விஷ்ணுபுரம், தத்துவம்,இலட்சியவாதம்-கடிதம்

 

அன்புள்ள ஜெயமோகன்,

 

ஒரு வாரமாக விஷ்ணுபுரம் வாசித்து வருகிறேன். நீங்கள் வாசகர்களுக்கு மிக அதிகமான வேலை தருக்கிறீர்கள், அதனாலே உங்கள் படைப்புக்கள் அதற்கான வாசகர்களை அதுவே தேர்ந்தெடுத்துக்கொள்கிறது.

 

ஸ்ரீபாதம் முடிந்த பின்னர் ஏதோ வெறுமையை மிஞ்சியுள்ளது. எத்தனை விதமான கதாப்பாத்திரங்கள். அனைவரையும், அனைத்தினையும் விஷ்ணுபுரம் தனக்குள் இழுத்துக்கொள்கிறது. நான் மிகவும் ஆரம்ப நிலை வாசகன், எண்ணெய்யே விஷ்ணுபுரத்தின் கணவுநிலையும் அதன் கட்டற்ற தன்மையும் ஈர்த்து கவர்கிறது என்றால் தேர்ந்த வாசகர்களை எவ்வளவு படுத்தி இருக்கும். உங்களுக்கு வந்த விஷ்ணுபுரம் கடிதங்களை வாசித்தாலே அவர்களின் தவிப்பு புரிகிறது. விஷ்ணுபுரத்தை முழுவதும் வாசித்த பின்னர் உங்களுக்கு நீண்ட கடிதம் எழுத விரும்புகிறேன்.

 

மேலும் உங்கள் பதிவுகள் என்னை மிகவும் அலைக்கழிக்கின்றன ஒரு ஆற்றாமையை, கையலாக நினைப்பை ஏற்படுத்துகின்றன. என்னதான் வேண்டும் ஸ்வாமி நிகமானந்தவிற்கு, எது மாத்ரி சதன் துறவிகளை முன்செலுத்துகிறது. நன்றாக வாழ வேண்டியது தானே.

 

நான் மிகவும் சுயநலமானவன் என்னை தவிர எதைப்பற்றியும் கவலைப்பட்டதில்லை. காந்தி, அண்ணா ஹசாரே,   நிகமானந்தா பற்றி உங்கள் பிதிவுகளை படிக்கும் போது மனம் வெதும்புகிறது, கொந்தளிக்கிறது.

 

நான் அசல் வாசகனா, போலி வாசகனா, இது வெறும் சில நேர கிளர்ச்சியா என்று அறிய முடியவில்லை.

 

என் மனதை கலைத்து தெளிய வைக்கும் உங்களுக்கு நன்றிகள் தவிர வேறு ஏதும் சொல்லவும் தெரியவில்லை.

நன்றி.

 

இப்படிக்கு,

  1. கிஷோர் குமார்

 

அன்புள்ள கிஷோர்குமார்

 

அழகு, இலட்சியவாதம், ஆன்மிக தரிசனம் ஆகியவை ஒருவகை அலைக்கழிப்பாகவே நம்முள் நுழையும். எந்த ஒரு கலைவடிவை முதலில் அறிமுகம் செய்துகொண்டாலும் ஏற்படுவது கொந்தளிப்புதான். அந்தக்கொந்தளிப்பு மேலோட்டமானது. அது நம் ஆழத்தில் ஓரு மாற்றம் உருவாவதன் விளைவு. கண்டதட்டுகள் நிலைமாறும்போது பூகம்பம் உருவாவதுபோல. ஆழத்திலுள்ளது மிகச்சிறிய, ஆனால் மிக அடிப்படையான மாற்றம்.

 

அந்த கொந்தளிப்பை மிகையாக கருதிக்கொள்ள வேண்டியதில்லை. அது ஒரு தற்காலிக நிலை மட்டுமே. மெல்லமெல்ல அது இல்லாமலாகும். நம்முள் நிகழ்ந்த மாற்றத்தை மட்டும் கவனியுங்கள். அந்த மாற்றம் நம் வாழ்விலும் நிகழ்வதற்குத் தடையாக உள்ளது என்ன என்று நோக்குங்கள். அதுவே நம்மை மாற்றத்தொடங்கும்

 

அவ்வாறு நாம் நம்மை கூர்ந்து நோக்கி நம் வாழ்க்கையை அவ்வண்ணம் அமைக்காவிட்டால் இந்தக் கொந்தளிப்பு ஓய்ந்ததும் நாம் மெல்லமெல்ல மீண்டும் நமக்கு வசதியான இடத்துக்கே சென்றுவிடவும் கூடும். இந்தக்கொந்தளிப்பை ஒருவகை கடந்தகால ஏக்கமாக மட்டும் நினைவுகூர்வோம்

 

ஜெ

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-35
அடுத்த கட்டுரைச. துரை கவிதைகள்