காலையில் துயில்பவனின் கடிதம்

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

என்னுடைய கடிதத்தை வெளியிட்டதற்க்கு மிக்க நன்றி.

 

அயன் ராண்டின் மேல் எனக்கு ஏற்பட்டிருக்கும் ஒவ்வாமையை உங்களுக்கு எழுதுவதற்காக முயன்று கொண்டிருந்தேன். நீங்கள் எழுதிய அயன் ராண்ட் கட்டுரைகளை ஒவ்வொன்றாக படித்துக்கொண்டிருந்தேன். அதை முடிப்பதற்குள் இதை உங்களுக்கு அனுப்பி விடுகிறேன்.

 

நண்பர் சுவேக்கின் பதிலுக்கும் வழிகாட்டுதலுக்கும் மிகவும் நன்றி.

 

இதை(GENETICS) பற்றிய பேச்சு எனக்கும் அப்பாவுக்கும் முன்னரே எழுந்தது. எனக்கு தூக்கம் இவ்வாறாக தினமும் மாறுவதற்கு மரபணு தான் காரணம் என்று என் அப்பாவிற்கு புரிந்தவுடன் அந்த மரபணுவை கண்டுபிடித்து சரி செய்துவிடுவோம் வா என்று அழைத்தார்.  இது சரிசெய்து கொள்ளக்கூடியது அல்ல என்று விளக்கினேன்.

 

மேலும் குழந்தைகளுக்கு இந்த மரபணு கடத்தப்பட வாய்ப்பிருக்கிறது என்பது உண்மை. ஏற்கனவே ஆடிசத்தின் மரபணு என் குடும்பத்தில் பரவியிருப்பதை கவனித்திருக்கிறேன். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவனாக இருந்த போது   ” நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன். வேண்டும் என்றால் தத்தெடுத்து கொள்ளலாம்” என்று உணர்ச்சி கொந்தளிக்க பேசியிருக்கிறேன்.

 

“STILL ALICE” நாவல் இந்த சிக்கலை பற்றி பேசுகிறது(திரைப்படமாகவும் வந்திருக்கிறது). கதையின் படி  Alice Howland என்ற நடுவயது பெண்மணி Harvard ல் Linguistics Professor ஆக வேலை பார்க்கிறார்.  மேலும் உலகம் முழுவதும் Linguistics Expert ஆக அறியப்படுகிறார். அவருக்கு “Early Onset Alzheimer’s disease” இருப்பது கண்டறியப்படுகிறது. இதற்க்கு காரணமாக இருக்கும் மரபணுவும் கண்டறியப்படுகிறது. அவருக்கு ஏற்கனவே மூன்று வளர்ந்த பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்த மரபணு சோதனையை மூன்று பிள்ளைகளுக்கும் செய்து விடுவது நன்று என்று பரிந்துரைக்கப்படுகிறது.

 

நாவலின் இந்த பகுதியை மிகவும் ஆர்வத்துடன் கவனித்தேன்.

 

மூன்று பிள்ளைகளில் முதலில் பிறந்த இருவரும் உலகியலில் திளைப்பவர்கள். கடைசி பெண்ணாக பிறந்தவர் நாடகக்கலையில் ஆர்வம் கொண்டு அதில் பெரும் ஈடுபாட்டுடன் செயல்பட்டுக்கொண்டிருப்பவர். Alice மூன்று பிள்ளைகளையும் அழைத்து ” எனக்கு Early Onset Alzheimer’s இருக்கிறது. உங்களுக்கும் இது இருக்க வாய்ப்பிருக்கிறது. என்னை மன்னித்து விடுங்கள்” என்று உருகி அழுகிறார்.  உலகியலில் திளைத்திருக்கும் இரு பிள்ளைகளும் உடனே அந்த மரபணு சோதனையை செய்து கொள்கிறார்கள். ஒருவருக்கு மட்டும் Test Positive ஆக வருகிறது.

 

நாடகக்கலையில் ஈடுபட்டிருப்பவர் “நான் இந்த மரபணு சோதனையை செய்து கொள்ளவிரும்பவில்லை. வருங்காலம் தானாகவே தன்னை அவிழ்த்து கொள்ளட்டும்” என்கிறார். மேலும் இவர் மட்டுமே நினைவுகளை இழந்து வரும் அம்மாவிற்கு துணையாக வீட்டிற்கே வந்து தங்கிவிடுகிறார்.

 

மேலும் நான் கவனித்த ஒன்று Non 24 மற்றும் DSPD கொண்ட பலர் இயற்கையின் மேல் பெரும்காதலுடனும் இருக்கிறார்கள். இயற்கையை தினமும் கட்டித்தழுவுகிறார்கள். சிலர் கலைகளிலும் ஆர்வம் செலுத்துகிறார்கள். உண்மையில் இந்த மரபணுவை அணைபோட்டு தடுத்து நிறுத்துவது  கலைகளையும் இயற்கையின் மேல் கொட்டப்படும் பேரன்பையும் தடுத்து நிறுத்துவதாகவே படுகிறது. இது ஆடிசதிற்க்கும் பொருந்தும். Albert Einstein, Alfred Kinsey, James joyce, Temple grandin, Emily Dickinson, Charles Darwin ஆகியவர்களை “AUTISM SPECTRUM” இன் கீழ் அடுக்குகிறது இன்றைய மருத்துவ உலகம். வளர்ந்த நாடுகளின் ஆடிசம் உள்ள குடும்பங்களில் திருமண வயதினருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமா என்ற குழப்பம் ஏற்படுகிறது. பலர் பெற்றுகொள்வோம் என்ற முடிவுக்கு நகர்ந்துகொண்டிருக்கிரார்கள். மருத்துவ உலகமும் சமூகமும் ஏற்படுத்தும் பயத்தின் காரணமாக சிலர் வேண்டாம் என்றும் முடிவெடுக்கின்றனர். எந்த அளவுக்கு AUTISM SPECTRUM இல் ஒன்றும் தெரியாத குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கிறதோ அதே அளவுக்கு GENIUS களும் பிறக்க வாய்ப்பிருக்கிறது என்பதே உண்மை.

 

ஆனால் இன்றைய மருத்துவ உலகம் சென்று கொண்டிருக்கும் போக்கை பார்த்தால் வருங்காலத்தில் பல நல்ல மனிதர்கள் உருவாவது குறைந்துவிடும் என்றே தோன்றுகிறது. “POSITIVE EUGENICS” கொள்கை சில நோய்களுக்கு தீர்வை அளித்தாலும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்றே தோன்றுகிறது.

 

என் தம்பியையே எடுத்துக்கொள்வோம். அவனுக்கு ஆடிசம் இருக்கிறது தான். ஆனால் அவனை விட மகிழ்ச்சியான மனிதனை நான் இதுவரை பார்த்ததில்லை. அவனை சிரிக்க வைக்க எனக்கு பத்து வினாடிகள் போதும். மேலும் அவன் யாரைப் பார்த்தும் பொறாமைப் படுவதில்லை. அவனுக்கு தத்துவ சிக்கல்கள் இல்லை. நிறைவான வாழ்கையையே வாழ்கிறான்.

 

கடைசியாக ஒன்று,

 

நண்பர் சுவேக் “He must feel lucky that he is already in the track of reading and able to narrate.” என்று குறிப்பிடுகிறார். இதுவே என்னை பயமுறுத்துகிறது. நாம் இதை பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியாவில் பலர் தூக்கமின்மையால் தற்கொலையின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் தினமும் இரண்டு மூன்று பேர் “Non 24, DSPD” என்று diagnosis செய்யப்படுகிறார்கள். தற்கொலையில் இருந்து மீட்கப்படுகிறார்கள். இவ்வாறு diagnosis செய்யப்பட அணைத்து துயில்நிபுனர்களும், உளவியலாளர்களும், Neurologistகளும் Non 24,DSPD பற்றி அறிந்திருப்பது அவசியம். ஆனால் இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வேறு. பலர் அசால்ட்டாக “Insomnia, Sleep apnea, Depression, Generalised Anxiety Disorder” என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்டு வெவ்வேறு மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டு கடைசி வரை இதை பற்றி ஒன்றுமே தெரியாமல் வாழ்ந்து ஓய்கிறார்கள்.

 

உலகத்தில் DSPD, Non 24 என்று diagnosis செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாலாயிரத்தை தாண்டிவிட்டது. [ நாலாயிரத்திற்கு மேல் என்ற எண்ணிக்கை சீனாவை தவிர்த்து] தினமும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அந்த நாலாயிரத்தில் நான் மட்டுமே இந்தியாவில் வாழும் இந்தியன். அதிலும் விந்தை என்னவென்றால் என்னை யாரும் diagnose செய்யவில்லை. நானே என்னை diagnose செய்து கொண்டேன். உலக மக்கள்தொகையில் இருபது சதவிதத்தை கொண்ட இந்தியாவில் இன்னும் பல ஆயிரம் பேர் Non 24,DSPD கொண்டிருப்பார்கள் என்பதே என் கணிப்பு. அவர் சொன்னதை போல நான் லக்கி. லக்கி அல்லாதவர்களின் வாழ்வு மருத்துவர்களின் கையில் தான் இருக்கிறது.

 

அன்புடன்,

காலையில் துயில்பவன்.

முந்தைய கட்டுரைவாழ்க்கை எனும் அமுதத்துளி
அடுத்த கட்டுரைவிடுதலைச் சிறுத்தைகள், திருமாவளவன் – விளக்கம்