1000 மணிநேர வாசிப்பு சவால்
ஆயிரம் மணிநேரம் – தவம்
அன்புடன் ஆசிரியருக்கு
இன்று காலை ஒரு கனவு. மலர்ந்த முகத்துடன் வந்த மருத்துவர் என் கையைப் பிடித்துக் கொண்டு “கங்கிராட்ஸ் சுரேஷ் உங்களுக்கு கேன்சர் இருக்கு” என்று சொன்னார். நேற்று மீண்டும்(அநேகமாக நூறாவது முறையாக இருக்கும்) நான் பத்தாவது படித்த வகுப்பறையை கனவில் கண்டேன். இந்த வகுப்பறை அடிக்கடி கனவில் வரும் தாத்பர்யம் என்னவென்று தேடவேண்டும். (ஒன்பதாம் வகுப்பு வரை பெண் பிள்ளைகளும் வகுப்பில் உடனிருந்தனர். பத்தாம் வகுப்பில் மாணவருக்கும் மாணவியருக்கும் தனித்தனி வகுப்பு. இது “திடீர் பிரிவு” ஒரு காரணமாக இருக்குமா என சிக்மெண்ட் ஃப்ராய்டிடம் கேட்டுப் பார்க்க வேண்டும்)
வகுப்பில் ஒரு சிறு மாற்றம். பெஞ்ச்-டெஸ்க் இல்லை. தனித்தனி பிளாஸ்டிக் நாற்காலிகள் கிடக்கின்றன. வகுப்பில் ஒன்று கூட தெரிந்த முகமாக இல்லை. பதற்றமாகிவிட்டது. ஒரு கால் என் நாற்காலியை உதைக்கிறது. திரும்பிப் பார்க்காமலேயே அதுவொரு பெண் எனத் தெரிகிறது. திரும்பிப் பார்த்தால் நீலிமா ராணி! (இவரை உங்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. சீரியல்களில் நடித்திருக்கிறார். முந்தாநாள் “இரவு” நாவல் குறித்து பேசிக் கொண்டிருந்ததால் கனவில் வந்திருப்பார் போல )
நான் சூடாக முறைத்தேன். அவர் இன்னும் சூடாக முறைத்ததால் திரும்பிக் கொண்டேன். கரும்பலகையில் பென்சீன் படம் வரையப்பட்டிருக்கிறது. பத்தாவதில் பென்சீன் எங்கே வந்தது என்று எனக்குக் குழப்பம். ஆசிரியர் ஒரு நீல நிற டிஷர்ட்டும் ஜீன்ஸும் அணிந்திருக்கிறார். ஆசிரியர் எங்களை நோக்கித் திரும்பியதும் நான் அதிர்ச்சியுடன் எழுந்து கொண்டேன். ஆம் அது நீங்களே தான் :)
இந்த வாசிப்புச் சவாலால் தூக்கமும் கனவும் நன்றாக வருகின்றன. அக்காவுக்கு சிரமம் வேண்டாம் இன்னும் ஒரு மாதம் இப்படித் தொடர்ந்தால் நானே போய் என் மேல் புகாரளித்து விடுவேன் :)
அன்புடன்
சுரேஷ் பிரதீப்
அன்புள்ள ஜெ
நீங்கள் உங்கள் தளத்தில் இட்டிருந்த அறிவிப்பைப் படித்தபின் நானும் அச்சவாலைச் சந்திக்க ஆரம்பித்தேன். ஆனால் தன்னம்பிக்கை இல்லாத காரணத்தால் வெளியே சொல்லிக்கொள்ளவில்லை. வாசிப்பில் எனக்கிருக்கும் பிரச்சினைகள் என்னென்ன?
அ. என்னால் 15 நிமிடங்களுக்குமேல் வாசிக்க முடியவில்லை. நடுவே மின்னஞ்சல் குறுஞ்செய்தி முகநூல் வாட்ஸப் அறிவிப்பு பார்ப்பேன். யூடியூப் பார்ப்பேன். மீண்டும் வாசிப்பேன்
ஆ. எதையுமே புரட்டி மொத்தம் எவ்வளவு என்று பார்க்காமல் வாசிக்க மாட்டேன். அடிக்கடி இன்னும் எவ்வளவு என்றுபார்ப்பேன்
இ. கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் தாவிச்சென்றுவிடுவேன். ஒட்டுமொத்தாமகப் புரிந்தால்போதும் என நினைப்பேன்
இதெல்லாம் ஏன்? என் அலுவலில் நான் ஒருநாளுக்கு 300 மின்னஞ்சல்கள் வாசிக்கவேண்டும். அவற்றை கூர்ந்து வாசிப்பதில்லை. தேவையுமில்லை. நாளிதழ்களை அவ்வாறு வாசிக்கிறேன். அந்த வாசிப்பே பழகிவிட்டது
ஆகவே இதை ஒருசவாலாக எடுத்துக்கொண்டேன். ஆனால் என்னால் முடியும் என அறிந்தேன். நடுவே செல்போனை எடுக்காமல் வேறெதையும் நினைக்காமல் ஒருமணிநேரம் பல்லைக்கடித்தபடி வாசித்தால்போதும் ஒருவாரத்தில் சரசரவென்று நிறைய வாசிக்கமுடிகிறது. மனம் நன்றாகவே குவிகிறது. ஒரே வாரத்தில் சமாளிக்கக்கூடிய பிரச்சினையைத்தான் பத்தாண்டுகளாக வளர்த்திருக்கிறேன்.
ஆனால் இதில் இணைய வாசிப்பு சேராது. இணையத்தில் அறிவிப்பு வந்துகொண்டே இருக்கிறது. எப்படியும் நாம் இன்னொரு விண்டோவை திறந்துவிடுவோம். அதோடு இணையத்தில் ஸ்க்ரோல் செய்யவேண்டும் என்ற கட்டாயமும் ஏற்படுகிறது.
நன்றி
சுந்தர்