விடுதலைச் சிறுத்தைகள், திருமாவளவன் – விளக்கம்

பொன்பரப்பியில் நிகழ்ந்த தலித் மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராகச் சென்னையில் நிகழ்ந்த கண்டனக்கூட்டத்தில் நான் கலந்துகொண்டேன். அதையொட்டி வசைகள், ஏளனங்கள். பொதுவாக இணையத்தின் உளச்சிக்கல்களை நான் கண்டுகொள்வதில்லை. அவர்கள் ஒரு தனியுலகில் வாழ்கிறார்கள். அன்றாடவாழ்க்கையின் சரிவுகள் ,தோல்விகளை இணையத்தில் கொட்டும் உச்சமான கசப்பு, காழ்ப்புகளைக் கொண்டு நிகர்செய்யும் எளிய மனிதர்கள்.

ஆனால் நண்பர்கள் சிலர் சில வினாக்களை எழுப்பியிருந்தனர். நான் இவற்றை ‘முன்வைத்து’ விவாதிக்க இந்த தளத்தைப் பயன்படுத்தப்போவதில்லை. என் தரப்பை மட்டும் இங்கே சொல்லி இதை நிறுத்திவிடப்போகிறேன்

அ. தலித் பிரச்சினைகளில் என் ஈடுபாடு என்ன?

நான் குமரிமாவட்டத்தில், முக்கால் நூற்றாண்டுக்கு முன்னரே இடதுசாரிக் கொள்கைகள் வேரூன்றிய கேரள எல்லையில் பிறந்தவன். இடதுசாரிப் பின்னணி கொண்டவர் என் அம்மா. குமரிமாவட்டத்தில் கல்விகற்றுநேரடியாகவே வடகேரளம் சென்று பணியாற்றி 1990 ல் தான் தமிழக மையநிலத்திற்கு வந்தேன். தர்மபுரியில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அன்று அங்கிருந்த கடும் வறுமை, கூடவே சாதிய ஒடுக்குமுறை.

வந்த முதல்நாளே ஒருவரை இன்னொருவர் முகத்தைப்பார்த்து சாதிசொல்லி வசைபாடியபடி சாதாரணமாக அழைத்துப்பேசமுடியும் என்பதையும், வசைபாடப்படுபவர் இயல்பாக அதை எடுத்துக்கொள்வார் என்பதையும் கண்டு திகைத்தேன். நகர்மையத்திலேயே தலித்துக்கள் டீ அருந்தமுடியாத கடைகள் இருந்தன. சிற்றூர்களில் நான் கதைகளில் மட்டும் கேட்டிருந்த நேரடியான ஒதுக்குதலை, ஒடுக்குமுறையைக் கண்டேன். தலித்சேரிகள் விலங்குப்பண்ணைகளை விட கீழ்நிலையில் இருப்பதை கண்டேன். விரிவாக இதையெல்லாம் பலமுறை பதிவுசெய்திருக்கிறேன்.

அன்று, காவலர்கள் மாத இறுதியில் தலித் பகுதிக்குச் சென்று கண்ணுக்குப்பட்டவர்களை கைதுசெய்து வழக்குபோடுவார்கள். அன்று தர்மபுரி பகுதியில் தீவிர இடதுசாரிக் குழுக்கள் இருந்தன. பலருடன் எனக்கு அறிமுகத்தொடர்பு இருந்தது. தீவிரஇடதுசாரிக்குழுவினர் ஒருவகையில் அம்மக்களுக்கு காவலாக இருந்தனர். ஆனால் அவர்களைக் காரணம்காட்டி தலித் மக்களை போலீஸ் வேட்டையாட முடிந்தது. அவர்களின் குழுச்சண்டையும் தொடர்பற்ற அரசியலும் தலித் மக்களுக்கு பெரும் சுமையாகத் தெரிந்தது

அச்சூழலில்தான் பாட்டாளி மக்கள் கட்சி அங்கே தோன்றியது. அன்று இடதுசாரி இயக்கங்களில் இருந்து விலகியவர்கள் அதில்சென்று சேர்ந்தனர். தீரன், பு.தா.அருண்மொழி, பு.தா.இளங்கோவன், தலித் எழில்மலை போன்றவர்கள் அதன் தலைமை முகங்களாக அறியப்பட்டார்கள். நானறிந்த பல இடதுசாரிச் சமூகச்செயல்பாட்டாளர்கள் அதில் அன்று பணியாற்றினர். அவர்கள் வன்னியர் சங்க அரசியலில் இருந்து பாட்டாளிமக்கள் கட்சியை ஓர் இடதுசாரிக் கட்சியாக உருமாற்ற முயன்றனர். கிராமங்களில் சாதிய உளநிலைக்கு எதிராகப் பேசிய வலுவான குரல்கள் பாட்டாளிமக்கள் கட்சியிலிருந்து எழுந்தன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அச்சூழலில் வலுப்பெறலாயிற்று. அதிலும் முன்னாள் இடதுசாரிகளே பெரும்பாலும் பங்கெடுத்தனர். பாட்டாளி மக்கள் கட்சிக்கும் விடுதலைச்சிறுத்தைகளுக்குமான புரிந்துணர்வை உருவாக்கியவர்கள் இருகட்சியிலும் இருந்த இடதுசாரிகள். உண்மையான ஒரு சமூகமாற்றத்திற்கான வாய்ப்பாக அது தோன்றியது. பின்னர் அச்சூழல் மறைந்தது. பாட்டாளி மக்கள்கட்சியில் இருந்து அந்த இடதுசாரிகள் அனைவருமே வெளியேற நேர்ந்தது.

விடுதலைச் சிறுத்தைகள் தோன்றிய ஓராண்டுக்குள்ளேயே சிற்றூர்களில் நேரடியான தலித் ஒடுக்குமுறை இயலாதானதை நான் கண்கூடாகக் கண்டேன். காவல்நிலையங்களுக்குச் சென்று தலித் மக்களுக்காகப் பேசும் ஓர் அமைப்பு அவர்களுக்கு என உருவானது அப்போதுதான். அம்மக்கள் முதல்முறையாக அரசியல்சக்தியாக ஆனார்கள். அவர்களை எவர் வேண்டுமென்றாலும் என்னவேண்டுமென்றாலும் செய்யலாமென்னும் சூழல் மறைந்தது

அன்று விடுதலைச்சிறுத்தைகள் என்ற அமைப்பின் தேவையை உணர்ந்தேன். இன்றுவரை அந்த எண்ணம் வலுப்பெற்றபடியேதான் உள்ளது. இன்று எனக்குக் கடிதம் எழுதுபவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பற்றி, பெரும்பாலும் செவிச்செய்தியாக அறிந்த குற்றச்சாட்டுக்களை அடுக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவை அனைத்துமே உண்மை என்றே கொள்வோம். அப்போதுகூட அக்கட்சி இன்றைய தமிழகத்தில் வலுவான சக்தியாக நிலைகொள்ளவேண்டிய தேவை அப்படியேதான் இருக்கிறது.

தலித் மக்களுக்கு இன்று தமிழகத்தில் வேறு எந்த ஆதரவு அமைப்பும் இல்லை. மற்ற அத்தனை கட்சிகளும் வேறுசாதியினரால் ஆக்ரமிக்கப்பட்டவை. ஜனநாயகம் பெரும்பான்மைக்குரியது என்பதனால் வேறுவழியே இல்லை. தலித் மக்களுக்கான அரசியல்முகம், சட்டபூர்வ அமைப்பு விடுதலைச்சிறுத்தைகள் மட்டுமே. இதுதான் அப்பட்டமான நேரடியான உண்மை.

விடுதலைச்சிறுத்தைகள் என்னும் அமைப்பு இல்லாமலானால், ஏன் சற்று ஆற்றலிழந்தால்கூட, அம்மக்கள் மீண்டும் தன்மதிப்பிழந்து ,சிறுமைகொண்டு பொருளியல் ஒடுக்குமுறைக்கு ஆளாகத்தான் வேண்டும். இன்று விடுதலைச் சிறுத்தைகளை குறைசொல்லும் எவருக்கும் நம்மில் பதினைந்து சதவீதம் இருக்கும் இம்மக்கள் இவ்வளவு ஒடுக்குமுறைக்கும் இழிவுக்கும் ஆளாக்கப்படுவதைப் பற்றி எந்த எதிர்ப்பும் இல்லை. எவ்வகையிலும் அவர்களின் அகச்சான்றை அது தொடவில்லை. விடுதலைச்சிறுத்தைகளின் எதிர்ப்புக்குரல் எழுந்தபின்னரே குறைந்த அளவுக்கேனும் அவர்கள் தன்னம்பிக்கையை, தன்மதிப்பை அடைந்தார்கள் என்னும் உண்மையைக் காணும் கண்கூட இல்லை. உண்மையில் அம்மக்கள் என்னதான் செய்யவேண்டும் என்றுகேட்டால் முன்புபோல அடிமையாக இருக்கவேண்டும் என்ற சொல்லை மனதுக்குள் அடக்கிக்கொண்டுதான் இந்தக் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள்.

நான் அரசியல்செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை. அதன் அணிசேரல்கள், போட்டிகள், பிரச்சாரங்கள் எதையும் முழுதாக நோக்கி அறியும் பொழுதும் மனமும் எனக்கு இல்லை. பொதுவாக அரசியலை விவாதிப்பதும் இல்லை. என் ஆர்வங்களும் தேடல்களும் வேறு. அதை என்னைவாசிக்கும் எவரும் அறியலாம். ஆனால் அன்றுமுதல் இன்றுவரை தலித் மக்கள் தங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக அரசியல்முகம் கொண்டு திரளும் இந்த ஜனநாயக எழுச்சியின் திட்டவட்டமான, தீவிரமான ஆதரவாளன் மட்டுமே. 1991ல் நான் எழுதிய ஒரு கட்டுரையில் இதை ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறேன். தொடர்ந்து இத்தனை ஆண்டுகளில் திரும்பத்திரும்ப எழுதிக்கொண்டிருக்கிறேன். இத்தருணத்தில் தேடினாலே ஐம்பது கட்டுரைகளையாவது எடுத்துவிடமுடியும்.

ஆ.விடுதலைச் சிறுத்தைகள் குறித்த என் மதிப்பீடுகள் என்ன?

விடுதலைச்சிறுத்தைகள் அமைப்புடன் எனக்கு மேலோட்டமான தொடர்பு 2009 முதல் உண்டு. அதை பதிவுசெய்துள்ளேன். நண்பர் வே.அலெக்ஸ் வழியாக அத்தொடர்பு மேலும் அணுக்கமாகியது. 2012 ல் வெள்ளையானை வெளியானதைத் தொடர்ந்து நண்பர் வே.அலெக்ஸுடன் தமிழகம் முழுக்க விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் நண்பர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட பதினெட்டுகூட்டங்களில் பேசியிருக்கிறேன். அப்போதுமுதல் திருமாவளவன் அவர்களை நேரில் தெரியும். இது ஒன்றும் புதியசெயல்பாடு அல்ல.

ஆனால் அவ்வமைப்பின் அரசியலில் நான் நேரடியாக ஈடுபடுவதாக இல்லை, ஏனென்றால் அதில் எனக்கு செய்ய ஒன்றுமில்லை. என் இயல்புக்கு அவ்வரசியலின் அன்றாடத்தை பெரிதாகக் கவனிப்பதும் இயல்வதல்ல. பொதுவாக திரளரசியல் என் இயல்புக்கு சரிவராது. ஓர் அரசியல்மேடையில் என்னால் தொடர்ச்சியாகப் பேசவே முடிந்ததில்லை.வெவ்வேறு தருணங்களில் பேச நிகழ்ந்தபோதெல்லாம் திகைப்பும் பதைப்பும்தான் எஞ்சியது. ஓர் அடையாளமாக ஓரிரு சொற்கள் சொல்லமுடியும், அவ்வளவுதான். அரசியலுக்குத் தேவையான ஓங்கிய குரல் என்னிடமில்லை. ஆகவே என் ஆதரவு அறம்சார்ந்தது, அடையாளம் சார்ந்தது. அதனால் அவர்களுக்கு எந்தப்பயனும் இல்லை. எனக்குச் சரி எனத்தோன்றுகிறது, செய்கிறேன். அவ்வளவுதான்.

நான் மேடைப்பேச்சாளன் அல்ல என்பதும், சிறியவட்டத்திற்குள் மட்டுமே செயல்பட இயல்பவன் என்பதும் என் வரையறை.. பொதுவாகவே என்னைக் கூர்ந்து கவனிக்கும் ஒரு அரங்கின்முன், ஏற்கனவே என்னை அறிந்த வாசகர்கள்முன் மட்டுமே என்னால் பேசமுடிகிறது. அவர்கள் நான் பேசுவதன் தொடர்ச்சியை அறிந்தவர்கள் என்பதனால்தான் நான் பேசுவது அவர்களுக்குப் புரிகிறது. இன்றும் படபடப்பும் மூச்சுத்திணறலும் இல்லாமல் மேடையில் பேச இயல்வதில்லை. இதனால்தான் நான் இலக்கியத்தில்கூட பெரிய அரங்குகளில் பேசுவதைத் தவிர்க்கிறேன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அடிப்படை நோக்கம், இங்கே அது ஆற்றும் பணி ஆகியவை மிகமிக முதன்மையானவையும் தவிர்க்கமுடியாதவையுமாகும் என்பதுதான் என் எண்ணம். அதற்கு நான் காணும் காரணங்கள் இரண்டு.

ஒன்று, தமிழகத்தில் இன்று எவராயினும் நிலம் என்பது அரசியல் அதிகாரம் வழியாக மட்டுமே தக்கவைத்துக்கொள்ள இயல்வது. அரசியலதிகாரம் இல்லாதவர்களின் நிலம் கைவிட்டுச்செல்கிறது. பிராமணர்கள், வேளாளர்கள் விரைவாக நிலமிழந்தது வரலாறு. ஆனால் அவர்கள் வேறுவகையில் மேலெழுந்தார்கள். தலித் மக்களிடமிருக்கும் குறைவான நிலம் சென்றகாலங்களில் மதிப்பில்லாதது. இன்று அந்நிலம் மதிப்பிற்குரியதாகிவிட்டிருக்கிறது. அவர்கள் அதிகாரம் அற்றிருப்பார்கள் என்றால் அதை இழப்பார்கள்.

இரண்டு, தலித் மக்கள் அடைந்த ஓரளவு எழுச்சி காந்தியின் காங்கிரஸ் அவர்களுக்கு அளித்த இடஒதுக்கீட்டிலிருந்து வந்தது. இன்று அரசுவேலைகள் இல்லாமலாகிவிட்டிருக்கின்றன. ஆகவே அந்த இடஒதுக்கீட்டின் பயன் குறைந்து வருகிறது. அதேசமயம் தலித் மக்கள் படிப்பில் மேலேறுகிறார்கள். ஆகவே அவர்கள் வேறுதொழில்களில் வணிகங்களில் ஈடுபட்டாகவேண்டும். அது கடும்போட்டி நிலவும் சூழல். அங்கே அவர்கள் சற்றேனும் நிலைகொள்ள அரசியலதிகாரம் இன்றியமையாதது

இந்தப் பொருளியல் அறைகூவல்களைச் சந்திக்கத் தேவையான தன்னம்பிக்கையை அளிக்க, தன்மதிப்பை காக்க ஓர் அமைப்பு அவர்களுக்குத் தேவை. அது இன்றையசூழலில் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற ஒன்றாகவே இருக்கமுடியும். ஏனென்றால் அது தன் பயனை, பணியை நிரூபித்திருக்கிறது.

இங்கே எந்த அரசியல் கட்சிக்கும் இருக்கும் எல்லா சிக்கல்களும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இருக்கும். அதுவும் பணம்திரட்டியாகவேண்டும். கூட்டணிச் சமரசங்கள் செய்துகொண்டாகவேண்டும். அதிலும் பலதரப்பட்டவர்கள் பங்கேற்பார்கள். தற்காலிக எதிரிகளை நோக்கி அறைகூவும் மொழியில் பேசியாகவேண்டும். ‘தூய இலட்சியவாத’ அமைப்பாக அது செயல்பட இயலாது. ‘நடைமுறைப் பயன்’ சார்ந்தே அது முடிவெடுக்க முடியும்.

விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல்கொள்கைகள் என்ன, அது முன்வைக்கும் செயல்பாடுகள் என்ன என்பதும் எனக்கு பொருட்டு அல்ல. நான் அதை ஆதரிப்பது அதன் சமூகத்தேவை இன்று தவிர்க்கவே முடியாதது, மாற்று இல்லாதது என்பதனால் மட்டுமே. என் ஆதரவு என்பது அறச்சார்பினால் மட்டுமே. அத்தகைய அரசியலுக்கு அப்பாற்பட்ட ஓர் அரசியல், எதிர்மறைப்பண்பில்லாத அரசியல், நமக்குத்தேவை என்பதையே சொல்லிவருகிறேன்.

விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு பிழைகள் செய்யாதது என்றோ தூயது என்றோ நான் நினைக்கவில்லை. அப்படி எந்த அரசியல் கட்சியும் இன்று செயல்பட இயலாது. ஆனால் உறுதியாக ஒன்றைச் சொல்வேன், தமிழகத்தில் இன்றுள்ள அரசியல்கட்சிகளில், இடதுசாரிக் கட்சிகள் இரண்டு ஒழிய ,வேறு எவற்றைவிடவும் பண்பட்டதும் ஒருங்கிணைவுள்ளதுமான கட்சிதான் விடுதலைச் சிறுத்தைகள்.

இ.திருமாவளவன் பற்றி என்ன நினைக்கிறேன்?

நான் திருமாவளவன் அவர்களை பல ஆண்டுகளாக அறிவேன். அவருடைய உருவாக்கக் காலகட்டத்தில் உடனிருந்தவர்களையும் அறிவேன். நான் அறிந்தவரை, தனிப்பட்ட முறையில் பண்பாளர், மானுடரிடையே மேல்கீழ்நிலை நோக்காதவர், உண்மையான வாசிப்பும் அதிலிருந்து உருவாகும் அறிவார்ந்த தகுதியும் கொண்டவர், நல்லிணக்க அரசியலில் நம்பிக்கை கொண்டவர். எந்நிலையிலும் குடியாட்சிநெறிகளை மீற விழையாதவர், பொருளியல் ,சமூகவியல் பிரச்சினைகள் அனைத்திலுமே ஒட்டுமொத்தநோக்கும் நெடுங்காலப்பார்வையும் கொண்டவர். ஆகவே இன்றிருக்கும் தமிழக அரசியல்வாதிகளில் ஐயமின்றி அவரே தலையாயவர்.

அவர் மிகக்கடுமையாக ஒடுக்கப்பட்ட, இழிவுசெய்யப்பட்ட ஒரு மக்கள்திரளிலிருந்து சீற்றம்கொண்டு எழுந்து தலைவர் ஆனவர் என்பது அவரையும் பிற அரசியல்தலைவர்களையும் வேறுபடுத்துகிறது. தன் மக்களின் அடிப்படை வாழ்வுரிமைக்கான குரலை எழுப்பியபடித்தான் அவர் அரசியலுக்கு வந்தார். அம்மக்களின் சீற்றத்தின் முகம் அவர். அவரிடமிருந்த கோபமும் கொந்தளிப்பும்தான் அவரை அம்மக்கள் தலைவராக ஏற்கச்செய்தது.

அதிலிருந்து அவருடைய வளர்ச்சியை கண்கொண்ட எவரும் தெளிவாகக் காணமுடியும். தன் மக்களுக்காகப் பேசிய அவர் இன்று அனைத்துமக்களுக்கான பிரச்சினைகளையும் பேசுபவராக, பேசும் அறிவுத்தகுதி கொண்டவராக உருமாறியிருக்கிறார். அனைவரையும் அணைத்துப்போகும் இயல்புகொண்டவராக, எளிய மானுடருக்குமேல் எழுந்து நின்றிருக்கும் உயரம் கொண்டவராக, எப்போதும் பிறரை மன்னிக்கும் பெருந்தன்மை கொண்டவராக ஆகியிருக்கிறார்.

பொன்பரப்பி நிகழ்வு எந்த ஒரு தலைவரையும் கொந்தளிக்கச் செய்வது. அவர் தலைமைதாங்கும் மக்கள் தாக்கப்பட்டு இழிவுசெய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவருடைய மொழி எத்தனை தற்கட்டுப்பாடு கொண்டதாக, எத்தனை ஆய்வுத்தன்மை கொண்டதாக உள்ளது என எவரும் காணலாம். எண்ணிப்பாருங்கள், இதேபோல தன்னைச்சார்ந்த ஒரே ஒருவர் தாக்கப்பட்டிருந்தால் நம் பிற தலைவர்களின் மொழி எத்தகையதாக இருக்கும்? அவர்கள் எப்படிப் பேசியிருப்பார்கள், என்னென்ன தூண்டிவிட்டிருப்பார்கள்!

சென்றகாலங்களில் இங்கே நாம் வழிபடும் அரசியல்தலைவர்கள் திட்டமிட்டு உருவாக்கிய மாபெரும் வன்முறைகளை நாம் அறிவோம் அந்தக்குருதியில் கைநனைத்தபின் எந்த உளச்சான்றும் இல்லாமல் அவர்கள் சொன்ன அணிச்சொற்களையும் அறிவோம். அந்தக் கட்சிகளில் ஏதேனும் ஒன்றுக்கு வாக்களித்த எவருக்காவது திருமாவளவன் குறித்துப் பேசும் தகுதி உண்டா?

சென்ற காலங்களில் திருமாவளவனை தலைமையாகக் கொண்ட மக்களுக்கு எதிராக எத்தனை அப்பட்டமான வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. கொன்று வீசியிருக்கிறார்கள். குடிசைகளை எரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அவர் நம் சமூகமனசாட்சியை நோக்கியே பேசுகிறார். வன்முறையின் சொற்களைச் சொல்வதில்லை. நாம் இன்னும் மேம்பட்ட நாகரீக சமூகமாக இணைந்து வளரும் வாய்ப்பைப்பற்றி மட்டுமே பேசுகிறார். எதிரி என்னும் சொல்லைக்கூட பயன்படுத்துவதில்லை, மாற்றுத்தரப்பு என்கிறார். அவர்களுக்குப் புரியவைக்கவேண்டும், அவர்களை ஜனநாயகப்படுத்தவேண்டும் என்கிறார்.

திரும்பத்திரும்ப திருமாவளவன் ஒரு சிறு கண்டனக்கூட்டத்தில் பேசிய ஒரு காணொளித்துண்டு சுழற்சியில் விடப்படுகிறது. எனக்கு நூற்றுக்கும்மேற்பட்ட முறை அது அனுப்பப்பட்டுள்ளது. அதையொட்டிய கொந்தளிப்புகள். திருமாவளவன் தங்கள் சாதிப்பெண்களை தூக்கிக்கொண்டுசெல்ல திட்டமிடுகிறார், பிறபெண்களை இழிவுசெய்கிறார் என்னும் வகைக் கருத்துக்கள்

1991 ல் ராட்னி கிங் [Rodney Glen King] என்னும் கருப்பினத்தவரை அமெரிக்க வெள்ளையினப் போலீஸ் காரை நிறுத்தி கைதுசெய்யமுயன்றது. அவர் திமிறியபோது கடுமையாகத் தாக்கியது. அது பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. ஆனால் அவரைத் தாக்கியவர்கல் நீதிமன்றத்தில் விடுதலைசெய்யப்பட்டார்கள். ஏனென்றால் ராட்னி கிங் தாக்கப்பட்டபோது அவர் சீற்றத்துடன் திரும்ப எழும் ஒரு அரைநிமிடக் காட்சித்துளியை  மட்டும் வெட்டி நீதிமன்றத்திலும் தொலைக்காட்சியிலும் மதிரும்பத்திரும்ப காட்டினர். அவர்தான் காவலரை கொல்ல வந்தார் என ஜூரிகளை நம்பச்செய்தனர். [கலவரம் வெடித்ததை ஒட்டி மீண்டும் நடந்த விசாரணையில் போலீஸார் தண்டிக்கப்பட்டார்கள்] ராட்னி கிங்கை கொடூரக் கொலைக்காரன் என்று காட்ட வழக்கறிஞர் செய்த உத்தியே இங்கும் நிகழ்கிறது.

திருமாவளவனின் மக்கள் எந்தக் காரணமும் இன்றி தாக்கப்பட்டிருக்கிறார்கள். கொன்று வீசப்பட்டிருக்கிறார்கள். அதைப்பற்றிய கொந்தளிப்பு எழுந்துள்ள சூழலில் அவர் அந்த இளைஞர்களிடையே பேசுகிறார். அவரும் கொந்தளிப்பு அடைந்திருக்கலாம். தங்களுக்கு எவருமில்லை என தலித் மக்கள் அவரிடையே மீண்டும் மீண்டும் கூறுவதை நான் கண்டிருக்கிறேன். அச்சூழலில் அம்மக்களின் தன்னம்பிக்கையை, ஊக்கத்தை நிலைநிறுத்த அவர் சீற்றத்துடன் அறைகூவும் மொழியில் பேசவேண்டியிருக்கிறது. அது அத்தருணத்து உளநிலை, அவ்வரசியலின் ஒரு பகுதி. நெருக்கடிகளில் அவர் பொதுவாக என்ன சொன்னார், எவ்வண்ணம் செயல்பட்டார் என்பதையே ஓர் அரசியலாய்வாளன் நோக்கவேண்டும்.

உதிரிச் சொற்துண்டுகளைக் கொண்டு மதிப்பிட்டால் நீங்கள் எந்த தலைவரை தலைவரெனச் சொல்லமுடியும்? இன்றிருக்கும் ஏதேனும் ஒரு தலைவரைச் சொல்லுங்கள் பார்ப்போம். இவ்வாறு ஒருதுளிக்காட்சி வழியாக ஒரு முழு அடையாளத்தை அளிப்பது வெறும் சாதியக் காழ்ப்பு. அமெரிக்கக் கறுப்பர்களுக்கு வெள்ளையர் செய்வதும் இதையே. தங்கள் சாதிக்காழ்ப்பையே இத்தகைய புறச்சான்றுகளைக்கொண்டு தனக்குத்தானே நிறுவிக்கொள்கிறார்கள். உங்கள் அகச்சான்றை ஒருகணம் நோக்குக என்பதற்கு அப்பால் அவர்களிடம் எனக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை.

ஒரு தலைவருக்கு இருக்கவேண்டிய தகுதிகள் என நான் நினைப்பவை தமிழகமெங்கும் கிராமம் கிராமமாக பல ஆண்டுகள் அலைந்து உண்மையான வாழ்க்கைச் சித்திரத்தை உருவாக்கிக் கொண்டிருத்தல், பலதரப்பட்டவர்களை இணைத்துக்கொண்டு ஓர் அமைப்பை கட்டியெழுப்பும் இயல்பு கொண்டிருத்தல், அடிப்படையான வாசிப்பும் அதிலிருந்து வரும் அறிவுத்தகுதியும் அதன் விளைவான தொலைநோக்கும் கொண்டவராக இருத்தல். திருமாவளவன் அவருடைய சாதியின் தலைவராக தொடங்கியவர். தமிழகத்தைத் தலைமைதாங்கும் தகுதிகொண்டவராக வளர்ந்தவர்.இன்று தமிழகத்தின் முதன்மையான அரசியல்தலைவர் அவரே.

ஈ.இதில் நான் அடைவது என்ன?

கடிதங்கள் முகநூல் குறிப்புகள் வழியாக தொடர்ச்சியாக வரும் வெறுப்புமிழ்தல்களில் முக்கியமானது எனக்கு என்ன கிடைக்கிறது அல்லது கிடைக்கும் என்பது. இவர்கள் அடிப்படையில் உலகியலாளர்கள். எந்த ஒருசெயலுக்கும் உடனடியாக உலகியல் லாபம் ஒன்று வேண்டும் என நினைப்பவர்கள். இவர்களின் கட்சி, கொள்கை ஈடுபாடும் அதனடிப்படையிலேயே. ஆகவே இன்னொருவரும் அப்படித்தான் இருக்கமுடியும் என நினைப்பார்கள் – விதைப்பதும் உழுவதும் அறுவடைக்காகத்தானே என்னும் எளிய கணக்கு.

விடுதலைச்சிறுத்தைகளோ அல்லது திருமாவளவனோ எனக்கு ஏதும் அளிக்கும் இடத்தில் இல்லை. அனைத்துவகையிலும் போராடிக்கொண்டிருக்கும் கட்சி அது. உண்மையில் நான் அவர்களுக்கு அளிக்கும் இடத்தில் இருக்கிறேன் – பத்தாண்டுகளுக்கும் மேலாக பல தனிப்பட்ட நண்பர்களுக்காக தொடர்ச்சியாக அளித்துக்கொண்டும் இருக்கிறேன். அவ்வாறு என்னை வைத்திருக்கும் சினிமாவுக்கும் கேட்டபோதெல்லாம் அளிக்கும் நண்பர்களுக்கும்தான் நன்றிசொல்லவேண்டும். எனக்கு அள்ளியளிக்கும் கட்சிகள் இருக்கலாம், அங்கே நான் செல்லப்போவதுமில்லை.

நான் விடுதலைச்சிறுத்தைகளுக்கான ஆதரவால் என் மீது வைக்கப்படும் பலவகையான குற்றச்சாட்டுகளை நிகர்செய்ய முயல்கிறேன் என்பது இன்னொரு கருத்து. இங்கே கொஞ்சம் சுற்றிப்பார்ப்பவர்களுக்குத் தெரியும். இவ்வாறு குற்றம்சாட்டிக் கூச்சலிடுபவர்கள் எவரும் அரசியல்நம்பிக்கை அல்லது இலட்சியவாதம் கொண்டவர்கள் அல்ல. வெறும் தனிப்பட்ட காழ்ப்பாளர்கள். அவர்களை ஆழ்ந்த கருத்துநிலைபாடு கொண்டவர்கள் என்றெல்லாம் நம்பும் அளவுக்கு நான் மூடன் அல்ல. அந்த அளவுக்கெல்லாம் அரசியல்நம்பிக்கையும் இலட்சியவாதமும் இங்கிருக்குமென்றால் நாடு இப்படியா இருக்கும். காழ்ப்புக்கூச்சலுக்கு போடும் முகமூடிதான் இவர்களின் அரசியல்.

நான் இச்சூழலில் செயல்படத்தொடங்கி முப்பதாண்டுகள் கடந்துவிட்டன. பலரை நன்றாகவே அறிவேன். தனிப்பட்ட காழ்ப்புகளின் அடிப்படைகள் பல. முதன்மையானது நான்கொண்டிருக்கும் இலக்கிய அளவுகோல்.அதில் ஒருபோதும் தாங்கள் தேறமுடியாது என அவர்களுக்கே தெரியவருவதன் தன்னிழிவு அவர்களைக் கொந்தளிக்கச் செய்கிறது. அதை காழ்ப்பாக வளர்த்துக்கொள்கிறார்கள். அரிதாக, நானே கடுமையான கருத்துக்களைச் சொல்லி அவர்களின் பகைமையை ஈட்டிக்கொண்டுமிருப்பேன்.

ஆகவே நான் என்னதான் செய்தாலும், எதை எப்படி எழுதினாலும், அதை ஒடித்தும் திரித்தும் உள்நோக்கு கண்டுபிடித்தும் வசைபாடிக்கொண்டேதான் இருப்பார்கள். இது தொண்ணூறுகள் முதல் இப்படியேதான் நிகழ்கிறது. இதற்குள் இதற்குப் பழக்கமாகிவிட்டிருக்கமாட்டேனா என்ன?

ஈ.இதனால் இழப்பது என்ன?

எப்போதும் இத்தகைய ஒரு விவாதம் எழுகையில் ஒரு சிறுவாசகர் எண்ணிக்கையை இழக்கிறேன். அவர்களில் சிலர் ‘மனமுடைந்த’ கடிதங்களை எழுதுவார்கள். இருபதாண்டுகளுக்குமுன் அது கொஞ்சம் வருத்தம் அளிப்பதாக இருந்தது. இன்று இத்தகைய ‘நிபந்தனைகளுடன்’ வாசிக்க வருபவர்களைப்போல எழுத்தாளனுக்குப் பெரும்சுமை வேறில்லை என்ற எண்ணமே இருக்கிறது. இப்படி ஒரு நிபந்தனை அவனுக்கு உள்ளது என்று தெரிந்தால் நானே அவனை கழற்றிவிட்டுவிடவேண்டும் என்றே எண்ணுகிறேன்.

‘என் சாதி, என் மதம், என் இனம், என் அரசியல் என் கருத்தியலுடன் ஒத்துப்போகாவிட்டால் உன் எழுத்து எனக்கு முக்கியமில்லை’ என்று சொல்பவன் ஒருபோதும் வாசகன் அல்ல. அவன் இங்கே செலவழிக்கும் நேரம் வீண். நல்லவாசகர் என நாம் நினைப்பவரிலிருந்துகூட இந்த கெட்டவாடை திடீரென்று எழும் என்பது என் அறிதல். இன்று இதற்கும் பழகிவிட்டிருக்கிறேன். .இதற்கு அப்பால் சென்று மானுட ஆழத்தை நோக்கிய உரையாடலாக இலக்கியத்தை வாசிப்பவர்கள் வந்துகொண்டே இருப்பார்கள், ஒருபோதும் குறையமாட்டார்கள் என உறுதியை இன்று அடைந்துள்ளேன்.

நான் அவ்வளவு தெளிவான அரசியல்நிலைபாடு கொண்டவன் அல்ல. அவ்வளவு தெளியுமளவுக்கு கவனிப்பவனும் அல்ல. பொதுமக்களின் உளநிலையுடன் ஒத்துப்போகும் எளிய அரசியல் என்னுடையது. நான் கவனிப்பது என் அகச்சான்றை மட்டுமே. எனக்கு அறிவுரைகளுடன் எவரும் வரவேண்டாம், எழுத்தாளனுக்கு வழிகாட்டும் சொல் அவன் உள்ளிருந்தே எழவேண்டும். என் எழுத்து உங்களுக்கு எதையேனும் கற்பிக்கிறது என்றால் வாசிக்கலாம்.

இங்கிருந்து சென்றபின் நித்யசைதன்ய யதிக்கு அன்றி எவருக்கும் நான் பதில்சொல்லக் கடமைப்பட்டவன் அல்ல.

அலைகளில் இருந்து எழுந்த அறிதல்
நெல்லை தொல்.திருமாவளவன் நிகழ்ச்சி
தலித் இலக்கியம்,திருமாவளவன்- கடிதங்கள்
சென்னை கண்டனக்கூட்டத்தில்…
அலெக்ஸ் நினைவேந்தல்
அசோகமித்திரனும் திருமாவளவனும்
அரசியல் கடிதங்கள்
இன்றைய அரசியல்
திருமா
ஆணவக்கொலைகள் -கடிதங்கள்
சென்ற வாரம் முழுக்க…
கூடங்குளம் – ஒரு கடிதம்
கூடங்குளம் அனுபவப்பதிவு
ஒரு வரலாற்றுத்தருணம்
அண்ணா ஹசாரே- இரு தரப்புகள்
தலித் நூல் வெளியீடு
விளிம்புக்கும் கீழே சில குரல்கள்
முந்தைய கட்டுரைவாழ்க்கை எனும் அமுதத்துளி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-29