தண்ணீர் காந்தி – கடிதங்கள்

ராஜேந்திர சிங் – தண்ணீர் காந்தி! – பாலா

அன்புள்ள ஜெ,

 

 

பாலா முன்வைக்கும் காந்தியப்போராளிகளைப்பற்றிய சித்திரங்கள் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்குகின்றன. இன்றும்கூட இந்த வகையான மாமனிதர்கள் நம்மிடையே தோன்றிக்கொண்டிருக்கிறார்கள், செயல்படுகிறார்கள், வெற்றியடைகிறார்கள் என்பது மிகப்பெரிய ஒரு ஊக்கத்தை அளிக்கிறது. அறம் வரிசை கதைகள் வந்தபோது ஏற்பட்ட அதே நெகிழ்ச்சி இப்போதும் உருவாகிறது.

 

இவர்கள் அனைவரின் வாழ்க்கையையும் கூர்ந்து பார்க்கையில் ஒரு விஷயம் தெரியவருகிறது. இவர்கள் எல்லாருமே பிடிவாதமான கொள்கைப்பற்று கொண்டவர்கள். வாழ்க்கையை அதற்கேற்ப வடிவமைத்துக்கொண்டவர்கள். அதன்பின் அவர்கள் சலிப்பே அடையாமல் அந்த இலக்கை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். கசப்பு வெறுப்பு அவர்களிடமில்லை. அவர்கள் செயலாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். காலப்போக்கில் பெரிய சாதனைகளைச் செய்கிறார்கள்

 

எல்லாரும் இதைப்போல வாழக்கூடுமா என்றால் கஷ்டம்தான். ஆனால் கொஞ்சமாவது தனக்கு அப்பால் யோசிக்க்க்கூடியவர்கள் எங்கே என்றாலும் இதைப்போல ஒரு வாழ்க்கையை வாழமுடியும். இங்கே அப்படி வாழமுடிபவர்களை நீங்கள் அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறீர்கள்.

 

பாலா அவர்களுக்கு என் வணக்கம்

 

ஆர். சிவக்குமார்

 

அன்புள்ள ஜெ,

 

பாலா அவர்களின் தண்ணீர் காந்தி வாசித்தேன்.வாசித்தபிறகு என்னை நானே கேட்டுக்கொண்டேன் இவை அனைத்தும் இன்று சாத்தியமா என்று. தற்போதைய வாழ்நிலை சூழலில் ஒரு நடுத்தரவர்க்கத்து மனிதன் தன் வாழ்நாள் லட்சியமாக எண்ணுவது பணம் என்பதை மட்டுமே. ஒரு சக்கரத்தை போல் அவன் சுழன்றுகொண்டே இருக்கிறான். அவனுக்காக அல்லது அவன் கொண்டு வரும் பணத்திற்காக ஒரு குடும்பம் என்ற அமைப்பு காத்துக்கொண்டிருக்கிறது. அதைத்தாண்டி அவன் தன்னை ஒரு சமூக சீர்திருத்தத்திற்காகவோ அல்லது பொதுநல செயற்பாட்டிற்க்காகவோ ஈடுபடுத்திக்கொள்ள நினைக்கும் பொழுது அந்த எண்ணம் அவனுக்குள் ஒரு அச்சத்தையும், எதிர்காலத்தை பற்றிய கவலையும் ஒருசேர கொண்டு வருகிறது. அதன் பிறகு அவன் தன் அச்சத்தை மறைப்பதற்கு காரணம் தேடி இச்சமூகத்தை குறை கூறி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆகவும், பேஸ்புக் பதிவாகவும் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறான். இதற்கான தீர்வு என்ற ஒன்று இருக்கிறதா அல்லது நம் குடும்ப அமைப்புதான் அனைத்திற்க்கும் காரணமா என்ற கேள்வி என்னுள் எழுந்துகொண்டே இருக்கிறது. இதை எழுதும்பொழுது ஒரு விரக்தி மனநிலை மட்டும்தான் மேலோங்கி இருக்கிறது. இதுவே நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம், மேற்கூறிய விடயங்களில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

 

இப்படிக்கு,

நரேந்திரன்.

 

அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்! -பாலா

பங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா

இந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி! -பாலா

லக்‌ஷ்மி சந்த் ஜெயின் – அறியப்படாத காந்தியர்- பாலா

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-21
அடுத்த கட்டுரைலடாக்கிலிருந்து கவிழும் நிழல்- சௌந்தர்