1000 மணிநேர வாசிப்பு சவால்
ஆயிரம் மணிநேரம் – தவம்
அன்புள்ள ஜெ. அவர்களுக்கு,
கார்த்திக் மலேசியாவிலிருந்து. 1000மணி நேர வாசிப்பு சவாலில் நானும் கலந்துகொள்ள முடிவெடுத்து, நீண்ட காலமாக வாசிக்க மனநிலை அமையாமல் தள்ளிச்சென்று கொண்டே இருந்த வெண்முரசு நாவல் வரிசையின் முதற்கனல் நாவலை
இன்று காலையில் இருந்து வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். இங்கே தனியாக இருப்பதால், மிக நிறைய நேரம் இருக்கிறது ஆனால் வாசிக்கும் மனநிலை தான் அமைவதில்லை. தனிமை மிகப்பெரிய இரும்புக் கட்டி போல மார்பின் மையத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறது. இந்த தனிமையில் மிகச்சிறு செயலைச் செய்யக் கூட மிகப்பெரிய ஊக்கம் தேவைப்படுகிறது. இந்த வாசிப்புச் சவால் அந்த ஊக்கத்தை அளிக்கும் என நம்புகிறேன்.
காலையில் தொடங்கி ண்டலில் முதற்கனலின் 15% முடித்துவிட்டேன். சுனில் கிருஷ்ணனின் மின்னஞ்சல முகவரி இருந்தால் அனுப்பவும், நானும் இணைந்து கொள்கிறேன்.
பேரன்புடன்,
உங்கள் மாணவன்,
கார்த்திக்
(மலேசியா)
அன்புள்ள கார்த்திக்
ஒருவாரம் தொடர்ச்சியாக விடாப்பிடியாக வாசியுங்கள். சுவை பிடிகிடைக்கும். ஒருமாதம் வாசித்தால் அதுவே வழக்கமாக ஆகும். இயல்பாக உள்ளம் அதில்படியும். ஆறுமாதம் என்றால் பின்னர் விலகுவது கடினம்
நம்மை நாம் பழக்கி எடுக்கமுடியும் என்பதில்தான் வாழ்க்கையே உள்ளது. சுனிலில் மின்னஞ்சல் [email protected]
ஜெ
அன்புள்ள ஜெ,
வாசிப்புச் சவாலை எவரிடமும் சொல்லாமல் நானே வழக்கமாக்கிக் கொண்டேன். ஒருநாள் ஒருமணிநேரம். மாலையில் அலுவலகம் விட்டு வந்ததும். சுவாரசியமான ஓட்டம் கொண்ட நூல்களை எடுத்து வாசிக்கவேண்டும் என நினைத்தேன். ஆனால் நடைமுறையில் பிரச்சினை தெரிந்தது. முன்பு வாசித்த சுஜாதா நாவல்களை எல்லாம் வாசிக்கவே முடியவில்லை. வாசிப்புத்தன்மை என்று சொல்கிறார்கள். அப்படி ஒன்று இல்லை என்று புரிந்துகொண்டேன். எவருக்கு வாசிப்புத்தன்மை என்றுதான் கேட்கவேண்டும். நான் சுஜாதா பாலகுமாரன் எல்லாம் வாசித்துவிட்டு அப்பால் போட்டேன். என்னால் வாசிக்கவே முடியாது என்று தோன்றியது.
அதன்பின்னர் சும்மா இந்துஞானமரபில் ஆறுதரிசனங்களை வாசித்தேன். அது எனக்கு நடுவே விடமுடியாத அளவுக்கு ஈர்ப்பு கொண்டதாக இருந்தது. அதன்பின் தேவிப்பிரசாத் சட்டோபாத்யாயவின் இந்திய தத்துவ இயல் ஓர் எளிய அறிமுகம். அதன்பின் உங்கள் அருகர்களின் பாதை, இந்தியப்பயணம். இப்போது நான்காவது புத்தகமாக எஸ்.ராமகிருஷ்ணனின் எனது இந்தியா. இப்போது வாசிப்பு சூடுபிடித்துவிட்டது. ஒவ்வொருநாளும் வீட்டுத்திரும்புவது பற்றிய நினைப்பே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த ஆண்டு ஐம்பதுபுத்தகங்களையாவது கடந்துவிடுவேன் என நினைக்கிறேன்
ஆர்.ராஜ்குமார்