பி.ஏ.கிருஷ்ணன்,நேரு – கோபி செல்வநாதன்

சேலம் மாநகரில் பாலம் என்ற அமைப்பினர்  வாரந்தோறும் வாசகர் சந்திப்பு என்ற நிகழ்வை நடத்துகின்றனர்.  இலக்கியம் என்ற வரையறைக்குள் இல்லாமல் பொதுவான  அறிதல், விவாதம் என்ற நோக்கத்தோடு  நிகழ்வை  ஒருங்கிணைக்கிறார்கள். ஒவ்வொரு   நிகழ்வுக்கும் யாரேனும் ஒரு சிறப்பு அழைப்பாளர்  கலந்துகொண்டு உரை  நிகழ்த்துகிறார்கள். இந்த வாரம்(28/04/2019) பி.ஏ.கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளர். தலைப்பு “நேரு:அவதூறுகளும், உண்மைகளும்”.  ஒரு மாதத்திற்கு முன்பு “Letters for a Nation”  என்ற புத்தகத்தை  படிக்க தொடங்கியிருந்தேன்.  நேரு பிரதமராக இருந்த காலத்தில் மதம்  இருமுறை  மாநில முதல்வர்களுக்கு  தவறாமல் கடிதம் எழுதி வந்தார். அவர் இறக்கும் வரை அந்த ஒழுங்கை பின்பற்றினார். அந்த கடிதங்களின் தொகுப்பு தான் இந்த நூல்.  ஏற்கனவே கோவை  கட்டண உரையின் போது அவரை சந்தித்து இரண்டு நிமிடம் நேருவை பற்றி பேசியிருந்தேன்.  அந்த நூல் தந்த ஒரு ஊக்கம் மற்றும் தேர்தல் காலகட்ட மலினமான அவதூறுகள், வசைபாடல்கள்  ஏற்படுத்தியிருந்த சோர்வும் என்னை அந்த உரையை கேட்க தூண்டின.

நிகழ்வு 10.30 மணிக்கு  தொடங்குவதாக இருந்தது. இடம்,சேலம் பேருந்து நிலையத்திற்கு எதிரில் அத்வைத சாலையில் பாரதி புத்தகாலயம் பக்கத்தில். 20-25 பேர் வரை வந்திருந்தனர். 11 மணிக்கு நிகழ்வு தொடங்கியது.”அடிப்படையில் நான் ஒரு இடதுசாரி.  நேருவை பதிப்பிட சிறந்த புத்தகம் இ.எம்.எஸ்  எழுதிய “Nehru:Ideology and practice”. நேரு ஒரு முதலளித்துவ வர்க்கத்து பிரதிநிதியாக தான் செயல்பட்டார். எந்த ஒரு தனி ஆளுமையையும் சூழலில் இருந்து பிரித்து அவரின் நன்மை, தீமைகளை விவாதிப்பது எனக்கு ஒப்புதல் இல்லை. ஒருவர் கருத்தியல் ரீதியாக எந்த நிலையில் இருந்தார். அந்த கருத்தியல் வாயிலாகவும், அவர் சார்ந்திருந்த இயக்கம் வழியாகவும் அவர் சமூகத்தில் ஆற்றிய பணி என்ன என்பது குறித்து மட்டுமே விவாதிப்பது எனக்கு ஒப்புகை. ஆனாலும் பி.ஏ.கிருஷ்ணன் என்ன சொல்ல போகிறார் என்று  கேட்க ஆவலாக உள்ளேன்”  என்று துவக்க உரை நிகழ்த்தியவர் கூறி பி.ஏ.கிருஷ்ணனை பேச அழைத்தார்.

“பொதுவாக இலக்கிய கூட்டம் என்றால் தில்லியில் 5 பேர் மட்டுமே வருவார்கள். அதில் 4 பேர் உரையாற்றுபவர்கள். ஒருவர் ஒலிபெருக்கி சரிசெய்பவர். ஆனால் இங்கு 25 பேர் வந்திருப்பது மகிழ்ச்சி” என்று  கூறி  உரையை தொடங்கினார்.   சரியாக இரண்டு மணி நேரம் உரை. அரை மணிநேரம்  கேள்வி விளக்கங்கள். சுருக்கமாக  உரையை  இவ்வாறு தொகுத்துக் கொண்டேன்.

உண்மைகள்:

அ.  நேருவின் ஆளுமை. அவருக்கு  இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இருந்த ஈர்ப்பு.

ஆ.  உலக வரலாற்றின் இருந்ததும், சமகால உலக அரசியல் நிகழ்வுகளில் இருந்ததும் அவர் வகுத்துக்கொண்ட ஜனநாயக அணுகுறை.

இ . இந்தியா என்ற பன்முகத்தன்மை   கொண்ட நாட்டை கட்டமைப்பதில் அவருக்கு இருந்த கனவு. நடைமுறை சவால்கள் ஏமாற்றம்  அளித்தாலும் அவருக்கு இருந்த இந்தியா குறித்த அசைக்கமுடியாத நம்பிக்கை.

ஈ. வெளியுறவு கொள்கை. குறிப்பாக சீனா, பாகிஸ்தான் போர்.

அவதூறுகள் மற்றும் விளக்கங்கள்:

அ. நேருவின் தனிப்பட்ட அந்தரங்கம் குறித்து உலவும் செய்திகள் – இது குறித்து பேச தேவையில்லை. அதுகுறித்து யாருக்கும் தெரியாது. மேலும் அது  நேருவின் சொந்த வாழ்க்கை தொடர்பானது.

ஆ. நேருவுக்கும், அவரது சமகால ஆளமைகளுக்கும்  இருந்த அரசியல்/தனிப்பட்ட உறவு. நேரு-பட்டேல், நேரு-அம்பேத்கார், நேரு-சுபாஸ் சந்திர போஸ்.

இ. சீனா போர்- சீன இந்திய விவகாரத்தில் அவர்  கையாண்ட விதம் முழுமையாக தனக்கு உடன்பாடு  இல்லை என்று குறிப்பிட்டார். மேலும் இது குறித்து அது தொடர்பான  புத்தகங்களை படிக்க சிபாரிசு செய்தார்.

ஈ. காஷ்மீர் – 356 பிரிவு.

ஒர் ஆழமான  உரையாக இல்லாமல் நேருவின் கால நிகழ்வுகள் ஒவ்வென்றையும் தொட்டு பேசினார். உரை முடிந்து கேள்வி நேரம். இ.எம்.எஸ் அரசை 1959ல்  356பிரிவை பயன்படுத்தி கலைத்தது குறித்து இடதுசாரி ஒருவர் வினா எழுப்பினார். அந்த கேள்வியை வேறுசிலரும் எழுப்ப எண்ணியிருந்தனர் போலும். அது தவறுதான்  என்று கூறினார். இ.எம்.எஸ் அரசை  கலைத்தது குறித்து இன்னமும் இடதுசாரிகளுக்கு ஒரு ஆற்றாமை இருப்பதாக புரிகிறது. நான் மாநில உரிமைகள் குறித்து கேள்வி  எழுப்பினேன். சிரோன் மணி அகாலிதள் 1950-1-26ஐ  புறக்கணித்ததார்கள். அதற்கு காரணம் அரசியல் அமைப்பு சட்டம் மத்திய அரசுக்கு அதிக அதிகாரத்தை வழங்குவதாக கருதி. அதற்கு  காங்கிரசில் பெரும்பான்மையானவர்கள் மாநிலங்களுக்கு அதிக உரிமைகள்  வழங்கப்படவேண்டும்  என்ற எண்ணத்தில் இருந்தார்கள். ஆனால் பிரிவினை காரணமாக அந்த போக்கு மாறியது என்று பதில் அளித்தார்.

ஒர் ஆளுமையை பற்றி நாம் கற்பனை செய்து கொண்டு , படித்து, பிறர் கூறக்கேட்டு ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்க, அது நேரில் சந்திக்கும் போது உடைந்து ஒரு புது அனுபவம் நிகழ்கிறது. கணநேரமாயினும் அது ஒரு புது அனுபவமே.உங்களை முதலில் சந்தித்த போது/உரையாடியபோதும் அந்த மாற்றம் என்னுள் நிகழ்ந்தது.(அது பற்றி விரிவாக எழுத வேண்டும்.).

நிகழ்வு முடிந்து “Letters for a Nation” புத்தகத்தில் அவரின் கையெழுத்து பெற்றுக்கொண்டு ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். பிறகு  தொல்.திருமாவளவன் எழுதிய “அமைப்பாய் திரள்வோம்”, ஸ்டாலின் ராஜாங்கம்  எழுதிய “எழுதாக் கிளவி” என்ற இரண்டு புத்தகங்களை வாங்கி கொண்டு கிளம்பினேன்.

முந்தைய கட்டுரைபனிமனிதனின் காலடி
அடுத்த கட்டுரைஅறிபுனை- அறைகூவல்கள் சாதனைகள்