பயணம்- கடிதங்கள்

பிலடெல்பியாவில் ஷாகுல்ஹமீது

அன்புள்ள ஜெயமோகன்,

 

நலம்தானே ?

 

நான் பிறந்து வாழ்ந்த ஊர் கும்பகோணம். கோவில்கள் சூழ்ந்த ஊர்.

எங்கள் ஊரில் நாங்கள் வெளியே செல்ல பெரிதாய் பொழுதுபோக்கு இடங்கள் எதுவும் கிடையாது. தடுக்கி விழுந்தால் கோவில் மட்டும்தான். அப்படியிருந்தும் நான் கோவில்களில் சிற்பங்களை இரசித்ததில்லை. விபூதி, குங்குமம் கொட்டும் ஒரு இடமாகத்தான் என் பால்யம் முழுதும் நான் அவற்றை கடந்து வந்திருக்கிறேன். இப்போது நினைக்கும் போது பெரும் வேதனையாக இருக்கிறது. எத்தனை கலை சாதனைகள் மிக்க கோவில்கள் அருகிலிருந்தும் நான் வீனாக்கியிருக்கிறேன்.

முதல் முதலாக சிற்பங்கள் மீது எனக்கு ஆர்வம் வந்தது உங்களின் விஷ்ணுபுரம் வாசிக்க தொடங்கியபோதுதான். அதில் உள்ள முன்னுரை என்னுள் பல உணர்வெளிச்சிகளை உருவாக்கியது. ராமேஸ்வரம் கோவிலின் பிரகாரத்தில் மனிதரின் கண்கள் படாத இடத்தில் கூட சிற்பங்களின் நேர்த்தியை நீங்கள் குறிப்பிட்டிருப்பீர்கள்.  செவ்வியலின் உதாரணமாக அதனை சொல்லியிருப்பீர்கள். அவை தன்னளவில் தன்னுயர்வை எட்டியிருப்பதாக உங்கள் அருகில் இருந்த மலையாள எழுத்தாளர் சொல்வார். அதனை படித்தபோதே அதன் பிரமாண்டமும், அதை உருவாக்கும் கலைஞனின் கனவும், படைப்பு மனமும் என்னை வியப்பில் ஆழ்த்தியது.

 

மேலும் தொடர்ந்து உங்கள் எழுத்தின் வழியேவே சிற்பங்களை இரசிக்கும் மனநிலை என்னுள் உருவாகி வந்துள்ளது. சென்ற வாரம் ஊருக்கு சென்றபோது இராமசாமி கோவில் சென்றேன்.  நீங்கள் சொல்லித்தான் அந்த கோவிலின் சிறப்பும் எனக்கு தெரிய வந்தது. அந்த ஊரிலேயே இருந்தும் நான் இதுவரை அங்கே சென்றதில்லை. ஒவ்வொரு சிற்பமாக பார்க்க பார்க்க ஒரு கனவின் வழியே தொன்மத்திற்குள் நுழைந்தது போலிருந்தது. மூன்று மணி நேரத்திற்கு மேலாக நான் சிற்பங்களை மட்டுமே பார்த்திருந்தேன். மேலும் ஒரு மணிநேரத்திற்கு மேலாக பிரகாரத்தில் இருந்த இராமாயண ஒவியங்களை இரசித்து கொண்டிருந்தேன்.

 

இதுவரை நான் சிற்பங்கள் முன் இப்படி தவமிருந்ததில்லை. எல்லாம் உங்கள் எழுத்தினால்தான். உங்களால்தான் என் இரசனை உணர்வு மேம்பட்டுள்ளது. மிக்க நன்றி.

 

நன்றி

உமாரமணன்

 

அன்பின் ஜெ,

 

வணக்கம்!.

 

நண்பர் ஷாகுல் அமீதின் பிலடெல்பியா விசிட் படித்தேன். நானும் கூட அவ்வண்ணமே நெடுநாட்கள் இருந்திருக்கிறேன்.

 

பிலடெல்பியா நகரத்துக்கு பதினெட்டு

மைல் தூரத்தில் அலுவல் நிமித்தம் ஆறு வருடங்கள். எண்ணற்ற வார இறுதிகள் பிலடெல்பியா நகரத்தில் செலவிட்டிருந்தாலும், அவையனைத்தும் ஒரே ஒருங்கமைவுடன் வால்நட் ஸ்டீரிட்டில் உள்ள புகழ்பெற்ற மலேசியன் ஓட்டல் ஒன்றில் ரொட்டி கனாய் சாப்பிடுவதோடு

(புயல் வேக குளியல்,அதிவிரைவு முருக தரிசனம்,அடுத்த பஸ்ஸில் ஊர் திரும்பல் என்னும் பாலசங்கர் அண்ணாவின் திருச்செந்தூர் பயணம் போல…) நிறைவுபெறும். காரில் கடக்கையில் கண்ணில் படும் சிலைகளும் கூடுதல் கவனம் பெற்றதில்லை.

 

இலக்கிய வாசிப்பில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்த பிறகு, அலுவல் ரீதியான பரிச்சைக்கான பகல் நேரத்து பிலடெல்பியா விசிட் ஒன்றில் ஐந்துமணிநேரம் இடைவெளி கிடைக்க, முதல் முறையாக காரை தவிர்த்து கால் போன போக்கில் நகரம் முற்றிலும் சுற்றியலைந்த அன்று கேளிக்கை, கொண்டாட்டங்களை விடவும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நகரம் என்று உணர்ந்துகொண்டேன்.

 

//

இப்போதெல்லாம் எந்த ஊருக்கு சென்றாலும் அங்கு பார்பதற்கு என்ன இருக்கிறது என முன்பே தெரிந்துகொண்டு அவற்றை தேடிச்செல்லவே விரும்புகிறேன்

//

 

ஷாகுலின் வரிகள் எனக்கும் பொருந்தும்.

 

பொதுப்பாதையிலிருந்து விலகி, “ஆமிஷ் வில்லேஜ்”  உள்ளிட்ட தனித்துவமிக்க இடங்களை நோக்கிய பயணங்களை துவக்கியது அதன்பிறகுதான்.

 

நட்புடன்,

யோகேஸ்வரன் ராமநாதன்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-30
அடுத்த கட்டுரைவெள்ளை யானை – சில வருடங்களுக்கு பின்- சுனில் கிருஷ்ணன்