அன்புள்ள ஜெயமோகன்,
எம்.கோபாலகிருஷ்ணன் எண்ணமும் எழுத்தும் என்ற நிகழ்வில் எழுத்தாளர் பாவண்ணனுடன் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஓரிரு நிமிடம் உரையாடிவிட்டு “நானும் பெங்களுரு தான் சார்” என்று கூறினேன். “அப்படியா? வீட்டுக்கு வாங்களேன்” என்று கூறினார். பிறகு வேறு யாரோ அவருடன் பேச முற்பட உரையாடல் அத்துடன் நின்று போனது. பிறகு பெங்களூரு வந்து சேர்ந்த பிறகு அந்த மென்மையான முகம், அந்த உரையாடல் நினைவுக்கு வந்து வந்து சென்றது. ஒருவித நாணம் காரணமாக முகவரியை கேட்க மறந்துவிட்டேன். ஆனால் சந்திக்க வேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. பிறகு அவரின் வலைப்பூவில் இருந்த மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். நான்கு நாட்களாய் பதில் எதுவும் வரவில்லை. ஐந்தாவது நாள் பதில் அனுப்பியிருந்தார். கோவை பயணத்தின் போதே காலில் சிறு வீக்கம் வந்துவிட்டதாகவும், வீட்டுக்கு வந்து கைவைத்தியம் செய்து சரியாகததால் மருத்துவரை அணுகி சிகிக்சை எடுத்து கொண்டதாகவும், அதனால் உடனடியா பதில் அனுப்ப முடியவில்லை என்று கூறி வீட்டு முகவரி, கைப்பேசி எண் ஆகியவற்றை கொடுத்திருந்தார். உடனே ஒரு குருஞ்செய்தி அனுப்பினேன். திரும்ப அழைத்து நான் எங்கு வசிக்கிறேன் என்று கேட்டுக்கொண்டு எவ்வாறு வர வேண்டும் என்று தெரிவித்தார். கால் வீக்கம் எவ்வாறு இருக்கிறது என்று கேட்க மறந்துவிட்டென். சரி நேரில்போய் கேட்டுக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.
நான் வசிக்கும் பகுதியின் பெயர் காடுபிசனஹள்ளி. கன்னடத்தில் ஹள்ளி என்றால் கிராமம் என்று தமிழ்படுத்திக்கொள்ளலாம். இதுபோன்ற பல ஹள்ளிகள் இங்கு உண்டு. மாரத்தஹள்ளி, தேவனஹள்ளி, கசவனஹள்ளி. சென்னையின் பேட்டை என்பது போல. அவர் வசிக்கும் இடம் சி.வி.ராமன் நகர். சனிக்கிழமை மாலை மூன்று மணிக்கு கிளம்பினேன். வீட்டை நெருங்கும் சமயத்தில் வாகன நெருக்கடி. ஒரு மினி லாரி ஓட்டுனர் மற்றும் சில பேர் சட்டையை பிடித்து சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். யாரும் தடுக்கவில்லை. ஐந்து நிமிடம் சண்டை போட்டுவிட்டு அவர்களாக சமாதானமாய் சென்று விட்டனர். வீட்டை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினேன். கதவு லேசாக திறந்து இருந்தது. வந்து என்னை உட்கார சொல்லிவிட்டு தேநீர் தயாரித்து கொடுத்துட்டார். வீட்டில் யாரும் இல்லை. உட்காரும் போதுதான் கவனித்தேன். காலில் வீக்கம் பெரிதாய் இருந்தது. உண்மையில் சிறிது வருத்தமாக இருந்தது. இந்த நேரத்தில் வந்திருக்க கூடாதோ என்று தோன்றியது.
அவர் ஆரம்ப காலத்தில் வசித்தது புதுவை. எனக்கும் புதுவை பரிட்ச்சியம். அவருடைய சிறுகதைகளில் வரும் ஆலை சங்கு, வில்லியனுர், சங்கராபரணி ஆறு, ரோமன் ரொலண்ட் நூலகம் ஒருவித நெருக்கத்தை அவருடன் உண்டாக்கியிருந்தது. அவருடைய புதுவை அனுபவம் பற்றி பேச ஆரம்பித்தார். பிறகு அப்படியே அவருடைய பணி நிமித்தமாக வெவ்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டியிருந்தது, அங்கு கிடைத்த அனுபவங்கள் என்று உரையாடல் விரிந்து சென்று கொண்டே இருந்தது. நூலகங்களை பற்றி சொல்லும் போது இன்னும் பத்து வருடங்களில் பொது நுலகங்களை மூடி விடுவார்களோ என்று கூறினார். பழைய சம்பவங்களை நேற்று நடந்தது போல் துல்லியமாக நினைவு படுத்தி கூறிக்கொண்டே வந்தார்.
உங்களை பற்றி சில நினைவுகளை பகிர்ந்து கொண்டார். நீங்கள் காசர்கோட்டில் இருக்கும்போது ஒருமுறை மங்களூருக்கு வரும்போது உங்களை சந்திப்பதாக கூறியிருந்ததாகவும், கடைசி நேரத்தில் வரமுடியாமல் ஆகிவிட்டதாகவும், நீங்கள் அப்போது உஙகள் நாவல் முயற்ச்சியை பற்றி விவாதிப்பதற்காக காத்துகொண்டிருந்தாகவும், அது குறித்து உங்களுக்கு கடிதம் எழுதி விளங்கியதாக குறிப்பிட்டார். எந்த வருடம் என்று கேட்கவில்லை. 15-20 வருடம் இருக்கலாம். அதை கூறியவுடன் என் மனம் அன்று நீங்கள் எவ்வாறு இருந்திருப்பீர்கள் என்று கற்பனையில் ஆழ்ந்தது. பின் தொடரும் நிழலின் குரலில் வரும் ஜெயமோகன் போல துடுக்காக இருந்திருப்பீர்களா?எவ்வாறு நேரத்தை கடத்தியிருப்பீர்கள்? தெரியவில்லை.
அவருடைய சில சிறுகதைகள் குறித்து எனக்கிருந்த புரிதல்களை பகிர்ந்து கொண்டேன். பிறகு அவருடைய தொடக்ககால வாசிப்பு அனுபவம், அவரை பாதித்த எழத்தாளர்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அன்னா கரீனானா நாவல் கிடைப்பதே மிகவும் கடினம். பெரும் முயற்ச்சிக்கு பிறகு சேலத்தில் ஒருவரிடம் இருந்து பிரதியெடுத்து படித்ததாக கூறினார். பிறகு கன்னட இலக்கியம் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். கன்னட இலக்கியத்தில் நாவல் என்ற முயற்ச்சி 1950-60களிலேயே சிவராம காரந்த், பிறகு எஸ்.எல்.பைரப்பா போன்றவர்களால் சாத்தியமாயிற்று என்றும், தமிழில் க.நா.சு வாழ் பொய்த்தேவு என்ற நாவல் முயற்ச்சி செய்யப்பட்டது, எஸ்.எல்.பைரப்பா 17 நாவல்கள் எழுதியுள்ளார். அத்தகைய விரிவும், முழுமையும் கொண்ட நாவல்கள் ஒருவரால் தமிழில் சாத்தியப்படவில்லை. தற்போது ஜெயமோகன் முயன்று கொடுப்பதாக சொன்னார்.
வேலை நெருக்கடி காரணமாக தொடர்ந்து பயணம் செய்ய வேண்டி இருந்தது. இல்லாவிடில் இன்னும் சில நாவல் முயற்ச்சி செய்திருக்கலாம் என்றார். புதிய வீட்டிற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் வந்திருந்தார். அடுக்குமாடி குடியிருப்பில் 70 வீடுகள் இருக்கின்றன. பெரும்பாலானவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு பேச முயன்றும் யாரும் அதிகம் பேசுவதில்லை. உண்மையில் ஒரு மெல்லிய தனிமையை உணர முடிந்தது. சில எதிர்கால கடமைகள் குறித்து பகிர்ந்து கொண்டார். கஸ்தூரி பாய் வாழ்க்கை குறித்து ஒரு மொழிபெயர்ப்பு செய்து முடித்திருந்தார். அது வெளிவர இருக்கிறது.
ஏறக்குறைய மூன்றரை மணி நேரம் உரையாடினோம். “சார் இவ்வாறு இருக்குபோது கோவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் பயணத்தை தவிர்த்திருக்கலாமே?” என்று கேட்டேன். அதற்கு காரணம் இரண்டு. 1. கலந்து கொள்வதாக ஒத்துக்கொண்டுவிட்டேன். 2.கோபாலகிருஷ்ணன். என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவரின் பருவம் என்ற நாவல் வாங்கியிருந்தேன். அதை படித்துவிட்டு மறுபடியும் உங்களை சந்திக்க வேண்டும் என்று கேட்டேன். “தாராளமாக வாங்க” என்று கூறினார். கதவு மூடிக்கொண்டது. வீட்டிற்கு வந்தவுடன் ஒருவித இனம் புரியாத உணர்வுகள் மனதில் ஊசலாடிக்கொண்டே இருந்தது. படைப்பு தாண்டி அன்பு என்ற ஒன்றினால் பாவண்ணனால் இதயத்தை தொட்டு பேச முடிகிறது.
வெளியில் அதிகம் செல்ல முடியாததால் களைப்பாய் உணர்கிறார் என்று நினைக்கிறேன். மற்றபடி மிகவும் அணுக்கமான சந்திப்பாக அமைந்தது. அடுத்த நாள் “வீக்கம் குறைந்திருக்கிறதா?விரைவில் நலம் பெற விழைகிறேன்.” என்று குருஞ்செய்தி அனுப்பினேன். “தேறிவருகிறது. ஒவ்வொரு கணமும் குணம் பெறுக என்று அதனிடம் மன்றாடிக் கொண்டிருக்கின்றேன்” என்று பதில் வந்தது.
பாவண்ணன் முழு உடல் நலம் பெற வேண்டிக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன்,
-கோபி செல்வநாதன்.