ஸ்ரீலங்காவின் குரல்கள்

கள்ள மௌனத்திலிருந்தே உருவாகின்றன வெடிகுண்டுகள் – ஷர்மிளா சையத்
முஸ்லீம்களாகிய நாம் சுயபரிசீலனை செய்வோம் – பாத்திமா மாஜிதா

தமிழ் இந்து நாளிதழில் இரு கட்டுரைகளை வாசித்தேன். அவற்றில் ஷர்மிளா சையித் எழுதிய முகநூல் குறிப்பை முன்னரே பலரும் பகிர்ந்திருந்தனர். இருவரும் இன்று பொதுவாக இஸ்லாமியர் நடுவே உள்ள பதற்றத்தையும் அச்சங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இரு கட்டுரைகளையும் கூர்ந்து நோக்குபவர்கள் ஒரு பொதுவான உணர்வைக் கண்டடையக்கூடும். இருவருமே இஸ்லாமிய வஹாபிய அமைப்புகளின் உச்சகட்ட வெறுப்புப் பிரச்சாரத்தை, அதன் விளைவான கெடுபிடிகளை அஞ்சுகிறார்கள். அதற்கு இணையாகவே இங்கே உள்ள ‘முற்போக்கு’ கூட்டத்தையும் அஞ்சுகிறார்கள். இந்த  ‘முற்போக்காளர்’ இஸ்லாமிய வஹாபியத்தை ஆதரித்து தங்களை திரித்து இழிவுசெய்துவிடுவர் என அறிந்திருக்கிறார்கள்.

நண்பர்களுக்கு நினைவிருக்கும், சில ஆண்டுகளுக்கு முன்னர் சமஸ் தமிழகத்தில் வளர்ந்துவரும் இஸ்லாமிய வஹாபிய – சலாபிய இயக்கங்கள் இஸ்லாமின் நல்லெண்ணத்தை, இணக்கத்தை அழித்து அம்மக்களை மூடுண்ட, வெறுப்பு நிறைந்த சமூகக்குழுவாகக் கட்டமைக்க முயல்வதைப் பற்றி எழுதியிருந்தார். அதை ஆதரித்து நான் ஒரு குறிப்பு எழுதியிருந்தேன்.

வளரும் வெறி

பரவும் வெறி- எதிர்வினைகளைப்பற்றி

எழுத்தாளன் என்பவன் தன் தனியனுபவங்களிலிருந்தே பேசவேண்டியவன், புள்ளிவிவரக் கணக்கு அவன் வழி அல்ல. அவ்வகையில் நான் முற்றிலும் ஈடுபட்டு வாழும், என் சிந்தனையின் களமாகத் திகழும், குமரிமாவட்டச்சூழலைக் கொண்டு நிகழ்வனவற்றைச் சித்தரித்திருந்தேன். எந்தத்தயக்கமும் இல்லாமல் அதைச் சொல்வதும், அதன்பொருட்டு நிலைகொள்வதும் என் கடமை என நம்புகிறேன்.நான் சொன்னவற்றை உணராத எவரும் தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை.

அதற்கு இணையவெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் முற்போக்கு, திராவிட இயக்கத்தவர் எதிர்வினையாற்றியதை இன்றும் ஆர்வமுள்ளவர்கள் சென்று வாசிக்கலாம். நான் ‘இஸ்லாமியர்மீதான அச்சத்தை’ கட்டமைப்பதாகக் குற்றம் சாட்டினர். இஸ்லாமில் நிகழும் ‘மனிதாபிமான’ ‘பகுத்தறிவு’ செயல்பாடுகளை நான் தீவிரவாதம் என முத்திரை குத்துவதாகச் சொன்னார்கள். என்னை இந்துத்துவ வெறியன், இஸ்லாமை அழிக்க முயல்பவன் என்றெல்லாம் கூச்சலிட்டவர்கள் மிகப்பெரும்பாலும் இஸ்லாமியர் அல்ல. முற்போக்கினரும் திராவிட இயக்கத்தவரும்தான்.

இன்று நான் சொன்ன அதே சொற்களை மேலும் சீற்றத்துடன், தீவிரமான கழிவிரக்கத்துடன் இலங்கை இஸ்லாமியர்கள் இணையத்தில் எழுதுவதைக் காண்கிறேன். இந்த வஹாபிய – சலாஃபிய இயக்கங்கள் எப்படி மிகச்சிறிய அளவில் இஸ்லாமுக்குள் ஊடுருவினார்கள், இளைஞர்களைப் பிரச்சாரத்தால் கைப்பற்றினார்கள், தொன்மையான அமைப்புக்களை மிரட்டினார்கள், பொய்யான மதத்தூய்மைவாதத்தைச் சொல்லி பெண்களை அடிமைத்தனம் நோக்கித் தள்ளினார்கள், பிறசமூகம் மீதான வெறுப்பை வளர்த்தனர் என்று எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை நாங்கள் அப்போதே எதிர்த்தோம், இவர்கள் மேல் புகார் அளித்தோம் என்கிறார்கள்.

சரி, அவ்வாறென்றால் இவர்களை ‘இஸ்லாமின் தூயசக்திகள்’ என்றும் ‘ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள்’ என்றும் தாங்கிப்பிடித்த முற்போக்காளர்களும் திராவிட இயக்கத்தவர்களும்தான் இவ்வழிவுகளுக்குப் பொறுப்பா? எளிய இஸ்லாமிய மக்களை சமூக ஒதுக்குதல், பொருளியல் அழிவு நோக்கிச் செலுத்தியதன் இணைப்பொறுப்பு இந்த அறிவுஜீவிகளுக்கு உண்டா? இஸ்லாமிய மக்களின் பொதுவான எண்ணத்திற்கு மாறாகத்தான் இந்த முற்போக்கினரும் திராவிட இயக்கத்தவரும்  இந்த வஹாபிய –சலாஃபியக் குரல்களை ஆதரித்தனரா? இவர்கள் தங்கள் முற்போக்கு பாவனைக்காக இஸ்லாமிய சமூகத்தவரை பலிகொடுக்கிறார்களா?

குண்டுவைத்த வெறியனின் இணையவெளிப் பேச்சுக்கள் இன்று எங்கும் சுழன்றுவருகின்றன. தமிழில் பேசுகிறான். “அப்பாவி மக்கள் என எவரும் இல்லை. இஸ்லாமியர் பிறர் என்று மட்டுமே பிரிக்கமுடியும். பிறர் இஸ்லாமுக்கு மாறவேண்டும், அல்லது ஜஸியா கொடுத்து அடிமையாக இருக்கவேண்டும். இல்லையேல் கொல்லப்படத்தக்கவர்கள்’ என்கிறான். இப்பேச்சு இத்தனைநாள் இங்கே உலவிக்கொண்டிருக்கையில் எவர் அதை மறுத்தார்கள்? ஒரு பேச்சுக்காவது கண்டித்தார்கள்? கண்டித்தவர்களை முத்திரைகுத்தி இழிவுசெய்தார்கள் அல்லவா?  இன்று அது பேரழிவை உருவாக்கியபின் அதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று சொன்னால் ஆயிற்றா?

இதேபோலப் பேசும் பத்துபேரையேனும் நாம் தமிழக ஊடகங்களில் இன்று காண்கிறோம். அவர்களைச் சுட்டிக்காட்டினால்கூட இஸ்லாமிய அச்சத்தை பரப்பும் இந்துத்துவ வெறியன் என நம்மைச் சுட்டிக்காட்டி கூச்சலிடும் இடதுசாரிகளும் திராவிட இயக்கத்தவரும் இஸ்லாமியரை அந்த இருளுக்குள் தள்ளும் பொறுப்பை ஏற்கவேண்டும் அல்லவா?

மிகத்தீவிரமான வினாக்கள். இலங்கையில் சிலர் அவற்றை இன்று கேட்டுக்கொள்கிறார்கள். இஸ்லாமியரையும் இஸ்லாமிய வகுப்புவாத அமைப்புக்களையும் பிரித்துப்பார்க்கவேண்டும் என அவர்கள் சொல்கிறார்கள். அவ்வாறு இரு சாராரையும் பிரித்துப் பார்த்தவர்களை வசைபாடி, அவர்கள் ஒற்றைத்தரப்பே என இங்கே வாதிட்ட முற்போக்கு – திராவிட இயக்கத்தவரைப் பற்றி இனியாவது அவர்கள் புரிந்துகொள்வார்களா?

அங்கே அவ்வாறு நிகழ மிகச்சிறிய வாய்ப்பிருக்கிறது. இங்கே அவ்வாய்ப்பு சற்றும் கண்ணுக்குப் படவில்லை. இங்குள்ள அரசியல்வாதிகள் இஸ்லாமியரை அச்சத்தில் நிறுத்தி வைக்க, தாங்களே காவல் என எண்ணி வாக்குவங்கி சமைக்க முயல்கிறார்கள். அந்த அச்சத்தைப் பயன்படுத்தி வஹாபிய –சலாஃபிய தீவிரவாதம் வளரும்போது அதையும் தங்களுக்கு ஆதரவான விசையாக கையாள்கிறார்கள். இஸ்லாமியரை வலுக்கட்டாயமாக வன்முறையின் வெறுப்பின் தரப்பில் கட்டிப்போடுகிறார்கள்.

இதைச்சுட்டிக்காட்டும் எவரையும் இந்துத்துவர் என முத்திரையடிக்கிறார்கள். தங்கள் அரசியல் எதிரிகள் அனைவரையுமே இந்துத்துவர், இஸ்லாம்வெறுப்பாளர் எனச் சித்தரிப்பதன் வழியாக இவர்கள் இஸ்லாமியரை ஒற்றைப்பார்வையுடன் மிக இடுங்கலான பாதையினூடாக செல்லவைக்கிறார்கள்.  “எங்கள் எதிரிகளை நாங்கள் கண்டுகொள்கிறோம், நீங்கள் உங்கள் வேலையைப்பாருங்கள்” என இவர்களிடம் இஸ்லாமியர் சொல்லும் காலம் வந்துவிட்டது.

இந்த வன்முறையையே பாருங்கள். இது நிகழ்ந்த சிலமணி நேரத்திற்குள்ளேயே இது சிங்கள வெறியர்கள் நிகழ்த்தியது என இங்கே முகமறியா திராவிட –முற்போக்கு அணியினர் சொல்லத் தொடங்கினர். சிலர் இது இந்துவெறியர்கள் நிகழ்த்தியது என்றனர். அதை இஸ்லாமிய வகுப்புவாதிகள் ஓங்கி ஒலித்தனர். அறியப்பட்ட குரல்கள் ஒரு அரசியல் சரிக்காகக்கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. குற்றவாளிகள் கண்டடையப்பட ஆறுமாதம் ஆகியிருந்தால் அதற்குள் இப்படுகொலையின் பொறுப்பை மிக எளிதாக பிறர்மேல் சுமத்தியிருப்பார்கள்.

ஐ.எஸ்.ஐ.எஸ் இக்கொலைகளுக்குப் பொறுப்பேற்று தாக்கியவர்களின் படங்களையும் வெளியிட்டதும் அனைத்தும் ஐயத்திற்கிடமில்லாமல் ஆனது. உடனே ஐ.எஸ்.ஐ.எஸ் அமெரிக்காவின் ஐந்தாம்படை, அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்ற குரல் எழுந்தது. எனில் அதுவரை எழுப்பப்பட்ட மழுப்பல்கள், குற்றம்சாட்டல்களுக்கு என்ன பொருள்? ஐ.எஸ்.ஐ.எஸின் உள்ளூர் குரலாக ஒலிக்கும் தௌஹீத் ஜமாஅத் போன்ற அமைப்புகளுக்கு இவர்கள் கொடுத்த ஆதரவுக்கு என்ன பொருள்?

குற்றம் செய்த அமைப்பு வேறு, குற்றம்செய்யாத அமைப்புகள் வேறு என அடுத்த வாதம் எழுந்தது. ஓர் அமைப்பு குற்றம்செய்தது, அதே கருத்தியலையும் வழிமுறையும் கொண்ட அமைப்புக்கள் குற்றம் செய்வது வரை ஏற்புக்குரியவையாக, முற்போக்கானவையாக திகழும் தர்க்கம்தான் என்ன?

இத்தகைய தாக்குதல்கள் நிகழ்ந்ததும் எழும் குரல்களுக்கு ஓர் அமைப்பு உள்ளது. கீழே கண்ட நான்கு படிகளாகவே எதிர்வினைகள் எழுகின்றன.

அ.தாக்குதல்களைக் கண்டிக்கிறோம். உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவேண்டும்

ஆ.இஸ்லாம் அமைதிமார்க்கம். தீவிரவாதிகள் இஸ்லாமியர் அல்ல. தீவிரவாதத்திற்கு மதம் இல்லை

இ.இதற்குப்பின் அமெரிக்க -ஐரோப்பிய- யூத ஏகாதிபத்திய சக்திகள் உள்ளன.

ஈ. நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள்

இந்தவகையான சமாளிப்புகளும் மழுப்பல்களும் இஸ்லாமியர்கள் மேல் உருவாகும் பழிகளிலிருந்து அவர்களைக் காக்கும் என நடுநிலையாளர்களில் சிலர்கூட நம்புகிறார்கள். ஆனால் இவை வன்முறையாளர்களைப் பாதுகாக்கின்றன,  அவர்களை நியாயப்படுத்துகின்றன என்பதே உண்மை.

இத்தாக்குதலில் ஈடுபட்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஏற்கனவே அவர்கள் புத்தர்சிலை உடைப்பு போன்றவற்றுக்காகக் கைதானபோது அங்குள்ள அரசில் பொறுப்பான பதவியில் இருக்கும் ஒருவர் தொண்ணூறு நாட்களுக்குள் விடுவிப்பேன் என அறைகூவி வெளியே கொண்டுவந்தார். அதைச் சொல்லி அவரைப் பாராட்டும் ஒரு காணொளியைக் கண்டேன். அவர்கள் நம்மவர்கள் என்கிறார். அந்த உணர்வுதான் அவர்களை வளர்க்கிறது. இன்று அவர்கள் நம்மவர்கள் அல்ல என்று அவரே அதே வாயால் சொல்லக்கூடும்.

தமிழகத்திலிருந்தே இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருக்கிறது என்று செய்திகள் வருகின்றன. சிறிதும் பெரிதுமாக பல வன்முறைகள் மிரட்டல்கள் இங்கே நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நாகர்கோயிலில் இஸ்லாமியப்பெண்ணை மணந்த ஒருவர் நடுத்தெருவில் கொல்லப்பட்டார். இஸ்லாமுக்குள் பகுத்தறிவு பேசிய ஒருவர் கோவையில் கொல்லப்பட்டார். இஸ்லாமிய மதமாற்றத்தைக் கண்டித்த ஒருவர் திருபுவனத்தில் கொல்லப்பட்டார். இவை சுவரெழுத்துக்கள். இந்த அரசியல்வெறியர்கள் அதை வாசிக்க மறுப்பார்கள். இஸ்லாமிய சமூகம் புரிந்துகொள்ளவேண்டும்

ஆம், ஐயமே இல்லாமல் இஸ்லாமிய சமூகம் வேறு இந்த வஹாபிய –சலாஃபிய இயக்கம் வேறு. கேரளம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து கண்ணீர்வடித்தும்கூட அப்துல் நாசர் மதானியை கேரள இஸ்லாமிய சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இங்குள்ள தௌஹீத் ஜமாத், முஸ்லீம் முன்னேற்றக்கழகம் போன்ற அமைப்புக்களை இங்குள்ள திராவிட -இடதுசாரி அரசியல்கட்சிகள் ஆதரிக்கவில்லை என்றால் அவை இஸ்லாமிய மக்களில் பத்துசதவீதத்தவரின் ஆதரவைக்கூடப் பெறமுடியாது.

இஸ்லாமுக்கு இங்கே எட்டு  நூற்றாண்டு வரலாறுள்ளது. அவர்களின் இறைநேசச்செல்வர்கள் வாழ்ந்து மறைந்த மண் இது. அவர்கள் இந்துக்களாகிய நம் முன்னோருக்கும் நமக்கும் அருள்புரிந்தவர்கள். நான் இன்று தர்காவுக்குச் செல்பவன், வழிபடுபவன். ஆகவே இஸ்லாம் என் மதமும் கூடத்தான். இஸ்லாமை வெறும் நிலம் வெல்லும் வெறியாக மாற்றும் அரசியலை இஸ்லாமிலிருந்து, பிரித்துப் பார்க்கவேண்டும்

அதேபோல இந்துமதத்தையும் இந்துத்துவத்தையும் பிரித்தறியும் தெளிவும் நமக்கு வேண்டும். இந்தமண்ணில் தோன்றிய தொன்மையான மெய்யறிதல்களின் பெருந்தொகை இந்துமதம். ஞானிகளின், பேரறிஞர்களின் உள்ளுணர்வும் கல்வியும் அதில் உறைகின்றன. நாம் தேடும் வழியெதையும் துலங்கச்செய்யும் பெருவெளி அது. முரண்படவும் விலகவும் வழி அளிக்கும் விரிவுகொண்டது. நம் நல்லாசிரியர்களின் சொற்களால் ஆனது

அதை வெறுப்பும் காழ்ப்புமாக மாற்றி அதிகார அறுவடைசெய்யும் அரசியல்தரப்பே இந்துத்துவம். அது இந்துமதத்தின் எந்த கிளையிலிருந்தும் தொடக்கம்கொண்டது அல்ல. அதை பலமுறை முன்னரே எழுதியிருக்கிறேன் .அதை மேலும் மேலும் தெளிவாக உணர்கிறேன். அதன் ஊற்றுக்கண் ஐரோப்பாவின் ஒற்றைப்பண்பாட்டு அரசியல் கருதுகோள்களே. அது இந்துமதத்தை அதன் அலகிலா விரிவை ஒடுக்கிச் சுருக்கி ஒற்றைப்பாதையாக ஆக்க முயல்கிறது. இந்த மாபெரும் ஞானவெளியை ஒற்றைச் சீருடை அணிந்த வெறுப்புமிக்க ராணுவமாக ஆக்கமுயல்கிறது.

அவ்வாறு ஆகி அது அதிகாரத்தைக் கைப்பற்றுகையில் இந்துமதத்திற்கு எந்த நன்மையும் நிகழ்வதில்லை. தகுதியற்றோர் மதத்தைக் கைப்பற்றி ஆளமுயல்வதன் விளைவான அழிவுகளே நிகழ்கின்றன. அதை இப்போது எவரையும் விட தீவிர இந்துக்களே நன்குணர்ந்திருப்பார்கள்.

இஸ்லாமிய வகுப்புவாத வெறியைச் சுட்டிக்காட்டினால் இஸ்லாமியவெறுப்பு என கூச்சலிடும் திராவிட இயக்கத்தவரும் இடதுசாரிகளும்தான் அதேமூச்சில்  இந்துத்துவ அரசியலை எதிர்க்கிறார்கள் என எண்ணி இந்துமதம் அழியவேண்டும் எனக் கூவுகிறார்கள். விளைவாக இருசாராரையும் வெறுப்பரசியல் நோக்கி தள்ளிவிடுகிறார்கள். இரு மெய்வழிகளையும் இரண்டு வகை அரசியல்களாக மட்டுமே இவர்களின் கோணலான அரசியல்மூளை காண்கிறது. இவர்களை மோதவிட்டுக் குருதிகுடிக்க எண்ணுகிறது.

உலகளாவிய வஹாபிய –சலாஃபிய அழிவுச்சக்தி இங்கே ஆழவேரூன்றியிருக்கிறது. அதை மழுப்புவதில் மறுப்பதில் பொருளில்லை. உள்நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளே அதைச்செய்வார்கள். அந்த அழிவுச்சக்தியே மறுபக்கம் மோடிகளை, யோகிகளை, பிரக்யாக்களை உருவாக்கி இந்துக்களின் முகமாக முன்னிறுத்துகிறது. நாம் மேலும் மேலும் பிரிந்து துருவங்கள் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். மேலும் மேலும் அழிவைநோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்.

இருநூறாண்டுகள் பஞ்சத்திற்கும் அழிவிற்கும் பின் சென்ற இருபத்தைந்தாண்டுகளாகவே இந்திய சமூகம் நல்லுணவு உட்கொள்கிறது, ஒழுகாத இல்லங்களில் துயில்கிறது, நம் குழந்தைகள் கல்விகற்கிறார்கள். இந்திய மிகமிக மெல்ல வளர்ந்துகொண்டிருக்கிறது. வெறுப்பின் மொழியில் பேசும் எவரும் அதை உள்நாட்டுப்பூசல்கள் வழியாக அழிக்க முயல்கிறார்கள்.

இந்துத்துவர்கள், வஹாபியர்கள் அளவுக்கே ஆபத்தானவர்கள் இஸ்லாமியவெறியை ஆதரிக்கும், அதை சுட்டிக்காட்டும் குரல்களை முத்திரைகுத்தி சிறுமைசெய்யும் திராவிட வெறியர்களும் போலிமுற்போக்காளர்களும். காழ்ப்பின் மொழியில் பேசுபவர்கள். பிளவுபடுத்துவதை அன்றி எதையுமே அறியாதவர்கள். எந்த மேலுணர்வுகளையும் எப்போதுமே தொட்டுணராதவர்கள். அவர்களை அடையாளம் கண்டுகொள்ளவேண்டிய தருணம் இது.

இங்கே மூன்று வெறுப்புநிலைகள் உள்ளன. ஒன்று வஹாபிய- சலாஃபிய  வெறுப்புநிலை. இன்னொன்று இந்துத்துவ வெறுப்புநிலை. மூன்று  இரு சமூகங்களையும்  ஒற்றைப்படையாக்கி மோதிக்கொள்ளச் செய்யும் முற்போக்கு – திராவிட இயக்கத்தவரின் வெறுப்புநிலை. இம்மூன்றையும் தவிர்த்து தங்கள் மெய்மரபின் சொற்களை நோக்கிச் செல்வதன்றி வேறுவழியில்லை.

திடீரென்று இந்த தேசத்தில் நடுநிலை என்பது மிகமிகக் கீழ்த்தரமான வசையாக மாறிவிட்டிருக்கிறது. நடுநிலைநக்கிகள் என எல்லா தரப்புமே அவர்களை வசைபாடுகின்றன. நடுநிலை என்பது எதிலும் பட்டுக்கொள்ளாமல் இருப்பது அல்ல. பிறர் உருவாக்கும் வெறிகளுக்கு ஒத்துப்போகாமல் இருப்பது. தன் அகச்சான்றை, தன் ஆசிரியர்களின் சொற்களை, தன் மரபின் நெறிகளை சார்ந்து நின்று தானே முடிவெடுப்பது. எந்நிலையிலும் எல்லாத் தரப்புக்களையும் கருத்தில்கொள்வது. மறுதரப்பின் நியாயம் என்ன என்று முடிந்தவரைப் புரிந்துகொள்ள முயல்வது. வெறுப்பால் அன்றி புரிதலால் நிலைபாடு எடுப்பது

இந்த வெறியர்களால் வசைபாடப்பட்டாலும் நடுநிலையாளர்களே இங்கே மிகப்பெரும்பான்மை. அவர்கள் எங்கும் குண்டுவைப்பவர்கள் அல்ல. எவர்மேலும் காழ்ப்புகொண்டு துள்ளுபவர்களும் அல்ல. அவர்களில் ஒருவனாக இருக்கவே ஒவ்வொரு எழுத்தாளனும் முயலவேண்டும். எழுத்தாளர்கள் அறிவால் அல்ல மிகமிக எளிமையான உணர்ச்சிகளால் அதைவிட எளிமையான நுண்ணுணர்வால் முடிவெடுக்கவேண்டியவர்கள்.

தங்கள் மெய்மையில் நம்பிக்கை கொண்ட இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இது இன்றைய மிகப்பெரிய அறைகூவல்.

வளரும் வெறி
பரவும் வெறி- எதிர்வினைகளைப்பற்றி
முந்தைய கட்டுரைஇலஞ்சி ஆலய யானை இறப்பு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-18