கோட்டி -கடிதம்

அறம் -ராம்குமார்

அறம் – உணர்வுகள்

அறம் – வாசிப்பின் படிகளில்…

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

 

அறம் சிறுகதைகளில் “கோட்டி” சிறுகதை வாசித்தேன்.  பணக்கார வீட்டில் பெண் பார்க்க (அவர்கள் மாப்பிளை பார்க்க) டிவிஎஸ் 50-ல் செல்லும் ஜுனியர் வக்கீல் கணேசன் வழியில் பூமேடை என்னும் தான் அறிந்த காந்திய மனிதரை காண நேர்கிறது.  உடல் நலம் குன்றியவராக வீங்கிய கன்னங்களுடன் பிதுங்கிச் சிறுத்த கண்களுடன் காலில் வீக்கத்துடன் மருத்துவமனை சென்று கொண்டிருக்கிறார்.  மருத்துவமனையில் விடுவதாக அவரிடம் கூறி அவரை தன்னுடன் அழைத்து செல்கிறான்.  அவரது கிண்டல்-கேலியும் சீரியஸானதுமான கலவைப் பேச்சின் வழியாகவும் அவரைக் குறித்த கணேசனின் நினைவு கூறலின் வழியாகவும் அவரது வாழ்கையும் இயல்பும் காட்டப்படுகிறது.  அவரை சூழ்ந்திருந்த மனிதர்களில் பெரும்பாலோரால் அவரது வாழ்கை நகைப்புக்கு இடமானதாக நோக்கப்பட்டாலும், ஒருபோதும் விலகாமல் தன்னறத்துடன் தன்னை பிடிவாதமாக பிணைத்துக் கொண்ட அவரது தவமுனி போன்ற வாழ்கை அறம் சிறுகதைகளின் அடிப்படையான “அறத்தின் ஆற்றலைக் காட்டுவதை” உறுதியாக நிறுவிச் செல்கிறது.  நேர்மையற்ற ஒரு நீதிபதி மாற்றலாகிறார், ஒரு எஸ்ஸை ரைஸ்மில்லில் மாவரைக்கச் செல்கிறார், அரசு மருத்துவர் பதறுகிறார், எல்லாவற்றிற்கும் அப்பால் வசதியான வீட்டின் அழகான பெண்னை மணந்து கொள்ளும் வாய்ப்பு பொருட்டல்ல அதைவிட அவரைக் காப்பது முக்கியமானது என்று கருதச்செய்து சாமானிய கணேசனை பெரிய இடத்திற்கு உயர்த்துகிறது அவரது அறம், அவ்வளவு ஆற்றல் வாய்ந்தது.  அவரது மருத்துவத்திற்கான நோக்கில் பெண் வீட்டில் வாங்கி வந்த பணத்தை அவரது சவ அடக்கத்திற்கு செலவு செய்கிறான் அவன்.

 

முன்பொரு முறை சிற்றிதழ் ஒன்றில் ஒருவர் எழுதி இருந்தார் ”வாய்மையே வெல்லும்” என்பது பகுத்தறிவுக்கு பொருத்தமானது அல்ல, ” வாய்மையை வெல்லச் செய்வோம்” என்று இருப்பதுதான் பொருத்தமானது என்று. வேண்டியதில்லை ”வாய்மையே வெல்லும்” ஆம் அவ்வாறே என்பேன்.

 

அறம் தனக்கான வழிகளைக் கொண்டுள்ளது, காரணம் அது எப்போதும் அதன் பின்னாலுள்ள பேரறத்தால் தாங்கப்படுகிறது என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது இச்சிறுகதை.

 

ஊழுடனான விளையாட்டில் கொடை என்னும் தன்னறம் கொண்ட கர்ணன் பேரறறத்தால் எவ்வாறு வென்றவனாக நிறுத்தப்படுகிறான் என்று காட்டும் இருட்கனியை வாசித்து வரும் வேளையில் நடுவே பூமேடையை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி என்று வியக்க மாட்டேன்.

 

 

அன்புடன்,

விக்ரம்,

கோவை.

அறம் -கடிதங்கள்

அறம் வாசிப்பு -பிரவீண்குமார்

அறம் – மனிதரும் எதிரீடும்

அறம் – கதையும் புராணமும்

அறம் -கடிதங்கள்

தாயார்பாதம், அறம்- அஸ்வத்

அறம் வரிசையில்…

அறம் தீண்டும் கரங்கள்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-44
அடுத்த கட்டுரைஊட்டி காவிய முகாம் – சந்திப்பு ஒரு கடிதம்