‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-29

சுபாகு தன்னிலை உணர்ந்தபோது துச்சாதனனின் இறப்பு விண்ணில் முரசொலித் தொடராக பரவியிருந்தது. அவன் முன்விழிப்பு நிலையில் அந்த முரசொலியை வேறேதோ இறப்பறிவிப்பு என எண்ணினான். மெல்ல மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தபோது “இளைய கௌரவர் வீழ்ந்தார்!” என முரசுகள் இயம்புவதை உணர்ந்தான். அவனை நோக்கி ஓடிவந்த குண்டாசி “அறிந்தீர்களா? மூத்தவர் சுபாகு யானையால் கொல்லப்பட்டார்” என்றான்.

அவன் தானல்லவா சுபாகு என துணுக்குற்றான். “என்ன சொல்கிறாய்?” என்றான். “யானைமேல் அமர்ந்து கங்கையை நீந்திக்கடக்கும் விளையாட்டு. அனைவரும் இறங்கினர். அவர் தவிர பிறர் அனைவரும் மறுகரையை அடைந்தனர்.” சுபாகு “நன்று, அவனுடைய நூலறிதல் அவனுக்கு உதவவில்லைபோல” என்றான். குண்டாசி திகைப்புடன் பார்க்க “நீ செல்க! நான் வருகிறேன்” என்றான். “யானை மறுகரையை அடைந்துவிட்டது, மூத்தவரே, மூத்தவர் சுபாகு மட்டும் வரவில்லை” என்றான் குண்டாசி. சுபாகு “அவன் வருவான்… கங்கையின் ஆழமும் அவனுக்குரியதே. செல்க!” என்றான்.

குண்டாசி சென்றபின் கண்களை மூடிக்கொண்டான். மீண்டும் முரசுகள் ஒலித்துக்கொண்டிருந்தன. “கௌரவனாகிய சுபாகு மறைந்தார். சுபாகு களம்பட்டார்.” நான் அல்லவா சுபாகு? எனில் களம்பட்டது யார்? எங்கோ ஒரு பிழை நிகழ்ந்துள்ளது. என்ன பிழை அது? “பெருமல்லர் களம்பட்டார்! பெருந்தோளர் புகழுடல் அடைந்தார்!” சுபாகு துடித்து விழித்துக்கொண்டான். இறந்தது துரியோதனன் என்றா சொல்கின்றன முரசுகள்? துரியோதனன் களம்படக்கூடுமா? என்ன நிகழ்கிறது? முரசுகள் தெளிவாக ஒலித்தன. “மூதாதையர் அருகணைந்தார் துச்சாதனர்! வெல்க கௌரவக்குடி! வெல்க அஸ்தினபுரி! வெல்க அமுதகலக்கொடி!

முரசொலி மென்படலமாக படிந்த களத்தில் கௌரவப் படைகள் அலறலாக, சொல்லிலா அழுகையாக, அரற்றலாக, அச்செய்தியை அதே விசையில் பரப்பின. பலர் படைக்கலங்களை நிலத்தில் வீசி ஆங்காங்கே அமர்ந்து அழுதனர். நெஞ்சில் அறைந்து வீறிட்டனர். இறந்தவர்கள்போல் மண்ணில் கிடந்த குருதி வழியும் உடல்கள் மேல் மல்லாந்து விழுந்து வானை வெறித்து நோக்கினர். பின்னிருந்து சகுனியின் ஆணை எழுந்தது. “அங்கர் முன்னெழுகிறார்! அங்கர் வெற்றிமுகம் கொள்கிறார்! விரைக! விரைக! படைகள் தங்களை தொகுத்துக்கொள்க! நம் இளவரசரின் குருதிக்கு பழிநிகர் கொள்க!”

ஆனால் ஒவ்வொரு கணமுமென கௌரவப் படை உளவிசையை முற்றிழந்து பின்னகர்ந்து கொண்டிருந்தது. மறுபுறம் பாண்டவப் படை அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு எழுந்து முன்வரவில்லை. அவ்வண்ணம் வந்திருந்தால் அப்போதே முடிந்திருக்கும் என்று தோன்றியது. இரு படைகளுமே ஒன்றையொன்று அஞ்சியவைபோல், அருவருத்தவைபோல் விலகிக்கொண்டிருந்தன. அல்லது இரு படைகளுக்கும் நடுவே தோன்றிய ஒன்றைக் கண்டு அவை விலக்கம் கொள்கின்றன.

சுபாகு எழுந்து புரவியை நோக்கி சென்றான். செல்லும்போதே “மூத்தவர் எங்கே?” என்று ஏவலரிடம் கேட்டான். “மருத்துவப்பணியாளர்களால் கொண்டுசெல்லப்பட்டார். நினைவழிந்திருக்கிறார் . அகிபீனா அளிக்கப்பட்டுள்ளது” என்றான் அவனுடன் ஓடிய ஏவலன். சுபாகு புரவியில் விசையுடன் சென்றபடி சகுனியின் ஆணையை செவிகொண்டான். “படைகள் ஒன்று சேர்க! அங்கரையும் அஸ்வத்தாமனையும் கிருபரையும் சல்யரையும் துணை செய்க! பிறை வளைந்து வேல் முனையை அழுத்துக! நாம் சூழ்ந்துவிட்டோம். இதோ கவ்வி நொறுக்கவிருக்கிறோம். இதோ வெற்றி அருகணைந்துள்ளது! இதோ வெற்றிகொள்கிறோம்!”

திரும்பி நோக்கியபோது அஸ்வத்தாமனும் கிருதவர்மனும் கிருபரும் சல்யரும் பாண்டவப் படையை முற்றிலும் வளைத்துக்கொள்வதற்காக நெடுந்தொலைவு சென்றுவிட்டனர் என்று தெரிந்தது. கர்ணன் மையத்தில் எழுந்து தன்னை எதிர்த்த அர்ஜுனனை அறைந்து பின்செலுத்தி முன்னால் சென்றுவிட்டமையால் முப்புரி வேலெனத் தோன்றியது கௌரவப் படை. நடுவே முழுமையாகவே மையத் தொடர்பிழந்து, உணர்வு குலைந்து வெறும் திரளென முட்டி மோதி கொப்பளித்துக்கொண்டிருந்தது பாண்டவப் படை. அவர்கள் இழந்ததென்னவென்று ஒருகணத்தில் சுபாகுவுக்கு புரிந்தது. தங்கள் அறவல்லமை மேல் இருந்த நம்பிக்கையை. தெய்வங்கள் உடனுண்டு என்னும் எண்ணத்தை. இத்தருணம்போல் பாண்டவர்கள் எப்போதும் ஆற்றல் குன்றி இருந்ததில்லை.

காவல்மாடத்தின்மேல் சகுனி நின்றுகொண்டிருப்பதை கண்டான். புரவியிலிருந்து இறங்கி அவரை நோக்கி ஓடினான். “மாதுலரே” என்றான். “செய்திகள் அனைத்தையும் அறிவேன். இத்தருணத்தில் நம்மால் சற்று எழ முடிந்தால் நாம் வென்றுவிட்டோம் என்றே பொருள்” என்றார். “நமது படைகள் உளம்சோர்ந்திருக்கின்றன” என்றான் சுபாகு. “ஆம், நாம் நம் தலைவர்களில் ஒருவனை இழந்தோம். நம் அரசரின் பாதி அவன். அவர்கள் இழந்தது மேலும் பெரிது. அவர்கள் இன்றுடன் மூதாதையரின் துணையை முற்றிழந்திருக்கிறார்கள். நம் உளச்சோர்வைவிட அவர்களின் உளச்சோர்வு சற்று மிகுதி. அந்த வேறுபாட்டை இங்கு நின்று இரு படைகளையும் நோக்குகையில் நான் உணர்கிறேன். அதை அவர்களுக்கு சொல்லிவிட முடிந்தால் நாம் வென்றோம்” என்றார் சகுனி.

சுபாகு அவரை வெறுமனே நோக்கியபடி நின்றான். அந்நம்பிக்கையை ஒரு பாதாளதேவனை பார்ப்பதுபோல அச்சத்துடன் பார்த்தான். சகுனியின் உடல் நோயுற்றதுபோல் மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தது. உதடுகள் வெளிறியிருந்தன. ஆனால் அவர் உள்ளம் நிலைகொண்டிருப்பது கண்களில் தெரிந்தது. “மூத்தவர் துச்சாதனர்…” என சுபாகு தொடங்க “அவன் இறப்பதை நான் எதிர்பார்த்திருந்தேன். ஒருவேளை அவன் இறந்ததனால் அவர்களின் வஞ்சத்தின் வெம்மை குளிர்ந்து அழியக்கூடும். அவர்களை இயக்கிய விசை மழுங்கி அழியவும்கூடும்” என்றார் சகுனி.

சீற்றத்துடன் மேலும் சொல்லெடுக்க சுபாகு முயல “நீ உணர்வதை நானும் உணர்கிறேன். ஆனால் இக்களத்தில் கௌரவர்களின் நிரை முழுமையாகவே மடிந்துவிட்டது. அவன் மடிந்தான் என்னும் செய்தி வந்தபோது முதலில் நான் எண்ணியது, இவன் முதல் நாளிலேயே மடிந்திருந்தால் எஞ்சிய மைந்தர்கள் பிழைத்திருக்கக் கூடுமோ என்றுதான்” என்றார். “அவரை கொன்றவர் நீங்கள்!” என்றான் சுபாகு. “ஆம். இங்குள்ள அனைவரையும் கொல்பவன் நானே” என்று சகுனி சொன்னார். உதடுகள் ஏளனச் சிரிப்பில் வளைய “என்னை துவாபரன் என்கிறார்கள்” என்றார். சுபாகு கண்களில் நீர் எழ செயலற்று நின்றான். “எழுந்துவிட்டோம். எண்ணமுடியாத இழப்பையும் அடைந்துவிட்டோம். இனி வெல்வதொன்றே வழி. அதுமட்டுமே இழப்புகளை சற்றேனும் பொருள் கொண்டதாக்கும்” என்று சகுனி சொன்னார்.

திரும்பி முரசுக்கழையர்களை நோக்கி “செல்க! செல்க! படைவீரர்கள் திரண்டு கொள்க! துயரொழிக! வெற்றி அணைகிறது” என்று அவர் ஆணையிட்டார். அவருடைய ஆணை முரசொலியாக வானில் எழுந்தது. நூறுமடங்கு பேருருக்கொண்டு அவர் வானிலிருந்து கூவிக்கொண்டிருந்தார். சுபாகு அந்த ஆணையை கண்களால் என கேட்டுக்கொண்டிருந்தான். சகுனி களைப்புடன் காவல்மாடத்தின் மூங்கில் கைப்பற்றில் அமர்ந்துகொள்ள மேலே தாவி வந்த ஏவலன் “அரசர் நனவழிந்திருக்கிறார். அவருக்கு அகிபீனாவும் பீதர்நாட்டு மயக்குமருந்தும் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள்” என்றான். “ஆம், அவர் இனி களம் வரவேண்டியதில்லை. அவரிடமிருந்து துயரையும் சலிப்பையும் படை பெற்றுக்கொள்ள வேண்டியதில்லை” என்ற சகுனி திரும்பி கௌரவப் படையை நோக்கி எரிச்சலுடன் தலையசைத்து “ஒரு தெய்வத்தருணம்! இது போலொன்று தெய்வங்களே இனி அருளா. இந்த அறிவிலிகள் சற்றே துணிவுகொண்டிருந்தால் இத்தருணத்திலேயே வெற்றி அமையும்” என்றார்.

துச்சாதனன் வீழ்ந்தான் எனும் செய்தி பாண்டவப் படைகளுக்குள் பரவிச் செல்லச் செல்ல மேலும் மேலும் பாண்டவர்கள் சோர்வடைந்துகொண்டிருந்தனர். அவன் வீழ்ந்ததை அவர்கள் எவரும் வெற்றியாக எண்ணவில்லை. அவன் அவ்விறப்பினூடாக ஒரு கொடுந்தெய்வமாக எழுந்து பேருருக்கொண்டு அவர்களை அச்சுறுத்தினான் என்று பட்டது. படைகளின் அளவு சிறுத்திருந்தமையால் ஒற்றை நோக்கிலேயே திருஷ்டத்யும்னனையும் சாத்யகியையும் சிகண்டியையும் அர்ஜுனனையும் காண முடிந்தது. அனைவருமே உளத்திட்பம் அழிந்து தளர்வதை அத்தனை தொலைவிலும் சுபாகு உணர்ந்தான். “அவர்கள் தளர்கிறார்கள்! பின்னடைகிறார்கள்! சூழ்ந்து கொள்க! சூழ்ந்து கொள்க!” என்று சகுனி எழுந்து மீண்டும் ஆணையிட்டார். இவர் சலிப்புறப்போவதே இல்லை. ஓநாய் கிடந்து சாகாது, சென்றுகொண்டிருக்கையிலேயே சாகும் என்ற பாலைவனச் சொல்லை அவன் நினைவுகூர்ந்தான்.

அர்ஜுனனுடன் பொருதிக்கொண்டிருந்த கர்ணன் துச்சாதனன் கொல்லப்பட்ட செய்தியை, அவன் குருதியை பீமன் அருந்தியதை அருகிருந்த வீரர்கள் சொல்லக்கேட்டு பெருஞ்சீற்றத்துடன் விஜயத்தை நாணொலி எழுப்பியபடி அம்புகளால் அறைந்து அறைந்து பாண்டவ வீரர்களை வீழ்த்தியபடி முன்எழுந்து சென்றான். அச்செய்தியால் உளம்சோர்வுற்ற அர்ஜுனனின் காண்டீபம் நாண்தளர்ந்து அழுகையொலியென விம்மியது. அவன் தேரின் தூண்களும் மகுடமும் கர்ணனின் அம்புகளால் சிதைந்தன. இளைய யாதவர் அவனை கர்ணனின் அம்புவட்டத்திலிருந்து மேலும் மேலும் பின்னகர்த்தி கொண்டுசென்றார். ஒருகணத்தில் காண்டீபத்தை தாழ்த்தி தேர்த்தட்டில் தலைகுனிந்து அமர்ந்த அர்ஜுனனின் நெஞ்சக்கவசத்தை கர்ணனின் நீளம்பு வந்து அறைந்து உடைத்தது. பாண்டவப் படையினர் அலறியபடி சிதறிப் பின்னடைந்தனர்.

“அர்ஜுனன் வீழ்ந்தார்!” என எழுந்த ஓசையைக் கேட்டு திருஷ்டத்யும்னன் திரும்பிப்பார்த்தான். தொலைவில் குரங்குக்கொடி தெரியவில்லை. அவன் தொழும்பனிடம் மேலேறிச் சென்று நோக்கி உரைக்க ஆணையிட்டான். தொழும்பன் இறங்கி “அவர் படைமுகத்திலேயே இருக்கிறார். தேரில் விழுந்துவிட்டிருக்கிறார். ஆனால் இளைய யாதவரின் கைமுத்திரை அவர் இறக்கவில்லை என்பதையே காட்டுகிறது!” என்றான். “ஆம், அவர் எவ்வாறு இறக்க முடியும்! அது அல்ல ஊழின் வழி” என்று திருஷ்டத்யும்னன் எண்ணினான். ஆனால் அவ்வாறு சொல்லப்பட்டதுமே ஏன் தன் உள்ளம் அதை நம்பியது என அவன் அகம் வியந்தது. எந்த வீழ்ச்சியையும் நம்பும் நிலையில் நொய்வுற்றிருக்கிறது தன் உள்ளம் என அவன் உணர்ந்தான். முன்னரே அங்கே சென்றுவிட்டிருக்கிறது ஆழம். ஆகவே அனைத்தும் அங்கே வந்துசேர விழைகிறது. தோல்வியை முன்கண்டவர்கள் பின்னர் தோல்வியை அகம்விழைகிறார்கள். எண்ணி எண்ணி தோல்வியை இழுத்து ஏற்றுக்கொள்கிறார்கள். இறப்பின், வீழ்ச்சியின், நோயின் தேவியர் இறைஞ்சிக்கொண்டாலொழிய வருவதில்லை. வழிபட்டாலொழிய தங்குவதில்லை.

இளைய யாதவர் தேரைத் திருப்பி படைகளுக்குள் அதை கொண்டு சென்று மறைத்தார். “நில்… நில், இழிமகனே! உன் குருதியை நான் குடிக்கிறேன். ஆணிலியே, நில்!” என்று வெறிக்கூச்சலிட்டபடி அர்ஜுனனை அம்புகளால் தொடர்ந்து அறைந்து துரத்திச் சென்றான் கர்ணன். அர்ஜுனன் தேர் மேலும் மேலும் பின்னடைய கவசப்படைகள் வந்து இணைந்துகொண்டு அவனை காத்தன. அவன் தேர் நீரில் கல்லென மூழ்கி படையின் நடுப்பகுதிக்குள் சென்றது. கண்ணீருடனும் சீற்றத்துடனும் களிறுகள் சுமந்துகொண்டுவந்த எடைமிக்க கேடயப்பரப்புகளின்மீதே அம்புகளால் அறைந்தான் கர்ணன். அவை இரும்புலையில் பொறிகளென சிதறிச் சிதறி தெறிக்க ஊடே அவனுடைய சொற்களும் தெறித்தன.

பின்னர் எழுந்து கேடயங்களைச் சுமந்துவந்த யானைகளின் கால்களை நோக்கி குறிவைத்தான். யானையின் காலை குறிவைப்பது வில்லவர்க்கு விலக்கு என்பதனால் அதுவரை அவன் அதை செய்திருக்கவில்லை. அவன் தொடுத்த அம்புகளிலொன்று கவசமேந்திய யானையை நிலைதடுமாறச் செய்தது. கேடயம் சரிந்து அதன் செவி தெரிந்தது. செவியிடுக்கில் சென்று தைத்த கர்ணனின் நீளம்பு அந்த யானையை வீழ்த்த அவ்விடைவெளியினூடாக அவனுடைய தேர் உள்ளே புகுந்தது. அவ்விடைவெளியை தொடர்ந்து அம்புகளால் நிலைநிறுத்தியபடி அவன் மைந்தர்கள் உள்ளே நுழைந்தனர். “கேடய வாயிலை மூடுக… யானைகள் இணைந்து கொள்க!” என்று திருஷ்டத்யும்னன் கூவினான். ஆனால் இரண்டு யானைகளின் செவிகள் தெரிய இரண்டையும் அம்புகளால் அறைந்து வீழ்த்தினான் கர்ணன். அந்த யானைகளின் பெரிய உடல்களே தடையாக அதற்கப்பாலிருந்த யானைகள் வந்து வழியை மூட முடியாமலாயிற்று.

மறுபுறம் அஸ்வத்தாமனின் அம்புகளை எதிர்கொள்ள இயலாமல் சிகண்டி பின்னடைந்தார். அவர்களிருவரும் பின்னடைந்ததை ஓசைகளினூடாகவே உணர்ந்து சாத்யகியும் பின்னடைந்தான். கிருபரும் சல்யரும் இருபுறமும் பாண்டவப் படைகளை வளைத்து முன்னகர திருஷ்டத்யும்னன் “ஒருங்கிணைக! ஒருங்கிணைக! நம்மை சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள்! ஒருங்கிணைக!” என்று ஆணையிட்டுக்கொண்டிருந்தான். அது ஆணையென்பதை மெல்ல மெல்ல இழந்து எச்சரிக்கையாக உருமாறியது. ஏதோ ஒரு கணத்தில் கதறல்போல ஒலிக்கத் தொடங்கியது. அந்த ஆணையாலேயே பாண்டவப் படை நம்பிக்கையிழந்தது. நம்பிக்கையிழப்பு உடனடியாக படையினரை தனி மானுடர்களாக ஆக்கிவிடுகிறது என்பதை திருஷ்டத்யும்னன் கண்டான். நம்பிக்கை என்பது பிறர்மேல் கொள்வது, திரள்மேல் எழுவது, திரளென்றாக்கித் தொகுத்து படையென நிறுத்துவது.

சகுனி “தாக்குங்கள்! ஒருங்கிணைந்து கொள்ளுங்கள்! படைத்தலைமைக்குப் பின் ஒருங்கிணைக!” என்றார். அவருடைய ஆணை தலைக்குமேல் அலையடித்துக்கொண்டிருக்க கீழே படையினர் இழுத்துக்கட்டப்பட்ட வலை கயிறுகள் அவிழ்ந்து தொய்வுறுவதுபோல தளர்வுற்றனர். நோக்கியிருக்கவே தங்கள் படைக்கலங்களை நிலத்தில் வீசிவிட்டு அலையலையாக மடிந்து பின்னால் வரத்தொடங்கினர். “முன்னேறுக! முன்னேறுக!” என்று ஆணையிட்டுக்கொண்டிருந்த சகுனி ஒருகணத்தில் இனியொன்றும் செய்வதற்கில்லை என்றுணர்ந்தார். கைகள் சரிய மீண்டும் பின்னடைந்து காவல்மாடத்தின் மூங்கில் வரிமேல் அமர்ந்து வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தார். சுபாகு அவரையும் படைகளையும் மாறி மாறி திகைப்புடன் நோக்கினான்.

கௌரவர்களின் அனைத்துப் படைகளும் பின்னடைய கர்ணனும் கிருபரும் சல்யரும் அஸ்வத்தாமனும் கிருதவர்மனும் மட்டும் படைமுகப்பில் எஞ்சினர். அவர்களின் புறத்துணைப் படையினர் திரும்பி நோக்கி தங்கள் படையினரும் விலகிச்சென்றுகொண்டிருப்பதை அறிவித்தனர். சல்யர் முதலில் முடிவெடுத்து திரும்பும்படி கைகாட்டி தன் படைத்துணைவருடன் பின்னடைந்தார். சூழ எழுந்த கௌரவப் படையின் இரு நண்டுக்கொடுக்குகளும் துண்டுகளாக உடைந்தன. கிருதவர்மனும் அஸ்வத்தாமனும் பாண்டவப் படைகளின் உள்ளே சிக்கிக்கொள்ளகூடும் என்று அஞ்சிய சகுனி உடல் துடிக்க எழுந்து கைகளை அசைத்து “ஒன்றாகப் பின்னடைக! சிதறாமல் பின்னடைக!” என்று கூவினார். அவருடைய ஆணை முரசொலியில் முழக்கமாகியது.

கிருதவர்மனும் அஸ்வத்தாமனும் மேலும் விசையுடன் பாண்டவப் படைகளை தாக்கிக்கொண்டிருந்தார்கள். “பின்னடைக! பின்னடைக! பாஞ்சாலரும் யாதவரும் பின்னடைக!” என்று சகுனி ஆணையிட்டார். அவ்வாணை சென்றுசேர்வதை படைகளின் அசைவாக நோக்க முடிந்தது. ஆணைகளை செவிகொள்ளும் யானையின் செவிகள் மடிந்து உடல் ஊசலாடுவதுபோல படைகள் ததும்பின. அஸ்வத்தாமனும் கிருதவர்மனும் போரை நிறுத்தி பின்னடைந்து, மேலும் மேலும் பின்வாங்கிக்கொண்டிருந்த கௌரவ மையப்படையை வந்தடைந்தார்கள். “ஒருங்கிணைக! ஒருங்கிணைக!” என சகுனி கூவினார். பின்னடையும் எந்தப் படையையும் எதிர்ப்படை துரத்துவது வழக்கம். ஆனால் பாண்டவப் படையும் பின்னடைந்து இணைந்துகொண்டிருந்தது.

பாண்டவப் படைகளுக்குள் புகுந்துவிட்டிருந்த கர்ணனை அப்படைச்சிதறல்கள் ஒன்றாக இணைந்து முழுமையாகவே சூழ்ந்துகொண்டன. திகைப்புடன் நோக்கியபின் “அங்கரை துணைசெய்க! சல்யரும் கிருபரும் கிருதவர்மனும் அஸ்வத்தாமனும் இணைந்து கூரம்பு வடிவு கொள்க! பாண்டவப் படையின் முகப்பை உடைத்து அங்கரை மீட்டெடுத்து வருக!” என்று ஆணையிட்டார் சகுனி. அதுவரை கர்ணனைப் பற்றி எண்ணாதிருந்த அந்நால்வரும் ஒருவரையொருவர் நோக்கிக்கொண்டு கையசைவால் தங்கள் புறப்படைக்கு ஆணையிட்டு ஒற்றைச்சரடென்றாகி மடிந்து அம்புவடிவம் கொண்டு பாண்டவப் படை நோக்கி சென்றனர்.

கௌரவப் படைகளுக்கு நிகராகவே அதே விசையில் பாண்டவப் படையும் ஒட்டுமொத்தமாக பின்னடைந்துகொண்டிருந்தது. அவர்களில் முதன்மை வீரர் எவரும் படைமுகப்பில் இருக்கவில்லை. கர்ணனை சூழ்ந்துகொண்ட பாஞ்சாலத்தின் வில்லவர் படையை கர்ணனின் மைந்தர் எதிர்த்தனர். அவர்கள் நின்றிருந்த இடத்தைச் சூழ்ந்து உருவான வெளி பெரிய வட்டமாக அகன்றது. கர்ணன் உள்ளே சிக்கிக்கொண்டதை உணர்ந்து திருஷ்டத்யும்னன் “சூழ்ந்துகொள்க! அங்கர் சிறைப்பட்டார். சூழ்ந்துகொள்க! முதன்மை வீரர்கள் எழுக!” என முரசாணை விடுத்தபடி பாய்ந்து அணுகினான்.

கர்ணன் ஓர் அம்பை எடுத்து தொடுக்க, பேரொலியுடன் மஞ்சள் நிற மலரென அது வெடித்து அகன்றது. யானைகள் சிதறி அப்பால் விழுந்தன. பல யானைகள் கவசங்களை கீழே போட்டுவிட்டு அலறியபடி அகன்று விலகின. அவ்விடைவெளியினூடாக கர்ணன் தன் மைந்தருடன் பாண்டவப் படைசூழ்கையிலிருந்து வெளியே வந்தான். புகை சூழ்கையிலிருந்து கர்ணனும் தொடர்ந்து மைந்தரும் ஒவ்வொருவராக தோன்றுவதை உடல் மெய்ப்புகொள்ள சுபாகு பார்த்தான். முகில்களிலிருந்து தேவர்கள் எழுவதுபோல என்று அவன் உள்ளம் எண்ணியது. கர்ணனைக் கண்டதும் அஸ்வத்தாமனும் கிருதவர்மனும் வாழ்த்தொலி எழுப்பியபடி ஓடிச்சென்று அவனை எதிர்கொண்டனர். கௌரவப் படை வாழ்த்தொலி எழுப்பியது.

பாண்டவக் கவசப்படை கேடயங்களை உதிர்த்து எஞ்சிய யானைகளுடன் அப்பால் சென்றது. நெளியும் உடல்களும் மானுடச் சிதைவுகளும் தேர்களின் உடைவுகளுமாக குருக்ஷேத்ரம் முற்றாக ஒழிந்தது. சுபாகு வானை பார்த்தான். அந்தி எழுவதற்கு இன்னும் நெடும்பொழுது உள்ளதென்று தோன்றியது. ஆனால் அதற்குள் இரு படைகளும் முற்றாகவே போரை நிறுத்திவிட்டிருந்தன. படைவீரர்கள் சிறு சிறு குழுக்களாக மாறி பின்னால் சென்று, செல்லுந்தோறும் விசைகொண்டார்கள். ஆணைகள் இல்லாமலேயே பலர் தங்கள் பாடிவீடுகளுக்கு சென்றனர். பலர் ஆங்காங்கே அமர்ந்துகொண்டனர். படைகளின் பின்முனை மண்ணில் படிந்தபடியே வர மெல்ல முழுப் படையுமே அமைவுகொண்டது.

பாண்டவப் படை மீண்டும் எழுந்து வந்து தாக்கினால் அரைநாழிகைப் பொழுதுக்குள் கௌரவப் படைகளை வென்றுவிடலாம். ஆனால் அங்கிருந்து பார்க்கையில் பாண்டவப் படையினரும் வெற்றுக்கைகளுடன் தங்கள் படைவீடுகளுக்கு மீண்டதையே காண முடிந்தது. சுபாகு சகுனி மீண்டும் அறைகூவக்கூடும் என எண்ணினான். ஆனால் கௌரவப் படைகளை நோக்கி நின்றிருந்த சகுனி பெருமூச்சுவிட்டு ஒழிந்த களத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் உடல் எடையை ஒரு காலில் அமைத்து மெல்ல எழுந்து நின்று மூங்கில் கழைகளைப் பற்றியபடி வலி முனகலுடன் படியிறங்கலானார்.

சுபாகு அவருக்குப் பின்னால் படிகளில் இறங்கும்போதுதான் துச்சாதனனை மீண்டும் நினைவுகூர்ந்தான். நெஞ்சை அடைப்பதுபோல் தோன்ற கைப்பிடியைப் பற்றியபடி கண்மூடி படிகளின் நடுவே நின்றான். பின்னர் வியர்வை குளிர நினைவுமீண்டு மெல்ல இறங்கி கீழே வந்தான். சகுனி தன் தேரை நோக்கி சென்றார். அவரிடம் அவன் பேச விழைந்தான். எவரிடமேனும் பேச வேண்டியிருந்தது. அவன் அருகணைந்து “நம் படைகள் இனி எழா என தோன்றுகிறது” என்றான். “ஆம், உளச்சோர்வு கொண்டுவிட்டார்கள்” என்றார் சகுனி.

“மூத்தவரின் சாவு அவர்களுக்கு நம்பிக்கை இழப்பை உருவாக்கிவிட்டது” என்று சுபாகு சொன்னான். “அவர்கள் பீஷ்மர் மறைந்த அன்றே மெய்யான நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். துச்சாதனனை அவர்கள் பொருட்டெனக் கருதவில்லை” என்று சகுனி சொன்னார். சுபாகு உடலெங்கும் சினம் பரவ நின்றான். பின்னர் அவருடன் சென்றுசேர்ந்து “எனில் ஏன் அவர்கள் உளச்சோர்வு அடைகிறார்கள்?” என்றான். “அவர்கள் அவனுடன் சேர்ந்து தாங்களும் இறந்தார்கள்…” என்று சகுனி சொன்னார். தேரிலேறிக்கொண்டு “அவர்களின் நெஞ்சு பிளக்கப்பட்டது. குருதி அருந்தப்பட்டது” என்றார்.

சுபாகு விழித்து நிற்க சகுனி உதடுகள் வஞ்சமென நகைகாட்டி வளைய “போர்களில் வீரர்கள் தங்களை பெருவீரர்களுடன் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” என்றார். “அவர்கள் மீளமாட்டார்களா?” என்றான் சுபாகு. “நாளை மீண்டுவிடுவார்கள். ஒரு இரவு போதும் எல்லா பழியுணர்வையும் பிழையுணர்வையும் கடந்து நான் என்றும் எனக்கு என்றும் எழ…” என்றபின் சகுனி கையசைவால் ஆணையிட தேர் எழுவிசை கொண்டு ஓசையுடன் சாலைமேல் ஏறியது.

சுபாகு தேர் செல்வதை நோக்கியபடி நின்றான். அதை மறுக்கவேண்டும் என விழைந்தான். அவனே அல்ல. எவராவது. ஆழ்ந்த சொல்லுடன் அல்ல என வேண்டும். அவன் அப்பால் நின்ற படைத்தலைவனை நோக்க அவன் வந்து தலைவணங்கினான். “மூத்தவரின் களச்சாவு நம் படைகளை சோர்வுறச் செய்துள்ளது” என்றான். ஆம் என அவன் தலையசைத்தான். “அவர் கொல்லப்பட்ட முறை, அவர் அடைந்த இழிவு நம்மவர்களை அஞ்ச வைத்துள்ளது. அதை வஞ்சமென ஆக்கியாக வேண்டும்” என்றான் சுபாகு. படைத்தலைவன் ஒன்றும் சொல்லவில்லை.

“அதற்கு என்ன செய்யலாம்? சொல்க!” என்றான் சுபாகு. படைத்தலைவன் “ஆணையிடுக!” என்றான். “உமது எண்ணம் என்ன?” என்று சுபாகு கேட்டான். “நம் படைகள் வஞ்சம் கொள்ள வாய்ப்பில்லை” என்றான் படைத்தலைவன். “ஏன்?” என்று சுபாகு கேட்டான். “அவர் தன் வினைப்பயனையே அறுவடை செய்தார் என அவர்கள் எண்ணுகிறார்கள். அவர்கள் இக்களத்தில் கொல்லப்பட்டவரின் இடத்தில் இல்லை.” சுபாகு “ம்” என்றான். “அவர் கொல்லப்பட்டமையால் அவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கலாம். ஆனால் பழி நீங்கியது என்றும் நாளை ஆறுதல் கொள்ளக்கூடும். மீண்டெழுவதற்கான வழி அதுமட்டுமே” என்றான் படைத்தலைவன்.

“எதிலிருந்து மீள?” என்றான் சுபாகு. “பழியிலிருந்து. பெண்ணை அவைச்சிறுமை செய்தவர் அவர். அதை அவர் தன் இழிசாவால் நிகர்செய்தார்…” சுபாகு “அப்பழியில் இப்படைகளுக்கு பங்கில்லையா என்ன?” என்றான். “இல்லை, அதை கௌரவக்குடியின் பழி என்றே நம் படைகள் எண்ணுகின்றன.” சீற்றத்துடன் “உமக்கு எப்படி தெரியும் அவர்களின் அகம்?” என்று சுபாகு கேட்டான். “நான் அவர்களில் ஒருவன்” என்றபின் மீண்டும் தலைவணங்கி படைத்தலைவன் இரு பின்னடி எடுத்து வைத்தான். செல்க என கைகாட்டியபின் சுபாகு தன் புரவி நோக்கி சென்றான்.

முந்தைய கட்டுரைவிடுதலைச் சிறுத்தைகள், திருமாவளவன் – விளக்கம்
அடுத்த கட்டுரைஇணையத்தின் குரல்கள் -கடிதங்கள்