இந்தநாளில்…

தலைமறைவு

காலையில் எழுந்தால் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும் வழக்கமே இல்லை என்னிடம். எழுந்ததுமே காலைநடை. நேராக எழுத்து. பல்தேய்ப்பது அருண்மொழி நினைவுறுத்தினால். அவள் இப்போதெல்லாம் மறந்துவிடுகிறாள். யாராவது வந்தால் மட்டும்தான் ’அய்யய்யோ பல்லே தேய்க்கவில்லை’ என்னும் பதற்றம்.

இதெல்லாமே அரசூழியரின் உளச்சிக்கல்கள். இருபதாண்டுகளாக காலையில் எழுந்ததும் அலுவலகம் செல்வதற்கான சடங்குகளின் ஒருபகுதி பல்தேய்ப்பது, குளிப்பது, தலைசீவிக்கொள்வது. ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லாவற்றுக்குமே விடுமுறைதான். சாயங்காலம் எப்படியும்குளிப்போமே அப்போது பல்தேய்த்துக்கொண்டால் போயிற்று, வெள்ளைக்காரன் எல்லாம் பதினெட்டாம்நூற்றாண்டுவரை பல்தேய்க்கும் வழக்கம் இல்லாதவன் தெரியுமா என்றெல்லாம் எண்ண ஓட்டங்கள்.

இப்போது எல்லா நாளும் விடுமுறை. வேலையிலிருந்து விடுபட்டு பத்தாண்டு கடக்கப்போகிறது. ஆனாலும் ஒவ்வொருநாளும் காலையில் எழுந்ததுமே ‘அப்பாடா இன்றைக்கு லீவு’ என்னும் பரவசம். மோகன்லான் பழைய படம் ஒன்றில் ஏங்குவார் ‘ஏதாவது வேலை கிடைத்தால் லீவுபோட்டுக்கொண்டு கொஞ்சநாள் சும்மா இருக்கலாமே’. இது ஒரு அழகிய உளநிலை. அதற்கு முதல் வேலை கிடைக்கவேண்டும். அதன்பின் அதை விட்டுத்தொலையவேண்டும்.

இன்றுகாலை ஒரு சந்திப்பு. ஆகவே காலையில் குளித்தேன். செல்வேந்திரன் பிறந்தநாள் கொடையாக அளித்த புதுச்சட்டையைப் போட்டுக்கொண்டு கண்ணாடியில் பார்த்தேன். ‘அவ்வளவு வயதாகவா தெரிகிறது?” என்று கேட்டுக்கொண்டேன். நடிகர்கள் அனைவருமே கண்ணாடியின் காதலர்கள் என்பதைக் கவனித்திருக்கிறேன். நடுவயது நடிகர்களுக்கு கண்ணாடி மனைவிபோல. வெறுத்தபடியே பார்த்துக் கொண்டிருப்பார்கள். நல்லவேளை நான் நடிகன் இல்லை. எழுத்தாளன் ஒயின் போல. மூப்புதான் சுவையும் மணமும். சொல்லிக்கொண்டபோது இதமாக இருந்தது

ஆனால் ஒரு சின்னக்குறை. இன்னும் கொஞ்சம் முடி இருந்திருக்கலாம். நேற்று ஸ்ரீரங்கம் கண்ணனைப் பார்த்தபோது சொன்னார்.  ‘சீக்கிரம் வெண்முரசை முடிங்க, உள்ளதும் போய்டப்போவுது’ என்று. அப்படிப் பார்த்தால் எவ்வளவோ லாம்கள். தாடி வைத்துக்கொள்ள ஆசை உண்டு. ஆனால் கை சும்மா இருக்காது. மீசை என்றால் வாய் சும்மா இருக்காது. சிந்தனையாளனின் தோற்றம் வரவேண்டும். அதற்கு இன்னும் கொஞ்சம் நாள் ஆகட்டும், ஐம்பத்தெட்டு நடக்கிறது, [ஓடுகிறது என்று சொல்லவேண்டும்] அதெல்லாம் ஒரு வயதா என்ன? காலையில் காலத்தைப் பற்றிச் சிந்திப்பதுதான் வயதாவதன் அடையாளமா?

ஒரு செல்ஃபி எடுத்து செல்வேந்திரனுக்கு அனுப்பினேன். சட்டை மிகக் கச்சிதம். நண்பர்கள் நம் தொப்பையளவைப்பற்றிய துல்லியமான விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம். நானும்தான் குறைக்க முயல்கிறேன். அத்வைதத்தைப் பற்றி தெரிந்துகொண்டால் அத்வைதியாகிவிடலாம் என்பதுதான் இந்தியர்களின் மாயைகளில் முதன்மையானது என்று நித்யா ஒருமுறை சொன்னார். அடுத்த மாயை தொப்பையைக் குறைப்பதைப்பற்றி விரிவாக வாசித்தும் கேட்டும் தெரிந்துகொண்டாலே தொப்பை குறைந்துவிடும் என்பது.

இந்தநாளில் மிக எடைகொண்ட சொற்களைச் செவிமடுத்திருக்கிறேன். இது இவ்வளவு தீவிரமாக முன்பு எம்ஜியார்- சிவாஜி பிரச்சினையின் போதுதான் நடந்தது. அன்று தாயளி என்பது மையச்சொல். இன்று ஓத்தா. இப்படி பிரச்சினைக்கு ஏற்ப கலைச்சொற்கள் மாறுபடும் என்பதை இன்றுதான் தெரிந்துகொண்டேன். மூன்றுநாட்களாக காளிவிளாகத்துவீட்டில் பத்மாவதியம்மா விசாலாட்சியம்மாவின் கற்பைப் பற்றித்தான் என்னிடம் ஐயம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம், கிழவி இருந்திருந்தால் சிரித்திருக்கும். நல்ல வாசிப்புரசனை கொண்டவள். கம்யூனிஸ்டு பாரம்பரியம் கொண்டவள்.

வசைகளில் மண்ணாப்பூடுவே, அழிஞ்சிருவே என் ஆக்ரோஷமான சாபங்களும் இருந்தன. உண்மையிலேயே மனமுடைந்த குரல்கள். ஒரு பெண்ணின் குரல்கூட. இத்தனை வசைகளை வாங்குபவர்கள் அவற்றை முற்றாக உதறிவிட முடியுமா என்ன? கண்ணாடியில் பார்த்தேன். தடையமே தெரியவில்லை. குளித்து முடித்ததனால் இருக்குமோ? அல்லது ஒரு அத்தியாயம் வெண்முரசு எழுதியதனால்.

இந்தநாளை நினைத்துக் கொள்ளவேண்டும். இன்று காலையில் நான் என்னைப்பற்றி கொஞ்சம் கவலைப்பட்டிருக்கிறேன். ‘என்னடாவேணும் உனக்கு?” என ஆதுரமாகக் கேட்டிருக்கிறேன். ‘பரவாயில்லை, அப்டியொண்ணும் மோசமில்லை’ என்று ஆறுதல் கொண்டிருக்கிறேன். ‘சரி, இதெல்லாம் என்ன?” என விலக்கம் கொண்டிருக்கிறேன். என்னைப்பார்த்து நானே புன்னகை செய்து கொண்டிருக்கிறேன்.

கெட்டவார்த்தைகள்

முந்தைய கட்டுரைகிறிஸ்து ஒரு போதும் தனியாக இருப்பதில்லை-வெள்ளை யானை பற்றி…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-21