ஆரோக்கிய ஸ்வராஜ்யம்: மருத்துவர்கள் அபய் மற்றும் ராணி பங் – பாலா

http://searchforhealth.ngo/

தாக்கூர் தாஸ் பங் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். பொருளாதார அறிஞர். நாக்பூரில், காந்திஜியின் தோழர்கள் துவங்கிய கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டு இரண்டாண்டுகள் சிறையில் இருந்தார். சிறையில் இருந்து வெளியான காலத்தில், இந்தியா சுதந்திரம் பெரும் அறிகுறிகள் தென்பட்டன. தாக்கூர் தாஸூக்கு பொருளாதாரத்தில் மேற்படிப்புப் படிக்க, அமெரிக்கா செல்லும் வாய்ப்பை அரசாங்கம் உதவித்தொகையுடன் வழங்க முன்வந்தது.

அமெரிக்கா செல்லும் முன்பு, காந்தியிடம் ஆசி வாங்கச் சென்றார் தாக்கூர்தாஸ். சேவாகிராமத்தில், பாபுவின் முன்பு தன் கல்லூரி அனுமதிச் சீட்டை வைத்து வணங்கினார்.  ’பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் படிக்க அமெரிக்கா போகிறேன். உங்கள் ஆசிகள் வேண்டும்’, என்றார்.  ’பொருளாதாரம் படிக்க வேண்டுமெனில், கிராமங்களுக்குச் சென்று, ஏழை மக்களுடன் வாழ்ந்து படி’, என்றார் பாபு. அவரின் பேச்சுக்கு மறுவார்த்தை ஏது. அனுமதிச்சீட்டை கிழித்தெறிந்து விட்டு,  சேவாக்ராம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வாழச் சென்றார். வினோபா பாவேயுடன் இணைந்து, பூதான், கிராம் தான் இயக்கங்களில் பணிபுரிந்தார். பின்னர் ஜெயப்ப்ரகாஷ் நாரயணின் சர்வோதய இயக்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்டார்.

அவருக்கு அஷோக் பங், அபய் பங் என இரு மகன்கள்.  அஷோக் பங் வேளாண்மையையும், அபய் சுகாதாரத்தையும் தங்கள் வாழ்வியலாகத் தேர்ந்தெடுத்தார்கள். அபய் சேவாகிராமத்தில் 1950 ஆம் ஆண்டு பிறந்தார். 9 ஆம் வகுப்பு வரை, காந்திய வழி வாழ்க்கைக் கல்விமுறையான, ‘நயி தலீம்’, முறையில் பயின்றார்.

பின்னர் நாக்பூர் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து முதுகலை மருத்துவம் வரையில் பயின்றார். அவருடன் பயின்ற ராணி சாரியைத் திருமணம் செய்துகொண்டார். அபய் முதுகலையைப் பொது மருத்துவத்திலும், ராணி, முதுகலையை மகப்பேறியல் மற்றும் பெண் நோயியலிலும் பயின்றார்கள். படித்து முடித்தவுடன், வார்தாவில் வாழத்துவங்கினார்கள். பொதுச் சுகாதாரத்துறையில் தங்களின் பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்னும் ஆர்வம் காரணமாக, அந்தத் துறையில் மேலே படிக்க முடிவெடுத்தார்கள். அமெரிக்காவின் புகழ்பெற்ற ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரியில், முதுகலை பொதுச் சுகாதாரம் பயின்றார்கள்.

அமெரிக்காவில் இருந்து திரும்பியதும், தாங்கள் முன்பே முடிவு செய்திருந்தபடியே,  மஹாராஷ்ட்ராவின், மிகவும் பின் தங்கிய மாவட்டமான கட்சிரோலிக்குச் சென்று தங்கள் வாழ்க்கையைத் துவங்கினார்கள்.

கட்சிரோலி, இந்தியாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள தண்டகாரண்யம் என்னும் வனத்தின் ஒரு பகுதியாகும்.  தலைநகர் மும்பையில் இருந்து 1000 கிலோமீட்டர் தொலைவில், கிழக்குக் கோடியில் அமைந்துள்ள மாவட்டம். 70% வனப்பகுதி. 50% மேல் மலைவாழ் பழங்குடிமக்கள் – கோண்ட் இனத்தவர்கள் வாழும் மாவட்டம். இந்தியாவின் மிகப் பின் தங்கிய மாவட்டம்.

இங்கே, Society for Education, Action and Research in Community Health (SEARCH) என்னும் ஒரு தன்னார்வ நிறுவனத்தைத் துவங்கினார்கள்.  துவக்கத்தில், பழங்குடியினர், மருத்துவம் பார்க்க வரத்தயங்கினர். அவர்களிடையே இருந்த மூட நம்பிக்கைகளும், பழக்க வழங்கங்களுமே காரணம். எனவே, தயக்கத்தைப் போக்கி, அவர்களுடன் உரையாட ஜாத்ரா என்று ஒரு திருவிழாவை ஒருங்கிணைத்தார்கள் அபய்யும், ராணியும்.

இதன் முடிவில், கோண்ட் பழங்குடியினருக்காக ஒரு மருத்துவமனையை கட்சிரோலியில் துவங்கும் எண்ணத்தை மக்கள் முன்வைத்தார்கள். அந்த மருத்துவமனையின் உருவாக்கத்தில், உள்ளூர் மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள்.  கோண்ட் பழங்குடியினர், தங்களது மருத்துவமனை எப்படி இருக்க வேண்டும் என்பதை மிக ஆர்வத்துடன் அபய் மற்றும் ராணி பங்கிடம் சொன்னார்கள்.

மருத்துவமனை வீடு போல வடிவமைக்கப்பட வேண்டும்.  பலமாடிக்கட்டிடங்களாக இருக்கக் கூடாது. நுழை வாயிலில் தண்டகாரண்யத்தின் பெரும் கடவுளான மா தந்தேஷ்வரியின் கோவில் இருக்க வேண்டும். இப்படி மக்களின் விருப்பத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்ட இந்த மருத்துவமனைக்கு, மா தந்தேஷ்வரி மருத்துவமனை என்றே பெயரிட்டார்கள்.

 

அந்த நிகழ்வில், கட்சிரோலி மக்களின் முக்கியமான பிரச்சினைகள் என்ன என விவாதித்தார்கள்.  நீண்ட விவாதத்துக்குப் பின்னர் நான்கு பிரச்சினைகள் மிக முக்கியமானவையாக மக்களால் முடிவு செய்யப்பட்டது.

  1. மலேரியா
  2. குடிப்பழக்கம்
  3. குழந்தைகள் இறப்பு
  4. மகப்பேறு தொடர்பான உடல் உபாதைகள்

மேற்சொன்னவற்றில், குழந்தைகள் இறப்பு என்னும் பிரச்சினையை முதலில் எடுத்துக் கொண்டார்கள் அபய்யும், ராணியும். அந்த விகிதம் 1000த்துக்கு 121 (1988) ஆக இருந்தது. (இந்தியாவின் மிக முன்னேறிய மாநிலமான கேரளாவில் 11). முதலில், இந்தக் குழந்தை இறப்புக்கு என்ன காரணம் என ஆராயத்துவங்கினார்கள்.

கோண்ட் கிராமங்களில், பிரசவம் பார்க்க, குழந்தைப்பேற்றுக்கு உதவ என்றே பெண்கள் இருந்தார்கள். அவர்கள், ‘தாயி’ என கோண்ட் மொழியில் அழைக்கப்பட்டனர். அதிகம் படித்திராத, ஆனால், அனுபவம் பெற்ற உள்ளூர் மருத்துவச்சிகள். அவர்கள் மூலமாக, குழந்தைகள் இறப்பைப் பற்றிய தகவல்களை முதலில் திரட்டினார்கள்.  குழந்தைகளைப் பறிகொடுத்த தாய்மார்களிடம் பேசி, குழந்தைகள் இறந்து போனதற்கான, முதல் தகவல் அறிக்கையைத் தயாரித்தார்கள். மருத்துவர் அபய், இதை verbal Autopsy என அழைக்கிறார். 100% மிகச் சரியான அறிக்கை அல்ல. ஆனால், ஒரு தகவலுமே இல்லாத இடத்தில், பிரச்சினைகளையும் அறிந்து கொள்ளவும், தீர்வுகளை நோக்கிய பயணத்தை மேற்கொள்ளவும், இதுவே முதல்படி.

அந்த அறிக்கையில், கீழ்க்கண்ட காரணங்கள் தெளிவாகின:

முதல் மாதத்தில் குழந்தை இறப்பு: 39%

நிமோனியா: 20%

வயிற்றுப்போக்கு: 19%

மலேரியா: 9%

தடுப்பூசி போடாத்தால் வரும் நோய்கள்:  15%

இத்துடன், தாய்மார்களிடம் நிலவிய ஊட்டசத்துக் குறைபாடுகள், இந்தப் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கின.

கோண்ட் இனப் பெண்கள் பெரும்பாலும், வீடுகளிலேயே பிரசவித்தார்கள். அனைத்தும் மண் தரைக் குடிசைகள். இருப்பதிலேயே மிகவும் இருளான ஒரு அறையில் தான் பிரசவம் நிகழும். குழந்தை பிறந்த பின்பு, 30 நாட்கள் குழந்தையும் தாயும், அந்த இருட்டறையை விட்டு வெளியே வரக்கூடாது என்னும் மூட நம்பிக்கை (கண் பட்டு விடும் என்பதால்).

பிரசவித்த தாய், வேறு வழியின்றி, அந்த அறையிலேயே மல ஜலம் கழிக்க வேண்டியிருக்கும். அறையின் ஒரு ஓரத்தில் ஒரு குழிவெட்டி, அது கழிவறையாக உபயோகிக்கப்பட்டது.  முப்பது நாட்கள் ஒரு இருண்ட அறை அதுவும், பிறந்த குழந்தை இருக்கும் அறை, கழிவுகளை அகற்ற முடியாத கழிவறையாகவும் இருந்தால் எப்படி இருக்கும். உள்ளே யாரும் நுழையமுடியாத படி நாறும்.

பிறந்த முதல் மாதத்தில் இறந்த குழந்தைகளில், 52% நோய்த்தொற்றினால் இறந்தன.  20% குழந்தைகள் மூச்சுத் திணறலால் இறந்தன.  15%, குறைப் பிரசவத்தில் பிறந்தவை.

இதை, முதலில் தீர்க்க வேண்டும் என முடிவெடுத்தார்கள். ஒரு கிராமத்துக்கு ஒருவர் என்னும் கணக்கில், 39 கிராமங்களுக்கு, 39 பெண் நல ஊழியர்களை முதலில் தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் படிப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கவில்லை. அவர்கள் முன் அனுபவம், இந்த வேலையைச்செய்ய ஆர்வமுள்ள மனநிலை, நோயாளிகளைக் கவனித்துக் கொள்ளும் கரிசனம் போன்ற காரணிகளைக் கொண்டு தேர்வு செய்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர், ஏற்கனவே கிராமத்து மருத்துவச்சிகளாக இருந்ததால், தேர்ந்தெடுப்பதும் எளிதாயிற்று.  அவர்கள், ’ஆரோக்கிய தூத்’, – ஆரோக்கிய தூதர்கள் என அழைக்கப்பட்டார்கள்.

பிறந்த குழந்தை, ஒரு மாதம் உயிருடன் இருந்துவிட்டால், பின்னர், அது உயிர் வாழும் சாத்தியங்கள் பலமடங்கு அதிகரிக்கின்றன. எனவே, முதல் மாத இறப்புக்கான காரணிகளான, நோய்த்தொற்று, மூச்சுத் திணறல், குறைப்பிரசவம் –இந்த மூன்றையும் முதலில் நிவர்த்திக்க முடிவெடுத்தார்கள்.

சுகாதாரம், நோய்த் தொற்றை அடையாளம் கண்டு கொள்ளுதல், நோய்த்தொற்றைத் தடுத்தல் போன்றவற்றில் முதலில் ஆரோக்கிய தூதர்களுக்குப் பயிற்சியளித்தார்கள். இது, பிறந்த குழந்தைக்கு, வீட்டிலேயே அளிக்கப்படும் நலத்திட்டம் – Home based Neonatal Care  என ஒரு கருதுகோளாகப் பின்னர் பரிணமித்தது.

பெண்கள் கர்ப்பம் தரித்ததுமே, ஆரோக்கிய தூதர்கள் அவர்களை அணுகி, மிக எளிமையான படங்கள் கொண்ட கையேடுகளின் உதவியோடு,  உடல் நலம், சுகாதாரம், ஆரோக்கியமான உணவு, சத்துக்குறைபாடுகளுக்கான மருந்துகள் முதலியவற்றைப் பற்றி, ஆலோசனை வழங்குவார்கள். பிரசவத்துக்கு உதவுவார்கள். அதற்குப் பின் பேண வேண்டிய ஆரோக்கியக் குறிப்புகளைச் சொல்வார்கள். குழந்தைகளின் எடை, உடல் சூடு போன்ற பல சோதனைகளைச் செய்து தங்கள் கையேடுகளில் குறித்துக் கொள்வார்கள்.

நோய்த்தொற்றை அறிந்து கொள்ள மிக எளிதான பயிற்சி ஒன்றை அவர்கள் ஆரோக்கிய தூதர்களுக்கு அளித்தார்கள்.  மிகக் குறைந்த படிப்பறிவே உள்ள அந்தப் பெண்கள், உலகின் மிகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் மருத்துவமனையில பணிபுரியும் குழந்தை நலத் தொழில் நுட்பர்கள் (neo-natalogists) அளவுக்கு ஏன் அவர்களை மிஞ்சும் அளவுக்குத் திறமையானவர்கள் என்கிறார் மருத்துவர் அபய்.  இது வழக்கமான இந்திய மிகைக்கூற்றல்ல; இதற்கான அறிவியல் ஆதாரங்கள் உள்ளன. அவற்றை, மிகவும் மதிக்கப்படும் லான்செட் மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிட்டுள்ளோம் என்கிறார் அபய் பங்.

அதீத தொழில்நுட்ப மருத்துவச் சூழலில் உள்ள நுணுக்கங்களே பலவகை சாத்தியங்களை உண்டாக்கி, தொழில் நுட்பர்களைக் குழப்பி விடுகின்றன. கட்சிரோலியின் கிராமத்தில், இந்தப் பெண்கள், தங்களுக்குக் கிடைத்த எளிமையான, கடுமையான பயிற்சியின் மூலம், குழந்தையின் பிரச்சினையை,  பெரும் குழப்பமின்றி இவர்கள் மிக எளிதாகக் கண்டு பிடித்துவிடுகிறார்கள் என்பது அவரது கருத்து.

அடுத்த பெரும் பிரச்சினை – நோய்த் தொற்றைக் கண்டுபிடித்ததும், குழந்தைகளுக்குக் போட வேண்டிய ஊசி மருந்து. குழந்தையின் எடையைக் கணித்து, மிகச் சரியான அளவே மருந்து அளிக்கப்பட வேண்டும். தவறினால் விளைவுகள் விபரீதமாகிவிடும்.

ஜென்டாமைசின் என்னும் நோய்த் தொற்றுக்கான மருந்து,  ஒரு மில்லிக்கு 40 மில்லி கிராம் என்னும் அளவில் உள்ள மருந்து.  நீரிழிவு நோயாளிகளுக்குப் போடப்படும் இன்சுலின் மருந்தும் அதே அளவில் வந்தது. எனவே இன்சுலின் ஊசிகள் முன்பே கிருமிகளின்றிச் சுத்தம் செய்யப்பட்டு, சரியான அளவு காட்டும் ஊசியாக தயாரிக்கப்பட்டது பெரும் நல்லூழ்.  இன்சுலின் ஊசிகள், தினமும் உபயோகப்படுத்தப்படுவதால், மிகவும் சன்னமான ஊசியைக் கொண்டவை.  அவை, அன்று பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் சரியானவை.  இதை வைத்துக் கொண்டு, குழந்தையின் எடையைப் பொறுத்து, எவ்வளவு ஜெண்டாமைசின் கொடுக்க வேண்டும் என்பதை, ஆரோக்கிய தூதர் மிக எளிதாகக் கணக்கிட்டு, இன்சுலின் ஊசிகளை உபயோகித்து, ஊசி வழியே மருந்து கொடுக்க முடிந்தது.  பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்தாலும், அதில்  அறம் மற்றும் சட்டச் சிக்கல்கள் இருந்தன.

இந்திய மருத்துவச் சட்டங்களின் படியும், அலோபதி மருத்துவ முறைகளின் படியும்,  5-6 வகுப்பு மட்டுமே படித்த, கிராம மக்கள் நல ஊழியர், பிறந்த குழந்தைகளுக்கான சிகிச்சையை மேற்கொள்வது, ஊசி மூலம் மருந்து செலுத்துவது போன்றவை அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.  இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, அபய்யும் ராணியும், இந்தியாவின் மிகப் பெரும் குழந்தை மருத்துவ வல்லுநர்களை கட்சிரோலிக்கு அழைத்து வந்தார்கள்.  அதில், அகில இந்திய மருத்துவக் கழகத்தின் (AIIMS) குழந்தைகள் நலப்பிரிவின் தலைவர் டாக்டர்.மெஹர்பான் சிங், ஆசிய குழந்தைகள் நலக் காங்கிரஸின் தலைவர் ரமேஷ் பொத்தார் உள்பட, பத்து குழந்தைகள் நல நிபுணர்கள் இருந்தார்கள்.  அவர்கள் முன்பு, அபய்யும், ராணியும், கட்சிரோலி மாவட்டத்தில் குழந்தைகள் இறப்பைத் தவிர்க்க, தாங்கள் மேற்கொள்ள இருக்கும் திட்டத்தை முன்வைத்தார்கள்.

நாங்கள் கட்சிரோலி கிராமங்களில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் முன்பு, எங்கள் திட்டத்தைப் பற்றிய உங்கள் விமரிசனங்களைச் சொல்லுங்கள். எங்கள் திட்டத்தை நிறைவேற்றப் போகும் எங்கள் ஆரோக்கிய தூதர்களின் திறனைச் சோதித்து உங்கள் அபிப்ராயத்தைச் சொல்லுங்கள். நாங்கள் சரியான பாதையில் தான் செல்கிறோமா எனச் சோதித்து எங்களை வழிநடத்துங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள் ராணியும், அபய்யும்.

அவர்களது திட்டத்தையும், அதை நிறைவேற்றப்போகும் ஆரோக்கிய தூதர்களையும் அவர்கள் மூன்று நாட்கள் ஆராய்ந்தார்கள்.  இறுதியில், அகில இந்திய மருத்துவக் கழகத்தின் குழந்தை நலத் துறையின் தலைவர் மெஹர்பான் சிங், ‘சாதாரணப் பெண்கள் போல நடமாடும், கட்சிரோலியின் இந்த ஆரோக்கிய தூதர்கள்,  எங்கள் கல்லூரியின் மருத்துவர்களை விட, குழந்தைகள் நலன் பற்றி அதிகம் அறிந்தவர்கள்’, என அனைவரின் முன்பும் மனம் விட்டுச் சொன்னார். (அகில இந்திய மருத்துவக் கழகத்தில் (AIIMS) மருத்துவம் பயில, இந்தியாவின் மிகக்கடினமான நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது).

பத்து குழந்தைகள் நல வல்லுநர்களைக் கொண்ட அந்தக் குழு,  கட்சிரோலியின்  குழந்தைகள் நலத் திட்டத்தை முன்னெடுக்க அனுமதியளித்தது. திட்டம் உடனே 39 கிராமங்களில் முன்னெடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் பலன்களை ஒப்பீடு செய்துகொள்ள, அரசு மருத்துவ வசதிகள் இருந்த 47 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.  வசதிகள் எதுவுமில்லாமல், கிராம ஆரோக்கிய தூதர்கள் மூலமாக முன்னெடுக்கப்படும் கட்சிரோலி குழந்தை நலத் திட்டங்களின் பலன்களையும், அரசும், மருத்துவமனைகளும், மருத்துவர்களும், வசதிகளும் உள்ள 47 கிராமங்களில் கிடைக்கும் அரசு திட்டங்களின் பலன்களுக்கும் இடையிலான ஒப்பீடு.

1995 ஆம் ஆண்டு துவங்கிய இந்தத் திட்டத்தின், பலன்கள் 2003 ஆம் ஆண்டில் எட்டிய புள்ளிவிவரங்கள் இதோ.  குறைந்த எடையின் காரணமாக மரித்த குழந்தைகளின் சதவீதம் 11.3% லிருந்து 4.9% ஆகக் குறைந்தது. குறைப்பிரசவ மரணங்கள் 33.3% லிருந்து 10.1% ஆகக் குறைந்தது. நோய்த் தொற்று மரணங்கள் 18.5% லிருந்து 6.9% ஆகக் குறைந்தது.  மூச்சுத் திணறல் மரணங்கள் 38.5 % லிருந்து 20.2%ஆகக் குறைந்தது.  ஒரு மாதத்துக்குள்ளான குழந்தைகள் இறப்பு சதவீதம்  60% லிருந்து 22% ஆகக் குறைந்தது. ஆனால், ஒப்பீட்டுக்காக, அதே காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகள், மருத்துவர்கள் என அரசின் கட்டமைப்பு இருந்த 47 கிராமங்களில், குழந்தைகள் இறப்பு 58 லிருந்து 62 ஆக அதிகரித்திருந்தது (எந்த முன்னேற்றமும் நிகழவில்லை). கட்சிரோலி மாவட்டத்தில், மொத்த குழந்தைகள் இறப்பு விதம் 120 லிருந்து  30 ஆகக் குறைந்தது. அப்போதைய அகில இந்திய சராசரி 70.  எட்டு ஆண்டுகளில்,  இந்திய சராசரிக்குக் கீழே இருந்த ஒரு பின் தங்கிய மாவட்டமான கட்சிரோலி, இந்தியாவின் மிக முன்னேறிய மாநிலமான கேரளாவை நோக்கிப் பயணிக்கத் துவங்கியது.

மருத்துவர்கள், மருத்துவமனைகள் என அனைத்து வசதிகளும் படைத்த அரசு கட்டமைப்பை விட, இரண்டு மருத்துவர்கள், 39 ஆரோக்கிய தூதர்கள், தலா 1500 ரூபாய் மதிப்புள்ள மருத்துவக் கருவிகள், 28 நாள் பயிற்சி எனக் கிளம்பிய சிறுபடை, பெரும் சாதனையைப் படைத்தது.

அறிவியலே மனிதப் பிரச்சினைகளுக்கெதிரான, ஆகச் சிறந்த தடுப்பூசி என்கிறார் அபய் பங்.  அறிவியலின் துணை கொண்டு, மிகக் குறைந்த செலவில், மனிதர்களை விடுதலை செய்வதே அவர் நோக்கம். அறிவியலின் துணை கொண்டு, பின் தங்கியப் பகுதி மக்களுக்குப் பயிற்சி அளித்து, தங்கள் பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும் வகையில் தீர்வுகள் வடிவமைக்கப்பட வேண்டும். அதுவே ஆரோக்கிய ஸ்வ்ராஜ்யம் என்பது அவர் கருத்து.

இந்தத் திட்டத்தின் வெற்றியைக் கண்ட இந்திய அரசு,  தனது ஊரகப் பொதுநலத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கிராமப் பொதுநல ஊழியரை, ‘ஆஷா’ என்னும் பெயரில் நியமித்து, அரசு சுகாதாரத் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் திட்டமாக 2005 ஆம் ஆண்டு முதல் துவங்கி நடத்திவருகிறது.

குழந்தைநல மருத்துவம் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, கோண்ட் இனப் பெண்கள்,  குடிப்பழக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தலைமை தாங்க ராணி பங்கை வலியுறுத்தினார்கள். கோண்ட் இன மக்கள் குறிப்பாகப் பெண்கள் முன்னெடுத்து நடத்திய மதுவிலக்குப் போராட்டத்தின் இறுதியில், கட்சிரோலியில் இருந்த அனைத்து (60) அரசு அனுமதி பெற்ற மதுக்கடைகளும் மூடப்பட்டன.

கட்சிரோலியின்,  குழந்தையின் வீட்டிற்கு சென்று அளிக்கப்படும் இந்த நலத்திட்டம், உலகச் சுகாதார நிறுவனத்தால், வளரும் நாடுகளின் மிகச் சிறந்த பொதுச் சுகாதாரத் திட்டம் என அடையாளப்படுத்தப்பட்டு,  நேபாளம், வங்காள தேசம் என அண்டை நாடுகளுக்கு முதலில் எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் இந்த முறை ஆஃப்ரிக்க நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டது. குறிப்பாக இந்த முறை, தற்போது, எத்தியோப்பியாவின் தேசியச் சுகாதாரத் திட்டமாகச் செயல்பட்டு வருகிறது.

லான்செட் (LANCET) என்பது உலகின் மிகவும் புகழ்பெற்ற மருத்துவ வார இதழ். இங்கிலாந்து நாட்டில் துவங்கப்பட்ட இந்த இதழுக்கு இப்போது நியுயார்க் மற்றும் பெய்ஜிங்கிலும் ஆசிரிய அலுவலகங்கள் உள்ளன். தனது, 180 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி, அதுவரை அந்த இதழில் வந்த, மனித உலகை மாற்றிய மருத்துவக் கட்டுரைகளை (கண்டுபிடிப்புகளை) வெளியிட்டுச் சிறப்பித்தது.  ரொனால்ட் ராஸ் மலேரியா, கொசுக்கள் வழியே பரவுவதைக் கண்டுபிடித்தது, காலரா பாக்டீரியா கண்டுபிடிப்பு, இன்சுலின், பெனிசிலின்  என மனித குலத்தின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் தங்கள் இதழ்களில் வெளியானதை மீண்டும் வெளியிட்டு சிறப்பித்தது. அந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளில், கட்சிரோலியின், குழந்தையின் வீட்டிற்கு சென்று அளிக்கப்படும் இந்த நலத்திட்டத்தின் (Home based neonatal care) வெற்றி பற்றிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.  காந்தியம் உலகப் பொதுநலத்துக்கு அளித்த கொடை, இந்த ‘ஆரோக்கிய ஸ்வராஜ்’.

TBI Blogs: This Gandhian Couple Has Provided Medical Help to Maharashtra’s Tribals for over 30 Years

 

 

முந்தைய கட்டுரைஊட்டி சந்திப்பு -சிவமணியன்
அடுத்த கட்டுரைஅஞ்சலி- தோப்பில்