காலையில் துயில்பவன் -கடிதங்கள்

காலையில் துயில்பவன்

 

காலையில் துயில்பவன் – கடிதம்

அன்புள்ள ஜெ

 

மறுபடியும் பல நன்றிகள் இந்த கடிதத்தை வெளியிட்டதற்கு,

 

இது ஒரு படிப்பினை பலருக்கு.

 

இந்த கடிதத்தை இரண்டாவது முறை படித்த போது கடைசியில் அவர் எழுதியதை அவரின் முதல் தூக்கம் வரா அவஸ்தவையிலிருந்து பொருத்திப் பார்த்தேன். நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது அந்த வலியை.

 

படிக்கும் போது எனக்கு தோன்றியதையே நீங்களும் அவருக்கு பரிந்துரைத்திருக்கீர்கள்.

 

காலையில் துயில்பவர் கெட்டிக்காரராக இருப்பதினால் தன்னை ஆராய்ந்து கொள்ளும் திறமை இருந்திருக்கிறது. இது அவரின் பெரிய பலம். மருத்துவம் பயின்றதானால் யாரை அனுக முடியும் என்று அறிந்து புரிந்து சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறார். சரியாகி விடுவார். வாழ்த்துக்கள் அவருக்கு.

 

பெரிய கொடையாளி அவர். நீங்களும் தான். அவர் எழுத அதை நீங்கள் வெளியிட.

 

தற்காலத்தில் நிறய பேர் தூங்குவதில்லை. வியாதியினால் மட்டும் அல்ல. கணிணி , கை பேசி போன்றவற்றிற்கு அடிமையாகியும் தான்.

 

என் கணவரும் அதில் ஒருவர். அவர் தூங்காமல் ஷேர் மார்க்கெட்டிங் செய்கிறேன் என்று பணத்தையும் இழந்து, தூக்கத்தையும் இழந்து எல்லோர் நிம்மதியும் போய் அதில் இருந்து மீண்டு போராடி வந்து கொண்டிருக்கிறோம்.

 

ரத்த அழுத்தம் அதிகமாகி பட்ட அவஸ்தகள் வேறு கதை.

 

என் மகள் ஒரு பொது மருத்துவர் ஆஸ்திரேலியாவில். அவளுக்கு இந்த அனுபவத்தை ஆங்கிலத்தில் சொல்லப் போகிறேன். நிச்சயம் அது அவளுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

 

காது சத்தம், ஒரிண, இப்போது தூக்கமின்மை போன்ற அனுபவங்களை பகிறும் போது அந்த அனுபவங்கள் யாருக்கோ எந்த மூலையிலோ பயன் படக் கூடும்.

 

 

 

நன்றியுடன்

மாலா

 

 

திரு ஜெ அவர்களுக்கு,

 

உங்கள் வலைத்தளத்தில் காலையில் துயில்பவரின் கடிதத்தை படித்தேன். நம்பிக்கையும் மீளாத்துயரமும் கலந்த அவரின் எழுத்தும் முடிவில் அதில் வெளிப்பட்ட இப்படியான வாழ்க்கையை வாழவேண்டுமா என்ற கேள்வியுமே இந்த கடிதத்தை எழுத தூண்டியது. இவரின் முடிவு எப்படி இருக்கும் என்ற கேள்வி என்னுள் பயத்தையே உருவாக்குகிறது. இந்த பதில் கடிதம் அதற்கான தகுதியையும் தேவையையும் கொண்டிருக்குமேயானால் தயவு செய்து பிரசுரியுங்கள்.

 

கதிரவன், ஆமாம் உங்களுக்கு இந்த பெயர் வைத்து தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். நீங்கள் ஏதோ பெயர் இல்லாத மனிதர் என்பதான அபத்தத்தை உடைக்கவே இந்த முயற்சி. உங்கள்  கடிதத்தை படித்த பொழுது என் மனதில் ஒரு மன நல மருத்துவராக தோன்றிய எண்ண ஓட்டங்களை முதலில் விளக்குகிறேன். ஒரு மருத்துவராக நீங்கள் இதனை அடையாளம் கண்டுகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

 

நீங்கள் சிறுவயதில் இருந்து அனுபவித்துக்கொண்டிருக்கும் தூக்கமின்மையை விவரிக்கும்பொழுது என் மனதில் தோன்றிய முதல் எண்ணம் உங்களுக்கு மன  அழுத்தம் இருக்குமோ என்பதுதான். அதுவும் உடன் பிறந்தவரின் Autism  மற்றும் உங்களின் குடும்ப மற்றும் சமுதாய சூழல் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் மன அழுத்தத்திற்கான சாத்தியத்தை அதிகப்படுத்தியதோ என்ற சந்தேகம் தான் முதலில் எழுந்தது. படிப்பில் நாட்டமின்மை, சோர்வு போன்றவையும் இதன் அறிகுறிகளாகவே எனக்கு தோன்றியது. நீங்கள் மீண்டும் தூக்கத்தை பற்றி எழுதியதை படிக்கும்பொழுது இதுவும் மன அழுத்தத்தின் ஒரு அங்கம் தானோ என்று தோன்றியது.

 

படிப்படியாக மனப்பதட்ட நிலை, Body Dysmorphia, Hypochondriasis  என்று பலவித சாத்தியக்கூறுகளை விதைத்துக்கொண்டே போனது உங்களின் கடிதம். நீங்கள் மீண்டும் தூக்கத்தை பற்றி விரிவாக எழுதியதை படிக்கும் பொழுது தான் (இந்த நேரத்தில் உங்கள் கடிதத்தின் பாதியை தாண்டி படித்துக்கொண்டிருந்தேன் ) இது ஒரு தூக்கம் சம்பந்தப்பட்ட ஏதோ ஒன்று என்றும் (Sleep Disorder ), நீங்கள் முன்பே எழுதி இருந்த விஷயங்கள் இந்த Sleep Disorder நோயின் பின்விளைவுகளே  என்பதும் புரிய ஆரம்பித்தது.  ஆனாலும் இன்னமும் உங்களுக்கு மன அழுத்தம் இருப்பதற்கான சாத்தியம் இருப்பதாகவே எனக்கு படுகிறது. ஆனால் இது விளைவே ( Effect ). காரணம் (Cause ) அல்ல. உங்கள் தூக்க நேரத்தை நீங்கள் விவரித்திருந்ததை படிக்கும் பொழுதுதான்  இது ‘Delayed Sleep Phase Disorder ‘ என்று புரிந்தது. ஆனால் நீங்கள் மேலும் எழுதியதை படித்த பொழுதுதான் Non 24 என்ற ஒரு விஷயமே எனக்கு தெரிய வந்தது. அதை பற்றி மேலும் படித்து தெரிந்து கொண்டேன். அதற்காக உங்களுக்கு நன்றி.

 

என்னுடைய  சிறப்பு பயிற்சியும் தற்போதைய வேலையும் ” Eating  Disorders ” என்ற ஓரளவுக்கு அரிதான மருத்துவ துறையில் தான். இந்த துறையில் மற்ற மருத்துவர்களும் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் சரியான புரிதல் இல்லாமல் இவர்களின் சிகிச்சையை தாமதப்படுத்துவது வாடிக்கையான விஷயம். இந்த அனுபவத்தில் நீங்கள் மன நல மருத்துவர்கள் மற்றும் நரம்பியல் மருத்துவர்கள் மேல் கொண்டுள்ள அவநம்பிக்கையும் வெறுப்பையும் என்னால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

 

இப்படி கோபத்தை வெளிப்படுத்துபவர்களிடம் நான் கேட்பதெல்லாம் ஒன்று தான். “நீங்கள் உங்கள் மருத்துவரிடமோ, குடும்பத்தாரிடமோ என்ன எதிர்பார்த்தீர்கள் அல்லது என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்பதே. உங்களின் கஷ்டங்களுக்கான அங்கீகாரத்தையா அல்லது புரிதலையா அல்லது ஆதரவையா? இது அனைத்துமாகவே கூட இருக்கும். அப்படி இருந்தால் அவர்களின் மீது நீங்கள் கொண்ட வெறுப்பு இவை அனைத்திற்கான சாத்தியக்கூறுகளையும் முற்றிலுமாக முடக்கி விடும் என்பதை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா? கோபமாக வெறுப்பும் சலிப்பும் மிகுந்து தன் முன்னாள் அமர்ந்திருக்கும் நோயாளியிடம் எந்த ஒரு மருத்துவரும் புரிந்துக்கொள்ள முயற்சியையோ அங்கீகாரம் அளிப்பதையோ தவிர்க்கவே பார்ப்பார்கள். இது சரி என்று சொல்லவில்லை. ‘ என் திறமை உன் தேவையை பூர்த்தி செய்யாத பொழுது என் அன்பும் ஆதரவும் அரவணைப்பும் உனக்கு தேவையிலை ‘ என்பது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். இதுவே குடுபத்தாருக்கும் நண்பர்களுக்கும் பொருந்தும்.

 

உங்கள் எழுத்தை படித்ததில் இருந்து  “எல்லாம் முடிந்து விட்டது. என் இழப்பை எதுவும் ஈடு கட்டாது ” என்று நீங்கள் நினைக்கிறீர்களோ என்பது தான் என் அச்சம் கதிரவன். தன்னுடைய நோயை பற்றி தெரிந்தவுடன் அதிலும் சுலபமாக குணமாக்க முடியாத நோயாக இருந்தால் நாம் அனைவரும் ஐந்து கட்டங்களை தாண்டி போவோம். 1. Shock  and denial  2. Anger (Why me ?) 3. Bargaining (என்னை காப்பாற்றுங்கள் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன் என்ற நிலை ) 4. Depression 5. Acceptance. உங்களுக்கு இதை பற்றி தெரிந்திருக்கலாம்.

 

அனைவரும் மேற்கூறிய அனைத்து கட்டங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக கடந்து செல்ல மாட்டார்கள். ஒரு சிலர் ஒரு சில கட்டங்களை முற்றிலுமாக தாண்டி செல்லலாம். அல்லது முன் பின்னாக கட்டங்களை தாண்டலாம். மிக முக்கியமாக ஒரு கட்டத்தில் தேங்கி நின்று விடலாம். என் கவலை எல்லாம் நீங்கள் இரண்டாவது மற்றும் நான்காவது கட்டத்தின் இடையே சிக்கிக்கொண்டிருக்கிறீர்களோ என்பது தான்.இங்கே சொல்லப்படும் Depression stage க்கும் மன அழுத்தத்திற்கும் ( Depressive Disorder ) நிறைய வித்தியாசங்கள் உள்ளது. அதை பற்றி இங்கே விரிவாக பார்க்க வேண்டாம்.

 

உங்களின் தலையாய முயற்சி அனைத்தும் இந்த கட்டங்களை தாண்டி ஐந்தாவது கட்டத்தை சீக்கிரம் அடைவதாகத்தான் இருக்க வேண்டும். அதாவது “எனக்கு இந்த அறிய வகை வியாதி இருக்கிறது. இதனை புரிந்துகொள்பவர்களோ ஏற்றுக்கொள்பவர்களோ மிகவும் அரிது தான், அவர்கள் மருத்துவர்களாகவே இருந்தாலும் கூட. ஆனால் என் வாழ்க்கையை இந்த வேண்டாத வியாதியின் காரணமாக நான் இழக்க விரும்பவில்லை. இந்த வியாதி என் ஒரு அங்கமே மாறாக இதுவே நானில்லை !” என்ற ஏற்றுக்கொள்ளுதல் உங்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

 

இந்த ஏற்றலை நீங்கள் அடைவீர்களானால் அதற்கு அடுத்த தளமான “Disability  Training ” என்ற இடத்திற்கு செல்லமுடியும். இந்த Disability  ட்ரைனிங்கிற்கு  அர்த்தம் என்னவென்றால் :

 

– தற்போது உள்ள அறிவியலின் படி என் வியாதியை முழுவதுமாக குணப்படுத்த முடியாது. ஆனால் இந்த நிலையே எதிர்காலத்திலும் நிலைக்கும் என்று நான் நினைக்க தேவை இல்லை.

-இந்த வியாதியினால் என் வாழ்க்கையில் சில தடங்கல்களும் சிக்கல்களும் ஏற்படும். இது தான் இந்த நோயின் என் மீதான தாக்கம். இதை நான் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த நோய் உள்ள இன்னொருவரின் நோய் வெளிப்பாடு வேறு விதமாக இருக்கலாம்.

– மேற்கூறிய புரிதலை வைத்துக்கொண்டு என் வாழ்வில் சில மாற்றங்களை நான் செய்து கொள்ள வேண்டும். இந்த மாறுதல்கள் பெரிய அளவில் என் வாழ்வை பாதிக்கலாம்.

– ஆனால் இந்த பாதிப்புகள் மட்டுமே நான் இல்லை. நான் இந்த நோயை விடவும் அதன் தாக்கத்தை விடவும் அதற்கான மாற்றங்களை விடவும் நான் பெரியவன்.

 

இந்த Disability  Training எடுத்துக்கொண்டீர்கள் என்றால் தான் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். அதைத்தான் ஜெ உங்களுக்கு எழுதி இருந்தார்.

 

நீங்கள் இப்பொழுது செய்ய வேண்டியதெல்லாம் உங்களின் Disability யை ஏற்றுக்கொள்வதும் அதற்கான “Training” ஐ மேற்கொள்வதுமே ஆகும். இந்த ட்ரைனிங்கை எடுத்துக்கொண்டீர்கள் என்றால் அடுத்த கட்டமான ஜெ எழுதி இருந்ததை போன்ற உங்களுக்கான ஒரு தனித்துவ மருத்துவ தொழில் முறையையும், பார்வை (Consulting ) நேரத்தையும், இரவு கதையின் சமூகத்தையும் உருவாக்கி கொள்ள முடியும். அந்த சமூகத்தில் உங்களுக்கு ஒரு வாழ்க்கை துணையும் நெருங்கிய நட்பு வட்டாரமும் கிடைக்கக்கூடும். மேலும் நீங்களே மன நல மருத்துவராகவோ அல்லது நரம்பியல் மருத்துவராகவோ தேர்ந்து Sleep Disorders இல் சிறப்பு பயிற்சி பெற்று அதனை தொழிலாகவும் ஏற்றுக்கொண்டு பணி  புரியலாம். ( இது ஒரு சாத்தியக்கூறு என்பதற்காகவே இதை இங்கே எழுதுகிறேன். உங்கள் வியாதி சம்பந்தப்பட்ட மருத்துவ துறையில் பணி  புரிவது அதற்கே உள்ள சாதக பாதகங்களை உங்களிடம் கொண்டு வரும். இதை எல்லாம் அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம்).

 

இப்பொழுது நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் மேலே சொன்னது தான். உங்கள் பெரியப்பாவிடம் மேலும் பேசுங்கள். அவர் எப்படி தன்  வாழ்கையில் மாற்றங்களை மேற்கொண்டார், தடங்கல்களை எதிர்கொண்டார் என்று கேளுங்கள். அது நேரடி உதவியாக இல்லாமல் போனாலும் தான் தனியல்ல என்ற நம்பிக்கையையாவது உங்களுக்கு அளிக்கும். சிறப்பு குழுக்கள் நல்லதே. ஆனால் அதன் தன்மைகள் வேறு படும். தனி நபர் வழி நடத்தும் குழுவாக இருந்தால் அவரின் மன நிலைக்கு ஏற்ப அந்த குழுவின் மன நிலையும் மாறுபடும். இது போன்ற குழுக்களில் ஈடுபடும் பொழுது கொஞ்சம் கவனம் தேவை.

 

நான் எழுதி இருப்பது உங்களுக்கு ஓரளவுக்கு ஏற்புடையதாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் வாழ்க்கைக்கும் தளராத நம்பிக்கைக்கும் என் வாழ்த்துகளும் ஆதரவும்!

 

முரளி சேகர்

 

Dear jeyamohan Sir,

 

காலையில் துயில்பவன் படித்தேன், அவருக்கு இந்த புத்தகம் உதவி செய்யலாம்.

 

Why Isn’t My Brain Working?

Get it here: http://a.co/37LcoAt

 

Thanks

 

கிரீஷ்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-27
அடுத்த கட்டுரைஅறிபுனை- இரு கடிதங்கள்