துர்கனேவின் தந்தையும் தனயர்களும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்,

துர்கனேவ் அவர்களின் “Fathers and Sons” நாவல் படித்து முடித்த உடன் தங்களுக்கு எழுதுகிறேன்

தங்களின் சென்னை கட்டண உரையில் துர்கனேவ் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள், மூன்று வருடம் முன்னரே, பழைய கடையில் வாங்கிய பதிப்பு. இருநூறு சொச்சம் பக்கம் வாசிக்க ஒரு மாதம் ஆகியது, என் சோம்பல் காரணம், பெரிய மல்யுத்தத்திற்கான ஆயத்தத்துடன் தொடங்கி பரமபத சதுரங்க விளையாட்டின் ஸ்வாரஸ்யத்தின் சாயல் படிந்து, சின்ன தீப விளக்கின் வெளிச்சம் போல் ஒரு கவிதை போல்  முடிந்து விட்டது இந்தப் புதினம்

இருநூறு வருஷங்களுக்கு முன்னதாக நடந்த நிகழ்வுகள், இன்றளவும் அனைத்து குடும்பங்களில் நடக்கும் நிகழ்வுகளை ஒத்து இருப்பது இந்நாவலை காலத்திற்கு அப்பால் நிறுத்துகிறது. அத்தனையும் அள்ளி அணைக்கும் நெகிழ்ச்சி ஒருபுறம், அத்தனை ஸ்திரத்தையும் உடைக்க நினைக்கும் லட்சியவாதம் மறுபுறம் – இந்த பரமபத விளையாட்டின் அற்புத காலமின்மை நாவலின் பலம்.

நாவலின் லட்சிய கதாபாத்திரம் இத்தனை ஆண்டுகால பழமையிடமும், மனிதனின் ஆதார உணர்வுகளுடனும் முட்டி மோதுகிறார், அவற்றின் சாரம் முழுதும் புரியும் முன்னே அவற்றை மறுதலிக்க முயல்கிறார். தன் உள்ளுறையும் விளக்கின் துணை கொண்டு உலகம் முழுதையும்  மாற்ற முயல்கிறார்.

அதே நேரத்தில் இந்தப் புதினம் ஒற்றை கதாபாத்திரத்தின் மீது நிற்காமல் துணை கதாபாத்திரங்களின் வழி வாழ்க்கை குறித்த ஒரு முழுமை பார்வையை அளிக்கிறது.

லட்சியவாதம் கைவிட்ட நண்பனை கூடடைந்த காக்கை என்று நாயகன் குறிப்பிடுகிறான். துர்கனேவும் நாயகனின் தாய் தந்தை இருவரை  செம்மறிகளுடன் உருவகப்படுத்துகிறார். கோபம் வந்தாலும் சொந்த வாழ்க்கையை பொருத்திப் பார்க்கையில் செம்மறியாகவும் கூடடைந்த காக்கையாகவும் தான் கடைசியில் இருக்க இயல்கிறது

முடிவில் சிறிது வருத்தமாக இருந்தது. அவ் வருத்தம் சிறிய மௌனமாகவே என்னுள் இப்போது வரை உள்ளது, அதில் இயலாமையின், செயலின்மையின்  சாயல் படியாது இருக்க எல்லாம் வல்ல சக்தியை  வேண்டிக்கொள்கிறேன்

அன்புடன்
மணிகண்டன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-34
அடுத்த கட்டுரைஅறம் வளர்த்த அம்மா