உயிர்த்த ஞாயிறுப்படுகொலையும் இந்தியாவும் ஈழத்தமிழர் கதியும்.–அகரமுதல்வன்

ஸ்ரீலங்காவின் குரல்கள்

“This who benefits question has even led some to speculate that Gotabhaya himself may have had   a hand in Sunday`s Bombings” – Phi. Miller , (morning star,British newspaper)

தமிழர்களின் உரிமைகளை மறுத்து ஒடுக்குமுறைகளை மேற்கொண்டால் இலங்கை வல்லரசுகளின் வேட்டைக்காடாக மாறும் என்று 1955ம் ஆண்டில் டாக்டர்.என் .எம்.பெரேரா நாடாளுமன்ற உரையில் எச்சரித்தார்.கிட்டத்தட்ட அறுபத்து நான்கு ஆண்டுகளில் அது முழு உண்மையாக தோற்றம் பெற்றுவிட்டது. இலங்கைத்தீவில் நிகழ்ந்திருக்கும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச்சம்பவங்கள்உலகம் பூராகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டிற்கு பிறகான இத்தனை ஆண்டுகால அமைதியில் மீண்டும் ஆயுதங்கள் அப்பாவி மக்களைக் காவுவாங்கியிருக்கின்றன.

இந்த  மனிதநேயமற்ற குரூரத்தன்மை வாய்ந்த தற்கொலைத்தாக்குதல்களை உள்நாட்டு அமைப்பான தேசிய தவ்ஜீத் ஜமாத் மூலம் தாமே நடத்தியதாக ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற மானுடகுலத்திற்கு எதிரான உலகப் பயங்கரவாத அமைப்பு பொறுப்புக்கூறியிருக்கிறது.கிறிஸ்துவ மதத்தினரின் புனிதநாளை தேர்ந்தெடுத்து அவர்களுக்குரிய வழிபாட்டுத்தலங்களில் இந்தத்தாக்குதல் ஏன் திட்டமிடப்பட்டது?இதன் பின்னணியில் யாருடைய கரங்கள் மறைந்திருக்கின்றன?தெற்காசியப் பிராந்தியத்தில் குறிப்பாக பவுத்தத்தை தனது அரசமதமாக கொண்டிருக்கும் ஒருநாட்டில் உலகை அச்சுறுத்தும் இஸ்லாமிய அடிப்படை பயங்கரவாதம் ஏன் தலைநீட்டுகிறது?இலங்கைத்தீவில் தோன்றியிருக்கும் இந்தப்பதற்றமான சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்த போகும் மேற்குலகத்தின் தொலைநோக்கு ஆசைதான் என்ன?இத்தனை கேள்விகளுக்கு மத்தியில் கொல்லப்பட்ட முந்நூறுக்கும் மேற்பட்டவர்களின் உயிருக்கும்பொறுப்பானவர்கள் இலங்கையின் இன்றைய ஆட்சியாளர்கள்.

இந்தத் தாக்குதலின் விளைவு “நல்லிணக்க அரசு”என பெயரளவில் அழைக்கப்படும் மைத்திரி-ரணில் ஆட்சிக்கு பெரியதொரு நெருக்கடியை வழங்கியிருக்கிறது.மேலும் தமிழர்களின் அடிப்படை வாழ்வுரிமைக்கான போராட்டத்தை தமிழ்ப்பயங்கரவாதம் எனக்கூறி இனப்படுகொலையை நிகழ்த்திய சிங்கள –பவுத்த அரசாங்கம்இந்தத்தாக்குதலை முன்வைத்து தமிழ் –முஸ்லிம் உறவுகளுக்குள்ளிருக்கும் நீண்டகாலப் பகைமையை கூர்தீட்டும்.சமநேரத்தில் தனது சிங்கள பவுத்த மேலாதிக்கத்தையும் வளர்த்தெடுக்கும் என்பது உறுதியானது.

இப்படியொரு படுகொலைத்தாக்குதல் நடைபெறப்போவதனை இந்தியாவின் தேசிய புலனாய்வு ஏஜென்சி(NIA)அமைப்பு ராஜந்திர வழிமுறைக்குள்ளால் இலங்கைக்கு அறிவித்திருந்தும் அதுபொருட்படுத்தப்படவில்லை.ஆனால் இப்படியாக வந்ததகவல்கள் போலியானவையா?மெய்யானதா என்று சோதனை செய்வதற்கிடையில் இந்தத் தாக்குதல் நடந்துவிட்டது என இலங்கை அரசதரப்பு அறிவித்திருப்பதானது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது.இந்தத்தகவலில் இருக்கும் போலி,மெய் என்கிற பரிசோதனைகளைக் கடந்து உயிர்கள் சம்பந்தப்பட்ட விடயத்தில் சிறுபிள்ளைத்தனமான அசட்டையை அரசாங்கம் கடைப்பிடித்திருக்கத் தேவையில்லை.கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் தமிழர்கள்.ஏனையவர்கள் பவுத்தர்கள் அல்லாத கிறிஸ்துவ சிங்களவர்கள் என்பதனையும் இந்தக் கட்டுரை அடிக்கோடிட்டு சுட்டிக்காட்டவிரும்புகிறது.

இந்தத் தாக்குதல் வெளிப்படுத்தப்போகும் விளைவுகள் யாருக்கு சாதகமாக மாற இருக்கிறது என்பது வரை இலங்கையின் அரசியலில் தீர்மானிக்கப்பட்டிருக்கலாம்.நன்கு செப்பனிடப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருக்க வாய்ப்புண்டு.செப்டெம்பர் -11ம் திகதி என்று அறியப்படும் இரட்டைக்கோபுர தாக்குதல் ஏற்படுத்திய விளைவுகளால் உலகம் பூராகவும் தோன்றிய உலக ஒழுங்கைப் போல இலங்கை அரசியலின் ஒழுங்கு இந்தத் தாக்குதலின் பின்னர் வேறொருவடிவம் கொள்ளும்.

அரசற்ற ஈழத்தமிழர்கள் அரசியல் வெளியில் இன்று கையாலாகதவர்கள்.அவர்களுக்கென்று இலங்கைத்தீவில் சமூக,மத நிறுவனங்கள் கூட இல்லை.ஏற்கனவே பாதிப்புக்குள்ளாகியிருக்கும் அவர்களின் பாதுகாப்பு,உயிர்வாழும் உரிமை போன்றவை இந்தத்தாக்குதலின் பேரால் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள் மூலம் நெருக்கடியைச் சந்திக்கும்.

இலங்கையின் இராணுவக்கோட்பாடானது அதனது அர்த்தத்தில் தமிழர்களுக்கு எதிரானது.இன்றைய அவசரநிலைப் பிரகடனத்தின் வாயிலாக மீண்டும் அதிகாரம் பெறுகிற இராணுவம் மீண்டும் தமிழ்மக்களை தனது துப்பாக்கி முனையில் நிறுத்தும்.பயங்கரவாத பூச்சாண்டியை தமிழ்மக்களின் மீது சுமத்தி தனது இராணுவ கொடுங்கோன்மையை நிகழ்த்துவதற்கு இந்தத்தாக்குதல் அரண் அமைத்திருக்கிறது.

மேலும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பான சர்வதேச விசாரணை புறந்தள்ளப்பட்டு சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கான கருத்தியல் அம்சம் மேலோங்கப்போகிறது.இந்த இருவேறு நிலைகளும் தமிழர்க்கே தீமையான விளைவுகளைத் தரவல்லது.ஒன்று தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிக்கு கிடைக்கவேண்டிய நீதி பறிபோகிறது.இன்னொன்று யாரோ நிகழ்த்திய அநீதிக்கு விசாரணையெனும் பேரில் தமிழர்கள் மீது இராணுவ ஒடுக்குமுறை படரப்போகிறது.

அமெரிக்காவின் இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு பின்னராக ஏற்பட்ட உலக ஒழுங்கின் மாற்றம் போலவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னரான இலங்கை அரசியலின் ஒழுங்கும் மாற்றம் காண்கிறது.இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் (Fanatics) குண்டுத்தாக்குதலால் சிங்கள பவுத்த அடிப்படைவாதிகள் மீண்டும் இலங்கை அரசியலை வென்றெடுக்கும் வாய்ப்பு உறுதியாகிவிட்டது.

மக்களைப் பாதுகாக்க தவறிய அரசு என்று குற்றஞ்சுமத்திக்கொண்டு எதிர்வரும் தேர்தலை சந்திக்க தயாராகியிருக்கிறது ராஜபக்ச ஆதரவு அலை. அவசரகால சூழலில் இயல்பாகவே அதிகாரத்தைப்பெறும் இராணுவ ஆளணி மற்றும் மகா சங்கம் ஆகியவை கோத்தபாயவின் பக்கம் திசை திரும்பும் என்பதை ஊகிக்கமுடிகிறது.புலிகளுக்கு பின்னரான இலங்கை அரசியலில் இல்லாமல் போயிருந்த பயங்கரவாத அச்சுறுத்தல் போன்ற சொல்லாடல்கள் மீண்டும் தென்னிலங்கை அரசியலுக்கு கிடைத்திருக்கிறது.இதனை தத்தமது நலன் சார்ந்து உபயோகிக்க இப்போதே இருபெரும் சிங்களக் கட்சிகளுக்கிடையில் போட்டிகள் உருவாகியிருக்கின்றன.

2009ம் ஆண்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர் கலைக்கப்பட்ட ஓர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே இந்தத்தாக்குதலை நடத்தியிருப்பதாக தாக்குதல்கள் நடந்து சிலமணி நேரங்களுக்குள் இலங்கையின் பாதுகாப்பு துணை அமைச்சர் தெரிவித்த கருத்து,கடந்த காலத்தில் இலங்கையில் ஜிகாத் அமைப்பு இருந்ததனை உறுதிப்படுத்துகிறது.அரசின் ஒட்டுக்குழுக்களாக இயங்கிய தமிழ் அமைப்புக்களை விடவும்,அரசாங்கத்தினால் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரே அமைப்பாக இந்த இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம் இருந்திருக்கிறது. இதனை தமிழர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் எதிராக ஆயுதம் தாங்கிய “ஜிகாத்” அமைப்பு இலங்கை அரசு உதவியோடு இயங்கி வருவதாக ஜெனிவா பேச்சுவார்த்தையில் புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்சுட்டிக்காட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.கடந்த காலத்தின் சரி தவறுகளைக் கடந்து இப்போது சர்வதேச பயங்கரவாத அமைப்பை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டிய பொறுப்பு அங்கிருக்கும் சிங்கள –தமிழ் –முஸ்லிம் போன்ற மூவினங்களுக்கும் உண்டு.

இப்படியொரு தாக்குதலை முதலே எதிர்வுகூறியிருந்த இந்தியாவின் புலனாய்வுத் தகவல்களை பொருட்படுத்தாமல் இலங்கை அரசு புறந்தள்ளியமை இராணுவ-ராஜாங்க ரீதியாக இந்தியப்பேரரசுவை அவமதிக்கும் செயலாகும்.பிராந்தியத்தின் பெரும் சக்தியான இந்தியா இந்த விடயத்தில் இலங்கையை எச்சரித்தும்,எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தமை ஆராயப்படவேண்டியது. குண்டுத்தாக்குதல்கள் நடந்து ஓரிரு நாட்களில் சர்வதேச காவல்துறையும் அமெரிக்க புலனாய்வு அமைப்பும் இலங்கையில் களமிறங்கியிருப்பதை இந்தியா கருத்தில் கொள்ளவேண்டும்.யுத்தமுடிவுக்கு பின்னர்  சீனாவிற்கு தன்னை ஒப்புக்கொடுத்த இலங்கைத்தீவில் இன்று மேற்குலகப் பேரரசுகளுக்கு கதவு திறந்திருக்கிறதுஇந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்.எப்போதும் இந்தியாவிற்கு எதிரான சக்திகளுடன் இறுக்கமான நேசப் பிணைப்பை கொண்டிருக்கும் சிங்கள ஆட்சியாளர்களையும் இலங்கை பவுத்த அரசியலையும் இந்தியாவின் அயலக கொள்கைவகுப்பாளர்கள் சரியாக இனங்கண்டுகொள்ளவேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்ட கிறிஸ்துவர்களுக்காய் ரோம் முதற்கொண்டு உலகெங்கும் உள்ள கத்தோலிக்க நாடுகள் பிரார்த்தனையில் ஈடுபட்டன.உலகம் பூராகவும் அப்பாவி மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைக்கு எதிராக அணிதிரண்டு தமது கண்டனங்களை தெரிவித்தன.இறந்தவர்களை காப்பாற்ற முடியாது. எனிலும் இப்படியான உலகத்தின் அனுதாபங்களும் உதவிகளும் பாதிக்கப்பட்டவர்களை பலப்படுத்தும்.

ஆனால் இலங்கைத்தீவில் தமிழர்கள் மீது அரைநூற்றாண்டு காலமாக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு உலகம் ஏன் செவிசாய்க்கவில்லை.இலங்கையில் தேவலாயங்கள், வணக்கஸ்தலங்கள் குண்டுகளாலும் குருதியாலும் மூழ்கடிக்கப்படுவது இது முதல்தடவையன்று.சிங்கள ஆட்சியாளர்கள் நிகழ்த்திய பெரும்பான்மை படுகொலைகள் இப்படித்தான் நடந்தேறின.ஆனால் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட கிறிஸ்துவ மக்களுக்காய் பிரான்ஸ் ஈபிள் கோபுரத்தின் விளக்குகளை அணைத்து தனது அஞ்சலியை செலுத்துகிறது.இது உலகத்தின் கவனத்தை ஈர்த்தவிடயம்.ஆனால் இத்தனையாண்டு காலமாக ஈழத்திலுள்ள இந்துக்கோவில்கள் மீது இலங்கை அரசினால் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் வகை தொகையின்றி வேட்டையாடப்பட்டனர்.கோவில்கள் இடிக்கப்பட்டன.இப்படியானவற்றுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலாவது இந்தியாவின் ஒரு தெருவிளக்காவது அணைத்து அஞ்சலி செலுத்தப்பட்டதா?பெரும்பான்மையாக இந்துக்களாக அடையாளம் காணப்படும் ஈழத்தமிழ் மக்களின் படுகொலைகளை இந்துநாகரீகம் கொண்ட இந்தியா ஏன் ஒருபொழுதும் கண்டிக்காமல் போகிறது? அங்கிருக்கும் தமிழர்களை அழிப்பதில் பவுத்த சங்கங்கள் காட்டும் தீவிரம் எதன்  பின்னணியில்கருக்கொண்டிருக்கிறது என்பதைக் கூட ஏன் இன்னும் இந்தியத்தரப்பு ஆராயவில்லை?இன்றைக்கு இந்தியாவில் ஆட்சிபீடத்தில் இருக்கும் பா.ஜ.கஇந்தப்பிரச்சனையை கூர்மையோடு அணுகவேண்டும் என்பதே இந்தக்கட்டுரையின் கோரிக்கை.

நிகழ்ந்திருக்கும் இந்தக்குண்டுத்தாக்குதலில் முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். முன்னைய காலங்களைவிடவும் சமகாலத்தில் தமிழ்-முஸ்லிம் முரண்கள் அதிகரித்திருக்கும் மட்டக்களப்பு பகுதியில் கொல்லப்பட்ட அனைவரும் தமிழர்கள்.இன்றைய நாள்வரைக்கும் கொழும்பின் ஏதோவொரு பகுதியில் குண்டுகள் வெடித்துக்கொண்டே இருக்கின்றன.கைதுகள் நடந்தபடியிருக்கின்றன. இலங்கை மீண்டும் சோதனைச்சாவடிகளுக்குள் தனது நாட்களை சந்திக்கத்தொடங்கியிருக்கிறது.சமூக மத நிறுவனங்கள் ஏதுமற்று கதியற்ற தமிழர்களின் பரிதாபம் சர்வதேச சக்திகளாலும் சர்வதேச பயங்கரவாதிகளாலும் அதிகரிக்கப்படுகிறது என்பதே இந்தத்தாக்குதல் புதிதாக கையளித்திருக்கும் இரத்தம் தோய்ந்த அத்தியாயம்.

அகரமுதல்வன்

முந்தைய கட்டுரைஆயிரம் மணிநேரம் – தவம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-22