இரவைத் தொடுதல் -சந்தோஷ்

இரு உயிர்களிடையே, மிகவும் நெருக்கமான தொடர்பு, தொடுதல் வழியாகவே சாத்தியம் என எண்ணுகிறேன். மனிதர்களிடையே விட, மனிதனுக்கும் மிருகத்திற்குமான உறவில் தொடுதல் மேலும் முக்கியமானது.

நான் வளர்த்த பறவைகளில் தொடங்கி வீட்டின் அருகில் வளரும் நாய்கள், பூனைகள்,‌ஆடுகள், மாடுகள் ஏன் மீன்களைக் கூட தொட்டு உணர முயன்றிருக்கிறேன். தொடுதலில், அந்த உயிரின் வெம்மையை உணரமுடியும். வலிக்குமோ என்ற பிரக்ஞையுடன் மிக மென்மையாகக் கையாளவேண்டுமென்ற கவனம் இருக்கும். தொடுகைக்கு உடனடியாக ஒரு எதிர்வினையும் கிடைக்கும்.
இவை அனைத்திற்கும் நேர்மாறான ஒர் அனுபவம் நேற்று கிடைத்தது.

கர்நாடகம், குடகு மாவட்டத்தில், காவிரி நதியில் அமைந்துள்ள துபாரே எனும் சிறு தீவில் உள்ள யானைகள் முகாமிற்குச் சென்றிருந்தேன். மைசூர் தசரா விழாவில் பங்கேற்கும் யானைகளில் ஒரு பகுதி தங்கி பயிற்சி பெறும் இடமாக இருந்தது. (தற்பொழுது தசராவில் பங்கேற்கும் யானைகள் நாகர்ஹோளே தேசிய பூங்காவில் வசிப்பதாக அறிகிறேன்.)

இப்பொழுது துபாரே ஒரு சுற்றுலா தளமாக உருமாறியுள்ளது. காவிரியில் அதிக நீரோட்டம் இல்லாததால், நடந்தே நதியை கடந்து தீவை அடைய வேண்டும். அங்கு, காலையும் மாலையும், யானைகளைக் குளிப்பாட்டுகிறார்கள். நதியில் (முழங்கால் அளவே இருந்தாலும், காவிரி அல்லவா?) யானைகளைப் படுக்க வைத்து, நெகிழி நார்களால் உடலை தேய்த்து குளிபாட்டுகிறார்கள். நாமும், அருகே சென்று, தொட்டு, தடவி, யானைகளைக் குளிப்பாட்டலாம்.

நம் ஊரில் யானைகளைப் பார்ப்பது பெரும்பாலும் கோவில்களில். அங்கு, யானைகளைப் புகைப்படம் எடுக்கக்கூடாது, பல இடங்களில் பத்தடி தொலைவிலேயே நிற்க வேண்டும், யானைகளுடன் உரையாடக் (அவற்றின் கவனத்தை ஈர்க்க) கூடாது, விரைவில்‌ அவற்றைப் பார்க்கவும் விடமாட்டார்கள் என எண்ணுகிறேன். பணம் கொடுத்து ஆசீர்வாதம் மட்டும் வாங்கிக்கொள்ளலாம்.
குருவாயுர் கோவில்‌ யானைகள் வாழும் ஆனகோட்டாவில் (புன்னத்துர் கோட்டாவில்) நிறைய யானைகளை ஒரே இடத்தில் பார்த்திருக்கிறேன், தொலைவிலிருந்து தான். சிறு வயதில்‌ எப்பொழுதோ யானை சவாரி போனது நினைவிலிருக்கிறது. ஆனால், அப்பொழுதும் அம்பாரம் தாண்டி, யானையில் சருமத்தை தொட ஒருவித பயம். தொட்டதில்லை.

இங்கோ, சிறு குன்றுகளாக யானைகள் படுத்திருக்க, சுற்றிலும் மனிதர்கள். யானையின் அருகே நிற்பதே கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது

யானையைத் தொடப்போகிறேன்.
பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தை.
அதன் கருவாகத் திரண்டு நிற்கும் இருளை.
இருள் பருகி எழும் இரவை.
இதோ தொடுகிறேன்‌.
இந்த இரவு,
சலனமற்று நிற்கிறது.
என்னைப் பொருட்படுத்த மறுக்கிறது.

நட்சத்திர விரிப்பில், தூசியாய்

என்னை கடந்து செல்கிறது.
உயிரின் வெம்மை தேடும்‌ விரல்களை

குளுமையால் குளிப்பாட்டுகிறது.

நள்ளிரவாய் இறுகி நிற்கிறது.

இதோ,

மீண்டும் முயல்கிறேன்,
இம்முறை முன்னின்று,
முகம் நோக்கி.
பின்னிரவாய் நெகிழத் தொடங்குகிறது இரவு…
நெகிழுந்தோரும் மேலும் அடர்கிறது.
என்னை மேலும் அந்நியமாக்குகிறது.
வெம்மை தேடும் விரல்களில்
முட்களாய்க் குத்துகிறது
நிராகரிப்பின் குளுமை.

இரவு கனிவதற்காகக் காத்திருக்கிறேன்.
இதோ இறைஞ்சுகிறேன்,
இரவின் காதில்.
நான்
நான்
நான் என அறைகூவுகிறேன்
எட்டி நின்று தொட்டது போதும்..
இதோ முழுதாய் மூழ்குகிறேன்..
முழுதளிக்கையில் உணர்கிறேன் வைகறையின் வெம்மையை!

மேலும் புகைப்படங்கள்: https://photos.app.goo.gl/Dzm3xqTUgQ2jYcpy7  

அன்புடன்,

சந்தோஷ்

(லாஓசி, blog.pizhaikal.in)

அன்புள்ள சந்தோஷ்

யானை பேருருவ விலங்கு. அறிவார்ந்தது, மிடுக்கும் பெருந்தன்மையும் கொண்டது. அதை அணுகியறிய தொட்டு விளையாட நாம் விழைவது இயல்பே. அதை அணுகுவதென்பது ஓர் அரிய அனுபவம்தான். நான் யானையை இளமையில் அணுகிப்பழகி அறிந்திருக்கிறேன்.

ஆனால் யானை பொம்மை அல்ல. வளர்ப்புவிலங்காக அதை நிறுத்துவதும் எளிதல்ல. யானைக்கு ஒரு கட்டுக்கடங்காத தன்மை உண்டு. அதை முழுக்க ஊகித்துவிட முடியாது, ஏனென்றால் அது மனிதனைப்போல அறிவார்ந்தது. சிறுகுழந்தைகள் அதனுடன் விளையாடுவதை படத்தில் பார்த்தேன். அது எந்நிலையிலும் பாதுகாப்பானது அல்ல

யானைகளை வளர்க்கலாம். ஆனால் அது விரும்பாத எதையும் செய்யவைக்கக் கூடாது. அவ்வாறு அதை பணியவைப்பதிலுள்ள வன்முறை யானையை அழிக்கிறது. அதுவே விரும்பி மானுடருடன் வாழும் சூழலை – சோலைகளை – அமைக்கலாம். அது ஒன்றே நாம் செய்யக்கூடுவது

ஜெ

முந்தைய கட்டுரைவசைகள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைமறுபக்கத்தின் குரல்கள்