நேற்று 27-4-2019 அன்று சென்னையில் லக்ஷ்மி மணிவண்ணனும் நண்பர்களும் ஒருங்கிணைத்த கண்டனக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். பொன்பரப்பியில் தலித் மக்களுக்கு எதிராக வன்னியர்களின் சாதிக்கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி நிகழ்த்திய வன்முறைக்கு எதிராக எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் குரலை பதிவு செய்யும் கூட்டம்.
26 கிளம்புவதாக இருந்தது. என் அத்தையின் இறப்புச்சடங்குகள் காரணமாக மதியம்தான் கிளம்ப முடிந்தது. ஆகவே திருவனந்தபுரத்தில் இருந்து இறுதிக்கண விமானப் பதிவு. திருவனந்தபுரம் சென்னை விமானங்கள் பாதியாகிவிட்டன. ஆனாலும் கேட்டதுமே இடம்கிடைக்குமளவுக்கு குறைவானவர்களே பயணம் செய்கிறார்கள். மதியம் ஒருமணிக்கு நாகர்கோயிலில் இருந்து கிளம்பினேன். ஐந்து மணிக்கு விமானம். ஐந்துமணி என தோன்றிக்கொண்டே இருந்தது. உண்மையில் விமானப்பயணம் ஐந்துமணிக்கு என்றால் நான்கு மணிக்கு என பொருள். ஆனால் அதை எப்போதுமே என் மனம் மறந்துவிடுகிறது
நான் சென்று சேர்ந்தபோது நான்கு பதினைந்து. பயணிகளை அனுமதிப்பதை நிறுத்திவிட்டிருந்தனர். திருவனந்தபுரம் ஆனதனால் மன்றாடிக்கேட்க முடியும். நம்மைத்தெரிந்த ஒரு பெண்ணாவது முகப்பில் இருப்பாள். ஒருவழியாகக் கதவு மூடும் முன் சென்று நுழைந்தேன். மாலை ஆறரைக்கு விமானநிலையம். அங்கிருந்து காரில் நேராகவே அசோக்நகர் விடுதலைச் சிறுத்தைகள் அலுவலகம். அதன் முன் வண்டி நிறுத்த இடமில்லை. ஆகவே மறுபக்கம் நிறுத்தி சாலையைக் கடந்து ஏறிக்குதித்து அப்பால் சென்றேன்.
நல்ல கூட்டம். ஏற்கனவே பெரும்பாலானவர்கள் பேசிவிட்டிருந்தார்கள். என் நண்பர்களும் பலர் வந்திருந்தார்கள். நேராக மேடைக்குச் சென்றேன். பன்னிரண்டரை மணிக்கு சாப்பிட்டது. மேடையில் அமர்வது வரை வந்துசேரமுடியும் எனத் தோன்றியிருக்கவில்லை. இது ஒருவகையான ‘நானும் உள்ளேன்’ அறிவிப்புதான். அரசியலை எல்லாம் அக்குவேறு ஆணிவேறாக முன்வைப்பவர்கள் அங்கே மேடையில் இருந்தார்கள். பலர் பேசியுமிருந்தனர். கலந்துகொள்ள முடியாமல் போயிருந்தால் குறையாக உணர்ந்திருப்பேன். லக்ஷ்மி மணிவண்ணனை சமாதானம் வேறு செய்யவேண்டும்.
நான் பேசத்தொடங்கியதுமே அரங்கில் திருமாவளவன் தோன்றிவிட்டர். அப்போதுதான் வருகிறார் என்பதனால் ஒரு சலசலப்பு. அவர் மேடைக்கு வந்தமையால் என் உரையை பாதியில் முடித்துக்கொண்டேன். சொல்லவந்ததைச் சொல்லவில்லை. அது ஒன்றும் முக்கியமில்லை, அங்கே தோன்றியது போதும். நான் சொல்ல விரும்பியது இரண்டு புள்ளிகளை மட்டுமே.
ஒன்று, இப்போது எழுத்தாளர்கள் திரண்டு அரசியல் கருத்துக்களைச் சொல்வது வழக்கமாகி இருக்கிறது. அரசியலில் உள்ள எல்லா தரப்பும் அவ்வாறு ஒரு பட்டியலைத் திரட்டிவிட முடிகிறது. அரசியல்பூசல்களும், சண்டைகளும் உச்சகட்டத்தில் உள்ளன. இது அவ்வாறு ஒரு அரசியல்தரப்பின் குரல் அல்ல. கட்சி அரசியலுக்கு அப்பால் நின்றிருக்கும் அறத்தின் அரசியல் ஒன்று தேவை. அது எல்லா தருணத்திலும் அந்தந்த சந்தர்ப்பத்து அரசியல்கூட்டு, தேர்தல் கணக்குகளுக்கு அப்பாற்பட்டு எழுந்தாகவேண்டும். ஜெயகாந்தன் அந்த அரசியல் பற்றி தொடர்ந்து பேசியிருக்கிறார். அவர் அதன் அடையாளமாக இருந்தார். அந்த அரசியலையே நான் முன்வைக்க விரும்புகிறேன். இது அரசியலின் பிரச்சாரம் எதிர்ப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஆகிவிடக்கூடாது. இது எழுத்தாளர்களின் அறவெளிப்பாடு.
இரண்டு, இது இரு இரு அரசியல் தரப்பினருக்கு இடையேயான பூசல் அல்ல. இது ஆதிக்கம் கொண்ட ஒரு சாதியால் தலித் மக்களை ஒடுக்கி தாக்கி அச்சுறுத்தி வைத்திருப்பதைக் காட்டும் நிகழ்வு. அந்த ஒடுக்குமுறைக்கு எதிரானது இக்குரல். உண்மையான பிரச்சினை இந்தத் தாக்குதல் அல்ல . இப்படி தாக்கும் நிலையில், கைவிடப்பட்ட சூழலில் அந்த மக்கள் வைக்கப்பட்டிருப்பதே.
இந்த தாக்குதலை விட முக்கியமானது இதில் பயன்படுத்தப்பட்ட மொழி. அது அந்தக் கட்சி தன் தொண்டர்களுக்கு அளித்திருக்கும் மனநிலை என்ன என்பதை காட்டுகிறது. அதுவே அச்சுறுத்துவது. அவர்கள் இளைஞர்கள். நூறாண்டுகளாக இங்கே உருவாக்கப்பட்ட எந்த முற்போக்குப் பண்பாட்டுக் கருத்துக்களையும் அறியாத சாதிவெறியர்களாக அவர்களை அது பயிற்றுவித்திருக்கிறது. இன்னும் அரைநூற்றாண்டுக்காலம் அவர்கள் இங்கே இவ்வண்ணம் இருப்பார்கள் என்றால் தமிழ்ச்சமூகத்தின் மிகப்பெரிய எதிர்ப்பண்பாட்டு சக்தி அவர்கள். ஆகவே இந்தத்தாக்குதலில் உள்ள நியாய அநியாயங்கள் சந்தர்ப்ப சூழல்கள் அல்ல பேசப்படவேண்டியவை. அந்த இளைஞர்களின் மனநிலைதான் பேசப்படவேண்டியது
அதை அருவருக்கிறோம், கண்டிக்கிறோம் என அவர்களுக்கு அறிவித்தாகவேண்டும். ஒரு நவீன சமூகம் அவர்களை காட்டுமிராண்டிகளாகவே கருதும் என்பதைச் சொல்லியாகவேண்டும். ஆகவேதான் இந்தக் கண்டனம்.
நாலைந்து நாட்களாகவே வசைமின்னஞ்சல்கள். அவற்றின் சாராம்சமான தரப்புகள் மூன்று.
அ. நீ காசுவாங்கிக்கொண்டு பேசும் நன்றியுள்ள விலங்கு. இது பெரும்பாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் குரல்
ஆ. இதில் கலந்துகொள்ள உனக்கு என்ன தகுதி? நீ மோடியை எதிர்த்தாயா? மோடியை எதிர்ப்பவர்கள் நாங்கள். ஆகவே நாங்கள் பேசிக்கொள்கிறோம். நீ வரக்கூடாது. இவர்களில் பெரும்பாலானவர்கள் வன்னியர்கள், இடைநிலைச் சாதியினர். ஆனால் வேறு கட்சியினர்.
இ.இந்துத்துவர்கள். இந்துசமூக ஒற்றுமையை குலைக்க எனக்கு இஸ்லாமியர் பணம் தருவதாக சொன்னார்கள்.
ஒரே உணர்வின் மூன்று வெளிப்பாடுகள் இவை என்றே தோன்றுகிறது. சாதிவெறியையே அரசியல்மொழியில் எப்படியும் மாற்றிக்கொள்ளலாம் என பயின்றிருக்கிறார்கள்.
நேற்றுமுதல் நேரடியான தொலைபேசி அழைப்புக்கள். யாரோ என் எண்ணைச் சுழலவிட்டிருக்கிறார்கள். இன்று காலையில் முதல் அழைப்பே ‘த்தா’ தான். கெட்டவார்த்தைகள் பேசும்போதுதான் அந்தச் சரளம் கைவருகிறது. எனென்றால் அவை தொன்மையான கருத்துக்களின் வெளிப்பாடு.
நான் ஆரம்ப பதற்றத்திற்குப்பின் மிகமிக நிதானமாக ‘அப்டியா சொல்றீங்க? எங்க அம்மா தேவடியான்னு நினைக்கிறீங்களோ? சரிங்க” என பேசக் கற்றுக்கொண்டுவிட்டேன் முப்பதாண்டுகள் இடைவெளிக்குப்பின் தர்மபுரியின் ‘வந்தினு போய்னு’ தமிழைக் கேட்க உண்மையாகவெ மகிழ்ச்சியாக இருந்தது. எந்தவகையிலும் சீண்டப்படவில்லை என்பதை நினைக்க எனக்கே ‘பரவாயில்லையே’ என என்னைப்பற்றித் தோன்றுகிறது
இந்தத் தாக்குதலைப் பற்றிப் பேசிய திருமாவளவன் அவர்களின் குரலில் இருந்த பொறுப்பும் நிதானமும் தலைவனுக்குரியது. அவர்களையும் ஜனநாயகப்படுத்துவதே நம் கனவு என அவர் சொன்னது ஒரு அரிய சொல். அந்த நிதானத்தை எனக்கு விதித்துக்கொண்டேன்.