‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-23

பாண்டவர்களின் படை திருஷ்டத்யும்னனின் கையசைவுக்கு ஏற்ப பேருருவ விண்நாகம் என கட்டுப்பட்டு வளைந்து முன்னேறியது. அதன் இரு முனைகளும் முன்னே சென்று மையம் பின்னால் வளைந்து பிறைவடிவம் கொண்டது. கர்ணன் பிறைசூழ்கை முதலையை வளைத்துக்கொள்ள இருப்பதை நோக்குகிறானா என்று திருஷ்டத்யும்னன் பார்த்தான். தொலைவிலிருந்து பார்த்தபோது அரைவிழி மூடியிருக்க கர்ணன் அங்கில்லாததுபோல் இருந்தான். எதையுமே உளம் கொளாதவன் என. கைகள் அவனிலிருந்து விடுபட்டு ஒன்று நூறெனப் பெருகி அம்புகளை செலுத்துவதுபோல. அவனுக்கு இருபுறமும் அணிவகுத்த மைந்தர்கள் அவ்வடிவும் அவ்வசைவும் அதே முகத்தோற்றமும் உணர்வுகளும் கொண்டிருந்தார்கள்.

கௌரவப் படை கர்ணனின் திறன் மிகுந்துவருவதை பல்லாயிரம் விழிகளால் கண்டு எழுச்சி அடைந்தபடியே இருந்தது. முற்றிலும் உளச்சோர்வடைந்திருக்கும்போது சிறு நம்பிக்கைகூட பன்மடங்கு ஊக்கத்தை அளிப்பதை திருஷ்டத்யும்னன் பார்த்திருந்தான். அப்போது கௌரவப் படையில் இருந்த ஒவ்வொரு வீரனும் அடியிலாத இருளாழத்திலிருந்து மீண்டெழுந்து ஒளி நோக்கி வந்தவன் போலிருந்தான். அனைத்து முகங்களும் உவகையில் பல் தெரிய வெறித்து நின்றன. நகைத்தபடியே வாழ்த்துக்களையும் வெற்றிக்கூச்சல்களையும் எழுப்பியபடி அவர்கள் போரிட்டனர். ஒவ்வொரு அம்பிலும் அந்த விசை தெரிந்தது. மாட்டுத்தோல் கவசங்களில் நீள் அம்புகள் இறங்கி புதைந்து வால்சிறகு துடித்தன. வேல்கள் மின்னும் முனைகளுடன் வெள்ளி வளைகோடுகளென துடித்துச் சுழன்று கவசங்களை உடைத்து படைக்கலங்களை சிதறடித்து நகைப்பொலி எழுப்பின.

பாண்டவர் போர் தொடங்கிய சில கணங்களிலேயே கௌரவர்களின் விசையை உணர்ந்திருந்தனர். அதை முன்னரே எதிர்பார்த்தவர்கள் ஆகையால் அது எழுந்த அக்கணமே அடையாளம் கண்டுகொண்டு ஒவ்வொரு கணமும் என பெருக்கிக்கொண்டனர். அருகிலிருந்தவர்கள் அலறல்களாக, கூச்சல்களாக பகிர்ந்துகொண்டு உடலசைவுகளூடாக ஒட்டுமொத்தமாக வெளிப்பட்டனர். சற்று நேரத்திலேயே அச்சமும் பதற்றமும் பருவடிவு கொண்டதுபோல் மாறியது பாண்டவப் படை. அது எடைதாளா வலை என மேலும் மேலும் வளைந்து கர்ணனை உள்ளே விட்டுக்கொண்டிருந்தது. அம்புகள் பட்டு விழுந்த உடல்களும் உடைவுகளும் மட்டுமே முன்னெழும் கௌரவப் படைக்கு தடையென்றாயின.

திருஷ்டத்யும்னன் உரத்த குரலில் “முன்னேறுக! உளம் தளராதெழுக! முன்னேறுக! அவர்கள் ஆற்றலற்றவர்கள்! அடுமனையாளர்களும் புரவிச்சூதர்களும் வில்லும் வேலும் கொண்டு எழுந்திருக்கிறார்கள்! நின்று பொருதுக! நிலைகொண்டு பொருதுக!” என்று கூவினான். அதன் பின்னரே அவ்வாறு கூறியதன் பிழையை அவன் உணர்ந்தான். அவன் சொற்கள் முரசொலிகளாக காற்றில் விண்வடிவு கொண்டபோது பாண்டவப் படைகளை நோக்கியே ஏளனம் உரைப்பதுபோல் தோன்றியது. பாண்டவப் படையினர் தாங்கள் அடுமனையாளர்கள் என்பதை அச்சொற்களால் சாட்டையடி என உணர்ந்து உளச்சோர்வு கொண்டனர். மாறாக கௌரவப் படையிலிருந்த அடுமனையாளர்களும் புரவிச்சூதர்களும் கர்ணனைக் கண்டு தங்கள் உடலில் மண்மறைந்த கௌரவ மாவீரர்களின் நுண் வடிவும் வந்தமைந்ததுபோல் ஆற்றல் கொண்டெழுந்தனர்.

காற்றில் நெற்றுகளும் சருகுகளும்போல தங்களுடன் வந்தவர்கள் களம்படக்கண்டு, அடுமனையாளரும் ஏவலருமான தங்களை வெறும் தசைக்கோட்டையென அம்புகளுக்கு முன் நிறுத்துகிறார்கள் என பாண்டவப் படையினர் எண்ணியிருந்தனர். அவர்களின் கால்கள் அச்சத்தால் துடித்துக்கொண்டிருந்தன. கைகளில் படைக்கலங்கள் வழுக்கி நழுவின. ஒவ்வொருவரும் படையிலிருந்து பிரிந்து தனியராயினர். “அடுமனையாளர்! ஏவலர்!” என முரசொலி அவர்கள் செவிகளில் ஒலித்தது. அதை அவர்கள் தெய்வச்சொல்லெனக் கேட்டனர். “பின்னடைக! பின்னடைக!” என எவரோ கூவ பொங்கும் பால்நுரையில் நீர்த்துளி விழுந்ததுபோல் அந்தச் சொற்கள் பாண்டவப் படையின் முகப்பணியை துண்டுகளாக உடையச் செய்வதை விழிகளால் பார்த்து திருஷ்டத்யும்னன் திகைத்து நின்றான். “யுயுதானர் தென்னெல்லை செல்க… தென்னெல்லையும் வட எல்லையும் எழுந்து ஊடுருவுக!”

“செல்க! செல்க! வெற்றி அணுகிக்கொண்டிருக்கிறது! படைமுகப்பில் பார்த்தர் முன்னெழுகிறார். இந்திரனின் நாள் இது! அதோ நம் வெற்றியைக் கூறி எழுந்துள்ளது இந்திரவில்! விண்ணவனின் வெற்றி திகழ்க! வெற்றி! வெற்றி!” என்று திருஷ்டத்யும்னன் கூவினான். ஆனால் அதுவும் முரசில் எழுந்தபோது எதிர்ச்சொல்லெனவே மாறியதை உடனே உணர்ந்தான். வானில் புலரியொளி எழுந்த பின்னரும்கூட முழுதொளி கூடவில்லை. முகில்கணங்கள் நிறைந்திருந்த கீழ்த்திசை சற்றே திறந்து கதிரவனைக் காட்டி களம் துலங்கவைத்து போரை தொடங்கிய உடனேயே மூடிக்கொண்டது. முகில் திரள்கள் கரைந்து ஒற்றைத் திரையென மாறி வானை மூட வானே அங்கிலாததுபோல் ஓர் சாம்பல் வளைவே மேலே திகழ்ந்தது. கதிரவன் ஒளி தெரியவில்லை. ஆனால் எங்கிருந்தோ பெற்ற மெல்லிய வெளிச்சம் ஒன்றால் கர்ணன் பொற்கவசங்களும் மணிக்குண்டலங்களும் அணிகளும் ஆடையும் சுடர் பொலிய தேரில் எழுந்த கதிரவன் சிலை என உடல் அசையாது நின்று போரிட்டான்.

“எழுக! எழுக!” என்று உளம் உடைய கூவியபடி திருஷ்டத்யும்னன் தன் கைகளை அசைத்தான். பாண்டவப் படை அவன் எண்ணியது போலவே நீள்பிறையென வளைந்தது. அதன் தெற்கு முனையில் சாத்யகியும் வடக்கு முனையில் சிகண்டியும் வளைந்து முன்னேறி கௌரவப் படைகளை நண்டுக்கொடுக்கென கவ்வத்தொடங்கினர். சகுனி படைகளை இரு பகுதிகளாகப் பிரித்து பாண்டவர்களின் வடக்கு தெற்கு முனைகளை எதிர்கொள்ளும்படி ஆணையிட்டார். ஆனால் சாத்யகியையும் சிகண்டியையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்ட படைவீரர்கள் கௌரவரிடம் இருக்கவில்லை. அஸ்வத்தாமனும் கிருதவர்மனும் கர்ணனின் இரு பக்கங்களையும் காத்து கைகள் என விரிந்து நின்றிருந்தனர். பீமனை துச்சாதனன் துணை நிற்க துரியோதனன் எதிர்கொண்டிருந்தான்.

சகுனியின் ஆணை எழும்போது படைவீரர்கள் கொள்ளும் உடலசைவிலிருந்து திருஷ்டத்யும்னன் என்ன நிகழ்கிறது என்று புரிந்துகொண்டான். கிருதவர்மனும் அஸ்வத்தாமனும் இரு பிரிவுகளாகப் பிரிந்து பிறையின் இரு முனைகள் உள்புகுவதை தடுக்கும்பொருட்டு படையின் தெற்கு வடக்கு எல்லைகளை நோக்கி சென்றனர். குருக்ஷேத்ரப் போர் தொடங்கியபோது வெற்றுவிழிகளால் நோக்க முடியாத அளவிற்கு இருபுறமும் அகன்றிருந்த படைஎல்லைகள் சற்றே கூர்ந்தால் தெரியுமளவுக்கு அணுகி வந்திருந்தன. ஆகவே காவல்மாட அறிவிப்புகளும் கழையர்களின் கூற்றுகளும் இல்லாமல் முழுப் படையையும் விழியோட்டி நோக்க முடிந்தது. நாற்களம் ஆடுவதுபோல் படைகளை நகர்த்த இயன்றது.

எண்ணியிராக் கணத்தில் அர்ஜுனன் படைபிளந்து முன்னெழுந்து தன் காண்டீபத்தை முழக்கியபடி கர்ணனை அம்புகளால் தொடர்ந்து அறைந்து கொண்டு முன்னே சென்றான். என்ன நிகழ்ந்தது என்று அறியாது பாண்டவப் படை ஊக்கம் கொண்டது. “வெற்றிவேல்! வீரவேல்! இந்திரன் மைந்தனுக்கு வெற்றி! மின்கொடிக்கு வெற்றி! இந்திரப்பிரஸ்தத்திற்கு வெற்றி! யுதிஷ்டிரனுக்கு வெற்றி!” என்று கூவியபடி பாண்டவப் படைகள் கௌரவப் படைகளைத் தாக்கி செறுத்துநிறுத்தி பொருதி பின்னடையச் செய்யத்தொடங்கின. சற்று முன்னர்வரை அனைத்து ஊக்கத்தையும் இழந்து அசைவிலாது ஓய்ந்த உள்ளத்துடன் இருந்த திருஷ்டத்யும்னன் களிவெறி கொண்டு “முன்னேறுக! முன்னேறுக! இன்றே முழு வெற்றி! இன்றே முழு வெற்றி!” என்று கூவியபடி தன் தேரை செலுத்தினான்.

பாண்டவப் படை ஆறு வலைக்கண்ணிகளாக மாறியது. முதலையின் முகப்பை நோக்கி அர்ஜுனன் தலைமை தாங்கிய முதல் கண்ணி முன்னேறியது. முதலையின் இரு கால்களுக்கும் இரு கைகளுக்கும் இரு படைகள் சென்றன. அதன் ஆற்றல் மிக்க வாலை நோக்கி இரு முனைகளிலுமிருந்து சிகண்டியும் சாத்யகியும் சென்றார்கள். அதன் விழிகளுக்கென மட்டும் அமைக்கப்பட்டிருந்த வில்லவர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து தொடர்ந்து தாக்கினார்கள். முதலை கால்களையும் கைகளையும் அறைந்து தலையை மேலே தூக்கி வால் முன்வர சற்றே வலம் சுழன்று திமிறி போரிட்டது. அதன் வால் எழுந்து வந்து அறைய பாண்டவப் படையின் இரு கண்ணிகளும் உடைந்து தெறித்தன. அக்கணமே மீண்டும் ஒருங்கிணைந்து விசைகொண்டு வந்து வாலை கவ்விக்கொண்டன.

முதலை வால் நிறுத்தப்பட்டுவிட்டால் அதன் தலை அசைவிழந்து விடும். தலை நிறுத்தப்பட்டுவிட்டால் வால் மும்மடங்கு விசை கொள்ளும் என்று திருஷ்டத்யும்னன் அறிந்திருந்தான். ஆறு கண்ணிகளும் ஒற்றை விசையென இசைந்து கவ்வுகையிலேயே முதலையின் ஆற்றலை கட்டுப்படுத்த இயலும். ஒவ்வொரு கண்ணியாக அது அறுக்குமெனில் மிக எளிதில் விடுபட்டுவிடும். ஒத்திசைவை உருவாக்குவது எப்போதும் உளவிசை. உளவிசை நம்பிக்கையிலிருந்து மட்டுமே எழும். நம்பிக்கை கொண்ட படை மிகைச்சீற்றம் கொள்ளும். மிகைச்சீற்றம் கொண்ட படை மிக விரைவிலேயே அழியக்கூடியது. களத்தில் எந்த ஒத்திசைவையும் நெடும்பொழுது நீட்டிக்க இயலாது. எக்களத்திலும் எதுவும் எப்போதைக்குமென ஒத்திசைவு கொள்வதில்லை. ஏனென்றால் ஒவ்வொன்றையும் தனித்தன்மை கொண்டதாகவே அமைத்துள்ளது தெய்வம். தனித்தன்மை விசையில், திசையில், எண்ணத்தில், எழுச்சியில் தனிவழிகளாகவே வெளிப்படுகிறது.

பாண்டவப் படையின் அந்த எழுச்சி வெறும் கணச்சீற்றம்தானா எனும் ஐயம் திருஷ்டத்யும்னனுக்கு இருந்தது. ஆனால் மிக விரைவிலேயே முதலை ஆற்றல் இழந்து அங்குமிங்கும் அலைகொள்ளத் தொடங்குவதை அவன் கண்டான். அதன் கால்களும் வாலும் தலையும் பாண்டவப் படைகளால் கவ்வப்பட்டுவிட்டன. அர்ஜுனன் கர்ணனை போர்முகப்பில் தன் அம்புகளால் பிறிதொன்றும் எண்ண இயலாதபடி தடுத்து நிறுத்தியிருந்தான். பீமனை சூழ்ந்துகொண்ட கௌரவர்கள் அவனை அங்கேயே தடுத்து நிறுத்தினர். ஆனால் சாத்யகியும் சிகண்டியும் முதலையின் வால் என அமைந்த சல்யரின் படைகளை சலிக்காது தாக்கி அங்குமிங்கும் சுழலச்செய்து ஆற்றலை வீணடிக்க வைத்தனர். முதலையின் கால்களென அமைந்த படைகளனைத்தும் கவ்வப்பட்டுவிட்டிருந்தன.

முதலை செயலிழந்து உறைந்து மீண்டும் விசைகொண்டு எழுந்தது. முன்பைவிட விரைவாகத் தளர்ந்து திகைத்தது. ஒருகணம், ஒரு காலடி கர்ணன் பின்னடைவான் எனில் முழு கௌரவப் படை அதுவரை கொண்டிருந்த அனைத்து நம்பிக்கையையும் இழந்து சிதறி பின்னடையத் தொடங்கிவிடும். முதலையின் உறுப்புகளில் ஓரிரண்டு சற்றே செயலிழக்குமெனில் அதன் உடலில் சற்று ஒத்திசைவு குலையுமெனில் மேலும் அரைநாழிகைக்குள் கௌரவப் படையே நூறு துண்டுகளாக சிதைந்து உருமாறும். அவற்றை சூழ்ந்து தாக்கும் சிறிய கண்ணிகளாக பாண்டவப் படையை மாற்றுவது மிக எளிது. துண்டுகளாக உடைக்கவும் இணைக்கவும் ஏற்ற படைசூழ்கை பிறை வடிவத்திலானது. கௌரவர்களின் ஆற்றலின் மையமுடிச்சு கர்ணனிடமிருந்தது.

திருஷ்டத்யும்னன் கர்ணனையே பார்த்துக்கொண்டு போரிட்டான். கர்ணன் அங்கு நிகழ்வன எதையும் அறிந்திருக்கவில்லையா? கௌரவப் படை தன் நம்பிக்கையை ஒவ்வொரு கணமும் இழந்துகொண்டிருப்பதை உணராமல் விழியிலா வேகமும் விசையும் கொண்டிருக்கிறானா? ஆனால் நூறு கைகளுடன் எழுந்த கார்த்தவீரியன்போல போரிட்டுக்கொண்டிருந்த கர்ணனின் விசையில் அணுவளவேனும் குறைவு தென்படவில்லை. அது நிகழ்ந்தேயாக வேண்டும். எத்தனை பெரிய வீரனும், தெய்வ வடிவமே கொண்டவனாயினும், படைப்பெருக்கைவிட மேலானவன் அல்ல. விண்ணவருக்கு படைத்தலைமை கொள்ளும் அறுமுகக் கடவுள்கூட பெரும்படை திரட்டியே சென்றார் என்கின்றன நூல்கள்.

படைகளின் உணர்வுகள் குவிந்து அப்படைத்தலைவன் என்றாகின்றன. அவனிலிருந்து அவ்வுணர்வுகள் எழுந்து பெருகி படையை சென்றடைகின்றன. அவ்வுரையாடல் எங்கேனும் ஓரிடத்தில் முறிந்தால் படைகள் சிதறி சிறுகுழுக்களாக மாறுவதை கண்கூடாகவே பார்க்கமுடியும். படைகளிலிருந்து எழும் உணர்வுகளை முற்றாகத் தவிர்த்து படைமுகம் நின்றிருக்க எந்தப் பெருவீரனாலும் இயல்வதில்லை. கௌரவப் படைகள் பல இடங்களில் வளைந்து பின்னடைவதை திருஷ்டத்யும்னன் கண்டான். முதலை ஆமையென தன் கால்களை பின்னிழுத்துக்கொண்டது. அதன் வால் பொறியில் சிக்கி செயலிழந்து தணியலாயிற்று.

எக்கணமும் கர்ணன் அச்சோர்வை தானும் அறியக்கூடும். இழுபட்ட வில்நாணின் ஒரு சிறு தளர்வென அது வெளிப்படலாம். வில் வளைவில் ஒரு அதிர்வென அது நிகழலாம். என்னவென்றறியாத சலிப்பாகவோ சோர்வாகவோ அவனுள்ளத்தில் எழலாம். அவனிலிருந்து எழும் அம்பின் விசை குறைந்து இலக்கு பிழைக்கும். சோர்ந்து ஓர் அம்பு நிலத்தில் தைத்து நிற்கும். அது தொடக்கம். அதன்பின் சில கணங்கள்தான். அக்கணங்களில் நமது படைகளில் விசை சற்று மேலெழுமெனில் உடைய முடிவெடுத்துவிட்ட கற்கோபுரம் முதல் விரிசல் கொள்ளும் அக்கணம் நிகழும். அதன் பின் அக்கோபுரத்தின் எப்பகுதியும் அச்சரிவை தடுக்க இயலாது. வெளியே இருந்து எவரும் அதை தூக்கி நிறுத்திவிடவும் முடியாது.

ஒரு கணம்தான். இக்கணம் இக்கணம் என்று திருஷ்டத்யும்னன் எண்ணி உளப்பதைப்பு கொண்ட அத்தருணத்தில் தன்னைச் சூழ்ந்திருந்த படைகளைப்பற்றி எந்த உணர்வுமிலாமலேயே கர்ணன் பெருவிசைகொண்டு முன்னெழுந்தான். அவன் அம்புகள் இருமடங்கு முழக்கமிட்டு வந்து அர்ஜுனனின் அம்புகளை உடைத்தன. அர்ஜுனனின் தேர்த்தட்டு கர்ணனின் அம்புகளால் சிதைந்து தெறித்தது. அவன் கொடி உடைந்து அப்பால் விழுந்தது. கொடிஉடைவுபோல ஒரு படைவீரன் கைதாழ்கிறது என்பதை சூழ்ந்திருக்கும் துணைப்படையினருக்கு அறிவிக்கும் பிறிதொன்றில்லை. ஒவ்வொருவரும் அறியாமலேயே தலைவனின் கொடியை தங்கள் தலைக்குமேல் உணர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

அர்ஜுனனின் கொடி விழுந்ததுமே பாண்டவப் படையில் ஒரு மெல்லிய ஒலியாக சோர்வு வெளிப்பட்டது. ஒருவரையொருவர் அணுகி கலந்து ஒன்றென போரிட்டுக்கொண்டிருந்த படைகளில் ஒரு துளியில் எழும் சோர்வை அக்கணமே முழுப் படையும் உணர்ந்துகொள்கிறது. பெண்ணுடன் உறவுகொள்கையில் அவள் அடையும் உளமாற்றத்தை முழுக்க அவள் உடலிலிருந்து நம் உடல் அறிவதுபோல என்று ஒருமுறை அதைப் பற்றி துரோணர் அவனுக்கு கூறியிருந்தார். அதை தடுக்க இயலாது, அதனுடன் உரையாடவே இயலாது. ஆனால் அதைவிட விசைகொண்ட நம்பிக்கையை அதற்கு அளிக்கமுடியும். ஊக்கத்தையும் அவ்வண்ணம் உடலென்றே உணரச்செய்ய முடியும்.

கௌரவப் படை கர்ணனுடன் எழுந்து பேரொலியுடன் பொங்கி வந்து பாண்டவப் படையை அறைந்தது. இரு கால்களையும் முன்னறைந்து பின்கால்களில் சற்றெழுந்து வால் சுழற்றி தலைதூக்கி அறைகூவி பாய்ந்து வந்தது முதலை. அதை கட்டியிருந்த எட்டு சரடுகளும் அறுந்து தெறிக்க பாண்டவப் படை பதினெட்டு துண்டுகளாக மாறியது. “ஒருங்கிணைக! பின்னடைக! ஒருங்கிணைக!” என்று கூவியபடி திருஷ்டத்யும்னன் தன் தேரை பின்னுக்கிழுத்தான். அர்ஜுனன் நிலை பெயராது அம்புகளால் கர்ணனை செறுத்து நிற்க அவனுக்குப் பின்னால் மீண்டும் அரைவட்டமென பாண்டவப் படையை தொகுப்பதற்கு அவன் முயன்றான். “ஒவ்வொருவரும் துண்டுபட்ட பகுதியுடன் சென்று இணைக! படைத்தலைவர்கள் முன்செல்க! இணைந்துகொள்க! இணைந்து கொள்க!” என்று தலைக்கு மேல் முரசுகள் பதறி குரலெழுப்பின.

பாண்டவப் படைகளின் பிளவுகளினூடாகப் புகுந்து கௌரவப் படைகள் அவை ஒன்றிணைந்துகொள்வதை தடுத்தன. சகுனியின் ஆணை ஒலித்துக்கொண்டே இருக்க முதலையின் வால் எழுந்து சுழன்று வந்து சாத்யகியை அறைந்தது. அவன் தேர் சிதறிச் சரிய அதிலிருந்து தப்பி தன் படைகளுக்குப் பின்னால் ஓடி அவன் உயிர் பிழைத்தான். “சாத்யகி கொல்லப்பட்டார்!” என்று கௌரவப் படைகளில் ஒலியெழ சாத்யகியின் படையைச் சேர்ந்த யாதவர்கள் “யுயுதானர் நெடுநாள் வாழ்க! சாத்யகி நீடுவாழ்க!” என்று ஒலியெழுப்பி அவன் உயிரோடிருப்பதை உறுதி செய்தனர். ஆனால் அதற்குள் பாண்டவப் படையின் தெற்கு எல்லை முற்றாகவே சிதறி வெறும் திரளாக மாறிவிட்டிருந்தது. சல்யரின் படை விசையுடன் மறுபக்கம் திரும்பி சிகண்டியை அறைந்தது. சிகண்டி அதை எதிர்த்து நின்று போரிட்டார். ஆனால் பிறிதொரு அடியில் சிகண்டியை தொடர்ந்திருந்த பாஞ்சாலப் படைவீரர்கள் விற்களைத் தாழ்த்தி பின்னடைந்தனர். தனிமை கொண்டு நின்றும் சலிக்காமல் சல்யரை எதிர்த்தபடி மெல்ல சிகண்டி பின்வாங்கினார்.

அர்ஜுனனும் கர்ணனும் போரிட்டுக்கொண்டிருந்த விசை சற்றும் குறையவில்லை. ஒவ்வொரு கணமுமென அர்ஜுனனின் விசை மிகுந்து வருவதை திருஷ்டத்யும்னன் கண்டான். முதற்கணம் அர்ஜுனன் சீற்றம் கொண்டெழுந்து கர்ணனை வென்றுவிடுவான் என்ற எண்ணத்தை அவன் அடைந்தான். ஆனால் சற்று நேரத்திலேயே அது உருவாக்கிக்கொண்ட உளஎழுச்சியின் விசை மிகுதலே என்றும் அதற்கொரு எல்லை இருக்கிறதென்றும் தோன்றலாயிற்று. எண்ணியதுபோல் ஒருகணத்தில் அர்ஜுனனின் அம்புகள் விசை இழக்கத்தொடங்கின. கர்ணனின் அம்புகள் வந்து அவன் கவசங்களை அறைந்தன. கவசமுடியை உடைத்து தெறிக்கச்செய்தன. காண்டீபம் நாணறுந்து துள்ளிச் சரிந்தது. இளைய யாதவர் தேரைத் திருப்பி படைகளுக்குள் புகுந்துகொண்டு அவனை காப்பாற்றினார். அர்ஜுனன் “செல்க! முன்னெழுக!” என கூவிக்கொண்டிருந்தபோதிலும் சாட்டையால் புரவிகளை அறைந்து அறைந்து ஊக்கி தேரை விலக்கிச்சென்றார் யாதவர். கௌரவப் படைவீரர்கள் வெற்றிக்குரலெழுப்பினர். பாண்டவர்களின் கேடயப்படைகள் வந்து இணைந்து கோட்டையாகி கர்ணனை தடுத்தன.

கர்ணன் வஞ்சினம் உரைப்பான், அறைகூவல் எழுப்புவான், ஏளனக் குரலெழுப்புவான் என்று திருஷ்டத்யும்னன் எண்ணினான். அறைகூவி ஏளனம்செய்தால் அந்த ஆற்றலழிந்த நிலையிலும் சீற்றம்கொண்டு அர்ஜுனன் முன்னெழுந்து போருக்கு வரக்கூடும். ஆனால் அங்கொரு போர் நிகழ்வதையே அறியாதவன்போல, கனவிலோ ஊழ்கத்திலோ இருப்பவன்போல அவன் தெரிந்தான். அவன் அம்புகளால் பாண்டவப் படையின் முகப்பு அணிசிதைந்தது. யானை மத்தகங்களைப் பிளந்து சரிய வைத்தன அவனுடைய வாளிகள். தேர்களை ஒரே அம்பில் உடைத்து தெறிக்க வைக்க முடியும் என்றும் இரும்புக் கவசத்தை பிளந்து அறைந்து மறுபக்கம் ஊடுருவி மண்ணில் தைத்து வீரர்களை நிலம் தொடாது நிற்கவைக்க முடியுமென்றும் திருஷ்டத்யும்னன் அப்போதுதான் கண்டான்.

நிறுத்தமுடியாத மலைப்பாறைபோல அனைத்துத் தடைகளையும் நொறுக்கி அனைத்து வேலிகளையும் விலக்கியபடி கர்ணன் பாண்டவப் படைகளுக்குள் புகுந்து வந்துகொண்டிருந்தான். திருஷ்டத்யும்னன் எழுந்து நோக்கியபோது இருபுறமும் விழி தொடும் எல்லை வரை பாண்டவப் படை சிதறிவிட்டிருந்தது. பிறை வடிவை காக்க இயலாதென்று அவன் புரிந்துகொண்டான். முடிவெடுத்து கைகளை அசைத்து “அனைவரும் பின்னடைக! முடிந்தவரை பின்னடைந்து ஒன்று சேர்ந்துகொள்க! வேல்முனை சூழ்கை அமைத்துக்கொள்ளுங்கள்! வேல்முனை சூழ்கை அமைத்துக்கொள்ளுங்கள்!” என ஆணையிட்டான். வேல்முனை சூழ்கை எறும்புகள் பெருவெள்ளத்தில் ஒன்றையொன்று ஒட்டி ஒரு பந்தென ஆகி மிதந்து செல்வது போன்ற இறுதித் தற்காப்பு.

அவனுடைய அந்த அறிவிப்பு பாண்டவப் படை முழுக்க தீ சுட்ட விதிர்ப்பை உருவாக்கியது. ஆனால் அது பிற ஆணைகளைப்போல் தயக்கத்துடனும் குழப்பத்துடனும் அங்கிங்காகவும் எதிர்கொள்ளப்படவில்லை. ஒரே கணத்தில் முழுப் படையையும் அது சென்றடைந்தது. படைகள் அனைவரும் தாங்கள் நின்ற நிலையிலிருந்து அவ்வண்ணமே பின்னால் திரும்பி ஓடினர். ஓடுகையிலேயே ஒருவருடன் ஒருவர் இணைந்து கொண்டனர். ஒருவருடன் ஒருவர் தொகுத்துக்கொண்டு நீண்ட வேல்முனை வடிவை அடைந்தனர். படைமுகப்பில் நின்றிருந்த பீமனை நோக்கி திருஷ்டத்யும்னன் தேரை விரையச்செய்தான். “யுயுதானரும் முதல்பாஞ்சாலரும் வேல்முனையில் அமைக!” என்று அவன் கூவினான்.

வேல்முனை கூர்கொண்டபடியே இருந்தது. பீமன் வேல்முனையின் கூரென்று அமைய இருபுறமும் பாண்டவ வீரர்கள் அணிவகுத்து அச்சூழ்கை அமைந்தது. “வேல் முதலையின் தாடையை குறிவைக்கட்டும். அன்றி அடிவயிறு. முதலையை செயலிழக்கச் செய்யுங்கள். அதன் பற்களையும் வாலையும் எதிர்கொள்ள வேண்டியதில்லை” என்று திருஷ்டத்யும்னன் ஆணையிட்டான். முதலை வேல்முனையை நின்று நோக்கி தயங்கி தன்னை தொகுத்துக்கொண்டது. பின்னர் அது வாய்திறந்து வால்சுழற்றி பாய்ந்து வந்தது.

கர்ணனை நோக்கியபடி நின்ற திருஷ்டத்யும்னன் அப்போரில் வெல்லமுடியுமா என்னும் சோர்வை அடைந்தான். அங்கு நிகழ்வன எதையும் அறியாதவனாக அனைத்தையும் நிகழ்த்திக்கொண்டிருந்தான். அவனை எதிர்கொண்ட சுருதகீர்த்தியும் சுருதசேனனும் சதானீகனும் சோர்ந்து பின்னடைந்தனர். அவனை நோக்கி வந்த சகதேவன் “பாஞ்சாலரே, அங்கரை எதிர்கொள்வோம். மைந்தரை விலக்காவிடில் தீது நிகழக்கூடும்” என்றபடி முன்னால் விரைந்தான். “பார்த்தன் எங்கே?” என்று திருஷ்டத்யும்னன் கேட்டான். “அவர் உடலில் நான்கு அம்புகள் தைத்துள்ளன. மருத்துவர் கட்டுபோட்டபின் களம்புகுவார். அதுவரை இந்தப் பேரலையை நாம் நிறுத்தியாகவேண்டும்” என்றான் சகதேவன்.

திருஷ்டத்யும்னன் சகதேவனுடன் இணைந்து சென்று கர்ணனை தாக்கினான். “அரசர் யுதிஷ்டிரன் பின்னடைக… அவருடன் நகுலன் நிலைகொள்க! கவசப்படையாலும் யானைப்படையாலும் அவர் சூழ்ந்துகொள்ளப்பட வேண்டும்” என்று கையசைவால் ஆணையிட்டான். அவன் ஆணைகள் முரசொலியாக எழுந்து விண்ணில் பரவின. கர்ணனின் அம்பு வந்து அவன் தேரை அறைந்து பாறையில் முட்டிய படகென உலையச்செய்தது. அவன் தாவி அகன்று, பாகன் தேரை நிமிரச்செய்ததும் மீண்டும் அதில் தொற்றிக்கொண்டு அம்புகளால் கர்ணனை எதிர்கொண்டான்.

முந்தைய கட்டுரைஅறிபுனை- அறைகூவல்கள் சாதனைகள்
அடுத்த கட்டுரைவாசிப்புச் சவால் – கடிதங்கள்