சாரு நிவேதிதாவுக்கும் ஜெயச்சந்திரனுக்கும் விருது
அன்புள்ள ஜெ.,
என்ன ஆச்சரியம்! உங்கள் ‘மலையாளப் பாடல்கள்’ பதிவின் தொடர்ச்சியாக ஒரு ஜெயச்சந்திரனின் பாடலைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கையில் அவருக்கு கண்ணதாசன் விருது என்கிற செய்தி.கொடுக்க வேண்டியதுதான். கண நேரமேனும் கவலைகளை மறக்க எத்தனையோ பாடல்கள். சுகமான பொழுதுகள். எண்பதுகளின் பிற்பகுதியில் தான் ‘டேப் ரெக்கார்டர்’ பரவலாக உபயோகத்திற்கு வந்தது. தெற்கே இளையராஜாவும் (‘எக்கோ’) வடக்கே குல்ஷன் குமாரும் (பின்னாளில் தொழில்முறை எதிரிகளால் கொலையுண்டார்) அந்த ஊடகத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். அதற்கு முன் வானொலி ஒலிபரப்பும் பாடல்கள்தான். நான் கேட்ட முதல் மலையாளப்பாடல் ஒரு தமிழ் படப் பாடலே. ஜெமினி கணேசன் நடித்த ‘நான் அவனில்லை’ (1974) படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய ‘மந்தார மலரே..மந்தார மலரே..’ என்ற பாடல். சிலோன் ரேடியோவில் அடிக்கடி போடுவார்கள். இளையராஜாவின் இசையில் பாட ஆரம்பித்த பிறகு, அவர் புகழ் உச்சிக்குச் சென்றார். குறிப்பாக ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்திற்குப் பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ பாடகர் ஆனார். பலருக்கு ஜேசுதாசுக்கும், ஜெயச்சந்திரனுக்கும் வித்தியாசம் தெரியாது. நானும் என் அப்பாவும் சரியாகக் கண்டுபிடித்துவிடுவோம். ஜெயச்சந்திரனின் குரலில் சிறு கம்மல் இருக்கும். அதுவே அந்தக் குரலுக்கான தனித்தன்மையையும், அழகியலையும் கொடுக்கிறது. என்றென்றும் மனதில் நிற்கும் சில பாடல்கள் கீழே.
‘பூ வண்ணம் போல நெஞ்சம்… ‘ – அழியாத கோலங்கள்
‘ஒரு வானவில் போலே…..’ – காற்றினிலே வரும் கீதம்
‘பூந்தென்றல் காற்றே வா ..” – மஞ்சள் நிலா
‘மஞ்சள் நிலவுக்கு இங்கு ஒரேசுகம்..’ – முதல் இரவு
‘மாஞ்சோலைக் கிளிதானோ…மான்தானோ..’.- கிழக்கே போகும் ரயில்
‘தாலாட்டுதே வானம்…’ – கடல் மீன்கள்
அவருடைய சமீபத்திய மலையாளப் பாடல்களைத் தேடிக்கொண்டிருந்த போது இந்த ‘மேக்கிங்’ வீடியோ கிடைத்தது ‘யூ டியூப்’ல். பாடல் காட்சிகளாகப் பார்ப்பதை விட இந்த மாதிரி பார்ப்பது நன்றாகவே இருக்கிறது.நானே ஒரு பத்து தடவையாவது பார்த்திருப்பேன். ‘என்னு நிண்டே மொய்தீன்’ படத்தில் ‘ஷாரதாம்பரம்’ என்னும் பாடல். தியோடர் பாஸ்கரன் மீசையோடு, ஷில்பா ராஜ் என்கிற பேத்தி வயதிலே இருக்கிற பெண்ணோடு ‘டூயட்’ பாடியிருப்பார். வயசான காலத்தில் என்ன பாட முடியும் என்று நினைத்துக் கொண்டு கேட்கவாரம்பித்தேன். ‘என் மணியரைக் குள்ளிலுள்ளொளி..’ என்று சரணத்தில் ஆரம்பிக்கும்போது எனக்கு உடல் புல்லரித்தது. இன்னும் ‘பாவ காயகன்’ தான். சந்தேகமில்லை. அந்தப் பெண் சரணத்தில் ‘பிராண நாயக்கா..’ என்பதற்கு அடுத்தவரி பாடும்போது ஒரு சிரிப்பு சிரித்திருப்பார். மலையாள சினிமா ஒரு நல்ல நடிகனை இழந்து விட்டது.
‘ஷாரதாம்பரம்’
இன்னொரு சமீபத்திய பாடல்
https://youtu.be/WOBbZCpB3bU
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
***
அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்
நான் எந்நு நின்றே மொய்தீன் படத்துடன் தொடர்புகொண்டிருந்தேன். அதை தமிழில் எடுக்க ஓர் எண்ணம் இருந்தது அப்போது. ஒரு வடிவம் எழுதினோம். பின்னர் கர்ணன் என்னும் இன்னும் பெரிய படத்துக்கான திட்டமாக அது மாறியது.
சாரதாம்பரம் சாரு சந்த்ரிகா என்னும் பாடல் சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளை எழுதிய கவிதையின் வரிகளால் ஆனது. அதற்கு படத்தில் இடமிருக்கவில்லை. ஆனால் தயாரிப்பாளர் தன் மகள் சில்பா ராஜ் அப்படத்தில் பாடவேண்டும் என விரும்பினார். அந்தப்பெண் இசைபயில்பவர். ஆனால் சினிமாக்கதாநாயகிகளுக்கான குரல் கொண்டவர் அல்ல. ஆகவே அவருக்காக அந்தப் பாடல் அமைக்கப்பட்டது. ஆனால் அந்தக்குரலில் இருந்த புதுமையாலும், அந்த மெட்டின் பழைமைச்சாயலாலும், அந்தப்பாடல் பள்ளிக்கூடங்களில் பயிற்றுவிக்கப்படுவதென்பதனாலும் அது பெரும்புகழ்பெற்றது. படத்தின் மையக்கவற்சிகளில் ஒன்றாக ஆகியது. படத்தில் மொய்தீன் கிராமத்தில் போடும் நாடகத்தில் வரும் பாடல் அது
ஜெ
***
சாரதாம்பரம் சாரு சந்த்ரிகா தாரையில் முழுகீடவே
பிராணநாயகா தாவகாகம பிரார்த்தினியாய் இருப்பூ ஞான்
என் மணியறைக்குள்ளில் உள்ள ஒரு ஈ நிர்மல ராக சௌரஃபம்
இங்ஙு நிந்நுபோம் மந்த்ர வாயுவும் அங்ஙு நிந்நு அருளீல்லெந்நோ?
இந்நு ராத்ரியிலெங்கிலும் பவான் வந்நீடுமெந்நொரு ஆசயால்
உள்புளகமார்ந்நு அத்யுதாதாரமீ புஷ்பதல்பம் ஒருக்கீ ஞான்
[தமிழில்]
கரியவானம் அழகிய நிலவின் ஒளிமழையில் மூழ்க
உயிரின் தலைவனே நீ வருவாய் என்னும் வேண்டுதலுடன் காத்திருக்கிறேன்
என் மணியறைக்குள் இப்போதுள்ள இந்த தூய காதலின் நறுமணமும்
இங்கே நின்று செல்லும் நுண்ணிய காற்றும் அங்கிருந்து எனக்கு அருளியதல்லவா?
இன்றிரவிலேனும் தாங்கள் வரக்கூடுமென்ற ஆசையால்
உள்ளம் மெய்ப்புகொள்ள இந்த அழகிய மலர்ப்படுக்கையை அணிசெய்து வைத்தேன்