இலஞ்சி ஆலய யானை இறப்பு

வானோக்கி ஒரு கால் -1
இலஞ்சி கோயில் வள்ளி யானை உடல் நல்அடக்கம்
இலஞ்சி கோயில் யானை உயிரிழந்த விவகாரம் – விசாரணை நடத்த பக்தர்கள் கோரிக்கை!

ஜெ

திங்கள் கிழமை உரையாடலில் இலஞ்சி கோவில் யானையின் மிதமிஞ்சின எடையைப் பற்றி சொன்னீர்கள். நேற்று அந்த யானை இறந்தே விட்டது

செல்வேந்திரன்

அன்புள்ள செல்வேந்திரன்,

வருத்தம் தரும் செய்தி. ஆனால் நான் அப்போதே அந்த யானை நெடுநாட்கள் வாழாதென்று உணர்ந்திருந்தேன். அதன் வயிறு தாழ்ந்து தொங்கியது. யானையின் வயிறு அவ்வாறு தொங்கக்கூடாது. அதன் இதயம் பழுதடையும். கால்களில் வீக்கம் வரும். தொடர்ச்சியான செரிமானமின்மை உருவாகும். இது யானைகளை அறிந்த எவரும் அறிந்திருக்கும் பொதுச்செய்திதான்

நமது ஆலயங்களில் யானைகள் மிகுந்த வதைக்குள்ளாகி வாழ்கின்றன. அதை திரும்பத்திரும்பச் சொல்லிவருகிறேன். அதன்பொருட்டே மதவாதிகளின் வசைகளையும் பெறுகிறேன். யானை கானுயிர். அது காட்டிலேயே இயல்பாக மகிழ்ச்சியாக இருக்கும். கடந்தகாலங்களில் யானைகள் எடைதூக்கவும் போருக்கும் தேவையாகின. ஆகவே அவை பழக்கப்படுத்தப்பட்டன. இன்று அத்தேவை இல்லை. இன்று யானைகள் சடங்குகளுக்காகவே வளர்க்கப்படுகின்றன. அச்சடங்குகள் எவையும் ஆகமநெறி வழி வந்தவை அல்ல. வெறும் அணிச்சடங்குகள் மட்டுமே. அவற்றை காலத்திற்கேற்ப மாற்றுவதில் எப்பிழையும் இல்லை

சென்ற காலங்களில் யானைகள் மானுடரால் வளர்க்கப்பட்டபோது அதுகுறித்த விரிவான அறிவுத்துறை ஒன்று உருவாகி வந்தது. இன்றுகூட குருவாயூர் போன்ற இடங்களில் யானைகள் மரபான முறையில் பேணப்படுகின்றன – அவை கானகயானைகளைப்போல் மகிழ்ச்சியாக இருப்பதாக நான் சொல்லமாட்டேன். ஆனால் குறைந்தது அவை பேணவாவது படுகின்றன

இங்கே எந்த முறையான பயிற்சியும் இல்லாதவர்களும் குறைவான ஊதியம்பெறுபவர்களுமான பாகன்களால் அவை வளர்க்கப்படுகின்றன. மிகக்கொடூரமாக அவை நடத்தப்படுகின்றன. பெரும்பாலான தருணங்களில்  அவர்களின் அறியாமையாலேயே யானைகள் இறக்கின்றன.

நம் ஆலயங்களிலும், டாப் ஸ்லிப் போன்ற கானுலா மையங்களிலும் யானைகள்  பலவகையில் துன்புறுகின்றன. மூடுண்ட கல்மண்டபங்களில் கட்டப்படுகின்றன. அது யானையை நிலைகொள்ளாதாக்கும். யானை குறைந்தது முப்பது கிலோமீட்டர் தொலைவு நடந்தாகவேண்டிய விலங்கு. இல்லையேல் காலின் அடித்தோல் தடிக்கும். மூட்டுகள் இறுகும். எடைமிகுந்து உடல் நலியும். செரிமானச்சிக்கல் எழும். ஓரிரு கிலோமீட்டர்கூட இங்கே யானைகள் நடக்க விடப்படுவதில்லை.

யானைகளுக்கு இங்கே உணவு அளித்துக்கொண்டே இருக்கிறார்கள். அதை வழிபடுவதன் ஒரு பகுதியாக தேங்காய் வாழைப்பழம் வெல்லம் மிதமிஞ்சி அளிக்கப்படுகிறது. ஆகவே யானைக்கு உடல் எடை மிகுகிறது. சர்க்கரை நோய் உருவாகிறது. ஈரல் கெட்டுப்போகிறது. யானைகளை மொட்டைவெயிலில் நிறுத்திப் பிச்சை எடுக்க வைப்பது, பக்தர்களின் தலைகளை தொட்டு வாழ்த்தவைப்பது இங்கே சாதாரணம். தலைகளில் உள்ள பொடுகு – ஈஸ்ட் ஆகியவை  யானையின் வெப்பமான ஈரமான துதிக்கைக் குழாய்க்குள் சென்றால் பல்மடங்கு பெருகி அதை நோயுறச்செய்கின்றன.

இங்கே நலமாக உள்ள யானைகள் மிக அரிது. பெரும்பாலானவை வளைந்த கால்களும் தாழ்ந்த வயிறும் உளச்சோர்வு கொண்ட அசைவுகளுடனும்தான் தெரிகின்றன. கோயில் யானைகளைப் பற்றிப் பேசியபோது அதற்குச் சிறந்த உதாரணமாக  இலஞ்சியின் யானை வள்ளியை நான் குறிப்பிட்டேன்.

வள்ளி எப்படி இறந்தது என்று ஆராய்ச்சி எல்லாம் செய்யவேண்டியதில்லை. நம் மூடபக்தியால், அறியாமையால் அது கொல்லப்பட்டது.

ஜெ

முந்தைய கட்டுரைகங்கைப்போர்- நூல் பெற்றுக்கொள்ள…
அடுத்த கட்டுரைஸ்ரீலங்காவின் குரல்கள்