“இறுதி வெறுமை என்பது சாவு. ஆனால் அது வாழ்வில் ஒருமுறைதான் நிகழவேண்டும் என்பதில்லை. அது நிகழ்ந்து மீள்பிறப்பெடுத்தோர் முன்னிலும் ஆற்றல்கொண்டவர்கள் ஆகிறார்கள். தெய்வங்களுக்கு நிகரானவர்களாக நிலைகொள்கிறார்கள். ஆழுலகத்து தெய்வம் அல்லது விண்ணொளிகொண்ட தேவன். நான் கொடுந்தெய்வமென அத்தருணத்தில் பிறந்தெழுந்தேன்” என்று வால்மீகி சொன்னார். அருகே கபீந்திரர் அதைக் கேட்டு அமர்ந்திருந்தார்.
“இனிய குழந்தைகளே, கேளுங்கள். இது வால்மீகியின் கதை. என் குலமூத்தவரான கும்போதரர் நான் சிறுமியாக இருக்கையில் எனக்குச் சொன்னது. அவர்களுக்கு அவர்களின் மூத்தவர்கள் சொன்னார்கள். முதல் மூதாதையான கபீந்திரர் இதை தன் மைந்தருக்குச் சொன்னார். என்னிடமிருந்து நீங்கள் இதை உங்கள் கொடிவழியினருக்கு சொல்க! என்றும் இக்கதை இங்கே திகழ்க!” என்று தூமவர்ணி தன்னைச் சூழ்ந்திருந்த குழந்தைக் குரங்குகளுக்கு சொன்னது. அவை விழிகள் கனவுநிறைந்து நோக்கு மங்கலடைந்திருக்க உடல் குறுக்கி வால் நிலைக்க அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தன.
வால்மீகி சொன்னார்: நான் என் கையிலிருந்த அம்பை எடுத்து கழுத்து நரம்பை வெட்டிக்கொள்ளவேண்டுமென்று எண்ணினேன். எண்ணம் எழுந்தபோதே கையும் உடனெழுந்தது. நெடுநாட்களாக அதற்காகக் காத்திருந்ததுபோல. அப்போது பெருத்த உடலும், நெடுங்கால மதுப்பழக்கத்தால் களைத்து சரிந்த இமைகளும் கொண்ட வணிகனொருவன் அத்திரிமேல் ஊர்ந்து அவ்வழி வந்தான். என்னை நோக்கி “அடேய் நிஷாதா, இழிபிறப்பே, கீழ்மகனே, அங்கு என்ன செய்கிறாய்? தொலைவிலேயே உன் உடலின் கெடுநாற்றம் வீசுகிறதே” என்று கூவி “அறிவிலி என்பது உன் நோக்கில் தெரிகிறது. கீழ்விலங்கே, உண்பதற்கு ஊனேதும் வைத்திருக்கிறாயா?” என்றான்.
நான் “இல்லை” என்று தலையசைவால் சொன்னேன். “பிறகென்ன இரப்பதற்கா இங்கு நிற்கிறாய்? கைகால் உள்ளவன் இரக்கலாமா? சென்று காட்டுக்குள் ஏதேனும் திரட்டிக்கொண்டு வா. என் வயிறு நிறைந்தால் உனக்கு ஒரு செப்புக்காசு தருவேன். அதைக்கொண்டு பின்னால் வரும் வணிகர்களிடமிருந்து நீ எதையாவது வாங்கிக்கொள்ளலாம்” என்றான். நான் அவனை பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் என் அருகே நெருங்கி வந்து “நீ கொண்டுவரும் வேட்டைஊன் உன்னைப்போல் நாற்றமடிக்கும் உடல் கொண்டிருக்கலாகாது. மானோ முயலோ போல தூய விலங்காக இருக்கவேண்டும். இழிமகனே, இன்று உன்னை கண்களால் பார்க்கும் தீயூழ் பெற்றேன். செல்லும் தொழில் வெல்லுமா என்று ஐயமேற்படுகிறது” என்றான்.
அவன் உடலிலிருந்து வியர்வை வழிந்துகொண்டிருக்கிறது. தொங்கிய வாய்க்குள்ளிருந்து கறை படிந்த பெரிய பற்கள் நீண்டிருந்தன. இடையில் தோலாலான கச்சையை கட்டியிருந்தான். அவன் எடையால் ஏறி வந்த அத்திரி நீராவி உமிழ மூச்சிரைத்துக்கொண்டிருந்தது. அவன் வண்டுமேல் ஏறி அமர்ந்த பெரிய மஞ்சள்நிறப் புழுபோல தோன்றினான். நான் அவன் என்னைச் சொன்ன வசைச்சொற்கள் அனைத்தையும் என் அகத்தால் முழுதாக உள்வாங்கி அதுவாக ஆகிக்கொண்டிருந்தேன். வணிகர்கள் நிஷாதர்களை வசைகூவி அழைப்பதே வழக்கம். அது அவர்களின் அச்சத்தால்தான். அந்த அழைப்பு நிஷாதர்களை உடனே உளம்சுருங்கி ஆணவம் அழிந்து விலங்கென்றே ஆக்கும். அவ்வாறு மாறாத உளத்தளர்ச்சியில் அவர்களை வைத்திருக்கவேண்டியது அவ்வழியே அவர்கள் செல்வதற்கான தேவை.
எங்ஙனம் அது நிகழ்ந்ததென்று எனக்குத் தெரியவில்லை, தவளை நாக்கு என என் கை மின்னி நீண்டது. கூரம்பால் அவன் கழுத்தை அறுத்தேன். அதை எதிர்பாராமல் திகைத்த விழிகளுடன், வாய் திறந்து மூச்சுக்குத் தவித்து, உடல் துடிக்க அவன் அத்திரியிலிருந்து கீழே விழுந்தான். நீர்நிறைந்த தோல்பை மண்ணை அறையும் ஓசை எழுந்தது. அத்திரி எடை அகன்றதும் முன் கால் எடுத்துவைத்து அப்பால் சென்று நின்று பிடரி குலைத்து சினைப்பொலி எழுப்பியது. கால்களைத் தூக்கி நிலத்தை குளம்புகளால் தட்டியது. அவன் கீழே கிடந்து உடல் உலுக்கினான். குருதி கொப்பளித்து பூழியில் ஊறி நனைந்து பரவியது. கைகால்கள் இழுத்து அதிர்ந்தன. பசுங்குருதியின் மணம் எழுந்தது.
அம்பை மீண்டும் வீசி அவன் கச்சையை அறுத்து உள்ளிருந்து மூன்று வெள்ளி நாணயங்களை என் கையில் கவிழ்த்தேன். அவனை இழுத்து புதருக்குள் போட்டுவிட்டு காட்டுக்குள் புகுந்தேன். ஆலமரத்தடி ஒன்றில் அமர்ந்துகொண்டபோது என் உள்ளம் மிகத் தெளிந்திருந்தது. என் கையிலிருந்த வெள்ளி நாணயங்கள் என்னை சிலநாட்களுக்கு நலமாக வாழவைக்கும் என்று நான் அறிந்தேன். மூன்று வெள்ளி நாணயங்கள் நான்கு புலித்தோலுக்கு நிகரானவை. அந்த வணிகனைக் கொன்றது குறித்து கழிவிரக்கம் தோன்றவில்லை. பழியுணர்வும் உருவாகவில்லை. அவனைக் கொன்ற பிறகும் கூட அவன் தோற்றமளித்த அருவருப்பே என்னில் எஞ்சியிருந்தது. ஆகவே இருபுறமும் மாறி மாறி துப்பிக்கொண்டிருந்தேன். துப்ப வாய்க்குள் எச்சில் கோழை வற்றாமல் திரண்டுகொண்டிருந்தது.
அங்கேயே படுத்து இரவு துயின்றேன். மறுநாள் காலை எழுந்து அந்த நாணயங்களை ஆலமரத்துக்கடியில் புதைத்து வைத்தேன். அதிலிருந்து ஒரு நாணயத்தை எடுத்துக்கொண்டு சென்று வழிப்போக்கனாகிய வணிகனிடமிருந்து அரிசியும் இனிப்பும் ஆடைகளும் வாங்கிக்கொண்டேன். அவற்றை என் மைந்தருக்கு கொண்டுசென்று கொடுத்தேன். வேட்டை உணவின் மீது பாயும் ஓநாய்க்குட்டிகள்போல அவர்கள் அதன் மேல் பாய்ந்து பூசலிட்டு ஒவ்வொருவரும் தங்களுக்கென எடுத்துக்கொண்டதைக் கண்டபோது உளம் மகிழ்ந்தேன். நெடுநாட்களுக்குப் பின் அத்தகைய மகிழ்ச்சியை உணர்கிறேன் என்று தோன்றியது. அதனூடாக நான் மீண்டும் என் குலத்துடன் இணைந்துகொள்வேன் என்று எண்ணினேன்.
அகன்றிருப்பதன் சலிப்பும் கசப்பும் இனி இல்லை. ஒன்பது இனிய மைந்தரின் தந்தை. அவர்களால் வணங்கப்படுபவன். குடியினர் பதின்மராலும் வாழ்த்தி பணிவிடைகள் செய்யப்படுபவன். அவர்களின் நினைவில் என்றும் நின்றிருப்பவன். மண்நீங்கிச் சென்றபின் அவர்களால் நீரும் அன்னமும் அளிக்கப்பட்டு புரக்கப்படுபவன், அவர்களின் கொடிவழியினர் நினைவில் வாழ்பவன். அவ்வெண்ணம் எனக்கு நிறைவளித்தது. நான் அணிந்துகொள்ள ஒரு முகம் அமைந்தது. நெடுநாட்களுக்குப் பிறகு அன்று என் இல்லத்திலேயே ஊன்கறியும் வெதுப்புச்சோறும் இன்கனிக்கூழும் உண்டேன். வயிறு நிறைய கள்ளுண்டவன்போல் மயங்கி துயின்றேன்.
பின்னர் நான் வேட்டைக்குச் சென்றதில்லை. சில மாதங்களுக்கு ஒருமுறை சாலையோரம் பதுங்கி நின்று தனியாக வரும் வணிகன் ஒருவனை அம்பால் கொன்று வீழ்த்துவேன். அவன் இடையிலிருக்கும் நாணயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு காட்டுக்குள் சென்றுவிடுவேன். அவன் உடலை இழுத்து காட்டுக்குள் போடுவேன். அதை நாய்நரிகள் ஒருநாளுக்குள் வெள்ளெலும்புக்குவையாக ஆக்கிவிடும். ஒரு வாரத்தில் அதனை மண் எழுந்து மூடும். அவனைத் தேடுபவர்கள் கண்டடையவே இயலாது. அவன் ஓட்டிவரும் அத்திரியின் வாலில் ஒரு நெற்றுக்கொப்பரையை கட்டிவிடுவேன். அது எழுப்பும் ஒலி அதை துரத்த கொலை நடந்த இடத்தில் இருந்து பல காதம் அது சென்றுவிட்டிருக்கும்.
ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களில் சாலையோரமாக நின்று அவ்வழி செல்லும் வணிகர்களை வெறுமனே நோக்கிக்கொண்டிருப்பேன். அவர்களில் என்னிடம் எதுவும் பேசாமல் செல்பவர்களை தாக்குவதில்லை. வெறுப்பு நிறைந்த விழிகளால் அவர்களை கூர்ந்து நோக்கிக்கொண்டிருப்பேன். அவர்களும் சாலையோரம் நின்றிருக்கும் காட்டு விலங்கொன்றை பார்க்கும் அகல்வும் விந்தையும் கொண்ட கண்களால் என்னை பார்த்துச் செல்வார்கள். ஒருவருக்கு மேலிருந்தால் என்னைப்பற்றி இளிவரலாக ஏதேனும் சொல்வார்கள். தன்னந்தனியாக வரும் வணிகர்களில் பசியும் விடாயும் கொண்டவர்கள் மட்டுமே என்னை பொருட்படுத்துவார்கள். என்னிடம் பேசுகையில் அவர்களின் விழிகளையே நோக்கிக்கொண்டிருப்பேன்.
நிஷாதரிடம் இனிது பேசினால் இழிகுலத்தோருடன் பேசிய பழியை சூடவேண்டியிருக்கும். அவர்களை வசைபாடுவதும் பழிப்பதும் உரையாடல் என்று கொள்ளப்படாது. ஆகவே இனிய இயல்புள்ள நல்லவர்கள்கூட அவ்வாறுதான் பேசுவார்கள். அந்த வசைச்சொற்கள் சொல்லிச்சொல்லி தேய்ந்து பொருளிழந்தவையாகையால் இருவருக்குமே அவை பொருட்டல்ல. எனக்கும் அவை நேர்ப்பொருள் அளிப்பதில்லை. ஆனால் நான் அவர்கள் விழிகளையே நோக்கிக்கொண்டிருப்பேன். அதில் மெய்யான சீற்றமோ அருவருப்போ ஒவ்வாமையோ உருவாகிறதா என்று பார்ப்பேன்.
அது சிறு மின் எனத் தோன்றிய அக்கணமே எவ்வுருக் கொண்டவனாயினும் அவ்வணிகன் நான் முதலில் கொன்ற அந்த பெரும்புழுவுக்கு நிகரானவன் ஆகிவிடுவதை கண்டேன். மெலிந்தவனோ கரியவனோ சிற்றுடல் கொண்டவனோ அவனில் அந்த புழு தோன்றியதும் அக்கணமே கால் வைத்து முன்னால் பாய்ந்து அம்பை வீசி அவனை கொல்வேன். கழுத்தறுபட்ட கணம் அம்முகத்திலெழும் திகைப்பும், மூச்சுக்குத் திறந்த வாயும், பிதுங்கிய விழிகளும் எப்போதும் ஒன்றே. ஒருவனே வெவ்வேறு உடல்களில் மீளமீள எழுவதுபோல். ஒரு தருணமே வெவ்வேறு வடிவில் மீண்டும் மீண்டும் நிகழ்வதுபோல்.
உடல் நிலத்திலறைய, கைகால்கள் துடித்து இழுத்துக்கொண்டிருக்க அவன் கைகால்கள் வெட்டி அதிர்கையிலேயே இடைவாரை அறுத்து நாணயங்களை எடுத்துக்கொள்வேன். அவர்களில் சிலர் அருமணிகள் அணிந்திருப்பார்கள். பொன் மாலைகள் போட்டவர்களுண்டு. சிலருடைய அத்திரிகளின் இருபுறமும் அரிய பொருட்கள் கொண்ட பைகள் தொங்கிக்கிடப்பதுண்டு. நான் இடையிலிருக்கும் வெள்ளி நாணயங்களன்றி வேறெதையும் எடுத்துக்கொள்வதில்லை. என்னால் அச்செயலை மாறாமல் ஒன்றுபோலவே நிகழ்த்த முடிந்தது. திட்டங்களும் செயல்களும் மட்டும் அல்ல அசைவுகளும் எண்ணங்களும்கூட ஒன்றேதான்.
ஒரு நூறு கொலைகளைக் கடந்தபோது நான் உணர்ந்தேன், வேறெவ்வகையில் அதை நிகழ்த்தினாலும் என்னால் முழுமை செய்ய இயலாதென்று. அது எனக்கு ஒற்றைக்கணம் மட்டுமே. நான் அறிந்த ஒன்றையே திரும்பச்செய்கையில் அதில் தேர்ச்சிகொண்டவனானேன். வணிகனைக் கொல்வதும் இழுத்து அருகிருக்கும் புதரில் போடுவதும் ஊர்விலங்கை ஓட்டுவதும் வெள்ளி நாணயங்களுடன் காட்டுப்புதர்களுக்குள் மறைவதும் மிகச் சில கணங்களுக்குள் நிகழும் ஒன்றாயிற்று. சிறுத்தை வந்து இரை கவ்விச்செல்லும் விரைவு. குளம்படி கேட்கும் தொலைவில் அவ்வணிகனுக்குப் பின்னால் வந்துகொண்டிருப்பவர்கள்கூட என்னை பார்க்க இயலாது.
ஒவ்வொரு முறையும் கைநிறைய பொருட்களுடன் இல்லம் திரும்பும் என்னை என் மைந்தர்கள் தொலைவிலேயே ஓடிவந்து வரவேற்றார்கள். என் தோளிலும் கைகளிலும் தொற்றி ஏறினார்கள். “தந்தையே! தந்தையே!” என்று என்னை கொஞ்சினார்கள். நாய்க்குட்டிகள்போல என் கைகளிலும் கால்களிலும் முத்தமிட்டு கூச்சலிட்டார்கள். நான் என் சுற்றத்திற்கும் உணவளிப்பவனாக ஆனேன். என் தங்கையரும் அவர்கள் மைந்தர்களும் அயலவரும்கூட என் கைப்பொருளை நம்பி வாழலாயினர். கிளை புரப்பவன் ஆனபோது மேலும் ஆணவ நிறைவு கொண்டேன். காட்டில் பலநூறு கிளைகளை விரித்து நின்றிருக்கும் ஆலமரம்போல் என்னை உணர்ந்தேன்.
ஆணவம் உடலில் கொழுப்பென சேர்கிறது. அசைவுகளை குறைக்கிறது. பயணங்களை இல்லாமலாக்குகிறது. அமைந்த இடத்தில் மேலும் ஆழப் பதிக்கிறது. அதுவே மெய்யென்றும் பிறிதொன்றில்லை என்றும் எண்ணச்செய்கிறது. புதுச் செல்வம் அளிக்கும் ஆணவம் நாளை என ஒன்றில்லை என மிதப்படைய வைக்கிறது. நேற்றின் வெற்றிகளை மட்டும் நினைவுகளாக சேர்க்கிறது. நான் அன்று எண்ணினேன், இறுதியாக என் வழியை கண்டடைந்துவிட்டேன் என. என் நிறைவை அடைந்துவிட்டேன் என.
இளமையில் நான் இங்கிருந்து வானிலெழும் புள்ளென்று எண்ணிக்கொண்டேன். அனைவரிலிருந்தும் முன்னால் ஓடும் விலங்கென்று ஆக முயன்றேன். பின்னர் இவையனைத்தும் அல்ல நான், பிறிதொருவன் என்னுள் உறைகிறான் என்று எண்ணினேன். பிறிதெங்கோ என் இலக்குகள் இருப்பதாக எண்ணிக்கொண்டேன். செல்ல வழியறியாது சலித்து, அச்சலிப்பை வெல்ல செலவொழிந்து, அங்கேயே கைவிரித்து பற்றிக்கொண்டு தங்க விழைந்தேன். அங்கே வேர் ஊன்றி விரிந்து நின்றுவிட்டேன். குலம் சமைக்கும் பெருந்தந்தையரைப்போல. அவர்கள் மரமென முளைத்து வேர்பரப்பி கிளைவிரித்து மெல்லமெல்ல பாறையாக, மலையாக ஆகிவிடுபவர்கள்.
பெருந்தந்தை ஆவதே ஆண் அடையும் முழு நிறைவு. பெருந்தந்தை எனும் கனவில்லாத ஆண் இல்லை. பெருந்தந்தையாக சிலகணங்களேனும் நடிக்காதவர்கள் எவருமில்லை. தெய்வங்கள் அதற்கென்றே அவனை படைத்துள்ளன. பெருந்தந்தையருக்குரிய மண் கீழ் அடுக்குகள் நூறு கொண்டது. அங்கே நம் குலத்து மூதாதையர் வாழ்கிறார்கள். நான் மண் திறந்து அவர்களைச் சென்றடையும்போது இரு கைகளையும் நீட்டி என்னை அணுகி அள்ளி நெஞ்சோடணைத்துக் கொள்வார்கள். “வருக, மைந்தா!” என்பார்கள். அவ்வெண்ணம் இனித்தது. அந்த நிறைவில் சில காலம் வாழ்ந்தேன்.
ஒருநாள் காட்டில் ஒரு பாறையின் மறைவில் வழக்கம்போல் நின்றிருந்தேன். என்னை வணிக நிரையினர் கடந்து சென்றார்கள். சிலர் என்னை பார்த்தனர். சிலர் இளிவரல் உரைத்தனர். ஒருவர் என் மண் படிந்த கரிய உடலைப் பார்த்து அருவருப்பு கொண்டு என்மேல் துப்பிவிட்டுச் சென்றார். நான் அந்தப் புழு தோன்றும் வணிகனுக்காக காத்திருந்தேன். அவ்வாறு காத்திருக்கத் தொடங்கி பதினாறு நாட்கள் கடந்துவிட்டிருந்தன. அந்தப் புழு எங்கோ ஒளிந்து எனக்காகக் காத்திருந்தது. அவ்வழியே அது வரக்கூடும். வந்தாகவேண்டும்.
அப்போது ஓர் எண்ணம் வந்தது. இனி அந்தப் புழு வரவில்லையெனில் நான் என்ன செய்வேன்? அது எச்சரிக்கை கொண்டிருக்கலாம். வேறு பாதை தேடியிருக்கலாம். எங்கோ ஒதுங்கி என்னை நோக்கிக்கொண்டிருந்திருக்கலாம். நூறுமுறை அது தோன்றி கொல்லப்பட்டுவிட்டது. இந்த வேட்டை வடிவை நான் மாற்றியாகவேண்டும். இவ்வண்ணம் இது முடிவிலாது நீள இயலாது. இன்று என்னை நம்பி நூறு வயிறுகள் காத்திருக்கின்றன. என் கையிலிருக்கும் வெள்ளி நாணயங்கள் மழைக்காலம் வரை போதுமானவை அல்ல. மானுட வேட்டையாடியே ஆகவேண்டும். எனக்கென நானிட்ட எல்லையை கடக்கவேண்டும். காட்டுவிலங்குகள் தெய்வங்களிட்ட எல்லையை ஒருபோதும் கடப்பதில்லை. எல்லை கடப்பவன் மானுடன். ஆகவேதான் அனைத்து விலங்குகளுக்கும் மேல் அவன் ஆற்றல் எழுந்துள்ளது என்று மூதாதை சொல்லி கேட்டிருக்கிறேன்.
எனது எல்லையை கடக்கவேண்டும். எனக்கு நானே ஆணையிட்டுக் கொண்டேன், தன்னந்தனியன் எவனாயினும் அவனை நான் தாக்கவேண்டும் என. என் பழகிய பாதையை மீறிச் செல்வேன். என்னுள் எழும் எச்சரிக்கைக் குரலை ஒழிவேன். ஒருமுறை ஒன்றை நிகழ்த்திவிட்டால் போதும், அந்த வழி எனக்கென திறந்து கொள்ளும். அது முடிவிலாதது. அதன் பின் தனித்து வரும் எந்த வணிகனையும் என்னால் கொல்ல முடியும். ஆகவே கண்ணை மூடி என் கையிலிருந்த அம்பை இறுகப்பற்றிக்கொண்டு அடுத்து வரும் வணிகன் எவனாயினும் அவனை கொல்வேன் என்று எனக்குள் வஞ்சம் உரைத்துக்கொண்டேன்.
தொலைவில் வருவது ஒற்றை அத்திரியின் குளம்படி ஓசையென்று அறிந்தேன். அதன் மேல் இருப்பவன் எனது இன்றைய இலக்கு. இவ்வுறுதியை எடுத்த உடனேயே ஒற்றைக்குளம்படி ஓசையை கேட்கச்செய்து தெய்வங்கள் எனக்கு ஆம் அவ்வாறே என்று ஒப்புதல் அளிக்கின்றன. வருபவனும் நானும் ஊழால் அவ்வாறு கோக்கப்பட்டிருக்கிறோம். இதில் பிழையென ஏதுமில்லை. வேட்டைவிலங்கும் ஊன்விலங்கும் ஒரே ஊழ்நெறியின் இருபுறங்கள் என்று என் மூதாதையர் சொல்வதுண்டு. வருபவன் தன் ஊழை நோக்கி வந்துகொண்டிருக்கிறான். என்னை இங்கு நிறுத்தியிருப்பது அதே ஊழ்தான்.
பாறைக்கப்பால் அவன் தோன்றியதும் நான் அம்பை வீசிக்கொண்டு முன்னால் பாய்ந்தேன். ஆனால் அதற்குள் அவன் தன் காலைத் தூக்கி என் நெஞ்சை உதைத்து பின்னால் தள்ளினான். பாய்ந்திறங்கி தன் இடையிலிருந்த வாளை உருவியபடி நின்றான். நான் அக்கணமே பின்னால் பாய்ந்து ஓடியிருக்கவேண்டும். திருடர்களின் வழி அதுவே. ஆனால் என்னுள் ஆழத்தில் இருந்தவன் நான் வீசியெறிந்துவிட்டேன் என நம்பிய அந்த வில்லவன். சீற்றமும் சினமும் எழ நான் ஓங்கி நிலத்தில் துப்பியபடி என் அம்புடன் அவனை நோக்கி எழுந்தேன்.
அவன் அஞ்சவில்லை. விழிகூர்ந்து நோக்கி “ உனக்கென்ன வேண்டும்?” என்று கேட்டான். அவன் கைகளை நோக்கிய விழிகளைத் தூக்கி அவன் கண்களை பார்த்தேன். அவற்றில் அருவருப்பையோ கசப்பையோ சினத்தையோ காணவில்லை. இனிய நகைப்பொன்று இருப்பதுபோல் தோன்றியது. மறுகணமே அந்நகைப்பு ஓர் ஏளனமென்று என் ஆணவம் திரித்துக்காட்ட, நான் “உன் உயிர்! உன் உயிர் வேண்டும் எனக்கு” என்றேன். “என் உயிர்கொள்ளும் அளவுக்கு உனக்கு என் மேல் என்ன வஞ்சம்?” என்று அவன் கேட்டான். “ஏனெனில் உன் மடியில் வெள்ளி நாணயங்கள் உள்ளன. என் மைந்தரும் சுற்றமும் பசித்திருக்கிறார்கள்” என்று நான் சொன்னேன்.
அவன் மேலும் கனிந்து நகைத்து “நன்கு எண்ணிப் பார். மெய்யாகவே உன் குழவியருக்காகவா இக்கொலையை செய்கிறாய்? உன் ஆணவத்திற்காக அல்லவா?” என்றான். “இல்லை! இல்லை!” என்று நான் கூவினேன். “நான் பெருந்தந்தை. நூறு வாய்களுக்கு உணவூட்ட வேண்டியவன். அதன் பொருட்டு நான் செய்யும் அனைத்தையும் தெய்வங்கள் ஒப்புக்கொள்ளும்” என்று சொன்னேன். “நூறு வாய்களை ஒருவனிடம் ஒப்படைக்கும் அளவுக்கு தெய்வங்கள் அறிவில்லாதவை அல்ல. இக்காட்டில் அப்படி ஒரு விலங்கு உண்டா என்ன?” என்று அவன் கேட்டான். என்னால் மறுமொழி சொல்லக்கூடவில்லை.
அவன் என்னை நோக்கி மேலும் கூர்விழிகொண்டு “உனது குழந்தைகள் வேட்டையாடும் அகவை அடைந்துவிட்டனரா?” என்றான். “ஆம்” என்று நான் சொன்னேன். “எனில் ஏன் அவர்கள் உன்னை நம்பி இருக்கிறார்கள்? எந்த வேட்டைவிலங்கும் அவ்வாறு பல்லும் நகமும் எழுந்த மைந்தருக்கு உணவூட்டுவதில்லையே” என்றான். மறுமொழி சொல்ல இயலவில்லை என்பதனால் நான் சீற்றம்கொண்டு உறுமினேன். அவன் கைநீட்டி என்னை ஆறுதல்படுத்தி “எண்ணி நோக்கு, நீ இதை இயற்றுவது உன் ஆணவத்துக்காக மட்டும்தான் அல்லவா? சற்று முன் சொன்னாய், நீ பெருந்தந்தை என்று. அது உன் ஆணவ வெளிப்பாடல்லவா?” என்றான்.
“நீ யார்?” என்று நான் கேட்டேன். “என் தந்தை இவ்வழியில் நெடுநாட்களுக்கு முன் கொல்லப்பட்டார். நான் அவர் பன்னிரு மைந்தர்களில் இளையவன். பதினொருவரும் வணிகர்களானார்கள். நான் பொருள் துறந்து கானேகி நூல் பயின்றேன். துறவு பூணும் பொருட்டு தந்தையிடமும் அன்னையிடமும் வாழ்த்துச் சொல் பெற்று மீளும் எண்ணத்துடன் திரும்பி வந்தேன். எந்தை வணிக வழியில் கொல்லப்பட்டார் எனும் செய்தியை அறிந்தேன். என் உடன்பிறந்தார் அக்கொலையை உரிய சடங்குகளுக்குப் பின் மறந்துவிட்டனர். வணிகர்கள் வழியில் இறப்பது அன்றாட நிகழ்வு.”
“ஆனால் நான் அவர் சாவை மேலும் அறிய விழைந்தேன். ஏனென்றால் அதில் நான் கற்க ஏதோ உள்ளது என்று எனக்குப் பட்டது. இல்லையேல் நான் அவ்வண்ணம் திரும்பி வந்திருக்க மாட்டேன். உலகியலில் இருந்து பெறும் ஒரு மெய்யறிதலின் துளியே முழுமெய்மை நோக்கி மானுடரை செலுத்துகிறது. உலகியலை ஒறுக்க ஆணையிடுகிறது. அது இந்நிகழ்வில் உள்ளது என எண்ணினேன். ஏனென்றால் என் தந்தையின் மடியில் மூன்று வெள்ளிக் காசுகள் மட்டுமே இருந்தன. மூன்று வெள்ளிக் காசுகளுக்காக கொன்றவன் எவ்வண்ணம் வாழ்கிறான், அவன் இழந்ததும் பெற்றதும் என்ன என அறிய விழைந்தேன்.”
“ஆகவே இவ்வழியில் நான் பலமுறை சென்றேன். பல வடிவங்களில் பல வகைகளில். இன்றுதான் உன்னை கண்டுகொண்டேன்” என்றான். நான் அவனை நோக்கி புன்னகைத்து “வேட்டைவிலங்குக்காக வேடன் இரக்கம் கொள்வதில்லை. பழியுணர்வு அடைவதுமில்லை. ஏனென்றால் அவனை தெய்வங்கள் பிழை சாற்றுவதில்லை” என்றேன். “வேடனே ஆயினும் கொலைப்பழிக்கு நீ தப்ப முடியாதென்று அறிவாயா? நெறியிலாக் கொலையை ஒப்பும் மானுடக்குலங்கள் ஏதும் மண்ணில் இல்லை” என்று அவன் சொன்னான். என் உடல் நடுக்கு கொண்டது.
“அறிக, கொலைக்கு நெறி கொள்ளாத உயிர்க்குலங்களே இப்புவியில் இல்லை! பசிக்காது வேட்டையாடும் சிம்மத்தை கண்டுள்ளாயா? சிறிய எதிரியை யானை கொல்வதுண்டா? தன் மேல் மிதித்தவரை கடிக்கையில்கூட அந்த மிதியால் உருவாகும் வலிக்கு நிகராகவே நஞ்சு செலுத்தவேண்டுமென்று வகுக்கப்பட்டுள்ளது நாகங்களுக்கு. நூற்றில் ஒன்றே மெய்க்கடி, எஞ்சியவை பொய்க்கடி என கொடுநச்சுக் கருநாகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சொல், நீ அதன் எல்லையைக் கடக்காது உன் எல்லையைக் கடந்து வந்து தாக்கிய விலங்கை கண்டுள்ளாயா? கேட்டுள்ளாயா?” என்றான். நான் “உண்மை” என சொல்நின்ற விழிகளுடன் நோக்கினேன்.
“வேடனே, எண்ணம் சூழ்வாயெனில் கடந்து நோக்கு, நீ இயற்றிய பெரும்பழி என்னவென்று உனக்குத் தெரியும். இவ்வழி சென்றவர் உன்னை நம்பி மலையேறியவர். உன் குடியினர் வழிப்போக்கர்களை தாக்குவதில்லை என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதனால்தான் இந்த வழியில் வணிகர்கள் வருகிறார்கள். அது உன் குடியினர் எம் மூதாதையருக்கு அளித்த சொல். உங்களுக்கு உங்கள் மூதாதையர் அளித்த ஆணை. அவர்களை நீ மீறியிருக்கிறாய். உன் முன் வந்த வணிகன் கையில் எப்படைக்கலமும் இல்லாதவன். வேட்டையனாகிய நீயே கூறுக! கொம்போ குளம்போ உகிரோ எயிரோ சிறகோ இல்லாத உயிர்களைக் கொல்ல உனது நெறி ஒப்புக்கொள்கிறதா?” என்றான் அவ்வணிகன்.
நான் மெய் தளர்ந்து குரல் தாழ்த்தி “கொன்று ஈட்டிய எதையும் நான் நுகர்ந்ததில்லை. என் குடியினருக்கு உணவாகவே அனைத்தையும் கொண்டு செல்கிறேன். கொலைப்பழி வேட்டைவிலங்கை அணுகுவதில்லை. ஏனெனில் தன் குருதியை அது மைந்தருக்கு அளிக்கிறது என்று எங்கள் குலத்திலொரு சொல் உண்டு” என்றேன். “ஆம் எனில் சென்று உன் குலத்தவரிடம் கேட்டு வா. நீ கூட்டி வைத்த இப்பழியை அவர்கள் பகிர்ந்துகொள்வார்களா என்று” என்றான். “அவர்களிடமா?” என அறிவிலிபோல் கேட்டேன். “ஆம், உன் கையின் செல்வத்தை அவர்கள் உண்டவர்களல்லவா?”
நான் ஆமென்று தலையசைத்தேன். “உன் பழியில் அவர்களுக்கும் பங்குள்ளது என அவர்கள் சொன்னால், அவர்களில் ஒருவரேனும் உன் பழியில் ஒருதுளியையேனும் ஏற்றுக்கொள்வார்கள் என்று முன்வந்தால், மீண்டு வா. என்னை நீ கொல்லலாம். இந்த வாள் உன் முன் தாழும். நீ வரும்வரை இங்கு காத்திருப்பேன். என் தந்தைமேல் ஆணை” என்று அவன் சொன்னான். புன்னகைத்து “இது நானும் கற்றுக்கொள்ளும் தருணம். இதைத்தான் தேடி வந்தேன்” என்றான்.
நான் அவன் விழிகளை பார்த்துக்கொண்டிருந்தேன். அத்தகைய ஒருவனை அதற்கு முன் நான் பார்த்ததில்லை. “நன்று, வணிகரே. சென்று என் குலத்தை அழைத்து வருகிறேன். நான் செய்தது பழி எனில் அப்பொறுப்பைப் பகிர அவர்கள் ஒருபோதும் தவறப்போவதில்லை. எனக்கு அதில் ஐயமே இல்லை. ஏனென்றால் நிஷாதர்களாகிய நாங்கள் ஒரே குருதியின் ஆயிரம் முகங்கள். கிளைபிரிந்து வான் பரவினாலும் வேர்பின்னி ஒன்றென்று நிலைகொள்பவர்கள்” என்றபின் திரும்பி நடந்தேன்.