளித்த ஒரு அடிப்படைச்  சித்திரத்தை  இப்போது உரையாடலின் பொருட்டு  உங்கள் முன்பு வைக்கிறேன்.

நண்பர்களே நமது மூதாதையர்கள் வாழ்ந்து போன நிலமான சிந்து சமவெளிப் பண்பாடு நமக்கு சொல்வது என்ன? தொல்லியல் அடிப்படையில் அந்தப் பண்பாட்டின் திராவிட தாக்கம், பல்வேறு  தெய்வங்கள் வழிபடப்பட்டமை சான்றுகளாக கிடைக்கிறது. பல்வேறு தெய்வங்களை வழிபடும் குமுகங்கள், மேல் கீழ் பாகுபாடின்றி, ஒன்றிணைந்து வாழ்ந்திருந்த சமூகம் எனத் தெரிகிறது. இந்தப் பண்பாட்டுப் புள்ளியில் நின்றே இந்து மதப் பரிமாண வளர்ச்சி துவங்குகிறது.

மதப் பரிமாணத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை வேதப்பண்பாடு முன்னெடுக்கிறது.பல்வேறு தெய்வங்களும் அதற்க்கான பல்வேறு வகையான சடங்குகளும் பலநூறு வருடங்களாக மனித ஆழ்மனத்தின் வழியே வளர்ந்தது வந்த ஒன்று. வேதப் பண்பாடு இந்த பல்வேறு தெய்வங்கள் எனும் தொன்மத்துக்குக் கீழே மானுடப் பொதுவாக அமைந்திருக்கும் ஆதித் தொல்படிமமான அக்னி என்பதை மையமாக வைத்து,அதனடிப்படையில் உருவான சடங்குகளின் வலை கொண்டு, இந்த பல்வேறு தெய்வங்களையும், அவர்களுக்கான வழிபாடுகளையும், வழிபடும் மக்களையும் இணைத்து,  மனிதர்களுக்கும் தெய்வங்களுக்கும் இடையே நேற்றும் இன்றும் நாளையும் எனத் தொடரும் செயல்பாடு கொண்ட, செயற்களம் ஒன்றினை தொகுத்தமைக்கிறது.

தொகுக்கும் தன்னுணர்வு தன்னியல்பாக கேள்விகள் கேட்கும் தன்னுணர்வை கிளர்த்துகிறது. தொகுக்கும் போக்கை நிலைநிறுத்தும் செயற்களம் ஒரு முனையில், அதைக் கேள்வி கொண்டு அணுகும் சிந்தனைக் களம் மறுமுனையில் என இருமுனையில் நின்று முதல் டைலடிக்ஸ் உருவாகிறது.  கர்மம் x ஞானம் . இந்த முரணியக்கத்தில் திரண்டு வந்ததே, வேதப் பண்பாடு பாரத நிலத்துக்கு அளித்த கொடையாகிய ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி எனும் தரிசனமும்,  உலகுத்துக்கு பாரத நிலத்தின் கொடையாகிய பிரம்மம் எனும் கருதுகோளும்.

[p120] கருத்து x ஆற்றல் எனும் முரண் இயக்கத்துக்கு சான்றான ,

வேதத்தின் பிரம்மம் எனும் கருதுகோள் வலுப்பெற்ற அக் கணமே அந்த தரிசனத்தின் முரணியக்க எதிர்முனையாக வேத மறுப்பு தரிசனமான சாங்கியம் போன்றவை எழுந்து வரக் காண்கிறோம். இந்த முரண் இயக்கத்தில் ஒன்றுடன் ஒன்று மறுத்தும் ஏற்றும் உரையாடி, வேதத்திருந்த்து தன்னை செழுமை செய்துக்கொள்ளும் விஷயங்களை சாங்கியமும், சாங்கியத்திலிருந்து தனக்கானதை வேதங்களும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்கின்றன. முரண் இயக்க  அடிப்படையிலான இந்த வளர்ச்சியை காலம்தோறும் பல்வேறு ஞானாசிரியர்கள் இந்த முரணியக்கத்தின் எதிர்முனைகளாக நின்று வளர்த்தெடுத்து இந்து மதப் பண்பாட்டின் வளர்ச்சியில் அடிப்படை அலகாக அமைந்து நிற்கிறார்கள்.

வேதகாலத்தில் துவங்கி,  உபநிஷத்துகள் காலத்தில் வனங்களில் ரிஷிகளை மையம் கொண்டு தழைத்த மதப் பண்பாடு, காவிய காலத்தில்,யுக சந்தி காலத்தில் பகவான் கிருஷ்ணன் போன்ற ஞானியராலும்,பேரரசு காலங்களில் புத்தர் மகாவீரர் உளிட்ட ஞானியர் உருவாக்கிய சங்கங்கள்,பள்ளிகளை , சைவ ஞானியரின் சைவ மடங்களை , சாக்த வைணவ  மார்கங்களை  முன்னெடுத்த ஞானியர்களைக் கொண்டும் முன்னகர்ந்தது. தொடர்ந்தது வந்த சங்கரர் ஷண்மதங்களை நெறிப்படுத்தி, அவற்றை இணைக்கும் வைதீக சடங்குகளின் வலையை உருவாக்கி, மறு எல்லையில் பௌத்தத்துடன் உரையாடி அத்வைத்த தத்துவத்தை வளப்படுத்தியும்,இந்து மதப் பரிணாம வளர்ச்சியில் முக்கியப் பங்கு செலுத்தினார். இந்தப் போக்கு அடுத்து உயர்ந்து வந்த கோவில் பண்பாட்டில் சென்றிணைந்து, கோவிலை மையம் கொண்ட ஒன்றாக மதத்தின் வளர்ச்சிப் போக்கு அமைந்தது. அடுத்து வந்த பக்திக் காலக்கட்டத்து ஞானியரால் வலுவடைந்த இந்தப் போக்கு, அன்னியப் படையெடுப்பின் காலத்தில் தளர்ந்தது.  தளர்ந்த அந்தப் போக்கில் மதக் கலாச்சாரத்தின் மையத்தை கோவில்களிலிருந்து,மீண்டும் மடங்களுக்கு மாற்றிய  ஞானியர் வழியே மத வளர்ச்சி புத்துயிர்ப்பு கண்டது. மீண்டும் அன்னியர் ஆட்சியில் தேங்கி இறுகி நின்ற மதத்தின் ஓட்டத்தை, நாராயண குரு,ராமகிருஷ்ண பரம ஹம்சர்,விவேகானந்தர் போன்ற ஞானியர் உடைத்து,உருக்கி,ஓட விட்டனர். ஜனநாயக யுகத்தில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போன்ற ஞானியர் மதத்தின் தூய ஞானத்தின் தரப்பை முன்னெடுப்பவர்களாக அமைந்தனர். நான்காயிரம் ஆண்டுகளாக உலகின் அறுபடாத தனித்துவம் கொண்ட  ஒரே பண்பாடான இந்துப் பண்பாடு, தனது தொகுக்கும் போக்கு, முரணியக்கப் போக்கு, உன்னதமாக்கல் நிலை எனும் இந்த  முறைமை கொண்டு, பல்லாயிரம் ஞானியரின் மெய்த்தேட்டத்தின் சாரம் கொண்டு வளர்ந்தது. அந்த ஞானியர் நிறையில் ஒருவரே, கி மு முதல் நூற்றாண்டில், குஜராத்தின் காரோகன் எனும் இடத்தில், பாசுபத நெறிக்குள் பிராமணர் குலத்தில் ஜனித்த லகுலீசர்.

வேத மறுப்பு நெறியான பாசுபத மார்க்கத்தில் [பாசுபதம் சிவன் கைக்கொண்ட ஆயுதம்] காபாலிகர்கள்,காளாமுகர்கள், வாமதேவர்கள்,பைரவர்கள் எனும் அடுத்த நான்கு சைவ நெறியினர், பஞ்சார்த்தம் எனும் கடுமையான ஐந்து நெறிகளை கடைபிடிப்பவர்களாக, அதன் பயனாய் மகாவிரதர்கள் என அழைக்கப்படுபவர்களாக பாசுபத மார்க்கிகளுடன் இணைந்திருந்தார்கள். லகுலீசர் காலம் வரை ,வேதத்துக்கும் முன்பாக  எனும் பொருளில் ஆதி மார்க்கம் எனும் பெயரில் பாசுபத நெறி அழைக்கப்பட்டது .

வலுவான ஆதாரம் என கொள்ளத் தகாத குறிப்பு ஒன்றின் படி, லகுலீசர் சிலகாலம் ஆசீவக நெறியை கடுமையாக பின்பற்றுபவராக இருந்திருக்கிறார். விலகி பாசுபத நெறியை தேர்கிறார். தனது மெய்த் தேட்டத்தில் அடைந்தவற்றை தொகுத்து, உஜ்ஜைனி நகரில் அமைந்தது ஞானம் போதிக்கிறார்.கர்க்கர் உள்ளிட்ட முதன்மையான நான்கு சீடர்கள் வழியே பாசுபத நெறி பரவுகிறது.

லகுலீசர் அடிப்படையாக மூன்று அலகுகள் வழியே பாசுபத நெறியை மறு சீரமைப்பு செய்தார். ஒன்று பாசுபத சைவத்துக்கான ஆகம நெறிகளை உருவாக்கினார். பஞ்சார்த்தம் எனும் கடுமையான யோக நெறிக்குள் மந்திரங்களுக்கான இடத்தை உருவாக்கினார். தாம் அடைந்த மெய்மையை லகுலீச பாசுபத சூத்ரம் என எழுதினார்.

ஆகமம் என்பது முதன்மையாக நான்கு பகுதிகள் கொண்டது, நெறியின் பாற்பட்ட சமூகம் முழுமையும் கடைபிடிக்க வேண்டிய பொதுவான நெறிகள் சரியை எனும் பகுதியிலும், நெறி சார்ந்து வாழும் ஒவ்வொருவரும் தனித் தனியே கடைபிடிக்க வேண்டியவை கிரியை எனும் பகுதியிலும், இந்த நெறியின் ஆத்மீக சாதகனுக்கான நெறிகள் யோகம், ஞானம் எனும் இதர இரு பகுதிகளிலும் அடங்கி இருக்கும்.

உருவமான இந்த உடல், அருவமான ஆகாய வெளியாக அந்த சிவம், இருவருக்கும் இடையே தொடர்பாக விளங்கும், ஞானேந்திரியங்கள் எனும் அரு உரு. இந்த அரு உருவை செம்மை செய்யும் யோக நெறிக்குள் மந்திரங்களை நிறுவினார் லகுலீசர்.

இந்த நெறிகளைக் கொண்டு, ஒரு முனையில் சைவத்தின் சாக்தத்தின் தாந்த்ரீக மரபுகளின் உள்முரண்களுடன் உரையாடிய லகுலீச பாசுபதம், முரண் இயக்கத்தின் எதிர் முனையாக சமணத்துடனும், பௌத்தத்துடனும் எதிர் நின்றது. குறிப்பாக ஹீனயான பௌத்தம். ஹீனயானம் பரவி நிலைபெற்ற கம்போடியா முதல் இலங்கை வரை,லகுலீச பாசுபத மார்க்கத்தின் ஆசிரியர்கள் பரவி நின்றிருந்ததை குறிப்புகள் காட்டுகின்றன.  இந்த நிலையில், ஆதிமார்க்கம் என அறியப் பெற்றிருந்த பாசுபத மார்க்கம். லகுலீசரின் சீரமைப்புக்குப் பிறகு, மந்திர மார்க்கம் என வழங்கப் பட்டது.

இவ்வாறு பரவிய லகுலீச பாசுபதம் பௌத்தத்தைப் பின்பற்றி முற்காலப் பல்லவர்கள் காலத்தில் தமிழகம் வந்து, காரோகன[காய அவரோகணர்- உடல் கொண்டு இறங்கி வந்தவர்]  மடங்கள் வழியே நிலை கொண்டது. அக்கால குடைவரைகளில் காணப்படும் லகுலீசர் புடைப்பு சிற்பங்கள், பல்லவர் கால காபாலிகர்கள் பௌத்தர்கள் குறித்த நிலை இவற்றின் சான்றுகளை நூலுக்குள் காண்கிறோம். அவ்வாறு நிலை கொண்ட பாசுபதம், தமிழகம் வருகையில் இங்கு முன்பே நிலைபெற்றிருக்கும் பிற சைவ மரபுகளை எதிர் கொள்ள நேர்கிறது. தமிழக சித்தாந்த சைவம், இப்படி வந்து கலக்கும் சைவ மரபுகள்,சைவம் அல்லாத பிற மரபுகளை,நான்கு அட்டவணைகளின் கீழ் தொகுத்து அடையாளம் கண்டது. அகச் சமயம், அகப்புறச் சமயம்,புறச் சமயம், புறப் புறச் சமயம் எனும் நான்கு நிலை அது. பின்னது இரண்டும் நமது பேசுபொருளுக்கு வெளியே என்பதால் அதை விடுத்து, ஒரு புரிதலுக்காக முன் இரண்டை மட்டும் பார்ப்போம்.

பதி,பசு,பாசம். இது சைவத்தின் மூன்று அடிப்படை அலகுகள். பசுவாகிய ஆத்மன், பாசமாகிய தளையை அறுத்து, பதியாகிய ஈசனை அடைய சைவ ஆகமங்கள் வகுத்த நெறிகள் மட்டுமே முதன்மையானது, முழுமையானது ,போதுமானது என்ற கொள்கையின் அடிப்படையில் இயங்கும் சைவ நெறிகள் அனைத்தும் அகச் சமயம் என அடையாளப்படுத்தப் பட்டது.

இந்த ஆகம நெறிகளை ஏற்றுக் கொண்டு, அவை போதுமானவை அல்ல, அதற்கும் மேலான சில உண்டு வேதம் போல , அவற்றையும் ஏற்றுக் கொள்வோம் எனும் கொள்கையின் கீழ் இணையும் சைவ நெறிகள் அகப் புறச் சமயம் என அடையாளம் காணப் பட்டன.  இந்த பதி பசு பாசம் இவற்றை ஏற்காத பௌத்தம் புறச் சமயம் என அடையாளம் காணப் பட்டது.  இவ்வாறு அடையாளம் காணப்பட்டு,தமிழ் நிலத்தில் மடங்களில் மையம் கொண்டு நிகழ்ந்த,லகுலீச பாசுபத மார்க்கத்தின் செயல்பாடுகள், அடுத்து வந்த சோழர்கள் காலத்தில், குறிப்பாக ராஜராஜ சோழன் காலத்தில், அவர் கட்டிய, ராஜராஜேஸ்வரம் என்று அழைக்கப்பட்ட ,ஆகம நெறியின்பாற்பட்ட பெரிய கோவிலை மையம் கொண்ட ஒன்றாக மாறியது.

பாசுபத சைவத்தின் முதன்மை மூர்த்தமான சதாசிவனின் லிங்க உருவே, சதாசிவ லிங்கமே இந்த பெரிய கோவிலின் விமானம். ராஜராஜ சோழன் பாசுபத மார்க்கி. அவர் காலத்தில் ஆகம நெறிக்குட்பட்ட இந்த பெரிய கோவிலிலை மையம் கொண்டதாக பாசுபத மார்க்க சைவத்தை மாற்ற மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டார். சோழ நிலக் கோவில்கள் ஆகம விதிக்கு மாற்றப்பட்டு ஈஸ்வரம் எனும் பின்னொட்டை அடைந்தன. ஆகம நெறிக்கு உட்படாத சாக்த கோவில்கள்,அரசின் கவனிப்பின்றி கைவிடப் பட்டன. அக் கோவிலின் ஊழியர்கள் , நேத்ர சிவம், அகோர சிவம், ருத்ர சிவம் என்றெல்லாம் பெயர் மாற்றம் அளிக்கப்பட்டு,பாசுபத நெறிக்குள் கொண்டுவரப்பட்டு, கோவிலுடன் இணைக்கப்பட்டனர்.

ராஜ ராஜன் காலத்தில்தான் சாதி அமைப்பில் இடங்கை வலங்கை பிரிவு வலுப்படுத்தப் பட்டது. அதன் காரணிகளில் ஒன்று இந்த கோவிலின் நிர்வாக அமைப்புடன் தொடர்பு கொண்டது. கோவிலின் முதன்மை பணிகளுக்காக நர்மதை நதிக்கரை அருகிலிருந்தது பிராமணர்கள் அழைத்து வந்து குடியமர்த்தப்படுகிறார்கள். வெளியில் இருந்தது ஒரு குலம்,உள்ளே வந்து அமைவது என்பது ராஜ ராஜன் காலத்தில் அவ்வளவு சுலபம் அல்ல. ஒவ்வொரு சமூக அடுக்கும், அந்த அடுக்கின் தொழில், அந்த தொழில் செய்யும் சாதி இவற்றுடன் பிணைந்த ஒன்று. இவ்வாறு இருக்கையில் வெளியே இருந்து உள்ளே வரும் ஒரு குடிக்கு முதன்மை இடம் அரசனால் அளிக்கப்படும் என்றால், அந்த குடிக்கு முன்பாக அந்த இடத்தில் இருந்த பூர்வ குடி இதை எவ்வாறு எதிர் கொள்ளும்? சமூக படியில் இறங்கு முகம் காண எந்தக் குலம்தான் ஒப்பும்?

இப்படி அழைத்து வரப்பட்டு குடியமர்த்தப்பட்ட பிராமணர்கள்,கவுணிய எனும் கோத்திரத்தை சேர்ந்தவர்கள். இந்த கவுணியர் லகுலீசர் எழுதிய பாசுபத சூத்ரத்துக்கு முதல் உரை எழுதியவர். இந்த கவுணிய கோத்ரத்தை சேர்ந்த காளாமுக மார்க்கியே சைவ பக்தி இயக்கத்தை வேகம் கொள்ளச் செய்த திருஞான சம்பந்தர்.  ஆசிரியர் நீலகண்ட சாஸ்த்ரி தனது தென்னிந்திய வரலாறு நூலில், சம்பந்தர் தீவிரமாக பணியாற்றிய காலத்தில், எந்த பொதுப் போக்கிலும் இணையாமல் கிட்ட தட்ட ஒரு பழங்குடி மரபு போலவே தனித்துத் திரிந்த காளாமுகர்கள்,காபாலிகர்கள் அதிக எண்ணிக்கையில், செங்கல்பட்டு வந்தவாசி பகுதிகளில் இருந்ததாக கல்வெட்டு ஆதாரங்கள் கொண்டு எழுதுகிறார். எனில் பக்தி மார்க்கம் கொண்டு சம்பந்தர் செய்தது எதுவோ அதையே ஆகம நெறிகள் கொண்டு ராஜ ராஜராஜன் சாதிக்க முயன்றார் என்பதை யூகிக்கலாம் .

இந்த கோவிலுக்குள் ராஜராஜனின் முதன்மை கவனம் இரண்டு படிமைகள் மீதானதாக இருக்கிறது. ஒருவர் சண்டேச நாயனார். மற்றவர் சண்டிகேஸ்வரர். சண்டிகேஸ்வரர் சண்டி எனும் தனித்த சாக்த தெய்வத்தை எதிர்கொண்டு எழுத்து வந்த சிவ வடிவம். சண்டேச நாயனார் கதை நாமறிந்ததே. லகுலீசர் வழிபாடு, நமது வண்ணமிகு வழிபாட்டு முறைமைகளின் மர்மமிகு புள்ளி ஒன்றில், சண்டேச நாயனாருக்கு மாறுகிறது. லகுலீசர் சண்டேச நாயனாருடன் இனம்காணப்பட்டு [ லகுலீசருக்கும் சண்டேச நாயனாருக்குமான பொது ஒற்றுமையில் ஏதேனும் ஒன்றில் இருந்து இது நிகழ்ந்திருக்கலாம்.] பரவி,தனி வழிபாடு அடையும் நிலைக்கு உயர்கிறார். இந்த சண்டேச நாயனார் லகுலீசர்தான், என்பதற்கு உள்ள வலுவான ஆதாரங்களில் ஒன்று, நாயன்மார்கள் கோவிலுக்குள் அமைய வேண்டிய ஆகம முறைகளில் காணக் கிடைக்கிறது. எல்லா நாயன்மார்களுக்கும் நின்ற திருக் கோலம் மட்டுமே [காரைக்கால் அம்மையார் தவிர்த்து] ஆகமம் அனுமதிக்கிறது.  மாறாக இந்த சண்டேச நாயனார் லீலாசனத்தில்  அமர்ந்த கோலத்தில்,உருவ அமைதியில் கையில் உள்ள லகுலீசம் [ஆயுதம்] உட்பட சிற்ப இலக்கணத்தில் லகுலீசருக்கு முற்றிலும்  இணையாக  காட்சி அளிக்கிறார்.

லகுலீசம் பரவிய இடங்கள்தோறும் அது பௌத்தத்தை எதிர் கொண்டதை பார்த்தோம். இது சோழர் காலத்தில் என்னவாக இருந்தது என்பதை, ராஜராஜனின் இலங்கை படையெடுப்பின் வழியே அறிகிறோம். அழித்தொழிப்பு. இரண்டாவது வணங்கி வழியனுப்புதல். ராஜராஜேஸ்வரம் கோவிலில், காமிக் பேனல் என்றழைக்கப்படும் கதைச் சிற்பங்கள் வரிசையில் முக்கியமான மூன்று சிற்பங்கள் இதை காட்டுகிறது. முதல் காட்சியில் அரசர் ஒருவர் [அனேகமாக ராஜராஜன்] புத்தரை வணங்குகிறார். இரண்டாம் காட்சியில் புத்தர் வெளியேறுகிறார். மூன்றாம் காட்சியில் புத்தர் வெளியேறிச் சென்ற இடத்தில், விண்ணவர்கள் வாழ்த்த பெரிய கோவில் விமானம் வானத்தில் இருந்து வந்து இறங்குகிறது. மூன்றாவது மிக முக்கியமானது அது உள்ளிழுக்கப்பட்டு கரையும் செயல்பாடு. எனது அவ்வாறே வந்தவர் பதிவில் ஆய்வாளர் கணேசன் அவர்களின் ஆய்வு ஒன்றின் சுட்டி இணைத்திருப்பேன். அதில் தமிழகத்தில் புத்தர் அவலோகிதேஸ்வரர் எனும் வடிவத்தில் எங்கெல்லாம் வழிபடப்பட்டார்,அவர் எவ்வாறு யோக குரு அல்லது தட்சிணா மூர்த்தி படிமைக்குள் உள்ளிழுக்கப்பட்டு கரைந்தார் என்பதன் இலக்கிய,சிற்ப சான்றுகளை அளித்திருக்கிறார்.  எனில் ஒரு கோவிலுக்குள் ஒரு புறம் சண்டேச நாயனாராக லகுலீசர் அமர்ந்திருக்கிறார் அவரது டைலடிக்ஸ் எதிர்முனயான புத்தர் யோக குரு,தட்சிணா மூர்த்தி இவர்களில் கரைந்தது அமர்ந்திருக்கிறார்.

இந்திய அளவில் சிவனின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒன்றாக உன்னதமாக்கம் பெற்ற லகுலீசர், லகுலீசராக தமிழகம் வந்து, சண்டேச நாயனாராக அடையாளம் காணப்பட்டு,பரவி, சண்டேஸ்வரர் எனும் நிலைக்கு உயர்ந்து கரைந்து விடுகிறார். வேத காலத்தில் துவங்கிய  தொகுத்து, முரணியக்கத்தைக் கைக்கொண்டு முன்னகர்ந்து வளர்ந்து உன்னதமாக்கம் பெரும் மதச் செயல்பாட்டின் இழை, சோழர் காலத்தின் இறுதி வரை தொடரும் வகைமையை,அதில் லகுலீச பாசுபதத்தின் இடத்தை அதன் பணியின் அடிப்படை எளிய கோட்டுச் சித்திரம் இது. இந்தப் பகைப்புலத்தை அறிதல் சட்டகமாகக் கொண்டு, இதில் நிறுத்தி இந்த தமிழகத்தில் லகுலீச பாசுபதம் நூலை வாசிக்கப் புகுந்தால், இந்த நூல் திறந்து மேலதிக பொருளை அளிக்கும்.

ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் நன்றி.

***

தமிழகத்தில் லகுலீச பாசுபதம் – கடிதம்

முந்தைய கட்டுரைஅறம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-32