அறிபுனை- அறைகூவல்கள் சாதனைகள்

அவன்  தன்ராஜ் மணி

கடவுளும் கேண்டியும்    நகுல் வாசன்

கோதார்டின் குறிப்பேடு  கமலக்கண்ணன்

தியானி – கிபி 2500 அஜீக்

நிறமாலைமானி பெருவிஷ்ணுகுமார்

பல்கலனும் யாம் அணிவோம் – ரா.கிரிதரன்

ம் –கிரிதரன் கவிராஜா

மின்னெச்சம் –ரூபியா ரிஷி

மூக்குத் துறவு –கேபாலமுருகன்

யாமத்தும் யானே உளேன் –சுசித்ரா

அன்புள்ள ஜெ

அரூ என்ற இதழ் நடத்திய அறிவியல் புனைகதை போட்டியை குறித்து உங்கள் சைட் மூலமாய் தெரிந்துகொண்டேன். கல்லூரி நாட்களில் ஆங்கிலத்தில் நிறைய அறிவியல் கதைகள் படித்திருக்கிறேன். சமீபத்தில் படித்த The Three Body Problem என்ற சீன அறிவியல் நாவல் அருமையாக இருந்தது. தமிழில் சுஜாதா எழுதிய அறிவியல் கதைகள் சுமார் தான். நடை காரணமாக சுவாரஸ்யமாக வாசிக்கலாம். அதை பார்க்கும் போது இந்த இளைஞர்களின் முயற்சிகள் எல்லாமே சீரியஸாக ஆத்மார்த்தமாக இருந்தது.

பிரசுரமான கதைகளை படித்துப்பார்த்தேன். நல்ல கற்பனை வளம். அவன், கடவுளும் கேண்டியும், பல்கலனும் யாம் அணிவோம், யாமத்தும் யானே உளன் நான்குமே சிறப்பு. நிறமாலைமானி கவிதை பாணியில் புதிதாக இருந்தது. ம், கோதார்டின் குறிப்பேடு இரண்டு கதைகளையும் எவ்வளவு முயன்றும் என்னால் படிக்கமுடியவில்லை. அந்த மொழிநடையே புரியவில்லை

உண்மையில் கிட்டத்தட்ட எல்லா கதைகளுக்கும் இந்த பிரச்சனை இருந்தது. தெளிவான மொழியில் எழுதலாமே? கதையின் விஷன் நன்றாக இருந்தாலும் படித்து புரிந்துகொள்வதே தடையாக இருந்தால் அது நல்ல கதையாகுமா?  ஏன் இவ்வளவு கடினமான நடை?  இடியாப்பத்தை குதறிபோட்டது போல்? பல்கலனும் யாம் அணிவோம், யாமத்தும் யானே உளேன் இரண்டுமே படுநீளம். ஒரு கதையை படிக்கவே அரை மணி நேரம் ஆகிவிட்டது. திணறிப்போச்சு சார். இப்படி சிக்குண்டு எழுதினால்தான் அறிவியலையும் தத்துவத்தையும் கதையில் எழுதமுடியுமா என்ன? ஆங்கிலத்தில் அறிவியல் கதைகளை எழுத வெவ்வேறு நடைகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். இது தமிழில் அறிவியல் கதைகளை எழுதுவதன் பிரச்சனையோ என்று நினைக்கிறேன்.

எல் ராஜாராம்

*

அன்புள்ள ஜெ

அரூ அறிவியல்புனைகதைகளை வாசித்தேன். ஓரிரு கதைகளைத் தவிர எல்லா கதைகளுமே கடுமையான வாசிப்புத்தன்மை கொண்டவையாக இருந்தன. மிக நீளமானவையாகவும் இருந்தன. கதைகளை வாசித்துப் புரிந்துகொள்வது கடினமாக இருந்தது. பலமுறை வாசிக்கவேண்டியிருந்தது. இதை ஒரு குறைபாடாகவே கருதுகிறேன்.

இந்தக்கதைகளை இன்னும் எளிமையாக எழுதியிருக்கலாம் என்பதுதான் என் எண்ணம்

எஸ். ஸ்ரீதர்

*

அன்புள்ள ராஜாராம்,ஸ்ரீதர்,

சரியான அறிவியல்கதைகள் தமிழில் இப்போதுதான் உருவாகி வருகின்றன. அவ்வகையில் அரூ கதைகள் ஒரு தொடக்கம். இத்தகைய கதைகளை நாம் வாசித்துப் பழக்கமில்லாமல் இருப்பதனால்தான் இந்த வாசிப்புச் சிக்கல். இக்கதைகளை நம் ரசனையை நோக்கி இழுப்பதை விட நாம் இக்கதைகளின் தளத்திற்குச் செல்ல முயல்வதும் அதற்கான உழைப்பை அளிப்பதும்தான் நம் வாசிப்பை முன்னெடுக்கும். தமிழிலக்கியத்தையும் முன்னெடுக்கும்

அறிவியல்கதைகளுக்கு சில இயல்புகள் உள்ளன. அவை நம் அன்றாட வாழ்க்கையின் தளத்திற்குள் நிகழ்வதில்லை. ஆகவே அவற்றை நம்மால் இயல்பாக வாழ்க்கையுடன் அடையாளப்படுத்திக்கொள்ள முடிவதில்லை. அவை இரண்டு தளங்களில்தான் நிகழமுடியும். ஒன்று எதிர்கால யதார்த்தத்தில்,  அல்லது  ஆழுள்ளத்தில்-   அதாவது கனவோ கற்பனையோ மயக்கநிலையோ ஆன ஒரு தளத்தில். இவ்விரண்டும் நம் கற்பனையைக் கோருபவை.

அறிவியல்புனைவுகள் பேசும் சிக்கல்களும் நாம் சாதாரணமாக அன்றாட வாழக்கையில் அறிபவை அல்ல. அவை பெரும்பாலும் அறிவுத்தளத்தில், ஓர் அதீத எல்லையில் நிகழ்பவை. அவற்றையும் நாம் நம் அன்றாட வாழ்க்கையின் தர்க்கங்கள் சாத்தியங்கள் ஆகியவற்றை உதறிச்சென்றே உணரவேண்டியிருக்கிறது

ஆகவே அறிவியல்கதை எழுத்தாளன் சாதாரணமாக புனைவெழுத்தாளனுக்கு அளிக்கப்பட்டுள்ள சில வசதிகள் இல்லாதவன். அவன் வலுவான கதைமாந்தர் வழியாக கதைகளை நிறுவ முடியாது. மெல்லுணர்ச்சிகளை உருவாக்க முடியாது. சொல்லப்போனால் அழுத்தமான நாடகத்தருணங்களைக்கூட அமைக்க முடியாது.  அறிவியல் நாம் இப்போது வாழும் அன்றாடவாழ்க்கையின் எல்லைகளை பல திசைகளில் உடைக்கிறது. புதியவினாக்களை எழுப்பி அடிப்படைகளை மாற்றியமைக்கிறது. அந்த உடைவு, மறுவரையறை அளிக்கும் திகைப்பு பரவசம் ஆகியவற்றை மட்டும் நம்பியே அவன் செயல்பட்டாகவேண்டும்

இந்த எல்லையை கடக்கும்பொருட்டு அறிவியல்மிகைபுனைவுகளை நோக்கிச் செல்கிறார்கள் இன்று. அறிவியல்கதையை நவீனப்புராணம்போல, நவீனதேவதைக்கதைபோல ஆக்கிக்கொள்கிறார்கள். அறிவியல்புனைகதையின் எல்லைகளை விரித்து கொண்டே செல்கிறார்கள். ஆனாலும் மையமான அறிவியல்புனைவுகள் இந்த அடிப்படையான இயல்புடனேயே உள்ளன

அறிவியல்புனைகதையின் அடுத்த இயல்பு அறிவியலை அப்புனைகதைக்குள் அது எடுத்துவிளக்கியாகவேண்டும் என்பது. அசிமோவ் அதை விரிவாகவே பேசுகிறார். கதைக்குள் ஓரு அறிவியல்கோட்பாட்டை விளக்கவோ மறுவிளக்கம் அளிக்கவோ செய்யாமல் அறிவியல்கதை எழுதமுடியாது. அது கதை என்பதற்கே எதிரானது. அதை கதை என்னும் கட்டமைப்புக்குள் நிகழ்த்துவது அறிவியலெழுத்தாளனின் அறைகூவல்

கீழ்மட்டக் கதைகளில் அந்த அறிவியல்விளக்கத்தை அறிவியல் அறியாத ஒருவனுக்கு ஓர் அறிவியலாளன் விளக்குவது போல எழுதுவார்கள். அல்லது விளையாட்டு நக்கல் நையாண்டியுடன் அசட்டு மொழிநடையில் எழுதுவார்கள். இவை இரண்டுமே இலக்கியத்தகுதி கொண்ட அறிவியல்புனைகதையை மழுங்கடித்துவிடும்.

நல்ல அறிவியல்கதை அறிவியல்கோட்பாட்டை ஒருவகை நவீனக் கவித்துவம் அளித்து தொன்மம் அல்லது கவிதைப்படிம்ம் ஆக மாற்றி முன்வைக்கிறது. அரூ கதைகளில் ஏறத்தாழ அனைத்துமே இதைத்தான் செய்கின்றன என்பதைக் காணலாம். இந்தக் கவித்துவம் நமக்கு புதியது. நிறமாலைமானி என்ற கதை சிறந்த உதாரணம். அதை ஒருவகை கவிதை எனப்புரிந்துகொள்ளும் வாசிப்பு நமக்குத்தேவை

அறிவியல்கதைகளில் மரபான இலக்கியவடிவங்கள் மீறப்பட்டிருப்பதைக் காணலாம். சிறுகதையின் மரபான இலக்கணம் அவற்றில் பலசமயம் பொருந்துவதில்லை. அவை பெரும்பாலும் நீள்கதைகள், குறுநாவல்களாகவே உள்ளன. அறிவியல் கதை ஒரு தனி உலகை நிறுவி, அதில் ஒரு அறிவியல்கருவை விளக்கி, அதை கவித்துவமாக ஆக்கி, மேலே கதை சொல்கிறது. ஆகவே அது சுருக்கமாக அமைய முடியாது

அறிவியல்கதைகளில் கலைச்சொற்களை எப்படி எந்த அளவுவரை பயன்படுத்துவது என்பதும் நமக்கு பெரிய சிக்கல்.  நாம் தமிழில் அறிவியல் கற்பவர்கள் அல்ல. அறிவியல் கலைச்சொற்கள் பல தமிழில் இல்லை. இருந்தாலும் நமக்கு அவை அன்னியமானவை. கலைச்சொற்களை சொன்னால்போதாது அவற்றையும் கதைக்குள் விளக்கி, வரையறை செய்தாகவேண்டும். அறிவியல் கற்பிக்கப்படாத மொழியில் அறிவியல்புனைவை எழுதுவது மிகப்பெரிய சிக்கல்.

ஆயினும் இவ்வளவு தீவிரமான அறிவியல்புனைவு எழுதப்பட்டது என்பது சாதனைதான். அறிவியல்புனைவு என்றபேரில் எளிய வேடிக்கைகளை எழுதாமல், துப்பறியும் கதையில் தொழில்நுட்பச்செய்தி இருந்தால் அது அறிவியல்புனைவு என மயங்காமல் நாம் அறிவியல்புனைகதை நோக்கிச் செல்லவேண்டியிருக்கிறது.

அறிவியல்கதைகள் நமக்கு புதியவை. வாசிக்கக் கற்றுக்கொள்வோம்

ஜெ

அறிவியல் சிறுகதைப் போட்டி முடிவுகள்
ஒரு பெருந்திறப்பு
அறிபுனை- விமர்சனப்போட்டி
அரூ அறிபுனை விமர்சனம்-4 ,எல்லைகளும் வாய்ப்புகளும்
அரூ அறிபுனை விமர்சனம்-1 ,புதுப்படிமங்களின் வெளி
அரூ அறிபுனை விமர்சனம்-2 ,அன்னியக் கனவுகள்
அரூ அறிபுனை விமர்சனம்-3 ,இருப்பு சார்ந்த வினாக்கள்
முந்தைய கட்டுரைபி.ஏ.கிருஷ்ணன்,நேரு – கோபி செல்வநாதன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-23