தேவதேவன் கவிதைகள்- ஏஞ்சல் வாங்க
ஆறு
கழுத்தளவு மூழ்கியவர்களாய்
நதிப்புனலில் மனிதர்கள்
நீர்ப்பூக்கள் போல் ஒளிரும் முகங்கள்
ஆற்றில் தண்ணீர்
உயரமில்லை என்றால் என்ன
உடம்பை ஒடுக்கிக்கொண்டால் போச்சு
உடம்பெல்லாம்
நீருக்குள்ளே வைத்துக்கொண்டாலும்
நீர்ப்பூப்போல் தலையை
வெளியே காட்டத்தான் விருப்பம்
துயரமாய்த்தான் இருக்கிறது
பசித்தவனின் வயிற்றில்
கட்டிக்கொண்ட ஈரத்துணிபோல்
ஆறு
யாரும் துயரக்
கண்ணீர் வடிப்பதே இல்லை
ஆறு தன் உடலை
ஆரத்தழுவிக்கொண்டிருக்கையில்
பாதாள நதியையும் பார்த்ததில்லை
ஆகாய கங்கையையும் பார்த்ததில்லை
வானத்தின் கீழ் மண்ணில்தான்
நதி நடக்கப்பார்த்திருக்கிறோம்
கண்விழிக்கையில்
கண்விழிக்கையில்
என் அறையை நிறைத்திருக்கும்
காலை ஒளியைப்போலிருக்கிறது
நின் காதல்
யாராவது உன்னை யாரென்று
கேட்டால் நான் என் சொல்வேன்?
காதல் என்றும்
கதிரொளி என்றும்
ஒளி என்றும்
நான் சொல்லச்சொல்ல
எவ்வளவு சொல்லிய பின்னும்
புரியாதிருந்தால்
புரிந்தும்
காதலிக்க முடியாமலிருந்தால்
நான் என்ன செய்வேன்?
காதலித்துக்கொண்டேதான் இருப்பேன்
இந்தக் கதிரொளியைப்போலவே
ஒவ்வொருநாளும் நீ கண்விழிக்கும் காலை
ஓடிவந்து உன் அறையை நிறைத்திருப்பேன்
உனக்கு முன்னே
கூடம்
நல்ல வெளிச்சமும் காற்றும் மட்டுமே
ஓர் அற்புதம் எனக்கொண்டு
இருக்கைகளும் சாய்மானங்களும் இல்லாத
ஒரு செவ்வகக்கூடம்
வந்த அன்பர்களுக்கெல்லாம்
சாய்மானங்களும் இருக்கைகளும் ஆயின
நான்கு சுவர்களும் சுவர் ஓரத்தரைகளும்
ஒளிவெள்ளத்தில் நீந்திய அவர்களின் உரையாடலில்
வட்டமும் சதுரமுமாய்
மாறி மாறி நெளிந்தது கூடம்
கொஞ்சம் தட்டிவிட்டு
நான்கு சுவர்களையும்
நான்குபக்கத் தரைகளையும்
ஒரு வட்டமாக
மாற்றிவிடுவது இயலாததா என்ன?
சொல்லுங்கள்
கட்டடக் கலைஞர் அய்யா அவர்களே.
சிதைக்கப்பட்ட…
சிதைக்கப்பட்ட பூமிக்கோளமோ
என்றிருந்தது மரக்கிளையில்
அணில் கடித்துத் தின்றுபோய்விட்ட
கொய்யாக்கனி , அதற்கோ
எந்தவிதத் துயரமும் இல்லை
துயரென்பதே அறியாது வாழ்ந்து மறைகின்றன
காதலும் கருணையுமேயான கனிகள்
கொய்து உண்ணுவாரற்று
மண்ணைப் பற்றியபடி
மண்ணில் விழுந்து கரைகையிலும் சரி.
கதிரொளியில் கலந்தபடி
எட்டாக்கூரையில் காய்கையிலும் சரி.
தேவதேவன் கடிதம்
தேவதேவன் -தக்காளி
தேவதேவன் கவிதை -கடிதங்கள்
கவிதையின் அரசியல்– தேவதேவன்
தேவதேவன் – கடிதம்
தேவதேவன் – கடிதங்கள்
தேவதேவன் கடிதம்
கோவையில் இளையராஜா தேவதேவன்
அசோகமித்திரன், தேவதேவன்- கடிதங்கள்
தேவதேவன் ஒரு பேட்டி
மார்கழியில் தேவதேவன்